பழநி - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 மகாபாரதத்தில் நீதிக்கும், நேர்மைக்கும், தர்மத்துக்கும் பெயர்


பெற்றவன் தருமன். அவனுடைய தலைமையின் கீழ், வழிகாட்டுதலின் பேரில் அவனின் நான்கு தம்பிகளும் நடந்தார்கள். ஆனாலும் தர்மர் சூதாட சென்ற போது அதனை அவனின் தம்பிகளால் தடுக்க முடியவில்லை. இறுதியில் சூதாட்டத்தில் தருமன் தோற்ற போது அவனுடன் சேர்த்து நான்கு தம்பிகளும், பாஞ்சாலியும் எல்லாவற்றையும் இழந்து நின்றார்கள்.

 
இந்த கதைக் கருவை கொண்டு கிராமிய பின்னணியில் 1965ம் வருடம்

படம் ஒன்று வந்தது. அந்தப் படம்தான் பழநி. மகாபாரத கதையில் பாண்டவர்களிடம் வீரமும் இருந்தது, விவேகமும் இருந்தது. ஆனால் படத்தில் வரும் சகோதரர்களிடம் இரண்டுமே இல்லை. இதனால் திரும்பிய பக்கம் எல்லாம் அவர்களுக்கு துன்பமும், துயரமும்தான் கிடைத்தது.

தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் பீம்சிங் அகிம்சையின் மகத்துவத்தை போற்றும் வண்ணம் இப் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் கதை பலவீனமாக அமைக்கப் பட்டு ரசிகர்களின் பொறுமையை சோதித்தது.
 
இத்தனைக்கும் சிவாஜி, எஸ் எஸ் ஆர், முத்துராமன், எம் ஆர் ராதா, டி எஸ் பாலையா, ஸ்ரீராம், நாகேஷ், தேவிகா என்று நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தார்கள்.அவர்களின் நடிப்பும் குறை சொல்லும் வகையில் அமையவில்லை. ஆனாலும் கதை ரசிகர்களை ரொம்பத்தான் சோதித்து விட்டது.

கிராமத்தில் தன் மூன்று தம்பிகளுடன் விவசாயம் செய்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறான் பழநி. சூது வாது தெரியாத அப்பாவியான அவன் தன் மனைவி இறந்த பிறகு மறுமணம் செய்யாமல் தம்பிகளின் நல்வாழ்வே தன் வாழ்வென வாழ்கிறான். தம்பிகளும் அவன் பேச்சை வேதம் என நினைத்து வாழ்கிறார்கள். என்னத்தான் நல்லவனாக இருந்தாலும் அவன் வாழ்விலும் அடுத்தடுத்து புயல் வீசுகிறது. தம்பி வேலுவின் மனைவியின் பிடிவாதத்தால் வேலு தனிக் குடித்தனம் போகிறான். அதே சமயம் பண்ணையார் செய்யும் அநியாயத்தால் பலவித சிரமங்கள் ஏற்படுகின்றன . விவசாயம் செய்த காணியும் பறி போகிறது. இனி கிராமத்தில் இருந்து பிழைக்க முடியாதென்று இரு சகோதரர்களும் பழநியை விட்டு விலகி பட்டணம் போகிறார்கள். சென்ற இடத்தில் அங்கேயும் அவர்களுக்கு கஷ்டம்தான். இங்கே பண்ணையார் எவ்வளவு கெடுதல் செய்த போதும் அவரை நல்லவர் என்று போற்றி வணங்குகிறான் பழநி! ஆத்திரமோ, பழி உணர்வோ அவனிடம் இல்லை.
 

இப்படி அமைந்த கதையை ஜி .வி. ஐயர் எழுதியிருந்தார். அகிம்சை, சகிப்புத்தனம், பூமித்தானம் போன்றவை அவர் மனதில் இருந்திருக்க வேண்டும். அதற்கமைய கதை அமைக்கப்பட்டது. பழநியாக வரும் சிவாஜியின் நடிப்பு குறையில்லாத போதும், அவரின் பாத்திர அமைப்பு ஓரளவுக்கு பிறகு சப்பென்றாகி விட்டது. படம் முழுவதும் வெகுளியாகவும், அப்பாவியாகவும், வெளுத்ததெல்லாம் பாலாகவும் இருந்தால் எப்படித்தான் சகிப்பது. படத்தில் கதாநாயகன் சிவாஜிக்கு ஜோடி இல்லை, காதல் இல்லை அதனால் டூயட்டும் இல்லை. தனி ஆவர்த்தனம் வாசித்து நடிப்பினால் மட்டும் ஸ்கோர் செய்கிறார் சிவாஜி.

எஸ் எஸ் ஆர்,முத்துராமன் இருவரும் கதையிலும்,நடிப்பிலும்

சிவாஜிக்கு அடங்கியே வருகிறார்கள். பீம்சிங் படம் என்றாலே எம் ஆர் ராதா இருப்பார். இதிலும் இருக்கிறார். அவரை விட நாகேஷ் கவருகிறார். படத்தில் வில்லன் டி எஸ் பாலையா அலட்ட கொள்ளாமல் கெட்டவனாக நடித்து நல்ல பேரை வாங்கி கொள்கிறார்.
 
படத்தில் ஒரே ஆறுதல் தேவிகாதான். என்ன துறுதுறுப்பு, கெஞ்சல் , கொஞ்சல் வெரி நைஸ்! ஸ்ரீராம், புஷ்பலதா இருவரும் சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்கள் . நாகேஷ் படம் முழுவதும் வருவதோடு சொந்தக் குரலில் கதா காலக்ஷேபணையும் நடத்துகிறார். இவர்களோடு சி கே சரஸ்வதி, நம்பிராஜன், சிவகாமி ஆகியோரும் நடித்திருந்தனர்.
 
படம் எப்படி என்றாலும் பாடல்கள் அற்புதம்! கண்ணதாசனின் கவி வரிகளில் உருவான அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலேயே, இதயம் இருக்கின்றதே தம்பி, ஆரோடும் மண்ணில் என்றும் நீரோடும், உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே, வட்ட வட்ட பாறையிலேயே வந்து நிற்கும் வேளையிலேயே பாடல்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையில் டி எம் எஸ் ,சுசிலா, சீர்காழி குரலில் கருத்தோடும், இனிமையோடும் ஒலித்தன.
 

படத்தின் வசனங்களை எம் எஸ் சோலைமலை எழுதினார். ஜி . விட்டலராவ் ஒளிப்பதிவை செய்தார். திரைக் கதை அமைத்து டைரக்ட் செய்தார் பீம்சிங். பொறுமைதான் சிறந்த ஆயுதம் என்றாலும் அப்பாவியிடம் காணப்படும் பொறுமை அவனை உருப்பட விடாது , அவனோடு சேர்ந்து குடும்பத்தையும் நிர்கதியாகி விடும் என்பதைத்தான் படத்தின் கதை கடைசியில் உணர்த்தியது. ரசிகர்களின் வரவேற்பை படம் பெறாத போதும் சிறந்த பிராந்தியப் படத்துக்கான இந்தியா தேசிய விருதை பெற்றுக் கொண்டது!

No comments: