பொய் சொல்பவர்கள் தொடர்ந்து பொய் சொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கும்போது அவர்கள் சொல்வது எல்லாம் பொய்யாகவே தெரியும். சமூகத்தில் அவர்களின்மேல் நம்பகத் தன்மை போய்விடும். நான் என் தவறை உணர்ந்து விட்டேன். சொர்கத்தைப் பொருத்தவரையில் எல்லா இடத்திலும் தெளிவு இல்லாமலேதான் இருக்கிறது.
தெளிவுமட்டும் இருந்தால் அரசியல்வாதிகள் கோடிக் கணக்கில் வைத்திருக்கும் பணத்தை ஸ்விஸ் பாங்கிலும் அந்நிய நாட்டிலும் முதலீடு செய்வதை விட்டு குடும்பம் உற்றார் உறவினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் முன்பதிவு செய்திருப்பார்கள். அதுமட்டுமா? அங்கு சென்று ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கியும் இருப்பார்கள்.
அங்கிருக்கும் பூர்வகுடி மக்களான தேவர்களின் நிலங்களை எல்லாம் வாங்கி அவர்களை சொந்த நாட்டிலேயே நிலமற்றவர்களாக ஆக்கிவிடுவார்கள். அது மட்டுமா? அங்கு பூமியிலுருந்து சொர்க்கம் சென்ற மனிதர்களான புதிதாக குடியுரிமை பெற்றவர்களின் நிலைமையும் பரிதாபம்தான். என்னதான் பூமியில் இருந்து சொர்க்கம் சென்றாலும் அவர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களோடு சேரமுடியாது. இரண்டாந்தர குடிமக்கள் போன்றுதான் இருக்க வேண்டியதிருக்கும்.
பூர்வீக குடிகளான தேவர்களுக்கு இந்த நிலை என்பதால் புதிதாக பூமியிலிருந்து சொர்க்கம் சென்று குடியுரிமை பெற்றவர்கள் நிலை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். உண்மையில் சொர்க்கம் இருந்து மறைந்த அரசியல்வாதிகள் எல்லாம் அங்கு சென்றிருந்தால் என்னவாகி இருக்கும்? நான் எல்லா அரசியல்வாதிகளையும் சொல்லவில்லை.
நேர்மையானவர்கள் இதில் விதிவிலக்கு. நிலைமையே தலகீழாக மாறி இருக்கும். அந்த அரசியல்வாதிகளிடம் தேவர்கள் நிலங்களை இழந்து உரிமைகளை இழந்து அகதிகளாக பூமிக்கு வந்திருப்பார்கள். அப்படி நடக்காததால் சொர்க்கம் இருக்கிறதா என்றெல்லாம் சந்தேகம் வருகிறது. ஏனென்றால் அரசியல்வாதிகள் பெருஞ்செலவில் செய்யும் யாகங்களுக்கும் பரிகார பூஜைகளுக்கும் பலன் கிடைக்காமலா போயிருக்கும்?
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் யாகங்களுக்கும் பரிகார பூஜைகளுக்கும் பலனிருந்து சொர்க்கமும் இருந்திருந்தால் நடக்கும் கலிகாலத்தில் என்ன நடந்திருக்கும்? சொர்க்கம் சென்ற அரசியல்வாதிகளால் சொந்த இடத்திலேயே தேவர்கள் இடங்களை இழந்திருப்பார்கள்.
அதனால் கண்டிப்பாக முப்பதுமுக்கோடி தேவர்களில் சில ஆயிரம் தேவர்களையாவது மதுரவாயிலிலும் பட்டினப்பாக்கத்திலும் பார்த்திருப்போம்.
இப்படியெல்லாம் மனக்குதிரை தரிகெட்டு ஓட அதைக் கட்டுப்படுத்தி மாலை ஆறுமணிவரை நன்றாக சுற்றிப் பார்த்துவிட்டு ஓட்டலுக்கு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் பயணத்துக்கு ஆயத்தப்படுத்த கொண்டுவந்திருந்த ஆயின்ட்மன்டை காலில் தடவி மஜாஜ் செய்துகொண்டோம். ஏனென்றால் இங்கு எந்த இடத்தையும் மீனாட்சி அம்மன் கோவில் வாசலருகே வாகனத்திலிருந்து இறங்கி பார்ப்பதுபோல் பார்த்துவிட முடியாது
அடுத்த நாள் பயணம் டெரகோட்டா வாரியர்ஸ் என்ற சுற்றுலாத்தளம் செல்ல முடிவு செய்திருந்தோம். சீனாவின் முதல் பேரரசானான கி. மு. இருநூற்றின் பிற்பகுதியில் வாழ்ந்த க்யுன் ஷி குவாங்குக்கு இறந்தபின் மறுபிறப்பு எடுத்து வருவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த அடிப்படையில் அவர் இறந்தபின் மறுபிறவி எடுத்து அவர் வரும்போது அவரைப் பாதுகாக்க சுட்ட
மண்சிற்பங்களாக இராணுவ வீரர்கள், குதிரைப்படை, தேர்கள் முதலியவற்றை அவருடன் சேர்த்து புதைத்தார்களாம்.
1974ல் ஒரு விவசாயி கிணறு வெட்டுவதற்காக இந்த இடத்தைத் தோண்டும்போது ஒரு இராண வீரனின் சிற்பத்தை முதலில் கண்டுபிடித்திருக்கிறார். அதுவே முழு இராணுவத்தையும் தோண்டி கண்டுபிடிக்க உதவியுள்ளது. இதில் 8000 இராணுவ வீரர்கள், 520 குதிரைகள் மற்றும் 130 தேர்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக கணக்கிட்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு இராணுவ வீரனின் சிறப்பான முக அமைப்பு, உடைகள், தோற்றம் மற்றும் நிலைகளை வைத்து அவர்களது இராணுவ பதவிகளை கூறும்படி அமைந்துள்ளது. இந்த இராணுவ வீரர்களின் சிற்பங்கள் உண்மையான ஆயுதங்களான வாள் மற்றும் அம்பு போன்ற ஆயுதங்களுடன் இருந்திருக்கின்றன. ஆனால் அவ்வாயுதங்கள் யாவும் காலப்போக்கில் திருடு போயுள்ளது.
இந்த இடம் சீனாவின் சாங்ஸி மாநிலம் லின்டாங் மாவட்டத்தலுள்ள ஸியானில் உள்ளது. ஸியான்பீயில் (ஸியான் வடக்கு) இருந்து 49 கி. மீ. தொலைவில் உள்ள இந்த இடத்துக்கு முக்கால் மணிநேரம் மகிழுந்தில் செல்லலாம். இதற்கு நுழைவுக்கட்டணம் ஒருவருக்கு 120 சீன யுயன் ஆகும். அங்கு சென்றும் நுழைவுக் கட்டணம் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்க நேரிடும்.
நீண்ட வரிசையில் காத்திருத்தல் மற்றும் நுழைவுச் சீட்டு கிடைக்காமல் போகும் ஏமாற்றம் போன்றவற்றைத் தவிர்க்க ட்ரிப்.காமில் நுழைவுக்கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டை மெல்பனிலிருந்தே ஆன்லைனில் பெற்றுக் கொண்டேன். அதே மாதிரி புல்லட் ட்ரெயின் டிக்கெட்டையும் ஆன்லைனிலையில் வாங்கிவிட்டேன்.
புல்லட் ட்ரெயின் பீஜிங்ஸியில் (பீஜிங் மேற்கு) இருந்து ஸியான்பீ (ஸியான் வடக்கு) செல்வதால் பீஜிங்ஸி ரயில்வே நிலையம் சென்றோம். மிகவும் பிரம்மாண்டமான ரயில் நிலையம். இதில் இரண்டாவது தளத்தில் புல்லட் ட்ரெயின் புறப்படும் பயணிகள் தங்கும் இடம் உள்ளது. இந்த ரயில் நிலையம் விமான நிலையம் போலவே இருக்கிறது. விமாத்துக்கு செல்வதுபொல் சிலமணி நேரங்களுக்கு முன்பாகவே செல்லவேண்டும்.
விமான நிலையம் போன்று செக்யூரிட்டி செக் எல்லாம் எல்லாம் கடந்து செல்லவேண்டும். வெளிநாட்டினர் பாஸ்போர்ட் இல்லாமல் ரயில்வே நிலையத்துக்குள் செல்ல முடியாது. பாஸ்போர்ட்டை ஸ்கேன் பண்ணும்போதே நாம் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பது தெரியவரும். சீனர்களும் தங்களது அடையாள அட்டையை ஸ்கேன் செய்வதோடு செக்யூரிடி செக்கும் செய்யவேண்டும்.
செக்யூரிடி செக் முடிந்து தங்கும் இடத்துக்கு வரவேண்டும். தங்கும் இடம் செல்ல நீண்ட நெடுந்தூர வழி செல்கிறது. அந்த வழியின் இருபுறமும் தங்கும் இடங்கள் உள்ளன. நம்மிடம் உள்ள பயணச்சீட்டில் ரயிலின் எண் ப்ளாட்பாம் எண் போன்ற தகவல்கள் இருக்கும். இந்த தகவலை சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் தெரிவிக்கும் அறிவிப்புகள் இருக்கும்.
அதைப்பார்த்துக் கொண்டே நடந்து செல்லும்போது நமது ரயிலின் எண்ணையும் அது நிற்கும் ப்ளாட்பாம் எண்ணையும் கண்டு கொள்ளலாம். பின் குறிப்பிட்ட தங்குமிடத்தில் அமரவேண்டும். அங்கு பல இடங்களுக்குச் செல்லும் ரயில்கள்களைப் பற்றிய எண் மற்றும் பறப்படும் நேரங்களைப் பற்றிய அறிவிப்பு சீன மற்றும் ஆங்கிலமொழியில் வந்து கொண்டிருக்கும். நமது ரயிலைப் பற்றிய அறிவிப்பு வந்ததும் நாம் பயணச்சீட்டைக் காண்பித்து ப்ளாட்பாரத்துக்கு செல்லவேண்டும்.
நமது பயணச்சீட்டிலேயே தொடரின் எண்ணும் இருக்கை எண்ணும் இருப்பதால் எளிதாக இருக்கையைக் கண்டுமிடித்து அமரலாம். ரயிலுக்குள் சென்றதும் விமானத்துக்குள் வந்ததுபோன்ற பிரமிப்பு ஏற்படும். பீஜிங்ஸீயில் இருந்து ஸியான்பீக்கு 1216 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையில் ஐந்து முதல் ஏழு நகரங்களில் ஓரிரு நகரங்களில் மட்டும் நிற்கும்.
-சங்கர சுப்பிரமணியன்.


No comments:
Post a Comment