இறைவன் படைப்பிலே அத்தனையும் புதுமையன்றோ?




இயற்றியவர்:---  பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார்






எத்தனையோ இன்பமெலாம் இறைவாநீ படைத்தனையே

சித்தமெலாம் கிறங்கவைத்துத் திகைப்பினிலே ஆழ்த்துகிறாய்

சுத்தவெளி தனிலேயொளிச் சோதிப்பிளம் பாகிநின்ற

அத்தனேநீ அளித்திட்ட  அத்தனையும் புதுமையன்றோ?












ஆலமரக் கொப்பொன்றில் அலகாலே தும்பெடுத்துக்

கோலமிகு தூக்கணாங் குருவியெனுஞ் சிறுகுருவி

காலம்பார்த்து முட்டைகளைக் கச்சிதமாய்ப் பொரிக்கவைக்க

மேலடுக்குக் கூடுகட்டும் விந்தையென்ன விந்தையம்மா!

 


















வகைவகையாய்ப் பூச்சொரியும் மரங்களெலாம் தேடிநின்று

முகைவிரி;ந்த மறுகணமே உறிஞ்சுசிறு கருவிகொண்டு

திகைத்துநாமும் வியக்குவண்ணம் தேனினைச்சே கரித்தவைகள்

சேமிக்கும் முறையதனைத் தெரியவைத்த தாரிறைவா?














மிதிபட்டால் இறந்துவிடும் மென்மையான கறையானும்

மதிநுட்ப முடன்தனது சிறுகாலால் மண்ணெடுத்து

அதிவிரைவாய்க் குடியிருக்கப் புற்றுகட்டும் விந்தைதனை

எதிலிருந்து கற்றனவோ யாரறிவார் பராபரமே!














எட்டுக்கால் சிலந்தியோதன் எச்சிலையே நூலாக்கி

கெட்டித்தன மாகவதில் கீழும்மேலு மாயோடிக்

கட்டுகின்ற கூடதனில் சிக்குகின்ற பூச்சிகளை

கட்டிப்பிடித் துக்கடித்தே உணவாக்கும் விந்தையென்னே!

 

 

சோழ நாட்டிலே அரசவையிலே அமைதியாக ஒரு எதிர்பார்ப்பும் இன்றி அங்கு நடப்பவற்றைப் பார்த்தபடி ஒளவையார் இருக்கின்றார். புலவர் ஒருவர்  ;பாடுவதைக் காட்டிலும் மற்றவர் திறமையாகப் பாடி வருவதையும் தங்களின் திறதைமான் உயர்ந்தது என ஒவ்வொருவரும் ஆணவங்கொண்டு தற்பெருமைப் படுவதையும் காண்கிறார். சோழ அரசன் கவிச் சக்கரவர்த்தி கம்பரின் பெருமையை வியந்து பாராட்டியபோது ஒளவையார் சோழஅரசனைப் பார்த்து

 

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்

தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்தரிதால் - யாம்பெரிதும்

வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண்

எல்லார்க்கு மொவ்வொன் றெளிது 

 

என்று பாடி அரசவைப் புலவர்களையும் அரசனையும்  தலை குனிய வைத்தார். இந்தப் பாடiலைப் படித்தபொழுது ஒளவையார் உணர்வும் அறிவும் சார்ந்த பெண் என்பதற்கு இது ஒரு சான்றாகிறது தெரிகிறதல்லாவா? . ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு திறமை இருக்கும். ஒருவர் தனக்குரிய திறமையை நினைத்துக் கர்வம் கொள்ளல் கூடாது என்பதை விளக்கும் திறமை அற்புதம்.

 

வான்குருவி:-

வான்குருவி என்று சொல்லப்படும்  தூக்கணாங்குருவி முட்டைகளைப் பாதுகாப்பாக இடுவதற்காகத்; தனது சின்னஞ்சிறு அலகாலே குச்சி தும்பு பஞ்சு முதலியவற்றைச் சேகரித்து அற்புதமான தலைகீழாகத் தொங்குகின்ற - கூட்டைக் கட்டுகிறது. கூட்டின் நடுப்பாகத்திலே தட்டையாக ஒரு தட்டை அமைக்கிறது. இந்தத் தட்டிலேதான் தனது முட்டைகளை இடும். கூட்டுக்கு உட்செல்லும் வழி அதன் அடிப்பக்கத்திலே இருக்கும். கூட்டின் மேற்பகுதியிலிருந்து ஒரு சீவராசிகளும் உள்ளே செல்ல முடியாது. பாதுகாப்பைக் கவனமாகச் செய்கிறது இந்த ஐந்தறிவுப் பறவை.

 

கறையான்கள்:-

 அடுத்ததாக மிகவும் சிறிய மென்மையான கால்களைக் கொண்ட சிறிய கறையான்கள் களிமண்ணைத் தமது கால்களாலே எடுத்து மிகவும் சிரமப்பட்டு ஒற்றுமையாகக் கூட்டமாகச் சேர்ந்து  மேலடுக்கு மாளிகைகளைக் கட்டும் அழகே அழகு!.  இதைப் பார்த்துத்தானோ கட்டடக் கலைஞர்கள் மேலடுக்கு மாளிகைகளைக் கட்டத் தொடங்;கினார்கள்?.

 

தேனீக்கள் : - மரக் கிளைகளிலே தேனீக்களினாலே கட்டப்படும் தேன்கூட்டின் விசித்திர அமைப்பு பிரமிக்க வைக்கும். பல தரப்பட்ட தேனீக்களுக்கும் வேறுவேறு அறைகள். தேனைச்; சேமிக்க முட்;;டை இடவும் வேறு அறகள் - மலர்களிலே உணவுக்காகத் தேன் எடுத்து உண்டபின்னர் மிகுதித் தேனை பூமியின் ஈர்ப்புச் சக்தியினாலே கீழே ஒழுகாதபடி சேமித்துவைக்கும் திறனை என்னென்று சொல்வது. தேனைப் பழுதடையாது பல காலம் வைத்திருக்கத் தேனீக்கள் தேனை உற்பத்தி செய்கின்ற செயல்முறையை விளக்குவதற்கே அதிக நேரம் தேவை. இது தேனீக்களின் கூட்டுமுயற்சி.

 

சிலந்திப் பூச்சி :-

 

சிலந்திப் பூச்சியும் சிறிய பிராணியே. .அது தனது சிறு வாயினாலே எச்சிலைக் கொண்டு வலை பின்னும் முறை பிரமிப்பைத் தரும்.   இந்தப் பிராணிகளை உதாரணமாகக் காட்டிப் புலவர்களுக்கும் அரசனுக்கும் அறிவுறுத்தப் பாடப்பெற்ற வெண்பாவைப் படித்ததும் என் மனதிலே மேலே காணப்படும் கவிதைகள் பிறந்தன.






No comments: