சர்வதேசப் புகழ் பெற்றசங்கீதக் கலாநிதி அருந்ததி சிறீரங்கநாதன் == கலாநிதி பாரதி இளமுருகனார்

                 யாழ்ப்பாணத்திலுள்ள கந்தர்மடம் என்னும் ஊரிலே


சிறப்புடன்  திருத்தக வாழ்ந்து வந்தவர்கள்  சிவசுப்பிரமணியம் - வீரலட்சுமி  தம்பதிகள்
. திருமணமாகிப்  பத்து வருடங்களுகளாகியும் தங்களுக்குக் குழந்தை இல்லையே என்ற குறை அவர்களை வாட்டிவந்தது இயற்கையே!. யோகர் சுவாமி என்னும் சித்தரைச் சென்று ஆசிபெறுங்கள் என்று அவர்களுக்குத் தெரிந்த பெண்மணி ஒருவரின் பரிந்துரையைக் கேட்ட நாளிலிருந்து வீரலட்சுமி அம்மையார் சுவாமிகளைத் தரிசிக்கத் தனக்கு  அருள்பாலிக்கவேண்டுமெனத் தினமும் பிரார்த்தனை செய்து வந்தார். என்னே ஆச்சரியம்!. அந்த நாள்களில் சிவசுப்பிரமணியம் அவர்கள் தனது குடும்பத்துடன்  அப்புத்தளையிலே பணியாற்றியவர். எல்லோருக்கும் ஆச்சரியம் தரும் வகையிலே ஒருநாள் யோகர் சுவாமிகள் சிவசுப்பிரமணியத்தின் இல்லத்தில் திடிரெனத் தோன்றினார். சுவாமிக்கு  அமுது படைத்துச் சிறப்பானமுறையிலே விருந்தோம்பல் செய்து மகிழ்ந்தார்கள் தம்பதிகள். ஆனால் தனது குறையைச் சுவாமிகளிடம் சொல்வதற்கு வீரலட்சுமிக்குத் துணிவு வரவில்லை. சுவாமியாருக்குப் புரியாததொன்றா?. திருமதி வீரலட்சுமியின் மனக்குறையை தனது ஞானத்தினால் அறிந்த சுவாமிகள் மறுநாள் வீரலட்சுமியைப் பார்த்து   உனக்குச் சொல்லி விட்டுப் போகத்தான் வந்தனான்? என்று மட்டும் சொல்லிவிட்டு நிட்டையில் ஆழ்ந்துவிட்டார்.. பின்னர் அங்கிருந்து விடைபெற முன்னர் வீரலட்சுமியை அழைத்து, உனக்குப் பாடத் தெரியுமோ என்று கேட்டு விட்டு ஒரு 19 வரிகளைக் கொண்ட தாலாட்டுப் பாடலைப் பாடிக்காட்டிவிட்டு அதை எழுதும்படி பணித்தார். தினமும் அந்தத் தாலாட்டைப் பாடிவரும்படி சொல்லிவிட்டு அங்கிருந்து வெளிக்கிட்டார்.. என்னே அதிசயம் அடுத்த ஆண்டு ஒரு பெண்குழந்தையைப் பெற்றதைத்   தொடர்ந்து நான்கு பெண்குழந்தைகளுக்குத் தாயானாள் வீரலட்சுமி அம்மையார்.

யோகர் சுவாமிகளின் தீர்க்க தரிசன வாக்கு!

