தமிழரசு கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும்

 Published By: Vishnu

08 Jul, 2025 | 06:52 PM

டி.பி.எஸ். ஜெயராஜ் 

ஒய்வுபெறும் உயர்நீதிமன்ற நீதியரசர்  காமினி அமரசேகர அண்மையில்  நீதிமன்றத்தில் உரையாற்றியபோது முக்கியமான பல கருத்துக்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் பிரகாரம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு வருகின்ற வெளி அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்த்துநிற்க முடியும் என்கிற அதேவேளை, உள்ளிருந்து வருகின்ற சவால்கள் பெருமளவுக்கு நயவஞ்சகத்தனமான ஆபத்தை தோற்றுவிக்கின்றன. 

" சரியான நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு நீதிபதியினால் வெளி நெருக்குதல்களை எதிர்த்துநிற்க முடியும். ஆனால், முறைமைக்குள் இருந்தே அச்சுறுத்தல்கள் வரும்போது அவற்றை எதிர்கொள்வது கடடினமானதாக இருக்கும் " என்று மாண்புமிக்க நீதியரசர்  அமரசேகர கூறியதாக தெரிவிக்கப்பட்டது. உள்ளிருந்து வருகின்ற  ஒரு  அச்சுறுத்தல் வெளியில் இருந்து வருகின்ற ஒரு சவாலை விடவும் பெருமளவுக்கு ஆபத்தானது என்று நீதியரசர் தெரிவித்த மிகவும் பொருத்தமான கருத்து பரவலாக பொருந்துவதாகும். அதற்கு பல சந்தர்ப்பங்களை கூறமுடியும். 

இலங்கையில் தற்போது இலங்கை தமிழரசு கட்சி  நீதியரசர் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் மெய்யறிவை அனுபவிக்கின்றது. இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி தற்போது உள்ளிருந்து வரும் சவால்களையும் வெளியில் இருந்து வரும் சவால்களையும் எதிர்கொள்கிறது. வெளிச்சவால்களை  கட்சியினால் தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருந்த அதேவேளை, பெருமளவுக்கு ஆபத்தான  தன்மையுடன் கூடிய அச்சுறுத்தல் உள்ளிருந்தே வெளிக்கிளம்புகின்றது  போன்றே தோன்றுகிறது. 

கடுமையான அரசியல் சச்சரவுக்கு மத்தியிலும், தேர்தல்களில் அண்மைக் காலங்களில் தமிழரசு சிறப்பான வெற்றிகளை பெற்றிருக்கிறது. 2024 செப்டெம்பர்  ஜனாதிபதி தேர்தலில் பல தமிழ் அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களத்தில் இறக்கிய போதிலும், தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையே ஆதரித்தது. தேசிய மட்டத்தில் சஜித் பிரேமதாச அநுர குமார திசநாயக்கவுக்கு அடுத்ததாக இரண்டாவதாக வந்தார். ஆனால், ஒரு பிராந்திய மட்டத்தில், தமிழரசு கட்சியின் உறுதியான ஆதரவைப் பெற்ற சஜித் பிரேமதாசவே வடக்கு, கிழக்கின் மாவட்டங்களில் கூடுதல் வாக்குகளைப் பெற்று முதலாவதாக வந்தார்.

2024 நவம்பர் பாராளுமன்ற தேர்தலிலில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 225 ஆசனங்களைக் கொண்ட பாசாளுமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றியது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏழு பேர் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்களாவர். மீண்டும் தமிழரசு கட்சியே வடக்கிலும் கிழக்கிலும்  " திசைகாட்டி " கட்சியை உறுதியான முறையில் எதிர்த்துநின்ற ஒரேயொரு இலங்கை தமிழ்க்கட்சியாகும். வடக்கு, கிழக்கில் இருந்து பாராளுமன்றத்துக்கு  செய்யப்பட்ட  தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் (7) தமிழரசு கட்சியில் இருந்துதெரிவான உறுப்பினர்களின் எண்ணிக்கையும் (7) சமமானதாக இருந்தது. தமிழரசு கட்சிக்கு தேசியப்பட்டியலில் இருந்து மேலதிகமாக ஒரு ஆசனமும் கிடைத்தது. அதனால் எட்டு உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தமிழரசு கட்சி விளங்குகிறது.

அண்மையில் நடைபெற்ற 2025 உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் போட்டியிட்ட உள்ளூராட்சி சபைகளில் ( மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகள் ) 35 சபைகளில் தமிழரசு கட்சி முதலாவதாக வந்தது. தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் ஒரு டசின் சபைகளில் இரண்டாவதாக வந்த தமிழரசு கட்சி முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் பெரும்பானமையாகக் கொண்ட சபைகளில் பத்து சபைகளில் வட்டாரங்களிலும் வெற்றிபெற்றது. மேலும் சில தமிழ் கட்சிகளினதும் முஸ்லிம் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் உதவியுடன்  தமிழரசு கட்சியினால் 34 உள்ளூராட்சி சபைகளில் ஒப்பேறக்கூடிய நிருவாகங்களை அமைக்கக்கூடியதாகவும் இருந்தது.

தேர்தல் களத்தில் போட்டி தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மெச்சத்தக்க வெற்றிகளை பெற்ற போதிலும், தமிழரசு கட்சி அதன் உள்ளக அரசியல் நிலைவரத்தை பொறுத்தவரை, ஒரு பாதகமான தோற்றத்திலேயே இருக்கிறது. தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அதன் பாராளுமன்றக்குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரனின் சர்ச்சைக்குரிய நடத்தையே இதற்கு பிரதான  காரணமாகும். முன்னாள் பாடசாலை அதிபரான அவர் பொதுவில் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவுக்கும் குறிப்பாக முக்கியமான நிருவாகிகளுக்கும் எதிராக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கெடுதி விளைவிக்கக்கூடிய  முறையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றார்.

மிகவும் மூத்த தமிழரசு கட்சி  எம்.பி.

தற்போது பாராளுமன்றத்தில் இருக்கின்ற தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் மிகவும் மூத்தவராக சிறீதரன் விளங்குகிறார் என்பது பிரச்சினையை மேலும் கூர்மையானதாக்குகிறது.57 வயதான அவர் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2010 ஆம் ஆண்டில் முதன் முறையாக பாராளுமன்ற பிரவேசம் செய்தார். அன்றிலிருந்து 2015,  2020 , 2024 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று சிறீதரன் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறூப்பினராக இருந்துவருகிறார். 2015 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் வீடு சினானத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மத்தியில் மிகவும் கூடுதலான விருப்புவாக்குகளையும் சிறீதரன் பெற்று வந்திருக்கிறார்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகின்ற போதிலும், பிரதானமாக சிறீதரனின் வாக்குவங்கியாக கிளிநொச்சியே விளங்குகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி என்ற இரு நிருவாக மாவட்டங்களை உள்ளடக்கியதாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இருக்கிறது. சிறீதரனும்  அவரது உதவியாளர்களும் விடுதலை புலிகளுக்கு ஆதரவான தமிழ்த் தேசியவாத பேச்சுக்கள், ஆட்களுக்கு உதவிகளைச் செய்கின்ற அரசியல்  மற்றும் வலுக்கட்டாயமான அணுகுமுறைகள் என்று ஒரு கலப்பான தந்திரோபாயத்தின் மூலமாக கிளிநொச்சி வாக்காளர்கள் மீது ஒரு வலிமையான பிடியை வைத்திருக்கிறார்கள். புலம்பெயர்ந்த இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில்  விடுதலை புலிகளுக்கு சார்பான செல்வாக்குமிக்க ஒரு பிரிவினரும்  சிறீதரனுக்கு பல வழிகளில் ஆதரவாக இருக்கிறார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளும் அவரின் ஆட்களினாலேயே நிரப்பப்படடிருக்கிறது. கிளிநொச்சியில் அவரின் அரசியல் ஆதிக்கத்தை தமிழ் ஊடகங்களும் ஏற்றுக்கொண்டு அவரை " கிளிநொச்சி ஜமீந்தார் " என்று வர்ணிக்கின்றன. 

தெளிவாகக் காணக்கூடிய திடடம் 

தற்போதைய இலங்கை அரசியல் விவகாரங்களின் ஆய்வாளர்களும் அவதானிகளும் தமிழரசு கட்சி தொடர்பான சிறீதரனின் செயற்பாடுகளில் தெளிவாகக் காணக்கூடிய ஒரு திட்டத்தை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.  ஒரு மட்டத்தில், அவரும் அவரது ஆதரவாளர்களும் தமிழரசு கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகிறார்கள். இன்னொரு மட்டத்தில், அவரின் உதவியுடனும் ஆதரவுடனும் செயற்படுகின்றவர்கள் கட்சிக்கு பாதகமானதும் கட்சியை மலினப்படுத்தக்கூடியதுமான வெளிப்படையானதும் மறைமுகமானதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த இரு அணுகுமுறைகளிலுமே முனானாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தற்போதைய பதில் பொதுச் ஙெயலாளருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் மீதான சிறீதரனின் கடுமையான வெறுப்பு பொதுவான ஒரு காரணியாக இருக்கிறது.

சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான இந்த தகராறு குறித்து கடந்த காலத்தில் நான் அடிக்கடி எழுதியிருக்கிறேன். இந்த விவகாரம் பல்பரிமாணங்களையும் பல அடுக்குகளையும் கொண்டது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலும் இலங்கையிலும் இருக்கின்ற சுமந்திரனுக்கு எதிரான பிரிவினரிடமிருந்து சிறீதரனுக்கு கிடைக்கின்ற பரந்த ஆதரவு சுமந்திரனுக்கு எதிரான சிறீதரனின் அரசியலில் முக்கியமான ஒரு அம்சமாகும். இது விடயத்தில்  சுமந்திரனுக்கு எதிரான தன்னல அக்கறைச் சக்திகள் தங்களுக்கு வசதியான கருவியாக சிறீதரனைப் பயன்படுத்துவதாக சிலர் உணருகிறார்கள்.

உட்கட்சித் தேர்தல் 

சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையில் நடந்தது சாராம்சத்தில் இதுதான். 2020 பாராளுமன்ற தேர்தலில் இருவரும் ஒன்றுசேர்ந்து பிரசாரம் செய்தார்கள். இருவரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். ஆனால், இந்த உறவுமுறை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற உட்கட்சி தேர்தலுக்கு பிறகு முறிவடைந்தது. தலைவர் பதவிக்கு சுமந்திரனும் சிறீதரனும் போட்டியிட்டார்கள். 2024 ஜனவரி 21 திருகோணமலையில் நடைபெற்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் 321 பொதுச்சபை உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். 184 வாக்குகளைப் பெற்ற சிறீதரன் சுமந்திரனை 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சுமந்திரனுக்கு 137 வாக்குகள் கிடைத்தன.  ஜனவரி 27 தமிழரசு கட்சியின் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் பொறுப்புடைய மத்திய செயற்குழுவுக்கு தேர்தல் நடைபெற்றது. 

அதை தொடர்ந்து திருகோணமலையைச் சேர்ந்த தமிழரசு கட்சியின் ஒரு உறுப்பினரான பரா. சந்திரசேகரம் கட்சியின் யாப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் பொதுச்சபை கொண்டிருக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடவும் கூடுதலான உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் தேர்தலில் வாக்களித்தார்கள் என்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தார். கட்சியின் யாப்பில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற அடிப்படையில்  கட்சி நிருவாகிகளை தெரிவு செய்வதற்கு நடைபெற்ற தேர்தலின் சட்டபூர்வத்தன்மை சவாலுக்கு உட்டுத்தப்பட்டது. இடைக்காலத்தடை ஒன்றை விதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டது.

நீதிமற்றத்தின் உத்தரவு 

2024 ஜனவரி 21, 27 ஆம் திகதிகளில் பொதுச்சபை யின் கூட்டங்களில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு தீர்மானமும் இடைக்காலத் தடையுத்தரவைக் கோரிய மனுவின் விசாரணை முடிவடையும் வரை  நடைமுறைப்படுத்தப்படுவதை தடைசெய்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பிரச்சினை நீதிமன்றத்தில் தீர்க்கப்படும்வரை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சியின் நிருவாகிகளோ அல்லது மத்திய செயற்குழுவோ செயற்பட முடியாது என்பதே நீதிமன்ற உத்தரவின் அர்த்தமாகும். கட்சி யாப்பின் பிரகாரம் பொதுச்சபையின் 150 -- 160 உறுப்பினர்கள் மாத்திரமே கட்சி தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது..ஆனால்,  2024 ஜனவரியில் 321 பேர் வாக்களித்திருந்தார்கள்.

பழைய கரங்களில் 

அதனால், விதிவசமாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சியின் தலைவரும் ஏனைய நிருவாகிகளும் பதவியேற்பதில் இருந்து தடுக்கப்பட்டனர். " புதிய " மத்திய செயற்குழுவும் இயங்க முடியவில்லை. " பழைய " மத்திய செயற்குழுவும் நிருவாகிகளுமே  தொடர்ந்து செயற்படுகின்றனர். அதனால் தமிழரசு கட்சி "பழைய" மத்திய குழுவினதும் நிருவாகிகளினதும் கரங்களிலேயே இருக்கிறது.

பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவராக இருந்த " மாவை " சேனாதிராஜா அதற்கு பிறகு தனது பதவியை துறந்தார். கட்சியின் மூத்த துணைத் தலைவரான  சி.வி.கே  சிவஞானம் மத்திய செயற்குழுவினால் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இன்னொரு நிகழ்வுப் போக்காக கட்சியின் செயலாளர் மருத்துவர் பி.சத்தியலிங்கம் பதவியில் இருந்து விலகவே அவரின் இடத்துக்கு சுமந்திரன் செயலாளராக வந்தார்.

இடைக்கால தடையுத்தரவு கோரும் தமிழரசு கட்சியின் வழக்கு இழுபட்டுக் கொண்டுபோகும் நிலையில், " பழைய " நிரவாகிகளும் மத்திய செயற்குழுவுமே கட்சியின் விவகாரங்களை கவனித்தது. கட்சியை மறுசீரமைத்து அதன் வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்காக தலைவர் சிவஞானமும் செயலாளர் சுமந்திரனும் ஒன்றிணைந்து பணியாற்றினார்கள்.  மத்திய செயற்குழு மற்றும் அரசியல் குழு வின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் இருவருக்கும் ஆதரவை வழங்கினார்கள். கட்சியின் சகல தீர்மானங்களுமே மத்திய செயற்குழுவினதும் அரசியல் குழுவினதும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் எடுக்கப்பட்டன.

செல்வாக்கமிக்க நால்வர் 

தலைவர் சிவஞானம், செயலாளர் சுமந்திரன், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம்  மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகிய நால்வரும் தமிழரசு கட்சிக்குள் செல்வாக்கு மிகுந்தவர்களாக மாறினார்கள். சிறீதரனும்  மத்திய செயற்குழுவில் இருக்கும் சொற்ப எண்ணிக்கையான அவரது ஆதரவாளர்களும் உண்மையில் அதிகாரமற்றவர்களாகவும் பயனற்றவர்களாகவும் போனார்கள்.

கட்சிக்கு எதிராக போட்டித்தனமான தந்திரோபாயங்களை கடைப்பிடிப்பதன் மூலமாக சிறீதரன் மேலும் நிலைவரத்தை பழுதாக்கினார். 2024 ஜனாதிபதி தேர்தல் இதற்கு தெளிவான ஒரு உதாரணமாகும். தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவை வெளிப்படையாக ஆதரித்த அதேவேளை, சிறீதரன் பொது தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறப்பட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரனை வெளிப்படையாக ஆதரித்தார். இது கட்சிக்கு எதிரான வெளிப்படையான ஒரு செயலாகும்.

தனியாள்

2024 நவம்பரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது சிறீதரன் தமிழரசு கட்சிக்குள் இருந்த அதேவேளை தனியாளாகவே செயற்பட்டார். கட்சியின் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரக் கூட்டங்களில்  அவர் பங்குபற்றவில்லை. தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர்களில் இருவர் மாத்திரமே அவரது மேடைகளில் பங்கேற்பதற்கு இடம் கொடுக்கப்பட்டது. சிறீதரனின் பிரசாரம் தமிழரசு கட்சியின் ஏனைய வேட்பாளர்களுக்கு அல்ல, தனக்கு மாத்திரமே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார் என்பதை மறைமுகமாக உணர்த்தியது. யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியில் இருந்து அவர் மாத்திரமே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.

தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவராகவும் வந்த சிறீதரன் அரசியலமைப்பு பேரவையின் (Constitutional Council ) ஒரு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இவ்வாறாக உயர்ந்த போதிலும், அவரால் கட்சிக்குள் அதிகாரத்தைச் செலுத்த முடியாமல் இருக்கிறது. தமிழரசு கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்  மத்தியிலும் கூட, இருவர் அவரது ஆதரவாளர்களாகவோ அல்லது எதிராளிகளாகவோ இல்லை. தற்போது சிறீதரனின் ஆதரவாளராக கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே  கருதப்படுகிறார். 37 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசு கட்சியின் மத்திய செற்குழுவிலும் 11 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் குழுவிலும் பெரும்பான்மையானவர்கள் சிறீதரனின் முகாமில் இல்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தமிழரசு கட்சியின் மத்திய செயற் குழுவையும் அரசியல் குழுவையும் சேர்ந்த பெருமளவு உறுப்பினர்கள் தமிழ்த்தேசியவாத இலட்சியங்களை தங்களுடன் வரித்துக் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தீவிரவாத நிலைப்பாட்டைக் கொண்டவர்களாகவோ அலாலது விடுதலை புலிகளுக்கு சார்பானவர்களாகவோ இல்லை. அதனால் அவர்கள் சிறீதரனின் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வெற்றுக் கடும்போக்கு ஆரவாரப் பேச்சுக்களுக்கு ஆதரவானவர்கள் இல்லை. சிறீதரனை அறிவாழமும் செயற்திறனும் நேர்மையும் கொண்ட ஒரு அரசியல்வாதியாக பலர் நோக்கவில்லை என்பது மற்றைய காரணமாகும். அவரை அவர்கள் ஒரு வாய்ச்சொல் வீரராகவே பார்க்கிறார்கள். வாக்குகளைப் பெறுவதில் சிறீதரன் கெட்டிக்காரராக இருக்கலாம், ஆனால், ஆக்கபூர்வமானதும் அறிவார்ந்ததுமான தலைமைத்துவத்தை வழங்க இயலாதவராக அவர் விளங்குகிறார்.

தமிழரசு கட்சியை தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவர இயலாதவராக சிறீதரன் கட்சியை மலினப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சிறுபிள்ளைத்தனமான அரசியலில் ஈடுபடுகிறார். அதையும் வெளிப்படையாகச் செய்வதற்கு பதிலாக அவர் தனது ஆட்களையும் ஆதரவாளர்களையும் பயன்படுத்தி எதிர்மறையான காரியங்களைச் செய்ய வைக்கிறார். 

செம்மணி சம்பவம் 

யாழ்ப்பாணத்தில் அரியாலை பகுதியில் செம்மணியில் சித்துப்பாத்தி மயானத்தில் மனித புதைகுழிகளில் தோண்டியெடுக்கப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பில் உலகின் அனுதாபத்தைக் கவரும் நோக்கில் நடத்தப்பட்ட " அணையா விளக்கு " அமைதிவழிப் போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவம் இதை பளிச்சிட்டுக் காட்டுகிறது. சிறீதரனின் ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் இருந்து இருபது பஸ்களில் செம்மணிக்கு வந்தனர்.

கிளிநொச்சியில் இருந்து ஜீவராஜா என்று கூறப்படும் ஒருவரின் தலைமையில் வந்தவர்களில் சிலர் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் போராட்ட அரங்கில் இருந்து வெளியேறியபோது அவரை எதிர்கொண்டு ஆபாச வார்த்தைகளில திட்டி துரோகி என்று கூச்சல் போட்டனர். எண்பது வயதைக் கடந்தவரான சிவஞானம் எதிர்த்து எதையும் கூறாமல் மிகுந்த நிதானத்துடன் தனது வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார். அந்த சம்பவம் ஔிப்பதிவு செய்யப்பட்டு பெருவாரியான யூரியூப் அலைவரிசைகளில் வெளியானது. தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானத்தை பொதுமக்கள் அணிதிரண்டு விரட்டியடித்த ஒரு சம்பவமாக அது தவறான முறையால் காண்பிக்கப்பட்டது.

' பாதுகாவலர்' சி.வி.கே.

சிவஞானம் சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் ஒரு துரோகச் செயலாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் கட்சிக்குள் சிறீதரனைப் "பாதுகாப்பவராக " சிவஞானமே இருந்து வருகிறார். தமிழரசு கட்சிக்கள் சிவஞானம் ஒரு மத்திய பாதையை கடைப்பிடிக்கிறார். ஒரு புறத்தில்  அவர் சுமந்திரனுடன் கட்சி விவகாரங்களில்  ஒத்துழைத்துச் செயற்படுகின்ற அதேவேளை, மறுபுறத்தில் சிறீதரனைப் பழிவாங்க வேண்டும் என்று கூச்சல்போடுகிறவர்களையும் அடக்கி வைத்திருக்கிறார். அதனால் சிறீதரன் சிவஞானத்துடன் உறவுகளைச் சீர்செய்வதற்கு அவசரப்பட்டு ஓடினார்.

சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு 

செம்மணி சம்பவம் இவ்வருடம் பெப்ரவரியில் மாவிட்டபுரத்தில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் முக்கிய தலைவரான மாவை சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கின்போது இடம்பெற்ற சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவந்தது. அந்த இறுதிச்சடங்கின் ஏற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்த சிறீதரன் இரங்கல் உரை நிகழ்வுக்கும் தலைமை தாங்கினார். சேனாதிராஜாவுக்கு தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி இரங்கலுரை ஆற்றுவதற்கு விரும்பிய சிலரை சிறீதரன் தடுத்ததாகக் கூறப்பட்ட அதேவேளை, தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்களை பகிரங்கமாக  கண்டனம் செய்வதற்கு அவர் அனுமதித்தார். மேலும் கிளிநொச்சியில் இருந்து வாகனங்களில் கூட்டி வரப்பட்டதாகக் கூறப்பட்ட  கறுப்புச்சட்டை அணிந்த கும்பல் ஒன்று இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் பலரை அச்சுறுத்தியது. அவ்வாறு அச்சுறுத்தப்பட்டவர்களில் பலர் கட்சிக்குள் சிறீதரனை விமர்சிப்பவர்களாக கருதப்படுபவர்கள்.

தமிழரசு குழப்பம் 

இலங்கையின் பிரதான தமிழ் அரசியல் கட்சியாக தமிழரசு கட்சி இருக்கலாம், ஆனால், அது பிளவுபட்ட ஒரு அமைப்பாக இருக்கிறது என்ற உண்மையை மறுதலிக்க முடியாது. அது உள்ளிருந்து வருகின்ற சவால்களுக்கும்  வெளியில் இருந்து வருகின்ற சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய ஒரு கட்சியாக இருக்கிறது. நீதியரசர் அமரசேகர குறிப்பிட்டதைப் போன்று உள்ளிருந்து வருகின்ற சவால்கள் பெருமளவுக்கு கெடுதியை விளைவிக்கக்கூடிய ஆபத்தை தோற்றுவிக்கின்றன."  யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் எவ்வளவு காலத்துக்கு கட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தொடரப்போகிறார்?  1949 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட அந்த கட்சி அதன் வைரவிழா வருடத்தில் என்ன செய்யப்போகிறது?    நன்றி வீரகேசரி 


No comments: