பரந்தாமன் தலைமையில் பட்டிமன்றம்!


-சங்கர சுப்பிரமணியன்.

 


பேச்சாளர்கள் பேசுவதை நாம் கேட்டிருப்போம். ஒவ்வொருவர் ஒருவகை. எந்தவித முன்னேற்பாடும் இன்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். இவர்கள் ஒருகாலத்தில் சென்னை கடற்கரை ஒன்றில் இரண்டு மணி நேரம் உரையாற்றிவிட்டு அப்படியே அதையடுத்து அடுத்த கடற்கரைக்கு சென்றும் இரண்டு மூன்று மணி நேரம் பேசுவார்கள்.


இவர்கள் பேசுவதை கேட்ட கூட்டம் அப்படியே அடுத்த கடற்கரையில் நிழ்த்தும் உரையக் கேட்க செல்லும். பேச்சாளரின் உரை அங்கு முற்றிலும் வேறுபட்டு இருக்கும். இது ஒருவகை. சிலர் பேச்சை முன்னமே தயாரித்து வைத்துக் கொண்டு கையில் தாள் ஏதுமின்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். இப்படி ஒருவகை. சிலர் பக்கம் பக்கமாய் எழுதி வைத்துக்கொண்டு அத்தனை பக்கங்களையும் பார்த்து படித்தபடி பேசுவார்கள்.

இன்னும் சிலர் ஓரிரு பக்கங்களையை வைத்துக்கொண்டும் சிலர் ஓரிரு குறிப்புக்களை வைத்துக் கொண்டும் மணிக்கணக்கில் பேசுவார்கள். இன்னும் சிலர் பேசும் போதே பெரிய பின்னணிப்பாடகர் என்ற நினைப்பில் பாடவும் செய்வார்கள். எல்லாம் காலத்தின் கோலமே. இவர்களுக்கிடையில் ஒரு துண்டுச் சீட்டில் நான்கே நான்கு வாக்கியங்களை எழுதி வைத்துக் கொண்டு அதையும் பார்த்து பார்த்துப் பேசுவார்கள்.

இப்போது பட்டிமன்றத்துக்கு வருவோம். பேச்சாளர்கள் பட்டிமன்றத் தலைவர்களிலும் பலவகை இருக்கிறார்கள். சில பட்டிமன்றத் தலைவர்கள் எந்த முன்னேற்பாடும் இன்றி அந்த நேரத்தில் மனதில் தோன்றுவதை யதார்த்தமாகப் பேசுவார்கள். சிலர் நகைச்சுவையாக பட்டிமன்றத்தை நடத்திச் செல்வார்கள். இன்னும் சிலர் அடுக்குமொழி பேசி பட்டிமன்றத்தை நடத்திச் செல்வார்கள்.

குடிக்கும் காபியிலேயே நம்மவர்கள் லைட் காபி, டபுள் லைட், ஸ்ட்ராங்க் காபி, டபுள் ஸ்ட்ராங்க் மற்றும் ஃபில்டர் காபி என்று இருக்கும்போது பேச்சுகளிலும் பட்டிமன்றங்கிளலும் பலவகை இருக்கக்கூடாது என்று சட்டமில்லையே என்ற எண்ணத்தோடு கதைக்குள் நுழைவோம்.

பட்டமன்றத் தலைவர் பரந்தாமன் பட்டி தொட்டியென்றும் பெயர் பெற்றவர். இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பதுபோல ஏற்றம் பெற்றவர். இவர் நல்ல தலைவர்தான் ஆனால் பேச்சு படித்து வைத்து ஒப்புவித்தல் போல் இருக்கும். ஏற்றம் இறக்கம் நகைச்சுவை சொந்தக்கருத்து என்று சுத்தமாய் எதுவும் இருக்காது.

நெல்லை மாவட்டம் அம்பையில் இவரைவிட்டால் ஆள் இல்லை என்பதால் அங்கு நடந்த பள்ளி ஆண்டுவிழா ஒன்றில் இவர் தலைமையில் பட்டிமன்றம் ஒன்று நடந்தது. பட்டிமன்றத் தலைப்பான இலக்கியங்களில் சொன்னவை இன்று நடப்பதில்லை என்று ஒருபிரிவும் நடக்கிறது என்று ஒரு பிரிவும் அவரவர் தரப்பில் வாதாடவேண்டும்.

தலைவர் தன் பீடிகையைத் தொடர்ந்து பேச இருப்பவர்களை அழைத்தார். முதலாவதாக முத்தரசன் இலக்கியங்களில் சொன்னவை நடப்பதில்லை என்ற அணிக்காக பேச்சைத் தொடங்கினான். அரசவையில் துயிலுரியப்பட்டு அவமானப் பட்டபோது துகில் கொடுத்து உதவினான் இறைவன் என்று இலக்கியம் இயம்புகிறது.

ஆனால் இன்று நடந்ததென்ன? போரில் அதைவிடக் கொடுமைகள் பெண்களுக்கு நடந்தபோது எந்த இறைவனும் வந்து காக்கவில்லை என்று கூறி தனது பேச்சைமுடித்தான். உடனே தலைவர் முத்தரசனின் சத்தான பேச்சு கெத்தாக இருந்தது என்று குத்துமதிப்பாக கூறி அடுத்த அணியின் முதல் பேச்சாளர் முகுந்னைப் பேச அழைத்தார்.

எதிரணியில் இருந்து பேசிய எனது நண்பன் கூற்றுக்கு என் பதிலை இங்கு தருகிறேன். உடுக்கை இழந்தவன் கைபோல என்று இலக்கியத்தில் சொன்னபடி இன்றும் நடக்கத்தான் செய்கிறது. ஒருவர் இடுப்பில் கட்டுயிருக்கும் வேட்டி அவிழ்ந்து கீழே விழ இருந்தால் இன்றும் கை தானாகவே சென்று சரிசெய்வதில்லையா என்று கேட்டு தன்அணிக்கு வலு சேர்த்தார்.

தலைவரும் முகுந்தனின் தகுந்த பதில்கேட்டு மிகுந்த மகிழ்வடைந்தேன் என்று மனப்பாடம் செய்து வைத்திருந்த மற்ற சங்கதிகளையும்
ஒப்புவித்ததை அடுத்து மற்ற அணியிலிருந்து நிறைவுப் பேச்சாளர் தனது பேச்சைத் தொடங்கினார். ஒரு யானை தடாகத்தில் நீரருந்த வந்நபோது அங்கு பதுங்கியிருந்த முதலை அதன் காலைக் கவ்வியது. முதலையின் பிடியிலுருந்து தப்ப முடியாமல் பிளிறிய ஓலம் கேட்டு இறைவன் ஓடோடிவந்து காப்பாற்றினான் என்று இலக்கியம் பேசுகிறது.

ஆனால் இங்கு போரில் கொத்துக் குண்டுகளை மக்கள்மேல் வீசி கொத்து கொத்தாய் மக்களைக் கொன்றபோது மெத்தனமாகத்தானே இறைவன் இருந்தான். எனவே இலக்கியங்களில் சொல்லப்பட்டவை போல் எதுவும் இன்று நடப்பதில்லை என்று கூறி வாதத்தை நிறைவு செய்தான்.

இறுதியாக வந்த கடைசிப் பேச்சாளர் என்வாதம் இன்றும் இலக்கியங்களில் கூறப்பட்டஙை அப்படியே நடக்கிறது என்பேன். என் வீட்டிலிருந்து ஒரு கல் தொலைவில் தடாகம் ஒன்றுள்ளது. அதில் நீர் நிறைந்திருக்கும்போது தாமரை மலர்கள் மேல் வருவதும் தண்ணீர் மட்டம் குறையக்குறைய தாமரை மலர்களும் கீழே சென்றுவிடுகின்றன. இது வெள்ளத்தணைய மலர்நீட்டம் என்ற குறள்வழி இன்றும் நடக்கிறது.

அதேபோல் உயர்ந்த குணம் உடயோர் உயர்ந்தும் மட்டமான குணமுடையோரின் பேச்சு மற்றும் நடை உடை பாவணைகள் அதற்கேற்றவாறே அமைவதையும் காணமுடியும் என்றுகூறி இலக்கியத்தில் மட்டுமல்ல இன்றும் நடந்தவண்ணம் இருப்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதென்பதை திட்வட்டமாக எடுத்துரைத்தான்.

அடுத்ததாக தலைவர் தீர்ப்பு வழங்க வேண்டும். தலைவர் தான் எல்லாம் அறிந்தவர் நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம் என்ற மிதப்பான நோக்கில் எல்லோரையும் ஒரு பார்வை பாரத்தார். இலேசாக சிரித்தார் கொஞ்சம் கணைக்கவும் செய்தார். இதெல்லாம் அவரின் மேதாவிலாசம்.

பின் பேச்சைத் தொடர்ந்தவர் தலைப்பு என்னவோ இசக்கு பிசக்கு என்றிருப்பதால் கசக்கும்படி பொசுக்கென்று சொன்னால் நீங்கள் கோபப்பட்டு விசுக்கென்று சென்றுவிடுவதை நான் விரும்பவில்லை. இலக்கியத்தில் சொன்னதுபோல் நடப்பதில்லை என்ற அந்த அணியினர் கூற்றையும் மறுப்பதற்கில்லை. நடக்கிறது என்று இந்த அணியினர் கூறுவதையும் ஒதுக்கவதற்கில்லை.

இந்த இரண்டுமே நடக்கத்தான் செய்கிறது. எனவே அந்த காலத்தில் சொன்னது அன்று நடந்திருக்கிறது. ஏனென்றால் இறைவன் நம்மோடு ஊணோடும் உயிரோடும் இருந்தார். ஆதலால் ஓடிவந்தார். இன்று ஒடிவந்து உதவிமுடியாமல் சிலையாக உறைந்து விட்டார். இல்லாவிட்டால் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனைமறவேன் என்று பாடுவோமா?

அதுபோல் இந்த அணியினர் சொல்வதிலும் உண்மையுள்ளது. முதலில் பேசிய முத்தரசன் வேட்டி அவிழ்ந்துவிட்டது என்றால் அவர் கை உடனே வேட்டியைச் சரிசெய்யுமா சரிசெய்யாதா என்று கேட்டால் சரிசெய்யாது என்றா சொல்வார். அல்லது குளத்தில் தண்ணீர் வற்றினாலும் தாமரை மலர்கள் பனைமரம்போல் நிமிர்ந்துதான் நிற்கும் என்று எவராலும் சொல்லமுடியுமா?

ஆதலால் இந்த பட்டிமன்ற முடிவை நடிகர் திலகம்  கணேசன் பார்த்தால் பசிதீரும் என்ற படத்தில் நடித்து பாடிய உள்ளம்
என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை என்ற பாடலில் வருவதுபோல் உண்மை என்பது இங்கு ஊமையாகத்தான் உள்ளது. மேலும் சொல்லில் வருவது பாதி நெஞ்சில் மூடிக் கிடக்குது நீதி என்பதுபோல் எனது தீர்ப்பையும் வழங்குகிறேன்.

ஆம், அன்று இலக்கியங்களில் சொன்னவை இன்று நடப்பதில்லை என்பதும் சரியே மற்றும் அன்று இலக்கியங்களில் சொன்னவை இன்றும் நடக்கிறது என்பதும் சரியே என்ற முடிவை ஏற்பீர்கள் என்ற எண்ணத்துடன் தீர்ப்பளித்து இப்பட்டி மன்றத்தை நிறைவு செய்கிறேன் என்றார்.

கூட்டம் கலைய கூட்டத்தில் சிலர் பரந்தாமன் என்றால் பரந்தாமன்தான் பாம்பும் சாகாமல் கோலும் ஒடியாமல் என்ன அருமையான தீர்ப்பை சொன்னார். அதனால்தான் பட்டி தொட்டிகளில் இன்றும் பிரபலமாக வலம் வருகிறார் என்று பேசியபடிச் சென்றனர்.


No comments: