உலகச் செய்திகள்

 கைது செய்யப்பட்ட பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் விடுவிப்பு

பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது

ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகிவிட்ட அமெரிக்கா?! - இந்த வார இறுதிக்குள் ட்ரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன? - வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்

இந்திய பிரதமர் மோடி விரைவில் இஸ்ரேலுக்கு விஜயம்

பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு 



கைது செய்யப்பட்ட பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் விடுவிப்பு

Published By: Digital Desk 3

20 Feb, 2026 | 09:32 AM

கைது செய்யப்பட்ட  பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர், 11 மணித்தியாலங்கள் விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வியாழக்கிழமை (19) அதாவது ஆண்ட்ரூவின் 66 ஆவது பிறந்தநாளன்று அதிகாலை 08.00 மணியளவில் நோர்போக்கில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தேம்ஸ் வேலி பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

அவர் வர்த்தகத் தூதுவராகப் பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளியான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு இரகசிய அரசாங்க ஆவணங்களை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐல்ஷாம் பொலிஸ் நிலையத்தில் வைத்து நாள் முழுவதும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இரவு 07.00 மணியளவில் அவர் "மேலதிக விசாரணைக்காக" விடுவிக்கப்பட்டார். அவர் குற்றச்சாட்டுகளில் இருந்து இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சகோதரரின் கைது தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ்,

"ஆண்ட்ரூ மீதான இந்தக் குற்றச்சாட்டுச் செய்தியை நான் மிகுந்த கவலையுடன் அறிந்தேன். எமது முழு ஒத்துழைப்பும் அதிகாரிகளுக்கு உண்டு. நான் தெளிவாகக் கூறுகிறேன்: சட்டம் தன் கடமையைச் செய்யும். அதுவரை இது குறித்து நான் மேலதிக கருத்து எதனையும் தெரிவிக்கமாட்டேன்." என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நவீன காலத்தில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். 2025-ஆம் ஆண்டில் ஆண்ட்ரூவின் 'இளவரசர்' மற்றும் 'யோர்க் பிரபு' ஆகிய பட்டங்கள் மன்னரால் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் வெறும் 'ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்' என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்.

அரச பட்டங்கள் பறிக்கப்பட்டாலும், சட்டப்படி அவர் இன்னும் பிரிட்டன் சிம்மாசனத்திற்கான வாரிசு வரிசையில் 8-வது இடத்தில் நீடிக்கிறார். அவரை இந்த வரிசையில் இருந்து நீக்க வேண்டுமானால் பாராளுமன்றத்தில் விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் பிரித்தானிய அரச குடும்பத்தின் நற்பெயருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள்  கருதுகின்றனர்.   நன்றி வீரகேசரி 






பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது

Published By: Digital Desk 3

19 Feb, 2026 | 04:36 PM

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய மன்னர் சால்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை (19) தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோர்போக் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தேம்ஸ் வேலி பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தியோகபூர்வமாக பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், அது முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தான் என்பதை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, பெர்க்சையர் மற்றும் நோர்போக் பகுதிகளில் உள்ள அவரது இல்லங்களில் பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்றையதினம் காலை நோர்போக்கில் உள்ள 'சாண்ட்ரிங்ஹாம்' எஸ்டேட்டிற்கு பொலிஸ் வாகனங்கள் வருகை தந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கொண்டிருந்த தொடர்புகள் குறித்து நீண்டகாலமாக விசாரணைகள் நடந்து வந்தன.

2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக ஆண்ட்ரூ பணியாற்றியபோது, அரசாங்கத்தின் மிக ரகசியமான வர்த்தகத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்மையில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 'எப்ஸ்டீன் ஆவணங்கள்' மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே தற்போது இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கடந்த ஆண்டு மன்னர் சார்ள்ஸ் தனது சகோதரர் ஆண்ட்ரூவிடமிருந்து 'இளவரசர்' மற்றும் 'டியூக் ஆஃப் யார்க்' ஆகிய கௌரவப் பட்டங்களை உத்தியோகபூர்வமாக பறித்தார். இதனால் அவர் தற்போது ஒரு சாதாரண குடிமகனாகவே சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படுகிறார்.

தனது தரப்பு நியாயமாக, ஆண்ட்ரூ அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருகிறார். தற்போது அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.   நன்றி வீரகேசரி 






ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகிவிட்ட அமெரிக்கா?! - இந்த வார இறுதிக்குள் ட்ரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன? - வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல் 

19 Feb, 2026 | 02:12 PM

அமெரிக்கா கடந்த 24 மணிநேரத்தில் 50க்கு மேற்பட்ட நவீன போர் விமானங்களை மேற்காசியா நோக்கி அனுப்பியுள்ளதாகவும் இந்த வார இறுதியில் ஈரானை நோக்கி தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இத்தகவல் சர்வதேச மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிற நிலையில், ஈரானுக்கு எதிரான   ஆயுதத் தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி அளிப்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடவேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். எனினும், ட்ரம்ப்பின் அறிவுறுத்தலுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்தே வருகிறது.

இதன் காரணமாக ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் ஈரான் நாட்டுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு தாம் அடிபணியப்போவதில்லை என்றும் அமெரிக்க இராணுவத்தை அழிப்போம் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி பதிலளித்திருந்தார். 

இந்நிலையிலேயே ஈரானை நோக்கி அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதைப் போன்று அமெரிக்கா அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக சர்வதேச மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக வெள்ளை மாளிகை தெரிவிக்கையில், இந்த வார இறுதியில் இராணுவம் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த தயாராக உள்ளது. ஆனால், அதுதான் சிறந்த முடிவு என ட்ரம்ப் இன்னும் உறுதிபடத் தெரிவிக்கவில்லை. 

அமெரிக்க தலைமை தளபதி தனிப்பட்ட முறையில் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதிட்டார்.  சிறந்ததொரு அதிரடி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசகர்கள், நட்பு நாடுகளிடமும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இந்த வார இறுதிக்குள் ட்ரம்ப் ஒரு தெளிவான முடிவெடுப்பாரா எனத் தெரியவில்லை. அதை இதைப் பற்றி சிந்திக்க நிறைய நேரத்தை செலவிடுகிறார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.   நன்றி வீரகேசரி 





இந்திய பிரதமர் மோடி விரைவில் இஸ்ரேலுக்கு விஜயம் 

Published By: Digital Desk 3

16 Feb, 2026 | 03:21 PM

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் பயணமாக வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சுமார்  09 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம்  அமைகிறது. இருவரும் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பில்  விரிவாக கலந்துடையாட உள்ளனர்.

இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள காசா அமைதித் திட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் நெதன்யாகு பிரதமருக்கு விளக்கமளிக்கவுள்ளார். 

இப்பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்த இந்தியா தனது ஆதரவைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவது இந்த விஜயத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.   நன்றி வீரகேசரி 




பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

Published By: Digital Desk 3

17 Feb, 2026 | 02:39 PM

கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து பங்களாதேஷ் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட  தேசியவாத கட்சியின் தலைவர்  தாரிக் ரஹ்மான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை பதவியேற்றனர்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஏ.எம்.எம். நசீர் உதீன் முன்னிலையில் பதவியேற்றனர்.

அவர்களைத் தவிர, தெரிவுசெய்யப்பட்ட சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சிகளின் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர்.

வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, 297 இடங்களில் 209 இடங்களை பங்களாதேஷ் தேசியவாத கட்சி வென்றது.

இன்றைய தினம் பிற்பகலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி தனது புதிய அமைச்சரவையை அமைக்க உள்ளது.   நன்றி வீரகேசரி 


No comments: