யார் யாரையும் சொல்லலாமோ?

-சங்கர சுப்பிரமணியன் .


யார் யார் யார் அவள் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ? சலவைக்கல்லே முகமாக தங்கப்பாளம் இதழாக மயங்க வைத்தாளோ? என்றொரு பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?

ஆம் கேட்டிருப்பீர்கள். இது ஒரு திரைப்படப் பாடல். காதலன் காதலியைப் பார்த்து பாடுவது.

யார் யாரைப் பற்றிப் பாடினால் என்ன? நீ என்ன சொல்லவருகிறாய் என்று கடுப்பாகிய வத்தலக்குண்டு வரதன் போன்றோர் மனதில் என்னைத் திட்டுக் கொண்டிருப்பார்கள். அவர் போன்றோர் என்னைத் திட்டுவது இருக்கட்டும். அவர் என்னிடம் ஆதங்கப் பட்டதைத்தான் சொல்கிறேன். ஒருநாள் நாள் நான் என் அண்ணன் சொன்னார் என்பதற்காக பக்கத்தில் அலசூரு கடைவீதியை விட்டு செக்குமேட்டுக்கு சென்றிருந்தேன்.

செக்குமேட்டில் எள்ளெண்ணெய் ரொம்பவும் சுத்தமாக இருக்கும். தவிர கடைக்காரர் எனது அண்ணனின் நெருங்கிய நண்பர். பால்கார வீதியில் இருந்தாலும் செக்குமேடுவரை தம்பியை அனுப்பி தமது கடையில் எண்ணெய் வாங்கிவரச் சொல்லியிருக்கிறாரே என்று பெருமையாக சொல்வார் கடைக்காரர். அத்தோடு ஒரு துண்டு எள்ளுப் புண்ணாக்கும் தருவார்? எள்ளுப் புண்ணாக்கு சாப்பிட்டிருக்கிறீர்களா?

எள்ளுப் புண்ணாக்கு சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே அதன் சுவை தெரியும். மற்றவர்களுக்கு போடாப் போடா புண்ணாக்கு போடாதே தப்புக் கணக்கு என்று சொல்லத்தான் தெரியும். அப்படித்தான் தப்புக் கணக்குப்போட்டு எதிரே வந்த வத்தலக்குண்டு வரதன் ,

“என்னப்பா சந்துரு பக்தர்கள் பாதயாத்திரை போவதுபோல எண்ணைய் வாங்க இந்த யாத்திரையா?என்று கேட்டார்.

“என்ன சார் பண்றது. இங்க எண்ணெய் புயூரா இருக்கும்” என்றேன்.

“எப்பா இரு. நீ பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர் தானே? நீங்கள்ளாம் எப்படித் தமிழை வளர்க்கப் போறீங்க?”

“ஏன் சார்? நான் என்னவாவது தப்பு பண்ணிட்டேனா?”

“அது சரி. செய்யுற தப்பே தெரியலையா? நீயே தமிங்கலம் பேசுகிறாயே”

“என்ன சார் சொல்றீங்க? புரியல”

நல்லதுதான் தன் முதுகில் இருப்பது எப்படித் தெரியும்? இங்க எண்ணெய் பியூரா இருக்கும் என்றாயே? நான்கு சொற்களில் ஒரு சொல் ஆங்கிலமா? அது என்ன பியூரா இருக்கும்? சுத்தமா இருக்கும் என்றால் என்ன குடி முழுகிப போய்விடுமா அல்லது நாக்குதான் சுளுக்கிக் கொள்ளுமா என்றார். என் தவறை உணர்ந்தேன்.

வேண்டுமென்று பேசல அண்ணா, நான் மட்டுமல்ல இங்கு பல மொழி பேசுபவர்களும் இப்படிக் கலந்து பேசத்தான் செய்கிறார்கள் என்றேன். அப்படியா யார் யாரெல்லாம் சொல்கிறார்கள் சொல் பார்ப்போம் என்று மல்லுக்கு நிற்கவே தெளிவு படுத்தினேன். அண்ணே, தெலுங்குகாரர் “இக்கட ஆயில் பாகா உந்தி என்கிறார். கன்னடக்கார் “இல்லி ஆயில் சென்னாகித” என்கிறார். மலையாளி “இவிட வல்லியதொரு ஓயிலானும்” என்கிறார்.

அதையே இந்திக்காரர் “இதர் ஆயில் பகுத் அச்சா” என்கிறார். நான் சொன்னது தப்புத்தான் அதற்காக என்னை தமிங்கலம் பேசுவதாக சொல்கிறீர்களா? ஊருக்கு இளச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டியா சார்? அவர் சமாதானம் அடைந்தார். தப்பா சொல்லலப்பா. நீ சொல்வது எனக்கும் புரியுது. தமிழைக் காக்கவேண்டிய நாமே அதை பிற மொழி கலந்து பேசுகிறோமே என்ற ஆதங்கம்தான் என்றார்.

