வீறுநடை
போட்டரிய சேவைபல இயற்றி
;வெள்ளிவிழாக்
காணுகின்ற சிவபூமி அமைப்பு
நூறுவீதம்
தன்னலமிலாச் சேவை புரிந்து
நுவலரிய சரித்திரம்படைத் திட்டதி
றந்தனைக்
கூறிடவோ
நினைத்திடவோ மேனிபுல் லரிக்கும்!
குரிசில்திரு முருகனவன்
கனவெலாம் நனவாய்
ஆறுமுகன்
அருளருள மலர்ந்த தம்மா!
அற்புதவி ழாச்சிறக்க வாழ்த்து கின்றேன்!
சிவபூமி
அறக்கட்டளை வெள்ளி விழாப் பரிசாக இந்தத் திருவாசக அரண்மனை மலர்கிறது” எனச்
சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்கள் அறிவித்துள்ளமை மிகவும் பொருத்தமானதே!
இலங்கையின் வடபகுதியான யாழ்ப்ப்பாணத்தின் நாவற்குழியிலே
அமைக்கப்பெற்ற திருவாசக அரண்மனையிலே ஒரு திருவாசக
அரங்கம் திறப்பு விழா இன்று யூலாய் மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணிக்குச் சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையிலே
கோலாகலமாக நடைபெறவுள்ளது. தனி மனிதனொருவனால் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு
பலவித தருமப் பணிகளைத் திறமையாகவும் சீராகவும் செயலாற்றிவரும் செஞ்சொற் செல்வர்
கலாநிதி சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்களின்
மகத்தான சமூகப் பணிகளுக்கு அவரை வணங்கிப்
போற்றுகிறேன். மிகப்பெரிய பெறுமதிமிக்க திருவாசக அரண்மனை அமைப்பதற்கு பேருதவி
புரிந்ததுடன் பக்கபலமாக இருந்து செயற்பட்ட இருதய மருத்துவ நிபணர் சிவத்திரு வை.மனோ
மோகன் - சிவத்திரு திருமதி சிவகௌரி தம்பதியினர் இந்தச் சிவபூமி திருவாசக
விழாவுக்குப் பிரதம விருந்தினர்களாகவும் யாழ் கௌரவ ஆளுநர் நா. வேதநாயகம் அவர்களைச் சிறப்பு விருந்தினராகவும் அழைக்கப்பெற்றுள்ளனர். பல தருமப் பணிகளை
முன்னெடுத்து வருகின்ற இந்த இலட்சிய தம்பதியினரைப் பாராட்டி வணங்கி மகிழ்கிறேன்.
இந்த விழாவுக்குக் கௌரவ விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர்
சிறிசற்குணராஜா அவர்களும் அழைக்கப்பெற்றுள்ளார்.
மணிவாசகரின் பத்திநலங்
கனியும் செந்தமிழ்ப் பாடல்களைத் தனது திருச்செவிகள் கேட்டு மாந்தி மகிழும் வண்ணம் மாணிக்கசாசகரை அந்தணர் உருவங்கொண்டு தேடி வந்த
சிவபெருமான் மணிவாசகர் திருவாசகம்
முழுவதையும் சொல்லச் சொல்லத் தனது திருக்கரத்தால்
ஏட்டிலே எழுத்தாணிகொண்டு எழுதினான். திருவாசகத்தை எழுதிநிறைவு செய்ததும் 'வாசகம்
பாடிய வாயாலே கோவை பாடும்படி அந்தணனாய் வந்த சிவனும் பணித்தான்". மாணிக்கவாசகர்
உடனே பாடவும் சிவபெருமான் அதையும் எழுதினான். திருவாசகம் எழுதிய ஏட்டிலே 'மாணிக்கவாசகர்
பாட அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது" என்று கைச்சாத்திட்டு அதைச்
சிற்சபையின் பஞ்சாக்கரப் படியிலே வைத்தருளிய செய்கையே திருவாசகத்தின் மேன்மையை
எடுத்தியம்புகின்றது அல்லவா?. அதிகாலைப்
பூசைக்கு வந்த தில்லைவாழ் அந்தணர்கள் அந்த
ஏட்டுச் சுவடிகளை எடுத்து அதனை மாணிக்கவாசகரிடம் கொடுத்து அதன்பொருளை விளக்கும்படி
கேட்டதும் அவர் அந்தணர்களை அழைத்துச்
சென்று தில்லைக்கூத்தப் பெருமானைச் சுட்டிக் காட்டி இவனே அதன் பொருள் என்று உரைத்த
செயலும் அதன் மகிமையை விளம்புகின்றதல்லவா?.
51 திருப்பதிகங்களைஉள்ளடக்கிய
திவாசகம் மொத்தமாக 658 திருப்பாடல்களைக் கொண்டது மனிதன் தெய்வத்திடம் கூறிய
வாசகம். ஒருவரிடம் பத்தி வேட்கையைப் பெருக்கி இறையருளைப் பெற வைத்து இறுதியில் பிறந்திறவாப்
பேரின்பநிலைக்கு உயர்த்தி இறையுடன் இரண்டறக் கலக்கவைக்கும் பெற்றி கொண்டது.
அத்தகைய சிறப்புடைய திருவாசகம்
என்றும் நிலைத்திருந்து பார்ப்போரைப்
பரவசப்படுத்தி இறைநாட்டத்தை ஏற்படுத்தும் நோக்கிலே கருங் கல்லிலே அத்தனை
திருப்பாடல்களையும் பொறிப்பித்து அதற்கோர் அரண்மனை அமைத்து வழிபடும் கோயிலாக்கிய
பெருமை ஆறு திருமுருகன் அவர்களையே சாரும்.
------------------------- கலாநிதி பாரதி
இளமுருகனார்
No comments:
Post a Comment