பல ஆண்டுகளுக்குப் பின்னர் சிவசுப்பிரமணியம் தம்பதியினர் ஒருமுறை யோகர்சுவாமிகளைச் சந்தித்திருக்கிறார்கள். வீரலட்சுமியைப் பார்த்து, “உனக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்று வினாவினார். வீரலட்சுமியும் தலையைக்குனிந்தபடி வெட்கத்துடன் 5 பெண்குழந்தைகள் இருக்கிறார்கள் சுவாமி என்று தயங்கியபடி  கூறினார். சுவாமிகள் தனது தலைக்குமேலே கையை வைத்து அரசனும் ஆண்டியாவது தெரியாதா உனக்கு என்று விகடமாகச் சொல்லிவிட்டு நீ   யோசிக்காதே அவர்களைப்பற்றி யோசிக்காதே கல்வி கேள்விகளோடு பரமனைப் பாடிப் பாடிச் சீவிக்கப்போகிறார்கள். ஐந்து குழந்தைகளும் ஐந்து விண்மீன்களாக ஒளிர்வார்கள் என்று ஆசீர்வதித்தார். சுவாமிகளின் வாக்கு எவ்வளவு தூரம் உண்மையாகியது என்று சொல்லவும் வேண்டுமோ? . ஆம் சுவாமிகள் அருள்வாக்குப் பலித்ததை ஐந்து பெண்களும்  ஆளுமை விஞ்சிய பெண்மணிகளாகக் கலையுலகிலே பிரசித்திபெற்று  விண்மீன்களெனப் பிரகாசித்தாார்கள். மூத்த பெண் சங்கீத கலாபூசணம் திருமதி அம்பிகா தாமோதரம் இங்கிலாந்திலே புகழுடன் வாழ்கிறார். மற்றைய பெண்மணி யோகா இலங்கைக் கிழக்குப்  பல்கலைக் கழகத்திலே வேந்தர் பதவி நிலைக்கு உயர்ந்து சாதனைபடைத்து சுவாமிகளின் வாக்கிற்கு சான்றாக விளங்கினார். அடுத்த பெண்மணி நடனக் கலையிலே புகழ்பெற்றதுடன் அவுஸ்திரேலியாவிலே  பல வருடங்களாக  நடனப் பள்ளியை நடாத்தி நடனமணிகள் பலருக்குப் பரதநாட்டிய அரங்கேற்றங்களை செய்து புகழீட்டினார்.  அரசாங்கம் இவரின் கலைச்சேவையைப் பாராட்டி இவருக்கு   பட்டம் அளித்துக் கௌரவப்படுத்தியது.  அடுத்த பெண்மணி திருமதி ஞானா குலேந்திரன் தமிழ் நாடு தஞ்சாவ+ர் பல்கலைக்கழகத்திலே தமிழ்த்துறைத் தலைமைப்   பேராசிரியையாகப் பணியாற்றி இளைப்பாறிய பின்னர் இன்று அவுஸ்திரேலியாவிலே சிறப்புடன் வாழ்கிறார்.  சிவசுப்பிரமணியத்தின் கடைசி மகள் தனது வாழ்நாள் முழுவதையும் கலைக்கு அர்ப்பணித்துப் பல அரிய சாதனைகளைப் படைத்தவரான திருமதி அருந்ததி சிறீரங்கநாதன் அவர்கள்.

திருமதி அருந்ததி அவர்களின் கல்வித்தகைமை

அருந்ததி தனது கல்வியை கொழும்பு இந்து மகளிர் கல்லூரியில் ஆரம்பித்த பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள வேம்படி மகளிர் கல்லூரியிலே தொடர்ந்தார். கல்வியிலே சிறந்து விளங்கிய அருந்ததி அவரின் மூத்த சகோதரிகளான அம்பிகா(தாமோதரன்) ஞானா(குலேந்திரன்) ஆகியோர் இசைமேதை மஹாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் சங்கீதம் கற்றுக் கொண்ட வேளை இசையிலே மிகவும் நாட்டம் கொண்ட அருந்ததியும் இசையை மிக ஆர்வத்துடன் பயின்று வந்தார். இவரது அடுத்த மூத்த  சகோதரி ஜெயலஷ்மி(கந்தையா) பரத நாட்டியம் கற்கும்பொழுது அருந்ததியும் நடன ஆசிரியர்களான திரு கைலாயம்பிள்ளை மற்றும் திருமதி பாலசுந்தரி பிராதலிங்கம் ஆகியோரிடம் முறையாகப் பரதநாட்டியம் பயிற்சி பெற்று விளங்கினார். சரசுவதிதேவி வீணையைத் தாங்கியவண்ணம் பொலிவுடன் அழகு மிளிரத் தோன்றும் காட்சியில் மனதைப் பறிகொடுத்துவந்த அருந்ததியும் தனது கைகளும் அந்தமாதிரி வாத்தியத்தைக் கைகளில் ஏந்தி மங்கல வீணை இசையை மீட்க விரும்பியிருக்க வேண்டும். அதையும் அவர் விட்டுவைக்கவில்லை.. பிரபல வீணை இசைக் கலைஞர்களான செல்வி இராஜா மற்றும் கல்யாணகிருஷ்ண பாகவதர் ஆகியோரிடம் வீணை இசையைக் கற்றுத் தேர்ந்தார்.  வாய்ப் பாட்டு  நடனம் வீணை ஆகிய  மூன்றிலும் பாண்டித்தியம் பெற்றுவிளங்கிய அவர்  தனது  மேற்படிப்பைக் கைவிடவில்லை. பேராதனைப் பல்கலைக் கழகத்திலே சேர்ந்து இளங்கலைஞா் ( Bachelor of Arts)  பட்டமும் பெற்றுப் பட்டதாரியாக விளங்கினார்.

அருந்ததி வீணை இசையிலும் வாய்ப்பாட்டிலும் விசேட தகுதிச் சான்றிதழ்(Merit Award) பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்துடன் வடஇலங்கைச் சங்கீத சபை நடத்ததிவந்த ஆசிரியர் தராதரச் சோதனைகளில் விசேட சித்தி பெற்றவர்.  கல்விப் படிப்பை நிறைவு  செய்தபின்பு    தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி தனது இனிமையான குரலாலும் வீணை இசையாலும்   ஒரு தனியிடத்தைத் தக்கவைத்து வந்தமையைப் பலர் அறிவர்.  இவர் மாணவிகள் பலருக்கு வீணையும் வாய்ப்பாட்டும்  பயிற்றுவந்தவர்.

இல்லற வாழ்க்கை

பருவத்து எழிலெலாம் ஒருமித்த இசைக்குயிலான அருந்ததியும் இசைப் பிரியரான வைத்திய கலாநிதியாகிய சிறீரங்கநாதனும் இசையாலே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பெற்று ஓருயிரும் ஈருடலுமாயினார்கள். இவர்களைத் திருமணத்திலே இணைத்துவைத்ததில் எனது பங்களிப்பையும் அந்தப் பசுமை நிறைந்த காலத்தையும் நினைவுகூருகிறேன். இறையருளால் இவருக்கு மூன்று  ஆண் பிள்ளைகள் பிறந்தார்கள்.  அருந்ததியின் கணவரான  மனநோய் நிபுணரான மருத்துவகலாநிதி  (அமரர்) சிறீரங்கநாதன் எனது துணைவியாரின் மூத்த தமையன்  ஆவர். இவர் நையீரியாவிலே நீண்டகாலம் பணிபுரிந்தவர்.

இலங்கை வானொலியிலே பணி ஆரம்பம்:

இசைத் துறையின் தயாரிப்பாளராக அருந்ததி தனது பணியை ஆரம்பித்தார்.. அக்காலத்திலே சிறுவர் மலர் - கலைக்கோலம் முதலிய நிகழ்ச்சிகளைத் திறம்படத் தயாரித்து அளித்த அருந்ததி தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைத் தயாரித்துப் புகழ்பெற்று விளங்கினார். வானொலி கேட்பவர்கள் அருந்ததியின் நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்ததைப் பலர் வாயிலாக அறிந்திருந்தேன்.  தரமான நிகழ்ச்சிகளைத் தயாரித்துவந்த அருந்ததி தமிழ்ப் பிரிவின் கட்டுப்பாளராகப் (Controller) பதவி உயர்வு பெற்றார்.. அத்துடன் அவரின் பதவி உயர்வு நின்றுவிடவில்லை. அவர் துணிவுமிக்க பெண்ணாக் வேலை நிமித்தம் திர்நீச்சலாடிச் சிறீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ப் பிரிவின் பணிப்பாளர் (Director) என்ற உயர்பதவியைக் கைப்பற்றிப் பல ஆண்டுகள் அருமையான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிவந்தார்.  ஒருமுறை ஒரு இசைச் சித்திரம் ஒன்றை மூன்று   நாள்களுக்குள் எழுதித் தரச்சொல்லி என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். சண்முக சங்கமம் என்னும் பெயரிட்டு ஒரு கற்பனைச் சித்திரமாகக் கதிர்காமக் கந்தனை மையமாகக் கொண்டு எழுதிக் கையளித்தேன். அந்த இசைச் சித்திரம் எனது மாமாவாகிய சிவகுருநாத செட்டியார், சிவத்திரு வைத்தீ சுவரக் குருக்கள், எனது  நெருக்கமான நண்பனான இயலிசைவாரிதி பிரம்மசிறீ வீரமணி ஐயர், பண்டிதர் மயில்வாகனம், ராம் குமாரசாமி போன்ற தமிழ்அறிஞர்கள் பலரின் பாராட்டை எனக்கு நல்கியது.  இதைத் தொடர்ந்து எட்டு இசைச் சித்திரங்களை எழுதினேன்.  எல்லாவற்றிற்கும் தகுந்த இசையை நிலைய வாத்தியக் கலைஞர்களைக் கொண்டு அமைப்பித்து நெறிப்படுத்தித் தயாரித்து ஒலிபரப்பியமை பாராட்டுதற்குரியது.  சில இசைச் சித்திரங்களுக்கு அருந்ததியின் இனிமைக் குரலும் மெருகூட்டியது. இவரது தயாரிப்பிலே னது நண்பரான பிரம்மசிறீ வீரமணி ஐயரின் இசைச் சித்திரங்களும் வெற்றிச் சித்திரங்களாக எல்லோரின் பாராட்டுகளையும் பெற்றன.

இலங்கையில் உள்ள கலைஞர்களின் பெருமதிப்பைப் பெற்றதுமட்டுமன்றி அருந்ததி உலகிலுள்ள இசைக் கலைஞர்களையும் தனது இசையாலே பெரிதும் கவர்ந்தவர்.. இவரின் மாணவர்கள் உலகிலே பல இடங்களில் இசைக் கலையை வளர்து வருகிறார்கள்.  கொழும்பிலே உள்ள இலக்கம் 4 - 40 வது ஒழுங்கை வெள்ளவத்தையில் உள்ள அவருடைய  இல்லம்  கலைக்கூடம்  எனப் பல்லாண்டுகள் திகழ்ந்ததை  இசை வல்லுர்கள்  நன்கு அறிவர்.  இவர் கடைசியாகச் சிறீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குனர் சபை (Board of Directors) உறுப்பினராக விளங்கினார்.

 

 

அருந்ததி பெற்ற விருதுகள்:-

 

கலாசூரி - தேசநேத்துரு - விஷ்வபிரசாதினி - கலைச் செம்மல் - கலாநிதி- என்று பல விருதுகளுடன் எல்லோரினதும் நன்மதிப்பையும் பாராட்டையும்பெற்று விளங்கியவர் அருந்ததி. ஒக்ஷ்பேர்ட் (Oxford University - London) பல்கலைக் கழகத்தின் முதன்மைநிலைத் திறமைச் சான்றிதழ்  ( Award Of Excellence) இவரின் ஆளுமைக்கு மெருகூட்டியதெனலாம். இயற்கையாகவே கலையார்வம் மிக்க அருந்ததி ஈழத்தின் ஆளுமைகளில் சிறந்த ஓருவாரக விளங்கியதுடன்   உலகப் புகழ்படைத்த கலைஞராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மகாகவி கண்ட புதுமைப் பெண்ணாகத் தனித்து வீராங்கனையாகச் செயற்பட்டுத் தனது ஆளுமையை நிலைநாட்டியவர் அருந்ததி.

அருந்ததியின் இறுதிக் காலம்:-

தனது இறுதிக் காலத்திலே முதுமையும் இயலாமையும் வருத்திய நிலையிலே சிட்னியில் உள்ள மருத்துவ இல்லம்   ஒன்றிலே இறுதிக்காலத்தைக் கழித்தார்..

பெப்ரவரி 17 ஆம் திகதி  உடல்நலக் குறைவினால் சிட்னியிலே இறைபதம் எய்திய அவரின்  மறைவு  கலையுலக இசைப் பிரியர்களுக்கு ஒரு பேரிழப்பு  என்று சொல்லவும் வேண்டுமோ? சிட்னி  மக்குவேறி இடுகாட்டிலே அவருடைய பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.   அவரது உறவினர்களும் அவருடன் இசையினால் இணைந்த கலைஞர்களும் கேண்மை பூண்டிருந்த நண்பர்களும் தங்களின் அஞ்சலியைச் செலுத்தத் தவறவில்லை. அந்தவேளை கவிஞர் நந்திவர்மன் ஐயா அவர்கள் பத்திச்சுவை ததும்பத் திருமுறை ஓதிச் சிறப்புச் செய்தார்கள்.    

அவரது வாழ்க்கையின் பெரும்பகுதி  இலங்கையிலே கழிந்ததனால் அவரது ஈமக்கிரிகைகளை அவரது இல்லத்திலே செய்யத் தீர்மானிக்கப்பட்டுப் பூதவுடல் கொழும்பிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலே  அருந்ததியின் பூத உடலுக்கு இறுதி மரியாதை  செலுத்துவதற்காக இலங்கை வானொலி நிலையம்  சிறப்பான ஒழுங்குகளைச் செய்திருந்தது. பெப்ரவரி 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியிலிருந்து 4 மணிவரையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அவரின் நண்பர்கள் மாணவர்கள் கலைப்பிரியர்கள் மற்றும் அரசியற் பிரமுகர்கள் ஆகியோரின் அஞ்சலிக்காக அவரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது.

ஈமைக்கிரியைகள் 2- 3 – 25 அன்று நிறைவடைந்தபின் அவரது புகழுடல் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.   வானொலியில் பாடிய பாடல்களும்  தனிப்பட்ட பாடல்களும் நடன அரங்கேற்றங்களுக்குப் பாடிய இசையும் அவரை என்றும் நினைவுகூரவைக்கும் என்பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை. இவைகளுக்கும் மேலாகத் தவத்திரு சிவயோகர் சுவாமிகளின் நற்சிந்தனை நூலிலிருந்து சில பாடல்களுக்கு தனது மதுரமிகு குரலால் உயிர்கொடுத்து இறுவெட்டில் வெளியிட்டமை பலராலும் பாராட்டப்பெற்று வந்ததொன்று. அருந்ததி சிறீரங்கநாதன் அவர்களின் புனித ஆத்மா சிவனவனின் பாதாரவிந்தத்தில் அமைதிபெற இறைவனை வணங்கிப்  பிரார்த்திப்போம்! .

== கலாநிதி  பாரதி இளமுருகனார்

No comments: