அவுஸ்திரேலியா மெல்பனில், மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக வதியும் பொப்பசைக் கலைஞர் நித்தி கனகரத்தினம் அவர்கள், இம்மாதம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பாராட்டிக் கௌரவிக்கப்படவிருக்கிறார்.
குறிப்பிட்ட நாளில் இந்நிகழ்ச்சி மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில்
( 700, Waverley Road, Glen Waverley Vic 3150 ) மாலை 5-00 மணிக்கு நடைபெறும்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய
கலைச்சங்கம் , அன்றைய தினம் தமிழ்மொழிச்சாதனை விழாவினை குறிப்பிட்ட மண்டபத்தில் ஏற்பாடு
செய்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற V C
E உயர்தரப்
பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் தோற்றி அதிசிறந்த பெறுபேறுளைப்பெற்ற மாணவர்களும் பாராட்டி
விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து
இடம்பெறவுள்ள கலைநிகழ்ச்சியில், கடந்த அறுபது
ஆண்டுகளுக்கும் மேலாக தான் பிறந்த இலங்கையிலும் இந்தியாவிலும் மற்றும் தமிழர் புலம்பெயர்ந்த
நாடுகளிலும் பொப்பிசைத் துறையில் கோலோச்சிக்கொண்டிருக்கும்
கலைஞர் நித்தி கனகரத்தினம் அவர்கள் பாராட்டி கெளரவிக்கப்படவிருக்கிறார்.
நித்தி கனகரத்தினம் , இலங்கையில் வடபுலத்தில் உரும்பராயை பூர்வீகமாகக் கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ் வேம்படி ஆரம்பப் பாடசாலயில் கற்று அதன்பின்னர் யாழ். மத்தியகல்லூரி, அம்பறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் மேல் கல்வியை தொடர்ந்த பின்னர், இந்தியாவில் அலகபாத் பல்கலைக்கழகத்தில் விவசாயக்கல்வியை மேற்கொண்டு, முதுமாணிப் பட்டம் பெற்றவர்.
பின்னாளில் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தில்
விவசாயப்பீடத்தின் தலைவராக பணியாற்றியவர்.
அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த
பின்னரும், தனது தொழில் சார் துறையில் விக்ரோரியா
பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தாலும், தான் உளமார நேசித்த
இசைத்துறையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறார்.
நித்தி கனகரத்தினம் பாடியிருக்கும்
சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே, கள்ளுக்கடைப் பக்கம் போகாதே முதலான பொப்பிசைப்பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை.
கள்ளுக்கடை பக்கம் போகாதே பாடலை மக்கள் திலகம் எம். ஜி.ஆரும், விதந்து பாராட்டியிருப்பதுடன், அவர் தமிழக முதலமைச்சரான வேளையில், மதுவிலக்குப் பிரசாரத்திற்காக, தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் ஒலிபரப்பச்செய்தார்.
நித்தி கனகரத்தினம் மேடையேறியிருக்கும்
ஆயிரக்கணக்கான .இசை நிகழ்ச்சியில் அவரது இந்தப்பாடல்கள்
நிச்சயம் அவரது குரலிலும், அவர் ஏந்தியிருக்கும் கிட்டார் இசைக்கருவியிலும் ஒலிக்கும்.
இலங்கையில் மூவின மக்களிடையே
மிகவும் பிரபல மடைந்த பொப்பிசைப் பாடல்களில் நித்தியின் பாடல்களும் குறிப்பிடத்தகுந்தவை. அவ்வாறு இலங்கையிலும் சில தமிழகத் தமிழ்த் திரைப்படங்களிலும் நித்தியின்
இந்தப்பாடல்கள் இடம்பெற்று புகழ்பெற்றவை.
1960 களில் யாழ். மாநகர சபையின் பௌர்ணமி தினக் கலை விழா,
யாழ்ப்பாணத்தில் முன்னர் நடந்த தினகரன் விழா முதலானவற்றிலும் நித்தி கனகரத்தினத்தின் பாடல்கள் அவரால் பாடப்பட்டு வரவேற்பு பெற்றிருந்தன.
அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணம்
மாவட்ட பொலிஸ் அதிபராகவிருந்த சுந்தரலிங்கம் , நித்தி கனகரத்தினத்தை தமது வாசஸ்தலத்திற்கு அழைத்து கட்டி அணைத்து பாராட்டி, சமூகச்சீர்திருத்த பாடல்களை
பாடி வருவதற்காக வாழ்த்தியிருக்கிறார் என்ற ஒரு தகவலையும் அறிவோம்.
இசைத்துறையில் தீவிர ஈடுபாடு
காண்பித்து வந்திருக்கும் நித்தி கனகரத்தினம் , தான் கற்றுத்தேர்ந்த விவசாயத்துறையின்
மூலம், தமிழர் தம் உணவு நாகரீகம் தொடர்பாகவும்
ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவர்.
எமது அவுஸ்திரேலியத் தமிழ்
இலக்கிய கலைச்சங்கத்தின் சில தமிழ் எழுத்தாளர் விழா கருத்தரங்குகளிலும் தனது ஆய்வுகளை கட்டுரையாக சமர்ப்பித்திருப்பவர்.
இலங்கையிலும் மலேசியாவிலும் நடந்திருக்கும் சில மாநாட்டு கருத்தரங்குகளிலும் தான் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பாக உரையாற்றியவர்.
அத்துடன் பல விருதுகளையும் பெற்றவர்.
எண்பது வயது கடந்த பின்னரும் அயற்சியின்றி தான் நேசித்த துறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கலைஞர் நித்தி கனகரத்தினம் அவர்கள் வாழும்போதே பாராட்டி கௌரவிக்கப்படவேண்டியவர்.
இம்மாதம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
மெல்பனில் நடைபெறவிருக்கும் தமிழ்மொழிச்சாதனை விழா இலவச நிகழ்ச்சியாகும்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய
கலைச்சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் – ஓவியர் திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் தலைமையில்
நடைபெறவிருக்கும், தமிழ் மொழிச்சாதனை விழாவில்
பாராட்டுப்பெறும் மாணவர்களையும், கௌரவிக்கப்படவிருக்கும்
சாதனைக் கலைஞர் நித்தி கனகரத்தினம் அவர்களையும் நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துக்களைத்
தெரிவிக்க வருகை தருமாறு எமது தமிழ் அன்பர்கைளை சங்கம் அன்புடன் அழைக்கின்றது.
---0---
No comments:
Post a Comment