பல்மருத்துவக் கலாநிதி
--- பாரதி இளமுருகனார்
சாகித்திய விருது - தமிழக அரசின் விருது - மதுரை உலக தமிழ்ச் சங்க விருது எனப் பலவித விருதுகளைப் பெற்ற பிரபல மூத்த எழுத்தாளராகிய மாத்தளைச் சோமு அவர்களின் 100 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு நூலின் வெளியீடு கடந்த 30- 11 – 2025 ஞாயிற்றுக் கிழமை சிட்னியில் அமைந்துள்ள துங்காபி புனித அந்தோனியார் தேவாலய மண்டபத்திலே கோலாகலமாக அரங்கேறியது. அரங்கு நிறைந்த தமிழ் ஆர்வலர்களுடன் விழா ஆரம்பமாகியது. மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய விழா வழமைபோலத் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைத்ததைத் தொடர்ந்து வரவேற்புரையை தமிழ் ஆர்வலர் வசந்தராஜா அவர்கள் (தலைவர் - கம்பலாந்து தமிழர் கழகம்) சிறந்த முறையிலே வழங்கினார்.அவரின் கம்பீரமான பேச்சு நடை எல்லோரையும் கவர்ந்திருந்தது. சிட்னியிலே பல தமிழ் நிகழ்ச்சிகளிலே பங்கேற்றுத் தனது ஆளுமையை நிலைநாட்டியவர் திருவாளர் ம. தனபாலசிங்கம் அவர்கள். அவரே இந்த விழாவுக்குத் தலைமை வகித்து ஒரு சிறந்த உரையை அற்புதமாக வழங்கினார். வழமைபோல அவரின் பேச்சு தனித்துவமானதாக அமைந்திருந்தது. தொடர்ந்து கலாபூசணம் நாவை குமரிவேந்தன் அவர்கள் சிறப்பான வகையிலே வாழ்த்துரை வழங்கினார். வளர்ந்துவரும் சிறந்த எழுத்தாளர் ஐங்கரன் விககினேஸ்வரா அவர்களின் அற்புதமான வாழ்த்துரை பாராட்டிற்கு உரியது.
மலையகச் சிறு கதைகளின் ஆய்வினைப் பிரபல ஒலிபரப்பாளர் இரா சத்தியநாதன் அவர்கள் நல்லவிதத்திலே நிறைவுசெய்தார்.
போர்க்காலச் சிறுகதைபற்றி ஒரு நீண்ட
ஆய்வினை நூல்நேசர் நந்தன் தர்மபாலன் அவர்கள் ஆற்றினார். தனக்கு மேடைப் பேச்சிலே அவ்வளவு
சாமர்த்தியம் இல்லையென்று ஆரம்பித்த அவர் அன்றைய
உரையால் தான் ஒரு சிறந்த பேச்சாளர் என்று முத்திரை பதித்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்வாழ்வு சிறுகதைகள் பற்றிச்
செல்வன் அகலவன் ஸ்ரீஸ்கந்தராஜன் அவர்கள் அவையினரைக் கவரும்வண்ணம் தனது உரையை இளமைத்
துடிப்புடன் உற்சாகமாக வழங்கினார்.
நூல் வெளியிட்டதைத் தொடர்ந்து சிறப்புப்
பிரதிகளை மாத்தளைச் சோமு அவர்கள் தமிழ் ஆர்வலர்களுக்கு வழங்கினார்.
மலையக மண்ணின் மைந்தனாகத் தமிழுக்கு
அளப்பரிய பங்களிப்பைத் தனது எழுத்தாற்றலால் வெளிப்படுத்திவந்த மாத்தளைச் சோமு அவர்களுக்குப் பொன் ஆடை போர்த்திக் கௌரவித்தேன்.
இறுதியிலே விழா நாயகன் மாத்தளைச் சோமு அவர்கள் தனது
ஏற்புரையிலே விழாவுக்கு வருகை தந்திருந்தோருக்கு அன்பு பாராட்டி நன்றிகூறினார். தனது நூல்களிலிருந்து ஒருசில சிறப்புகளைத் தெளிவுற விளக்கியதுடன் எல்லோரும் தனது நூல்களைப் பெற்று ஆதரவளிக்கும்வண்ணம் அன்பு வேண்டுகோள் விடுத்தார்
நூல் வெளியீட்டு விழாவிலே
ஒரு சிறப்பு மலரை வெளியிட்டமை விழாவுக்கு மேலும் மெருகூட்டியது.
அண்மைக் காலத்திலே மாத்தளை சோமு அவர்களின் படைப்புகளுக்குத் தமிழ் அறிஞர்கள் வழங்கிய முன்னுரைகள் - அணிந்துரைகள் - கருத்துக்கள் முதலியவற்றுடன் இலண்டன் - கனடா – மலேசியா - தமிழ்நாடு - அவுஸ்திரேலியா(பல மாநிலங்கள்) ஆகிய இடங்களில் அவர் தனது தனித்தனிக் கதைகளை வெளியிட்டு வைத்த நிகழ்ச்சிகளின்போது எடுக்கப்பெற்ற நிழற்படங்களும் அதிலே இணைக்கப் பெற்றிருந்தது.
இந்த விழாவுக்கென்று எழுதப்பெற்ற
இரு வாழ்த்துக் கவிதைள் மலரை அலங்கரித்தன.
”சிவஞானச் சுடர்” பல்மருத்துவக் கலாநிதி
பாரதி இளமுருகனார் (வாழ்நாட் சாதனையாளர்)
அளித்த வாழ்த்துக்
கவிதை.
புலம்பெயர்ந்து புகுந்தஅவுஸ் திரேலி யாவில்
பொன்னனைய தமிழுக்கோர் இலக்கிய விழாவை
நலன்விரும்பி முதன்முதலில் நாடே வியக்க
நடந்தேற்றி வெற்றிகொண்ட
சோமு அய்யா
பலன்கருதா தியற்றும்பணி பகரப் போமோ?
பண்பாளன் நூல்வெளியீடு
பாங்குட னமைந்து
சிலம்பனருள் வேண்டியன்பர் சீர்மை செய்து
செழுமையுடன் நிறைவுபெற
வாழ்த்து கின்றேன்!.
வேறுவேறு பொருள்களிற்றன் வித்துவச் சிறப்பை
வெளிக்கொணரும் முகமாக
வெற்றிப் படைப்பாய்
நூறுகதை நற்றமிழில் எழுதி நாமும்
நுகர்ந்தேயின் புறவேண்டி
நுதிபெற் றயர்ந்தோன்
கூறுகளா யிருநூலாயத் தமிழர் பெற்ற
கொடையெனவே போற்றிநிற்க
வெளியிடும் விழாவும்
ஆறுநெற்றிப் பொறியிலவ தரித்த செவ்வேள்
அருள்பில்கி நனிசிறக்க
வாழ்த்து கின்றேன்.
கவிஞர் ஆறு. குமாரசெல்வம் அவர்கள் (சிட்னி - ஆஸ்திரேலியா) அளித்த
வாழ்த்துக் கவிதை!
ஆன்றநல் அறிஞர் அரும்பெரும் பண்பர்
தோன்றலில் நல்லவர் தொன்மையில் வல்லவர்
ஈன்றெடுத்த பெரியோருக்கு பெருமையீட்டிய பேராளர்
மாத்தளை சோமுவை என் மனதாரப் பாராட்டுகிறேன்!
புலம்பெயர்ந்து வந்தாலும் புதுஇடத்தில் வாழ்ந்தாலும்
நலம்சிறந்து இருந்திடவே நாள்தோறும் நற்றமிழையே
வலம்வரும் இவரது சிந்தனை இவரை
வாழ்த்தி கரம்குவித்தேன் கோடி சிந்தனை!
பயணக் கட்டுரைகளை பாரிலுள்ளோர் தினம்படிப்பார்
பைந்தமிழை யாவருமே படிப்பதற்கிவர் அடம்பிடிப்பார்
வாழ்க்கைப் பிரச்சனைகளை வார்த்தையிலே படம்பிடிப்பார்
வரலாற்று புத்தகத்திலே என்றென்றுமிவர் இடம்பிடிப்பார்
நூறுசிறுகதைகள் புத்தகம் நூறாண்டு நிலைத்திருக்க
கூறும் அறிவுரைகளால் குவலயத்தார் மகிழ்ந்திருக்க
ஆறு.குமாரசெல்வம் ஆவலுடன் போற்றுகிறேன்
ஐயா மாத்தளை சோமுவை அன்புடன் வாழ்த்துகிறேன்.
எனது பார்வையில்------
மாத்தளைச் சோமு அவர்கள் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் சிட்னியிலே இருந்து தனது எழுத்துப் பணியை எதுவித தொய்வுமின்றிச் செவ்வனே
செய்து வந்தமை எனக்கு நன்றாகத் தெரியும்.
சிறுகதைகளைப் பொறுத்தமட்டிலே அவைகள்
சுருக்கமானதாகவும் சிறப்புச் செறிவு கொண்டதாகவும்
(கதா பாத்திரங்களின் குண அலங்காரம்) அமையவேண்டும். அத்துடன் கதைகளை வாசிப்போருக்கு ஏற்ப இலகுவான சொல்லாட்சி அமைவது
அவசியம் குறிப்பிட்ட மக்களின் உணர்வைப் பிரதிபலிப்பதாகவோ அல்லது கதையின் கருப்பொருளைத்
தெளிவாகவும் முழுமையாகவும் வெளிக்கொணருவதுடன் ஒருமைப்பாட்டோடு அமைவது முக்கியமாகிறது. எழுத்தாளனின் இரசிக்கக் கூடிய கற்பனைத்திறனும்
வாசிப்போரின் மனதைக் ஈர்க்கக்கூடிய விதத்திலே இலகு நடைச் சொல்லாட்சியும் கதைகளுக்கு
மெருகூட்டுபவை!.எனது இனிய நண்பர் மாத்தளைச் சோமு அவர்களின் கதைகளை இத்தகைய சிறப்பு
அம்சங்கள் அலங்கரிக்கின்றன். அவை கதைகளை ஆர்வத்துடன் வாசிக்க உதவுவதுடன் அவற்றின் சுவையையும் மிகைப்படுத்துகின்றன.. மாத்தளை
சோமு அவர்களின் மலையக வாசைன வீசும் கதைகளை வாசிக்கும் பொழுது அந்த உண்மை புலப்படும்.
பாமர மக்களின் எளிய வாழ்க்கை நிலையை மையமாகக் கொண்டு அவர்களின் உணர்வுகளைத் தனது ஆக்கபூர்வமான
எழுத்தாற்றலால் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது; மனித உணர்ச்சிகளைப் பல கோணங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
புனைவு வகை உரைநடை இலக்கியமான இந்தப் படைப்பானது
வாசிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசசாதமாகும் என்பது எனது கணிப்பு.
விழாவிலே சிற்றுண்டிகளும் தேநீர் - கோப்பி பானங்களும் வழங்கப்பெற்றன.
விழா நிகழ்ச்சிகளைத் திருமதி காந்திமதி தினகரன் அவர்கள் திறம்படத்
தொகுத்து வழங்கினார்.
இனியதொரு இலக்கிய விழாவிலே பங்கேற்ற மனநிறைவுடன் தமிழன்பர்கள்
விடைபெற்றார்கள்.
=====================================================================================
.png)

No comments:
Post a Comment