இலங்கைச் செய்திகள்

 ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு !

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி குறித்து டிரம்பின் அறிவிப்பு !

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள்  அடையாளம் : 54 எலும்புக்கூடுகள் மீட்பு !

செம்மணி விவகாரத்தில் பொலிஸ் விசேட குழுவினரின் அறிக்கைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? உமா குமரன் வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி

செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு - பிரிட்டிஸ் வெளிவிவகார அமைச்சர்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா


 ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு !

11 Jul, 2025 | 02:56 PM

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்ட நீதிவான், ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 



தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

10 Jul, 2025 | 11:16 AM

யாழ். தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று வியாழக்கிழமை (10) பௌர்ணமி  தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம்  மாலை ஆறு மணி வரை இடம்பெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துளளனர்.

விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெறும் இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள்   தமிழ்த்தேசிய மக்கள முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன். சமத்துவக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார். சட்டத்தரணி காண்டீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்..









நன்றி வீரகேசரி 


இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி குறித்து டிரம்பின் அறிவிப்பு !

Published By: Priyatharshan

09 Jul, 2025 | 11:31 PM

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த வரி விதிப்பு, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 

முன்னதாக இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 வீத வரி விதித்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக 2 ஆவது முறையாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதன் பின்னர் 44 வீதமாக அறிவித்திருந்தார்.

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியானது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 




செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள்  அடையாளம் : 54 எலும்புக்கூடுகள் மீட்பு !

09 Jul, 2025 | 09:01 PM

யாழ்ப்பாணம் (ஜூலை 09) : செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து  இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான இன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

அந்தவையில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் (ஜூலை9)  14 வது நாளை எட்டியது. ஏற்கனவே முதலாம் கட்ட அகழ்வு  9 நாட்களில் நிறைவடைந்தது.

முதலாம் கட்டம் இரண்டாம் கட்டம் என அகழ்வாய்வு பணிகள் மொத்தமாக 23 நாட்கள் மனித புதைகுழி அகழ்வு நடைபெற்று வருகின்றது. 

இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ள நிலையில், அவற்றில் 54 மனித எலும்பு கூடுகள்  முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வின் போது, இன்று (ஜூலை 09)  ஒரு சிறுமியின், ஆடைகள் , இறப்பர் செருப்பு மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இரண்டாம் கட்ட அகழ்வு நாளை தற்காலிகமாக நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது.   




























நன்றி வீரகேசரி 



செம்மணி விவகாரத்தில் பொலிஸ் விசேட குழுவினரின் அறிக்கைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

09 Jul, 2025 | 04:14 PM

யாழ் செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த பின்னர் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை (08)  இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ். செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி  அவசர நிர்மாணிப்பு வேலை இடம்பெற்ற போது ஏற்பட்ட நிலையை அடிப்படையாகக் கொண்டு இந்த சம்பவம் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகின்றது.

கடந்த 7ஆம் திகதி வரை மூன்று சந்தர்ப்பங்களிர் 21 நாட்கள் அகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது 44 மனித எழும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதனோடு மனித பாவனைப் பொருட்கள் 61 கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளன.

இச்செயற்பாடுகள் யாழ். மாவட்ட நீதிபதி, அவரது கட்டளையின் படி பேராசிரியர் ராஜ். சேவதேவ உள்ளிட்ட குழுவினர், யாழ் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரதாபன் ஆகியோர் தொடர்புபட்டு மேற்கொள்ளப்படுகின்றது. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறும்.   

பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்திற்கு முன்வைப்பார்கள். என்ன பெறுபேறு என்று நாம் பார்ப்போம். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். குற்றப்புலனாய்வு திணைக்களம் பொலிஸ் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீதிமன்றத்திற்கு உரிய தேவைகளுக்கு ஏற்ப தேவையான விசாரணைகள் அரசினால் முன்னெடுக்கப்படும் என்றார்.  நன்றி வீரகேசரி 



பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? உமா குமரன் வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி

Published By: Rajeeban

09 Jul, 2025 | 12:31 PM

பிரிட்டிஸ் அரசாங்கம் செம்மணி மனித புதைகுழி  விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா? என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்

வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நீங்கள் இறுதியாக இந்த குழுவின் முன்னிலையில் 2024 நவம்பரில் தோன்றியபோது நான் தமிழ் மக்களிற்கான நீதி குறித்து உங்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இந்த விடயம் குறித்து நீங்கள் கொண்டிருக்கும் தனிப்பட்ட அர்ப்பணிப்பிற்காகவும் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக தமிழ் சமூகத்திற்கு நீங்க்ள வெளிப்படுத்திய ஆதரவிற்கும்  நான் உங்களிற்கு எனது நன்றியை தெரிவிப்பதன் மூலம் எனது உரையை  ஆரம்பிக்க விரும்புகின்றேன்.

உங்களிற்கு இது தொடர்பிலான எனது குடும்பத்தின் கதை தெரியும்,

இலங்கையில் மோதலின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக மார்ச் மாதம் பிரிட்டன் தடைகளை அறிவித்தமை குறித்து நான் திருப்தியடைகின்றேன்.சித்திரவதைகள் , பாலியல் வன்முறைகள் சட்டத்திற்கு புறம்பான கொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக.

இது அந்த சமூகத்திற்கு இந்த தருணத்தில் மிகவும் முக்கியமான விடயம் ஆனால் கவலையளிக்கும் விதத்தில் கடந்த மாதம் இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தில் செம்மணியில் மற்றுமொரு மனித புதைகுழியை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த புதைகுழியில் மூன்று குழந்தைகளின் உடல்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழிகளை சர்வதேச தராதரத்தின் கீழ் அகழ்வு செய்வதற்கான போதிய வளங்கள் இலங்கையில் இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது.

பிரிட்டிஸ் அரசாங்கம் இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா?

மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் ஏதாவது உதவிகளை வழங்குகின்றதா?   நன்றி வீரகேசரி 




செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு - பிரிட்டிஸ் வெளிவிவகார அமைச்சர்

Published By: Rajeeban

09 Jul, 2025 | 11:35 AM

செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார குழுவின் கூட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்;டுள்ளதாவது,

செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்.

ஆம் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து நேரடிப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.கடந்த மாதம் குறித்து பேசினோம்.

இலங்கையின் பல பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பினை பேணி வருகின்றோம்.அவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசசார்பற்ற அமைப்புகள் உட்பட ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

எங்களால் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்கு நான் தயார்.

மனித புதைகுழி விடயத்தில் திறன் தொடர்பான பிரச்சினைகள் உள்ளமை குறித்த புரிந்துணர்வு காணப்படுகின்றது.

இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை இதன் காரணமாக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான நியாயாதிக்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை.   நன்றி வீரகேசரி 



வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா

Published By: Vishnu

09 Jul, 2025 | 01:53 AM

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளைய தினம் புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது. 

அதிகாலை 4 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி , வசந்தமண்டப பூஜை காலை 07 மணிக்கு இடம்பெற்று, அதனை தொடர்ந்து நாகபூசணி அம்மன் உள்வீதியுலா வந்து , காலை 08.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பர். 

அதனை தொடர்ந்து காலை 09 மணிக்கு தேரில் வெளிவீதியுலா வந்து காலை 10.30 மணிக்கு தேர் இருப்பிடத்தை அடையும். மாலை 04 மணிக்கு அம்மனுக்கு பச்சை சாத்துதல் இடம்பெறும். 

நாளை மறுதினம் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி , காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி , 7.30 மணிக்கு தீர்த்தோற்சவத்திற்கு அம்பாள் புறப்பட்டு செல்வார். 

அதேவேளை ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி, விசேட படகு சேவைகள் , பேருந்து சேவைகள் இடம்பெற்று வருவதுடன் ,  சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி படையினர் , சாரணர்கள் , செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி  

No comments: