-சங்கர சுப்பிரமணியன்.
யாராவது காதலர்களோ அல்லது கணவன் மனைவியோ ஒருவரிடம் ஒருவர் இதயத்தையே கொடுத்து விட்டதாகச் சொன்னால் நம்புங்கள். ஒருவரின் இதயத்தை இன்னொருவருக்கு கொடுக்கலாம் என்பதற்கு கிருஷ்ணரே சாட்சி. ஏனென்றால் கிருஷ்ணரின் இதயம் பூரி ஜெகன்னாதரிடம் உள்ளது என்றான் முனியாண்டி மாயாண்டியிடம். அதைக்கேட்ட மாயாண்டி,
“அப்படீன்னா பூரி ஜகன்னாதரின் இதயம் யாரிடம் இருக்கிறது? அல்லது அதை சப்ஸ்டிடியூட்டாக வைத்திருக்கிறாரா? என்று கேள்விகேட்டான்.
“கடவுளைப் பற்ற சொன்னால் கேட்க வேண்டும். கேள்விகேட்க கூடாது.” என்று பதிலைச் சொன்னவர், கதையைக் கேட்குமுன் உன்னை தயார் படுத்திக் கொள். தயார் படுத்துவது அப்படி ஒன்றும் வெட்டி முறிக்க வேண்டிய வேலை அல்ல.” என்றான்.
நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இப்போது கதையைச் சொல்கிறேன் என்று தொடர்ந்தான். திரேதா யுகத்தில் ராமனால் கொல்லப்பட்ட வாலி துவாப்ரா யுகத்தில் மறுபிறவி எடுத்தார்.
மறுபிறவியில் ஜராசாபர் என்ற வேடனாக பிறந்து கிருஷ்ணரை கொள்கிறார் என்றான்.
உடனே மாயாண்டி இது என்ன கொடுமை. ஒரு பிறவியில் இறந்தவுடன் மறபிறவி எடுப்பார்கள் என்றுதான் சொல்வார்கள். இன்னொரு யுகம் வரை காத்திருக்க வேண்டுமா? கடவுள் ராமன் கையால் கொல்லப்பட்டும் பல லட்சம் ஆண்டுகள் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்க வேண்டுமா? என்று கூறி வியந்தான்.
நீ சொல்வதைப் பார்த்தால் சங்ககாலத்தில் இறந்த மனிதர்களே இன்னும் பிறவி எடுக்காமல் இருப்பார்கள் என்பதுபோல் அல்லவா தெரிகிறது. மனிதக்குரங்குகளாக இருந்து பரிணாம வளர்ச்சியடைந்தே மனிதனானான். மனிதக் குரங்காக இருந்து இறந்த உயிர்கள் மறுபிறவியில் மனிதக் குரங்காகப் பிறக்குமா? அல்லது மனிதனாக பிறக்குமா?
ஒரு நாள் கிருஷ்ணர் காட்டிலுள்ள மரத்தின் அடியில் தியானம் பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் வந்த வேடனான ஜராசாபரின் பார்வையில் கிருஷ்ணர் தியானம் பண்ணிக் கொண்டிருந்தது சரியாக தெரியவில்லை. அவரது இடது காலின் ஒரு பகுதி மானைப்போல் தோன்றவும் மான் என்று எண்ணி அம்பை எய்துவிட்டார்.
“கொஞ்சம் இரு, நம்மை எல்லாம் காப்பவருக்கு தன்னைக் காப்பாற்றத் தெரியவில்லையா? முற்றும் உணர்ந்தவருக்கு கொஞ்ச நேரத்தில் ஒருவன் அம்பு எய்யப் போகிறான் என்பது கூடத்தெரியாதா? ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. அது தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும். அது சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் சரி.” என்றான்.
“மாயாண்டி, ஒழுங்கா கதையை கேக்கிறாயா? இல்லையா? இல்லன்னா கதை சொல்வதை நிறுத்தவா?”
“ சொல்லு, சொல்லு அந்த கிருஷ்ணர் மேல் ஆணை. இனிமேல் வாயைத் திறக்க மாட்டேன்” என்றான் மாயாண்டி.
மாயாண்டியை முறைத்துப் பார்த்து கடுப்பான முனியாண்டி தொடர்ந்தான். இவ்வாறு ராமனால் மறைந்திருந்து கொல்லப்பட்டதற்கு கிருஷ்ணரை பழிவாங்க ஜராசாபருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இதை பழிவாங்குவதாக சொல்ல முடியாது. ஏனென்றால் மறுபிறவியில் முற்பிறவியில் நடந்தது எதுவும் தெரியாது. இதை செய்த வினை எதிர்வினை ஆற்றுவதாக வேண்டுமானால் சொல்லலாம்.
அதற்காக ஒரு யுகத்தில் நடந்ததற்கு இன்னொரு யுகத்தில்தான் தீர்வு என்பதைத்தான் ஏற்கமுடியவில்லை. சரி, இதுவெல்லாம் பெரிய இடத்து விடயம். ஊதிப் பெரிதாக்குவது உசிதமல்ல.
கிருஷ்ணருக்கு நடந்ததை கேள்விப்பட்ட பாண்டவர்கள் அங்கே ஓடோடி வந்தனர். பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுணன் கிருஷ்ணரின் உடலிலிருந்த அம்பை பிடுங்கியும் பலனின்றி கிருஷ்ணர் இறக்கிறார். பாண்டவர்கள் இறந்த கிருஷ்ணரின் உடலை வங்கக் கடலுக்கு எடுத்துச் சென்று தகனம் செய்தனர்.
அப்போது உடல் முழுதும் எரிந்தாலும் இதயம் மட்டும் எரியாமல் அப்படியே இருந்தது.
எரியாமல் இருந்த கிருஷ்ணரின் இதயத்தை கடைசியில் பாண்டவர்கள் கடலில் தூக்கிப் போட்டனர். இதையறிந்த ஜராசாபர் கடலில் போடப்பட்ட கிருஷ்ணரின் இதயத்தை மீட்டெடுத்தார்.
அவ்வாறு மீட்டப்பட்ட இதயம் வியப்படையும்படி ஊதாநிறக் கல்லாக மாறியது. இந்தக் கல்லை இவர் ஒரு குகையில் வைத்து ரகசியமாக வணங்கிவந்தார். ஜராசாபர் மறைவிற்குப் பின் அவரது பரம்பரையினர் அதை தொடர்ந்து வணங்கினர்.
பின்னர் இந்திரதுயும்னா என்ற மன்னனால் அந்த ஊதாநிறக் கல் ஜராசாபரின் பரம்பரையினரிடம் இருந்து கைப்பற்றப் படுகிறது. மன்னரின் ஏற்பாட்டின்படி அக்கல்
ஜகன்னாதரின் சிலையில் வைக்கப்பட்டது. ஜகன்னாதரின் சிலையானது கல்லாலோ உலகத்தினாலோ செய்யப்பட்டது அல்ல.
மாறாக ஜகன்னாதரின் சிலை மரத்தினால் செய்யப்பட்டதாகும். மரச்சிற்பம் சீக்கிரம் பழுதடைந்து விடும். அதனால் வெகுகாலம் நீடித்திருக்கும்படி கல்லில் செய்யாமல் ஏன் மரத்தில் செய்தார்கள் என்பதற்கு வேறொரு கதையுண்டு. அதைச் சொல்லப்போனால் பூஜ்ஜியத்தின் உள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பான் இறைவன் என்று கண்ணதாசன் பாடலெல்லாம் நினைவில்வரும்.
மரத்தில் செய்யப்பட்ட ஜகன்னாதர் சிலை சீக்கிரம் பழுதடையும் என்பதால் ஊதாநிறக் கல் வைக்கப்பட்ட நாளில் இருந்து 8, 12, மற்றும் 19ஆம் ஆண்டு என்ற வரிசையில் சிலையை மாற்றிக் கொண்டே வருகிறார்கள். இவ்வாறு ஜகன்னாதரின் மரத்தினால் செய்யப் பட்ட சிலையை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
பழைய மரச்சிற்பமான ஜகன்னாதரிடமிருந்து கிருஷ்ணரின் இதயத்தை எடுத்து புதுமரச் சிற்பத்தில் வைப்பதை ஒரு சடங்காக நடத்துகிறார்கள். இந்த சடங்கு மிகவும் ரகசியமாக அமாவாசை நள்ளிரவு இருட்டில் நடைபெறும். இந்த சடங்கில் சில குறிப்பிட்ட பூசாரிகள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். அவர்களிலும் சிலரது கண்கள் கட்டப்பட்டே இச்சடங்கு நடைபெறுமாம்.
இந்த சடங்கில் கிருஷ்ணரின் இதயத்தை எடுத்து புது மரச்சிற்பத்தில் வைக்கும் பூசாரி
ஒரு ஆண்டுக்குள் இறைவனடி சேர்ந்து விடுவார் என்ற பலத்த நம்பிக்கையும் உள்ளது.
என்று முனியாண்டி சொல்லி முடிக்கவும் மயாண்டி அவனை ஏற இறங்கப் பார்த்தான்.
குசும்பு பிடித்த மாயாண்டி கதையை நன்றாக கேட்டான். சிலர் காரியம் ஆகும்வரை காலைப் பிடித்துவிட்டு அப்புறம் தம் வேலையைக் காட்டுவார்கள். அதைப்போல கதையைக் கேட்ட மாயாண்டி இது ஒன்னும் கடவுள் கதை மாதிரி தெரியலையே?
மந்திரவாதியின் உயிர் ஏழு கடல் ஏழு மலையைத் தாண்டி ஆலமரத்துப் பொந்தில் இருக்கும் கிளியின் வயிற்றில் இருக்கிறது என்பதைப் போல அல்லவா இருக்கிறது என்றான். அதைக்கேட்ட முனியாண்டிக்கு யாருகிட்ட எதைச் சொல்லணும்கிறது சரியாத்தான் இருக்கு என்று நினைத்தான்.
முனியாண்டி நினைப்பதை விடுங்கள். வாசிக்க வேண்டும், வாசித்ததை பகிரவேண்டும் என்ற எண்ணமே இக்கதையை எழுதும் எண்ணத்தைத் தூண்டியது.
No comments:
Post a Comment