உங்கள் ஆதங்கம் உண்மைதான். நீங்கள் இருக்கும் அரசியல் கட்சி தமிழுக்காகவே வாழ்வதுபோல் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் நடத்தப்போகும் இளைஞர் மாநாட்டு அறிவிப்பை அச்சடித்து தெருவெல்லாம் ஒட்டியிருப்பதை பார்த்தீர்களா என்றேன்.

“பார்த்தேன். நீ சொல்லவருவது புரிகிறது”

“என்ன புரிந்தது?”

“அந்த அறிவிப்பு ஆங்கிலத்தில் இருப்பதைத்தானே சொல்கிறாய்?”

“அது ஆங்கிலத்தில் இருந்தால் கூட பரவாயில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் போட்டுவிட்டு ஒன்றிரண்டு இடத்தில் மட்டும் எதற்கு தமிழ்?”

“என்னப்பா செய்வது? கட்சி மேலிட நடவடிக்கைகளில் நான் தலியிடமுடியுமா?”

உங்களைத் தலையிடச் சொல்லவில்லை. கடைசியாக அறிவிப்பில் தமிழ் வாழ்க என்று பகடி பண்ணியிருக்கிறீர்களே அதை என்ன சொல்வது என்றேன். இது இப்படியிருக்க நான் தமிங்கிலம் பேசுகிறேன் என்கிறீர்களே என்றேன். அவர் பேசமுடியாமல் அமைதியானார். பின் அவரே,
“ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு” என்று வள்ளுவன் குறளில் சொல்வதைப் போல நம்மை நாம் முதலில் திருத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

அண்ணா தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுக்குங்க என்றேன். நீ எதுக்கு மன்னிப்பு கேட்கிறாய். உள்ளதைத்தானே சொன்னாய் என்றார். சரி, அண்ணா நான் வருகிறேன். நேரமாச்சு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

வழி நெடுக காட்டுமல்லியாய் மனதில் பல எண்ணங்கள் வந்து மோதின. முதலில் என் அண்ணா கண்முன் வந்து நீ போய் எவ்வளவு நேரம் ஆச்சு. இப்படி போனா போன இடம் வந்தா வந்த இடம்னு இருந்தா நீ எல்லாம் எப்படிடா உருப்படுவாய் என்று என்னைக் கண்டிக்கப் போவது நினைவில் வந்தது. நடையைத் துரிதப்படுத்தினேன்.

நடைதான் துரிதமடைந்ததோ அன்றி மனம் அதன் வேலையைப் பார்த்தது. நமக்கு ஏன் வம்பு? யார் எப்படி நடந்தால் நமக்கு என்ன என்று இருக்காமல் ஊர்வம்பை ஏன் விலைக்கு வாங்குகிறோம் என்று எண்ணத் தொடங்கியது. வத்தலக்குண்டு வரதன் அண்ணா உள்ளதைத்தானே சொன்னாய் என்று உதடுகள் சொன்னபோதும் உள்ளுக்குள் திட்டிக்கொண்டுதான் போயிருப்பார்.

நான் கட்சியில் எவ்எளவு செல்வாக்கு உள்ள ஆள். ஒரு பொடிப்பயல் நமக்கு அறிவுரை செய்வதா? இருக்கட்டும் இருக்கட்டும் ஒருநாள் வச்சு செய்வோம் என்று எண்ணியும் இருக்கலாம். என்ன செய்துவிடுவார்? என் அண்ணனிடம் சென்று ஏதாவது போட்டுக் கொடுப்பார். உனது தம்பி தமிழ் தமிழ் என்று ரொம்பவும் துள்ளுறான். உருப்படியா இருக்க வழியைப் பார்க்கச்சொல் என்று சொல்லிவைப்பார்.

தமிழுக்காக எத்தனையோ பேர் உயிரைக் கொடுத்திருக்கும்போது நாம் பலரிடம் திட்டுதானே வாங்கப்போகிறோம் என்று எண்ணினேன். நானும் தமிழில் தெரிந்து செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணியபடியே வீடு வந்து சேர்ந்தேன்.

வீடுநோக்கி ஓடிவந்த என்னையே நாடி நிற்குதே அனேக நன்மையே உண்மையே என்று என்றோ கேட்ட பாடல் வானொலியில் கேட்டது. வீட்டுக்குள் சென்றபின்தான் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது புரியும்.

No comments: