நாவலர் பெருமானை நாமென்றும் போற்றுவமே !


 










 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா




சைவத்தைத் தமிழைத்  தம்முயிராய் எண்ணி
வையத்தில் பலரும் வந்தார்கள் தந்தார்கள் 
திருமுறைச் செல்வர்கள் அளவிலாத் தந்தார்கள்
அவர்வழியைத் தொடர்ந்து வந்தார்கள் சிலபேர்கள் 

நாயன்மார் வழியைத் தடம்பற்றி நின்று
நல்லைநகர் நாவலரும் நற்றடத்தைப் பதித்தார் 
நற்றமிழை அணைத்தார் நம்சைவம் காத்தார்
கற்றபடி நடந்தார் கடவுளையே நினைத்தார்

நீறணியும் குடும்பம் நேர்மையுடை குடும்பம்
நாவலரின் குடும்பம் நல்லதொரு குடும்பம்
சைவமொடு தமிழை தாங்கிவிடும் குடும்பம்
சன்மார்கம் நிறைந்த நாவலரின் குடும்பம்

தமிழோடு சைவம் தானவர்கள் சொத்து
சைவத்தை அவர்கள் உயிராக நினைத்தார்
நாவலரின் மனத்தில் பதிந்தநல் விதையாய்
நம்சைவ மூன்றி வேர்விட்டு நின்றதே 

சைவத்தைக் காத்திட தனையீந்தார் நாவலர்
சைவத்தைப் பரப்பிடத் தலமையினை ஏற்றார்
சைவத்தைத் தடுப்பாரை தூக்கியே எறிந்தார்
சைவத்தின் காவலனாய் தலைநிமிர்ந்து நின்றார்

மாற்றுமத போதனையை மறுத்துரைத்து நின்றார்
மாற்றுமதத் தலைமைகளை மண்கெளவச் செய்தார்
சைவத்தின் மேன்மைகளை சகலருக்கும் சொன்னார்
சன்மார்க்க வழிநடந்து சாதித்தார் நாவலரும் 

கற்பவைகள் கற்றார் கசடறவே கற்றார்
மற்றவர் விளங்க மறுதலியா உரைத்தார்
சொற்கள் சுவையாக சுள்ளென்று உறைக்க
கருத்தோடு சொற்கள் கணக்கின்றிப் பெருகின

நீறணிந்த நெற்றியுடன் நிமிர்ந்தநற் பார்வையுடன்
நாவலரும் வந்தார் நம்சைவம் காத்தார்
பாவலரும் பண்டிதரும் நாவலரைப் பார்த்து
தேவார முதலிகளே வந்ததாய் நினைத்தார்

ஐந்தாங் குரவராய் ஆக்கினார் நாவலரை
அரன்நாமம் சொல்லியே நாவலரும் வாழ்ந்தார்
அறமேந்தி வாழ்ந்தார் ஆன்மீகம் அணைத்தார்
அன்னைத் தமிழுக்கு அரும்பணிகள் ஆற்றினார்

இலக்கியத்தை இலக்கணத்தை ஏந்தினார் நாவலர்
எழுத்துப் பிழையினை எதிரியாய் பார்த்தார்
சொற்பிழை தவிர்த்தார் நற்றமிழ் விதைத்தார்
தமிழன்னை சிறக்கவே தமிழ்த்தொண்டு செய்தார்

கல்வியைக் கண்ணாய்க் கருதென்று மொழிந்தார்
கற்பதற்கு வசதியாய் நூல்களை எழுதினார்
பள்ளிகளை நிறுவினார் பாடநூல்கள் ஈந்தார்
தெள்ளுதமிழ் உள்ளமெலாம் நிறைந்திடவே செய்தார்

நாவலரின் வசனநடை நற்றமிழின் வரமாகும்
வசனநடை  கைவந்த வல்லாளர் நாவலரே
அவர்நடையை தமிழறிஞர் அனைவருமே போற்றுகிறார்
போற்றுகின்ற நாவலரை ஏற்றியே வாழ்த்திடுவோம் 

ஈழத்தில் சைவம் எழுந்தோங்கி நிற்பதற்கு
காரணமாய் காவலனாய் நாவலரே நிற்கின்றார்
நாவலர் வரவாலே நம்சைவம் பிழைத்தது
நாவலர் பெருமானை நாமென்றும் போற்றுவமே ! 








No comments: