காசாவில் ‘பைரன்’ புயல் தாக்கம் ; 14 பேர் பலி
உக்ரைனில் எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் : 90 ஆயிரம் பேர் மின்சாரமின்றி தவிப்பு
மியன்மாரில் வைத்தியசாலை மீது தாக்குதல் ; 34 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசிய வெள்ள பேரழிவு ; உயிரிழப்பு 1,000ஐ கடந்தது - ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் இடம்பெயர்வு
தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரி மக்களுக்கும் குரல் கொடுப்பேன்- விஜய்
ஜப்பான் நிலநடுக்கம் ; 30 பேர் காயம்
காசாவில் ‘பைரன்’ புயல் தாக்கம் ; 14 பேர் பலி
13 Dec, 2025 | 09:47 AM
காசா பகுதியில் தாக்கிய ‘பைரன்’ புயலால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பகுதியில் கடும் காற்று, கனமழை மற்றும் முன்பு இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு வாழும் மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் சுமார் 8.5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்க அனுமதி வழங்க வேண்டும் என காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
மழை மற்றும் குளிர் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பது
அதிகரித்து வருவதாக அந்நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது கடும் குளிர், வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், காசாவுக்குள் அவசர உதவிப் பொருட்கள், தங்குமிட வசதிகள் மற்றும் குளிர்காலத்திற்கு தேவையான பொருட்களை வழங்க சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
உக்ரைனில் எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் : 90 ஆயிரம் பேர் மின்சாரமின்றி தவிப்பு
13 Dec, 2025 | 10:10 AM
தெற்கு உக்ரைனின் முக்கிய துறைமுகப் பகுதியாக உள்ள ஓடேசா பிராந்தியத்தில், எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதலின் காரணமாக, உக்ரைனின் பல துறைமுக நகரங்களில் மின்சார விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சுமார் 90,000 பேர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, எரிபொருள் நிலையங்கள் மற்றும் மின்சார விநியோக அமைப்புகள் சேதமடைந்ததால், அத்தியாவசிய சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மின்சார விநியோகத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கான அவசர மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைனின் துறைமுக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, ஓடேசா உள்ளிட்ட பகுதிகளில் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. நன்றி வீரகேசரி
மியன்மாரில் வைத்தியசாலை மீது தாக்குதல் ; 34 பேர் உயிரிழப்பு!
Published By: Digital Desk 3
12 Dec, 2025 | 05:16 PM
மியன்மாரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரக்கைன் மாகாணத்தில் உள்ள அரசு பொது வைத்தியசாலை மீது அந்நாட்டு இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையின் கட்டடங்கள், வாகனங்கள் கடும் சேதமடைந்தன.
வைத்தியசாலை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
இந்தோனேசிய வெள்ள பேரழிவு ; உயிரிழப்பு 1,000ஐ கடந்தது - ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் இடம்பெயர்வு
09 Dec, 2025 | 11:23 AM
இந்தோனேசியாவில் கடந்த வாரம் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில், சிக்கி இதுவரையில் 1,000 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், 234 பேர் காணாமல் போயுள்ளதுடன் 5,000 பேர் காயமடைந்துள்ளனர். இதில் , வட சுமத்திரா மற்றும் மேற்கு சுமத்திரா மாகாணங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், 156,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 975,075 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதேவேளை, அந்நாட்டு கடலோர மாவட்டங்களில் வெள்ளநீர் சற்று தளர்ந்துவரும் நிலையில், மலைப்பகுதிகளிலுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும் என அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் நவம்பர் முதல் ஏப்ரல் வரை நீடிக்கும் மழைக்காலம் பெரும்பாலும் கடுமையான வெள்ளங்களை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரி மக்களுக்கும் குரல் கொடுப்பேன்- விஜய்
09 Dec, 2025 | 05:08 PM
'தமிழகத்தை போலவே புதுச்சேரியை புதுச்சேரி மக்களும் கடந்த முப்பது ஆண்டுகளாக எம்மை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த விஜய் தமிழகத்து மட்டும் தான் குரல் கொடுப்பார் என நினைக்காதீர்கள். புதுச்சேரி மக்களுக்கும் சேர்ந்து குரல் கொடுப்பேன்' என தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், திரை நட்சத்திரமான விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைக்கான பொது தேர்தலில் களம் காணும் இக்கட்சி தொடர்ந்து மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு பிறகு, 72 நாட்கள் கழித்து தமிழகத்தின் அண்டை பகுதியான புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் இக்கட்சி தொடங்கியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேச காவல்துறையின் கடும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு மக்கள் சந்திப்பு ஆக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் வழக்கம் போல் திட்டமிட்டதை விட எதிர்பாராத வகையில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர்.
அவர்கள் முன்னிலையில் விஜய் பேசியதாவது,
ஒன்றிய அரசு தான் தமிழகத்தை ஒரு மாநிலமாகவும், புதுச்சேரியை யூனியன் பிரதேசமாகவும் பார்க்கிறது. ஆனால் நாம் வேறு வேறு கிடையாது. எந்த மாநிலமாக இருந்தாலும்... உலகின் எந்த மூலையில் இருந்தாலும்... அவர்கள் நம் உறவு தான்.
1977 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர் 1974 ஆம் ஆண்டில் புதுச்சேரி ஆட்சியைப் பிடித்தார். எம்ஜிஆர் எமக்கானவர். அவரை தவற விடாதீர்கள் என தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை செய்ததே புதுச்சேரி தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை மறக்க இயலுமா...!?
தமிழக மக்களைப் போலவே புதுச்சேரி மக்களும் கடந்த முப்பது ஆண்டுகளாக எம்மைத் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த விஜய் தமிழகத்திற்கு மட்டும்தான் குரல் கொடுப்பார் என நினைக்காதீர்கள். புதுச்சேரி மக்களுக்கும் சேர்ந்து குரல் கொடுப்பேன். அது எனது கடமையும் கூட.
புதுச்சேரி அரசு தமிழகத்தில் உள்ள திமுக அரசை போன்றது அல்ல. வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும்.. அந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் இல்லாமல் இந்த அரசு நடந்து கொள்கிறது. இதற்காக புதுச்சேரி முதல்வருக்கு எம்முடைய மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை பார்த்தாவது தமிழகத்தை ஆளும் திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள். வரவிருக்கும் தேர்தலில் அவர்கள் நூறு சதவீதம் கற்றுக் கொள்வார்கள். அதனை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
புதுச்சேரி மக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். திமுகவை நம்பாதீர்கள். அவர்கள் நம்ப வைத்து. ஏமாற்றி விடுவார்கள். மீன் பிடிக்கச்செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்கிறது. அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுகிறது.
நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் படு மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்பவும் குரல் கொடுப்பான். வரவிருக்கும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும். வெற்றி நிச்சயம்'' என்றார்.
இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து மறைந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் பெயரை உச்சரித்து அவருடைய ரசிகர்களையும் அபிமானிகளையும் கவர்ந்து அரசியல் செய்து வருவதாகவும், திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் எம்ஜிஆர் என்ற அஸ்திரம் தான் பொருத்தமானது என்பதை உறுதியாக விஜய் பற்றி கொண்டிருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஜப்பான் நிலநடுக்கம் ; 30 பேர் காயம்
Published By: Digital Desk 3
09 Dec, 2025 | 12:19 PM
வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை (08) இரவு 7.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் மீளப் பெறப்பட்டது.
திங்கட்கிழமை இரவு அந்நாட்டு நேரப்படி 11.15 க்கு ஜப்பானின் வடக்கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து 10 அடி உயரத்திற்கு இராட்சத சுனாமி அலைகள் எழலாம் என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) அறிவித்தது.
அதன்படி, ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. மேலும் பல துறைமுகங்களில் 20 முதல் 70 செ.மீ (7 முதல் 27 அங்குலம்) உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கின.
நிலநடுக்கத்தின் மையம் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கிலோ மீற்றர் (50 மைல்) தொலைவில், 50 கிலோ மீற்றர் (30 மைல்) ஆழத்தில் பதிவாகியது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடைந்து விழுந்த பொருட்களாலே பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹச்சினோஹேயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன், டோஹோகுவில் கார் குழி ஒன்றுக்குள் விழுந்ததில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
"ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கரையோரங்களில், கொக்கைடோ நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிமீ (620 மைல்) தொலைவில் ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது" என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனை தொடர்ந்து குறித்த பகுதிகளில் வசிப்பவர்களை விரைவாக வெறியேறுமாறு பிரதமர் சானே தகைச்சி வலியுறுத்தினார்.
சுமார் 2,700 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 480 குடியிருப்பாளர்கள் ஹச்சினோஹே விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாக தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார்.
சேத மதிப்பீட்டிற்காக 18 பாதுகாப்பு ஹெலிகொப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி தெரிவித்துள்ளார்.
ஹொக்கைடோவில் உள்ள நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில் 200 பயணிகள் இரவு முழுவதும் சிக்கித் தவித்ததாக என்.எச்.கே செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு கரையோர பகுதிகளில் சில ரயில் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக கிழக்கு ஜப்பான் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருவதாக என்.எச்.கே செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
புகுஷிமா அணு மின் நிலையத்தில் எந்தவொரு அசாதாரண சம்பவங்களும் இடம்பெறவில்லை என சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் மேலும் வலுவான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். என்.எச்.கே செய்திச் சேவை அறிக்கைகளின்படி, குறைந்தது ஒரு வாரமாவது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நில அதிர்வு மிகுந்த நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள ஜப்பான், உலகளாவிய ரீதியில் அதிகளவு நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும்.
உலகில் 6.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிச்டர் அளவில் சுமார் 20 சதவீதமான நிலநடுக்கங்கள் ஜப்பானில் பதிவாகிறது. மேலும் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு ஜப்பான் கடுமையாக பாதிக்கப்பட்டது. நன்றி வீரகேசரி



No comments:
Post a Comment