கன்னித் தாய் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 எம் ஜி ஆருடன் ஜெயலலிதா ஜோடியாக நடித்த ஆயிரத்தில் ஒருவன்


வெற்றி பெற்றது என்ற செய்தி எவரை மகிழ்வித்ததோ இல்லையோ படத் தயாரிப்பாளர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவரை மகிழ்ச்சியில் குளிப்பாட்டியது எனலாம். காரணம் அவர் தொடர்ந்து தயாரித்த எம் ஜி ஆர் படங்களில் எல்லாம் எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடித்தவர் சரோஜாதேவி. ஆனால் வேட்டைக்காரன் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய சென்ற போது சரோஜாதேவியின் தாயாரான ருத்ரம்மாவுடன் ஏற்பட்ட தகராறில் காரணமாக இனி தேவர் பிலிம்ஸ் படத்தில் சரோஜாதேவி கிடையாது என்று தீர்மானித்து விட்டார் தேவர். அவரின் குணசம்சங்களை அறிந்த எம் ஜி ஆரும் அதில் தலையிடவில்லை. அதன் பின்னர் வேட்டைக்காரனில் சாவித்திரி கதாநாயகியாக நடித்து படமும் வெற்றி கண்டது. 



அதன் பின் தேவர் எடுத்த தொழிலாளி படத்தில் எம் ஜி ஆருக்கு யார்

ஜோடி என்ற கேள்வி எழுந்ததும் தேவரிடம் கே. ஆர் . விஜயாவை ஜோடியாக்கலாம் என்று சொல்லப்பட்டது. தாழம்பூ படப்பிடிப்பில் விஜயாவை பார்த்த தேவர் , இது என்ன எம் ஜி ஆருக்கு தங்கை மாதிரி இருக்கு என்று சொல்லி விட்டார். அதன் பின் புதுமுகம் ரத்னா ஹீரோயினாக நடிக்க, விஜயா வில்லி போன்ற வேடத்தில் நடித்தார். இதனிடையே எம் ஜி ஆர் , விஜயா ஜோடி சேர்ந்த தாழம்பூ, பணம் படைத்தவன் இரண்டும் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது தேவரின் எண்ணத்துக்கு வலு சேர்த்தது. 


தேவர் தனது அடுத்த படமான கன்னித் தாயை 1965ல் தொடங்கிய போது வேறு வழியின்றி விஜயாவை எம் ஜி ஆருக்கு ஜோடியாகும் நிலையிலேயே தேவர் இருந்தார். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வெற்றிச் செய்தி அவர் காதில் தேனாய் இனித்தது. உடனடியாக ஜெயலலிதாவை எம் ஜி ஆருக்கு ஜோடியாக புக் செய்து விட்டார். ஆனாலும் விஜயாவை அவர் கை விட்டுவிடவில்லை. படத்தில் வில்லனுக்கு ஜோடியாக்கி விட்டார் அவர்!


தேவர் படம் என்றால் தயங்காமல் கால்ஷீட் கொடுக்கும் எம் ஜி ஆர் இந்தப் படத்துக்கும் தேதிகளை கொடுத்து விட படப்பிடிப்பு துரிதமாக இடம் பெற்று படமும் குறுகிய காலத்துக்குள் பூர்த்தியானது. 


இராணுவத்தில் பணிபுரியும் கப்டன் சரவணனிடம் இறக்கும் தறுவாயில் அவன் நண்பன் ஒரு வேண்டுகோளை வைக்கிறான். தன்னுடைய ஒரே குழந்தையையும் , திரண்ட சொத்தான முப்பது இலட்சத்தையும் பாதுகாப்பாக பராமரித்து , குழந்தை பெரியவளானதும் அவளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அதுவாகும். பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னரே அதிலுள்ள சங்கடங்கள் சரவணனுக்கு புரிய வருகிறது. குழந்தையின் தாயோ சித்தப் பிரமை பிடித்துள்ளாள். அவளின் சித்தப்பாவோ குழந்தையை கொன்று விட்டு சொத்துகளை அபகரிக்க திட்டம் தீட்டுகிறான். இதனிடையே குழந்தையை பாதுகாக்கும் பொறுப்போடு ஓர் அபலைப் பெண்ணையும் பாதுகாக்கும் கடமை அவன் மீது விழுகிறது. பின்னர் அதுவே அவளின் மீது காதலாகிறது. குழந்தைப் பாசம், கன்னிப் பெண்ணின் காதல் இரண்டிலும் சரவணன் எவ்வாறு கரை கண்டான் என்பதே படம்.

படத்தில் நாயகனாக வரும் எம் ஜி ஆருக்கு மாட்டு வண்டி ஓட்டுவதும் ,

நம்பியார், தேவருடன் ஆக்ரோஷமாக சண்டை போடுவதும், ஜெயலலிதாவுடன் டூயட் படுவதும் தான் வேலை. அவற்றை கச்சிதமாக செய்திருந்தார் அவர். ஜெயலலிதாவுக்கு எம் ஜி ஆருடன் சேர்ந்து நடிக்க கிடைத்த இரண்டாவது படம் இது. இயல்பாக நடித்திருந்தார். கே.ஆர் விஜயா பளிச்சென்று தெரிகிறார். ஒண்டிரண்டு இடங்களில் உணர்ச்சிகரமாக நடிக்கிறார். நம்பியார், சின்னப்பா தேவர் வரும் காட்சிகளில் எல்லாம் சண்டையும் வருகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் சியாம் சுந்தருக்கு நல்ல வேட்டை. நாகேஷ், மனோரமா, வி கே. ராமசாமி மூவரும் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். அசோகன், சந்திரகாந்தா, பி. கே. சரஸ்வதி ஆகியோரும் நடித்திருந்தனர். 


படம் முவதும் வரும் பேபி ஷகீலா எல்லார் கவனத்தையும் கவருகிறார்.சுட்டிப் பெண். படம் முழுவதும் ஒரே மாதிரியான காட்சிகள் வருவது போல் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை . அவசர அவசரமாக உருவான படம் என்பதாலோ என்னவோ!



படத்தின் கதை வசனத்தை ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். மனுஷனை கடவுளாக்கிடாதீங்க, அந்த தகுதி எந்த மனுஷனுக்கு இல்லை, போன்ற வசனங்கள் கவனத்தை கவர்ந்தன. படத்தை என்.எஸ் . வர்மா ஒளிப்பதிவு செய்தார். வழக்கம் போல படத்தை எம் . ஏ . திருமுகம் டைரக்ட் செய்தார். 


தேவர் பிலிம்ஸ் தயாரிக்கும் எம் ஜி ஆர் படங்களில் தொடர்ந்து

நடித்து வந்த எம் ஆர் ராதாவுக்கு இந்தப் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்வில்லை. அதே போல் எம் ஜி ஆருடன் முரண்பட்டிருந்த கண்ணதாசனுக்கும் நோ சான்ஸ். இதனால் தேவரின் எல்லா எம் ஜி ஆர் படங்களுக்கும் பாடல்களை எழுதும் கண்ணதாசன் இந்தப் படத்தில் பாடல்களை எழுதவில்லை. அவருக்கு பதில் அவரின் உதவியாளர் பஞ்சு அருணாசலம் பாடல்களை எழுதியதாக சொல்லப்பட்டது. கேளம்மா சின்ன பொண்ணு கேளு, என்றும் பதினாறு வயது பதினாறு, பாடல்கள் சொல்லும் படி அமைந்தன. தேவரின் நிரந்தர இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் இந்தப் படத்துக்கும் இசையமைத்தார்.

No comments: