நவநீத கிருஷ்ணபாரதியார் அவர்களுக்கு நன்மொழி வாழ்த்து

 







சென்ற மே மாதம் 24 ஆம்திகதி  நவநீத கிருஷ்ணபாரதியார் அவர்களுக்கு விழா எடுக்கப்பெற்றதை வாசகர் அறிவர். 

நவநீத கிருஷ்ணபாரதியார்


அந்தப் பெருமகனாருக்கு யாழ்ப்பாணத்திலே  ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் 1952 திசம்பர் 1 இல் பொற்கிழியளித்து புலவர்மணிப் பட்டத்தை வழங்கிய  பிரியாவிடைப் பாராட்டு விழா நடைபெற்ற ஞான்று 

புலவர்மணி பண்டிதர் சோ இளமுருகனார் அவர்களால் பாடப்பெற்ற நன்மொழி வாழ்த்தை நேயர்களுடன் பகிருகிறோம்.


பொற்கிழி நிதி சேகரிப்புச் சபை சார்பாகப்

புலவர்மணி பண்டிதர் சோ இளமுருகனார்

யாத்தது..





திணை :- பாடாண்டிணை   துறை :- வாழ்த்தியல்

திரு க. சு. நவநீதகிருஷ்ண பாரதியார்

சால்பு நுதலிய

நன்மொழி வாழ்த்து


வெண்மதிச் செஞ்சடை மைமலி கண்டத்

தொருநுதற்  சுடர்விழித் திருநுதல் கொழுநனும்

காரணி யுருள்பூங் கடம்பணி தடந்தோட்

கூரணி நெடுவேற் குறிஞ்சியங் கிழவனும்


சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனும்

அந்தமில் காட்சி யருங்கலைப் புலவரும்

போக்கியு நிறுத்தியும் புதுக்கியுந் தழுவியும்

தூக்கியு மாக்கிய தொன்நூற் சுவைக்கடல்


மலிதுறை தோறும் பலமுறை மூழ்கி

நால்வகை யிருசொல் வால்வளைக் குலங்கள்

சூலுளைந் தீன்ற சுடர்மணி நுண்பொருள்

மதியினில் வாரி வளமுறத் தொகுத்து


மாணவர் நெஞ்சுற வழங்குமுறை வழங்கும்

வண்டமிழ் ஞான பண்டித மணியே!

பாலுணு மொருவன் காடியு நுகர்ந்தென

மேலுறு சிறப்பி னாரியம் விழைந்து


மற்றதன் சுவையொடு நற்றமிழ்த் தீஞ்சுவை

தெற்றெனத் தூக்கிச் சிந்தைகூர் செல்வ!

குலமுங் கொள்கையு நிலைபெறல் வேண்டி

வலவைகள் போலப் பலபல பிதற்றி


இருந்தமிழ்ப் பழிக்கு மேதிலர் நடுங்கத்

திருந்திய பேரவைச் செங்கள மேறித்

துணிவுவில் வாங்கித் தெளிவுநா ணேற்றிக்

குறிநிலை பிழையா தறிவுகோல் துரந்து


செஞ்சொற் போர்புரி வெஞ்சின வீர!

மறநெறி கடிந்து மன்பதை யொழுக

அறநெறி யுரைக்கு மந்தணர் முதல்வ!

கற்றோர் விழையுங் குற்றமி லன்ப!


மற்றோர் மகிழும் மதுர வாசக!

புண்ணிய நீறுங் கண்மணி மாலையும்

அண்ணலஞ் செழுத்து மடியவர் தொழும்பும்

இருவினை தீர்க்கு மருமருந் தெனவே


பூசியும் பூண்டும் புகன்றும் புரிந்தும்

மாசில் வண்டமிழ் மந்திர வருட்பா

ஓதியுங் கேட்டு முளமகி ழொருவ!

பாற்கடல் குனிந்திட நூற்கடல் கடைந்து


சீர்க்கலை யமுதத் திரளிவை யாமென

உலகியல் விளக்கமுந் திருவடிக் கதம்பமும்

செழுங்கதிர்ச் செல்வமும் பறம்புமலைப் பாரியும்

இன்னன முதலாம் நன்னயப் பனுவல்


நந்தாது வழங்குஞ் சிந்தா மணியே!!

நின்¸

நினைவுஞ் செந்தமிழ் புனைவுஞ் செந்தமிழ்

உணர்வுஞ் செந்தமிழ் உயிர்ப்புஞ் செந்தமிழ்

எல்லா மாகி யியன்றனை நிற்றலின்


தமிழொரு வடிவந் தாங்கிய தெனவே

இமிழ்திரை ஞால மிசைத்திடு மம்ம!!

தோலா நாவின் மேலோ ராய்ந்த

அகத்தமிழ்க் காதலும் புறத்தமிழ் வீரமும்


செவிப்புலங் கதுவி நெஞ்சகந் துளும்ப

உரைத்திறம் விரிக்குந் திருத்தகு புலவ!!

பாலை பாடிய பாவலன் மாவைக்

கவுணியன் வெண்ணெய்க் கண்ண! நின்பெயர்


நூலொடு சிவணி வாழிபல் லாண்டு:

முடியுடை மூவருங் குறுநில மன்னரும்

படிமிசை யில்லாப் பவத்தியம் மறந்தே

நின்பால் நிலைஇய வன்பாற் றரூஉம்

பொற்கிழி பெற்று வாழிய

நந்றமிழ் நாடு நலம்பெறற் பொருட்டே



No comments: