இலங்கைச் செய்திகள்

சீரற்ற வானிலை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலை: 4.95 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 17 இலட்சம் பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

கிண்ணியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்க தீர்மானம்

மலையக தமிழ் மக்களை வடக்கில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் - சிவபூமி அறக்கட்டளைத்தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கள வைத்திய சேவை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான புகையிரத திணைக்களத்தின் அறிவிப்பு

டெய்சி பாட்டிக்கு நாளை மனநலப் பரிசோதனை ; யோஷித ராஜபக்ஷ, டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

யாழில். 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி தொகை பெறுவோரின் பெயர் பட்டியல் இன்று முதல் காட்சிப்படுத்தப்படும்!



சீரற்ற வானிலை ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரிப்பு

Published By: Digital Desk 1

12 Dec, 2025 | 12:06 PM

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து, பதுளை மாவட்டத்தில் 90 பேரும், நுவரெலியாவில் 89 பேரும், குருநாகலில் 61 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 37 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கேகாலை மாவட்டத்தில் 32 பேரும், மாத்தளையில் 28 பேரும், கம்பஹாவில் 17 பேரும், அநுராதபுரத்தில் 13 பேரும், கொழும்பில் 09 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 08 பேரும் அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 04 பேரும், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தலா 03 பேரும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் தலா இருவரும், இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களில் தலா ஒருவரும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 




சீரற்ற வானிலை: 4.95 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 17 இலட்சம் பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Published By: Digital Desk 1

12 Dec, 2025 | 10:10 AM

நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரையான காலப்பகுதியில், 495,189 குடும்பங்களை சேர்ந்த 1,703,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தினால் சுமார் 639 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன், 211 பேர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன், 5,588 வீடுகள் முழுமையாகவும், 102,246 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

866 தங்குமிடங்களில் 26,563 குடும்பங்களை சேர்ந்த 84,674 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 





கிண்ணியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்க தீர்மானம்

Published By: Vishnu

12 Dec, 2025 | 03:31 AM

(எம்.மனோசித்ரா)

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் கட்டுமானங்கள் வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 12 ஏக்கர் காணியில் கின்னியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவகத்தை நிர்மாணிப்பதற்கு 2017.06.20 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்களுக்கு 25.45 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. பின்னர் மேலெழுந்துள்ள நிலைமைகளால் அப்பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான நிறுவகம் திட்டமிட்டவாறு அக்காணியிலேயே மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லையென்பதை தொழிநுட்பவியல் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

அதனால், கிண்ணியா பல்கலைக்கழகத்தின் தொடர் நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கும், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளவாறு, பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் அதன் கட்டுமானங்களை சுற்றுலாத்துறைக் கருத்திட்டமாக அமுல்படுத்துவதற்கு வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைப்பதற்கும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   நன்றி வீரகேசரி 






மலையக தமிழ் மக்களை வடக்கில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் - சிவபூமி அறக்கட்டளைத்தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன்

11 Dec, 2025 | 06:02 PM

மலையக தமிழ் மக்களை இனியும் அநாதரவான வாழ்கை வாழக்கூடாது வடக்கு கிழக்கில் வாழ விரும்பும் மக்களை நாங்கள் வரவேற்க வேண்டும் என கலாநிதி ஆறுதிருமுருகன்  தெரிவித்தார்.

ஆறுமுகநாவலரின் குருபூஜை  நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் புதன் கிழமை  நடைபெற்றது. இந்த நிகழ்வில்   உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக மலயகத்தில் வாழும் தமிழ் மக்கள் படும் துன்பம் எல்லையற்றது 

பிரித்தானியர்களால்  தங்கள் தேவைக்கக கொண்டுவரப்பட்ட மக்கள் சொல்லொண்ணாதுயரத்தில் வாழுகின்றார்கள். நிரந்தர  நிலமில்லை,வீடும் இல்லை  இருப்பிடவசதியற்று அச்சதுடன் வாழ்ந்துவருகிறார்கள்.

இயற்கை சிற்ரத்தினால் தற்போது  தொடர்ந்து அவலத்தை சந்தித்துள்ளார்கள்.  மலையின் விழிம்பில் மிண்டும் மக்கள் அந்தர நிலயில் வசிப்பதை விட வடக்கு கிழக்கில் வந்து வசிப்பது இலகுவானது மலயகத்தில் இருக்கும் மக்கள்  வடக்கில் வாழவிரும்புவார்களானால் நாங்கள் நிலம் தருகிறோம். 

நீங்கள் வடக்கில் வந்து குடியேறுங்கள், வடக்கில் எவ்வளோ பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. வடக்கில் எவ்வளவோ நிலம் இருக்கு என்று அவர்களை நாங்கள் இங்கு வாழவைக்க வேண்டும்   இதுவே மனித நேயம், இதுவே தர்மமாகும்.

மலையகத்திலிருந்து  மக்கள் யாராவது வடக்கில் குடியேற விருப்பத்துடன்  வந்தால் அவர்களை வரவேற்க வேண்டும். இங்குள்ள  எல்லா சிதம்பரத்து காணிகளிலும், கோயில் காணிகளிலும் எல்லா தர்ம காணிகளிலும் அவர்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதற்கு எங்களை நாம் தயாராக்க வேண்டும். இதற்கு எம்மை போன்றவர்கள் பூரண ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கின்றோம். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பு வரும் என்றார்.   நன்றி வீரகேசரி 





வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கள வைத்திய சேவை!

11 Dec, 2025 | 03:55 PM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கண்டி - மஹியங்கனை பகுதியில் கள வைத்திய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய இராணுவத்தின் கள வைத்திய சேவைகளை சுகாதார பிரதி அமைச்சர் முதிதா ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோர் கண்டிக்கு நெரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணும் வழங்கும் சேவைகளுக்கு சுகாதார பிரதி அமைச்சரும் செயலாளரும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 



























வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

Published By: Vishnu

11 Dec, 2025 | 01:30 AM

(எம்.மனோசித்ரா)

வடகீழ் பருவ பெயர்ச்சி காலநிலை காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு,மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேனைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. களுத்துறையிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

களுத்துறையிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொத்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தித்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக நேற்று மாலை வரை 639 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதோடு, 193 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 524 678 குடும்பங்களைச் சேர்ந்த 1 814 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை 26 841 குடும்பங்களைச் சேர்ந்த 85 351 பேர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 5346 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 86 245 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தோடு பதுளை, கம்பஹா, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டள்ள இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 





வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான புகையிரத திணைக்களத்தின் அறிவிப்பு

10 Dec, 2025 | 06:28 PM

(இராஜதுரை ஹஷான்)

இயற்கை அனர்த்தங்களினால் புகையிரத திணைக்கள சொத்துகளுக்கு 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான புகையிரத சேவையை எப்போது மீள ஆரம்பிப்பது என்று குறிப்பிட முடியாது. அந்தளவுக்கு புகையிரத பாதைகள் சேதமடைந்துள்ளன என்று புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்தார்.

நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த புகையிரத பாதைகள், பாலங்கள் தற்போது புனரமைக்கப்படுவது தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய இயற்கை அனர்த்தங்களினால் சகல பிரதேசங்களுக்குமான புகையிரத பாதைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன.

புகையிரத சேவைகள் தற்போது வரையறுக்கப்பட்ட வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. றம்புக்கனை, பொல்காஹெவல ஆகிய பகுதிகளின் புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இந்த பகுதிகளுக்கான அலுவலக புகையிரத சேவைகள் புதன்கிழமை (10) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான புகையிரத சேவை எப்போது மீள ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிட முடியாது. மலையகத்துக்கான புகையிரத பாதைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக மாத்தளை – கண்டி புகையிரத பாதைகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன.

மலையக புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடுவதற்கு இன்று 2 மாதங்களேனும் செல்லும். மணிசரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஒருசில பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது.

இயற்கை அனர்த்தங்களினால் புகையிரத திணைக்கள சொத்துகளுக்கு (பாலம், வீதிகள், சமிஞ்சை கட்டமைப்பு, புகையிரத நிலையங்கள்) 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. புகையிரத சேவையை இயலுமான வகையில் வழமைக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.   நன்றி வீரகேசரி 





டெய்சி பாட்டிக்கு நாளை மனநலப் பரிசோதனை ; யோஷித ராஜபக்ஷ, டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

10 Dec, 2025 | 05:33 PM

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட, யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி ஃபொரஸ்ட், வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுமளவுக்கு மன ரீதியாக தயார் நிலையில் உள்ளாரா என்பதை கண்டறிய, நாளை வியாழக்கிழமை (11) அவர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதிக்கப்படவுள்ளதாக சட்ட மாஅதிபர் இன்று (10) கொழும்பு உயர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

இந்த வழக்கு இன்று புதன்கிழமை (10) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரச தரப்பு சட்டத்தரணி ஒக்ஸ்வால்ட் பெரேரா இதனை அறிவித்தார்.

அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை பரிசீலிக்கும் நோக்கில் இவ்வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. 

இருப்பினும், பிரதிவாதிகளுக்கு எதிரான மற்றொரு வழக்கு உயர்நீதிமன்ற எண் 08இல் விசாரணைக்காக இருப்பதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.

அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கு விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தகுந்த மனநிலையில் இல்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு தெரிவித்ததாக அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார். 

அதன்படி, நீதிமன்றம் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி மூலம் சிறப்பு வைத்திய அறிக்கையை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதிவாதி டெய்சி ஃபொரஸ்ட் நாளை குறித்த மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராகவுள்ளதோடு, பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, முறைப்பாடு பரிசீலிக்கப்படும் என்றும், அதற்கிடையிலான விசாரணை ஒத்திவைக்கப்படும் என்றும் அரசு தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை வழக்கை பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

சட்ட மாஅதிபர் தாக்கல் செய்த வழக்கு, சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட  59 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை மூன்று வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்புச் செய்தமைக்கான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





யாழில். 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி தொகை பெறுவோரின் பெயர் பட்டியல் இன்று முதல் காட்சிப்படுத்தப்படும்!

10 Dec, 2025 | 11:59 AM

பேரிடரில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவியில் மோசடிகள் ஏதேனும் நடைபெற்று இருந்தால் அது தொடர்பில் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தில் 30 ஆம் இலக்க அறையில் இயங்கும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் நிதி உதவி பெற தகுதியானவர்கள் என தெரிவானோரின் பெயர்கள் அடங்கிய விபரம் புதன்கிழமை (10) முதல் பிரதேச செயலக ரீதியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

அவற்றினை எவரும் பார்வையிட முடியும். அவ்வாறு பார்வையிட்டு , பாதிக்கப்பட்ட எவரேனும் ஒருவரின் பெயர்  இணைக்கப்படாது இருந்தால் அல்லது தவறான வழியில் எவரேனும் ஒருவரின் பெயர் இணைக்கப்பட்டு இருந்தால், ஆதாரங்களுடன் அவை தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர், யாழ். மாநகர சபை உறுப்பினர் எஸ். கபிலன் அறிவித்துள்ளார்.    நன்றி வீரகேசரி 



No comments: