யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரில் ஆராய்வு
புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர : இந்திய – இலங்கை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த உறுதி
வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகள் ; விழிப்புணர்வு வேலைத்திட்டம் யாழில் ஆரம்பம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இருதரப்பு பேச்சுவார்த்தை!
நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராக மைத்திரி விக்கிரமசிங்க மறுப்பு: உடல்நலக்குறைவு எனத் தகவல்!
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரில் ஆராய்வு
20 Feb, 2026 | 03:35 PM
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய கட்டுமானப் பணிகளை நேரில் கண்டறிவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, தற்போது கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயணிகள் முனையக் கட்டிடத்தின் தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்த அமைச்சர், 800 சதுர மீற்றருக்கும் அதிக பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் புதிய வருகை முனையத்தின் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், தற்போது பயன்பாட்டிலுள்ள முனையத்தின் அனைத்துப்
பகுதிகளுக்கும் நேரில் சென்ற அவர், அங்குள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 53,443 பயணிகள் பயணம் செய்துள்ளமை ஒரு பாரிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.
தற்போது இந்தியாவின் சென்னைக்கு தினசரி விமான சேவைகளும், திருச்சிக்கு வாரத்திற்கு மூன்று முறை விமான சேவைகளும் இண்டிகோ (IndiGo) விமான நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.
வடபகுதிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் மூலம் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தவும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதனை ஊக்குவிக்கும் வகையில், விமான நிறுவனங்களுக்கு விமானம் தரையிறக்கம் மற்றும் தரித்துநிற்பதற்கான கட்டணச் சலுகைகள் வழங்கப்படுவதுடன், பயணிகளுக்கான விமான நிலையப் புறப்பாட்டு வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் உள்நாட்டு விமான சேவைகளையும் மேம்படுத்தி,
சுற்றுலாத் துறையை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த விஜயத்தின் போது பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, விமான நிலைய உதவி செயல்பாட்டு மேலாளர் அநுத் தயாவங்ச, பணிப்பாளர் பிரீமால் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நன்றி வீரகேசரி
புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர : இந்திய – இலங்கை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த உறுதி
Published By: Digital Desk 3
20 Feb, 2026 | 03:11 PM
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று வெள்ளிக்கிழமை (20) நண்பகல் புதுடில்லியில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, “AI Impact 2026” மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், இந்தியா – இலங்கை இடையிலான வரலாற்று மற்றும்
பண்பாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார துறைகளில் உள்ள ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. பிராந்திய மட்டத்திலும் இருதரப்பு மட்டத்திலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கி செயல்படுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், அண்மையில் இலங்கையை பாதித்த ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது இந்தியா வழங்கிய விசேட உதவிகளுக்கு ஜனாதிபதி தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார். இயற்கை அனர்த்தங்களின் போது இருநாடுகளும் ஒருவருக்கொருவர் வழங்கும் ஆதரவு, இருதரப்பு உறவுகளின் வலிமையை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி வீரகேசரி
வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வாய்ப்புகள் ; விழிப்புணர்வு வேலைத்திட்டம் யாழில் ஆரம்பம்
20 Feb, 2026 | 02:45 PM
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குறித்து வட மாகாணத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட வேலைத்திட்டம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் நேற்றைய தினம் (19) வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வெத்தன்சிங்கன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் W.W.S. மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜயரத்ன, பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியில் சிவில் விமானப்
போக்குவரத்துத் துறையில் ஏற்படவுள்ள துரித வளர்ச்சிக்குத் தேவையான மனித வளத்தைத் தயார் செய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலம் பாடசாலை மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கு இத்துறை சார்ந்த கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியான தெளிவை வழங்குவதே பிரதான நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் விமானப் போக்குவரத்து சங்கங்களை நிறுவுதல், விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல், விமான நிலையச் செயற்பாடுகள் குறித்த களப்பயணங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குதல் போன்ற பல முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அனுர கருணாதிலக, சமூகத்தில் பலருக்கு விமானப் பொறியியலாளராகவோ அல்லது விமானியாகவோ வரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்கான சரியான வழிமுறை குறித்து போதிய தெளிவு இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.
தற்போது தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை விமானப் பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ள போதிலும், அத்துறையில் போதிய ஆட்கள் இல்லாத நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, எமது இளைஞர் சமூகத்தை இலங்கைக்கு மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் இத்துறை சார்ந்த சேவைகளை வழங்கக்கூடிய தகுதியுள்ளவர்களாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஜனித் ருவன்
கொடித்துவக்கு, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தரவுகளின்படி, அடுத்த பத்து ஆண்டுகளில் இத்துறை மூன்று மடங்கு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குத் தேவையான தகுதியுள்ள நபர்களை உருவாக்க விமானப் போக்குவரத்து கல்வி நிறுவனங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சுனில் ஜயரத்ன உரையாற்றுகையில், புதிய அரசாங்கத்தின் கொள்கைகளால் சர்வதேச ரீதியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக புதிய விமான நிறுவனங்கள் நாட்டிற்கு வருகை தருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், வட மாகாணத்தில் இத்துறையை அபிவிருத்தி செய்ய முன்வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்ததுடன், வட மாகாணத்தில் உள்ள வளங்களை உச்சகட்டமாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நன்றி வீரகேசரி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இருதரப்பு பேச்சுவார்த்தை!
Published By: Digital Desk 1
20 Feb, 2026 | 02:47 PM
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்று வரும் "AI Impact 2026" மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்த பேச்சுவார்த்தை அமைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஸ்லோவாக்கியா ஜனாதிபதி பீட்டர் பெலக்ரினி, நெதர்லாந்து பிரதமர் டிக் ஷூஃப் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
மேலும், சுவிஸ்லாந்து ஜனாதிபதி கை பர்மெல், கிரேக்க பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது நன்றி வீரகேசரி
நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராக மைத்திரி விக்கிரமசிங்க மறுப்பு: உடல்நலக்குறைவு எனத் தகவல்!
Published By: Digital Desk 1
20 Feb, 2026 | 10:49 AM
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஆஜராகமுடியாது என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் ஆஜராகாமைக்கான காரணங்கள் எதுவும் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவில்லை எனவும், உடல்நலக் காரணங்களால் அவர் ஆஜராகமுடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு வழங்கப்பட்ட அழைப்பாணை குறித்து கடந்த 18ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2023ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சிய விஜயம் தொடர்பான விசாரணைகளுக்காக இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராக அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுமார் 16.9 மில்லியன் ரூபாய் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தியால் கைது செய்யப்பட்டார்.
2023ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தபோது, ரணில் விக்ரமசிங்க, லண்டனில் நடைப்பொற்ற தனது மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மைத்திரி விக்கிரமசிங்க அழைக்கப்பட்டிருந்தார். நன்றி வீரகேசரி














No comments:
Post a Comment