ஒஸ்கர் விருது விழாவில் பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்த இயக்குநர்கள்
காசாவிற்குள்மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுத்து நிறுத்தியது இஸ்ரேல் - ஐநா அரபு நாடுகள் கடும் கண்டனம்.
உக்ரைனில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பிரான்சுடன் இணைந்து விருப்பமுள்ளவர்களின் கூட்டணி - பிரிட்டிஸ் பிரதமர்
உக்ரைனிற்கான இராணுவஉதவிகளை இடைநிறுத்துகின்றது அமெரிக்கா
ஹமாசிற்கு எதிரான அழுத்தங்களை அதிகரிப்பதற்காக இஸ்ரேல் காசாவிற்கான நரக திட்டமொன்றை உருவாக்கிவருகின்றது- கார்டியன்
ஒஸ்கர் விருது விழாவில் பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்த இயக்குநர்கள்
03 Mar, 2025 | 10:22 AM
ஒஸ்கர் விருது விழாவில் ‘நோ அதர் லேண்ட்’ ஆவணப்படத்தின் இயக்குநர்கள் பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
97-வது ஒஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் நோ அதர் லேண்ட் என்ற குறும்படம் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தினை யுவால் ஆப்ரஹாம் பேஸல் அட்ராஇ ஹம்தான் பலால் மற்றும் ரேச்சர் ஸோர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் இயக்குநராவார்.
விருது மேடையில் அவர்கள் பாலஸ்தீன இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்து கவனம் ஈர்த்தனர். காசா போருக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இயக்குநர் அட்ரா கூறுகையில் “இந்த உலகம் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அநீதி குறித்து தீவிர நடவடிக்கைகளுக்கு முற்பட வேண்டுகிறோம். பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் நான் தந்தையானேன். என் மகளுக்கும் என்னைப்போன்றதொரு வாழ்க்கை அமைந்துவிடக் கூடாது என்று நம்புகிறேன். நோ அதர் லேண்ட் குறும்படம் நாங்கள் எதிர்கொள்ளும் கடினமான வாழ்க்கையை பிரதிபலிப்பதோடு ஆண்டாண்டு காலமாக அதை அனுபவித்துக் கொண்டே எப்படி எதிர்த்தும் போராடுகிறோம் என்பதைக் காட்டுகிறது” என்றார். அட்ரா பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் சமூகநல செயற்பாட்டாளரும் ஆவார்.
படத்தின் இன்னொரு இயக்குநரான ஆப்ரஹாம் கூறுகையில் “இந்தப் படத்தை நாங்கள் இணைந்து உருவாக்கியுள்ளோம். காரணம் இஸ்ரேல் பாலஸ்தீனமும் இணைந்து குரல் கொடுத்தால் அந்தக் குரல் வலுவானதாக இருக்கும். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம். காசா பேரழிவையும் அந்த மக்களின் துயரத்தையும் பார்க்கிறோம். அவர்களின் துயர் முடிவுக்கு வர வேண்டும். அக்டோபரில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய சிறைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.
நான் குடிமைச் சட்டத்துக்கு உட்பட்ட நாட்டில் சுதந்திரமாக வாழ்கிறேன். ஆனால் என்னுடன் இந்தப் படத்தை இயக்கிய பஸேல் ராணுவ ஆட்சியின் கீழ் வாழ்கிறார். அது அவர் வாழ்க்கையை சிதைக்கிறது. அதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
எல்லா பிரச்சினைக்கும் வேறு ஒரு பாதையில் தீர்வு இருக்கிறது. அது அரசியல் தீர்வு. இன ரீதியிலான ஆதிக்க சிந்தைகளை விடுத்து எங்கள் இருநாட்டு மக்களுக்குமான உரிமைகள் வழங்கக்கூடிய தீர்வு அதுவே.” என்றார். ஆப்ரஹாம் இஸ்ரேலிய பத்திரிகையாளர் ஆவார்.
மேலும் இஸ்ரேல் - பாலஸ்தீன் விவகாரத்தில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையை விமர்சித்த ஆப்ரஹான் “நாங்கள் ஒன்றிணைந்து வாழ்வதை ஏன் உங்களால் யோசிக்க முடியவில்லை. எனது மக்கள் பாதுகாப்பாக இருந்தால் பேஸலின் மக்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக இருப்பார்கள்.” என்றார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன கூட்டணியில் உருவாக்கப்பட்ட நோ அதர் லேண்ட் இஸ்ரேலிய அரசால் புலம்பெயரும் ஒரு பாலஸ்தீனிய குடும்பத்தைப் பற்றிய கதையாகும். நன்றி வீரகேசரி
காசாவிற்குள்மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுத்து நிறுத்தியது இஸ்ரேல் - ஐநா அரபு நாடுகள் கடும் கண்டனம்.
Published By: Rajeeban
03 Mar, 2025 | 11:01 AM
காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளதை ஐநாவும் ஏழு அராபிய நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன.
காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல்தடைவிதித்துள்ளது.
ஹமாஸ் உணவுப்பொருட்கள் உட்பட மனிதாபிமான உதவிகளை திருடி அவற்றை விற்பனை செய்து தன்னை நிதிரீதியாக பலப்படுத்துகின்றது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்தத்தை நீடிப்பதற்கான அமெரிக்காவின் யோசனையை நிராகரித்துள்ளது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும் இஸ்ரேலிய பிரதமரின் இந்த கருத்தினை மலினமான பயமுறுத்தும் நடவடிக்கை என தெரிவித்துள்ள ஹமாஸ் பேச்சாளர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான சதி என தெரிவித்துள்ளார்.
இதேவேளை மனிதாபிமான பொருட்கள் காசாவிற்குள் செல்வதற்கு இஸ்ரேல் தடைவிதித்துள்ளதை கடுமையாக கண்டித்துள்ள கத்தார் இது தெளிவான யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல்,சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பட்டினியை பாலஸ்தீன மக்களிற்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்துகின்றது என எகிப்து குற்றம்சாட்டியுள்ளது.
காசாவில் யுத்த நிறுத்தம் சாத்தியமாவதற்கான மத்தியஸ்த முயற்சிகளை எகிப்தும் கத்தாரும் மேற்கொண்டிருந்தன.
இஸ்ரேலின் நடவடிக்கையை சவுதி அரேபியாவும் கடுமையாக கண்டித்துள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டம் தெளிவானது முக்கியமான உயிர்காக்கும் பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்கவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான பிரதி செயலாளர் நாயகம் டொம் பிளெச்சர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
உக்ரைனில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பிரான்சுடன் இணைந்து விருப்பமுள்ளவர்களின் கூட்டணி - பிரிட்டிஸ் பிரதமர்
03 Mar, 2025 | 05:32 PM
உக்ரைனிற்கான சமாதான உடன்படிக்கையை உருவாக்குவதற்காக பிரான்சுடன் இணைந்து விருப்பமுள்ளவர்களின் கூட்டணியை உருவாக்கவுள்ளதாக பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற 19 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரிட்டிஸ் பிரதமர் இதனை அறிவித்துள்ளார்.
உக்ரைனுடன் இணைந்து ஐரோப்பிய கூட்டணி டிரம்ப் முன்வைத்துள்ள சமாதான திட்டத்திற்கு மாற்றீடான ஒன்றை உருவாக்கும் என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் இந்த தீர்வை நடைமுறைப்படுத்துவதற்காக கூட்டு படையணியொன்றை பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் பிரதமரும் பிரான்ஸ் ஜனாதிபதியும் இணைந்து இந்த திட்டத்தினை உருவாக்குவார்கள் பின்னர் அதனை அமெரிக்க ஜனாதிபதியிடம் கையளிப்பார்கள்.
பிரான்ஸ் பிரிட்டிஸ் தலைவர்கள் ரஸ்யா உக்ரைன் இடையிலான ஒருமாத யுத்த நிறுத்தம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர்.
இந்த காலப்பகுதியில் வான்வெளி கடல் மற்றும் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்கும் தாக்குதல்கள் நிறுத்தப்படும்.
இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் உக்ரைனிற்கு ஐரோப்பிய படையினர் அனுப்பப்படுவர்.
யுத்த நிறுத்தம் சாத்தியமானதும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கும் ரஸ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளிற்கும் இடையில் உள்ள
800மைல் யுத்த சூன்ய பிரதேசத்தின் பொறுப்பு உக்ரைன் படையினருக்கு வழங்கப்படும்.
உக்ரைனிய படையினருக்கு பின்னால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவை சேர்ந்த 30,000 உறுதியளிக்கும் படை நிலைகொண்டிருக்கும்.
அவர்கள் உக்ரைனின் நகரங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவுள்ளனர். நன்றி வீரகேசரி
உக்ரைனிற்கான இராணுவஉதவிகளை இடைநிறுத்துகின்றது அமெரிக்கா
04 Mar, 2025 | 10:00 AM
உக்ரைனிற்கான இராணுவஉதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ் நியுசிற்கு இதனை தெரிவித்துள்ள வெள்ளைமாளிகை அதிகாரியொருவர் நாங்கள் இராணுவ உதவியை இடைநிறுத்துகின்றோம் எங்களின் உதவி தீர்விற்கு உதவுகின்றதா என்ற மீளாய்வில் ஈடுபட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி துணை ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதி ஆகியோர் தொலைக்காட்சி கமராக்களிற்கு முன்னால் வெள்ளை மாளிகையில் மோதிக்கொண்டதின் சமீபத்தைய விளைவு இது என சிபிஎஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி சமாதானம் குறித்து தான் கவனம் செலுத்தவேண்டும் என்பது குறித்து உறுதியாகவுள்ளார், என சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் எங்கள் சகாக்களும் அந்த இலக்கு குறித்து தங்களை அர்ப்பணிக்கவேண்டும்,என குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வருடத்திற்கு முன்னர் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனிற்கு எதிரான போரை ஆரம்பித்தவேளை அதனை உக்ரைன் எதிர்கொண்டு ரஸ்யாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஆயுதங்களே பெருமளவிற்கு உதவின.
எனினும் டிரம்பின் மீள்வருகை அமெரிக்காவின் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளதுடன் அவர் யுத்தத்தை உக்ரைனே ஆரம்பித்தது என குற்றம்சாட்டியுள்ளார். நன்றி வீரகேசரி
ஹமாசிற்கு எதிரான அழுத்தங்களை அதிகரிப்பதற்காக இஸ்ரேல் காசாவிற்கான நரக திட்டமொன்றை உருவாக்கிவருகின்றது- கார்டியன்
Published By: Rajeeban
04 Mar, 2025 | 03:07 PM
ஹமாசிற்கு எதிரான அழுத்தங்களை அதிகரிப்பதற்காக இஸ்ரேல் காசாவிற்கான நரக திட்டமொன்றை உருவாக்கிவருகின்றது என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது
இஸ்ரேல் பாலஸ்தீனிய பகுதியிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளாமல் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிககளை விடுதலை செய்வதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காக காசா மீதான முற்றுகையை தீவிரப்படுத்துவதற்கான திட்டமொன்றை உருவாக்கி வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை தடுத்து நிறுத்தியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அரசாங்கம் அதற்கு அப்பாலும் சென்று காசாவில் உள்ள 2.2 மில்லியன் மக்களையும் அந்த பகுதியையும் தனிமைப்படுத்தும் திட்டமொன்றை தயாரிக்கின்றது என இஸ்ரேலிய வானொலி நிலையமான கான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய அரசாங்கம் இந்த திட்டத்தினை நரகதிட்டம் என குறிப்பிடுகின்றது என இஸ்ரேலிய வானொலி தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் காசா மக்களிற்கான மின்சாரம் குடிநீர் போன்றவற்றைஇஸ்ரேல் துண்டிக்கும்,காசா மக்களை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லுமாறு உத்தரவிடும்.
முழுமையான யுத்தமொன்றினை ஆரம்பிப்பதற்காகவே இஸ்ரேல் உத்தரவை பிறப்பிக்கவுள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தினரை முழுமையான யுத்தமொன்றிற்கு தயாராகுமாறு அதன் பாதுகாப்பு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார் என வலா செய்திதளம் தெரிவித்துள்ளது.
ஹமாசிற்கு எதிராக வேகமான தீர்க்கமான வெற்றியை பெறுவதற்காக கடும் பலத்தை பயன்படுத்தவேண்டும் என தெரிவித்துவரும் மேஜர் ஜெனரல் எயால் ஜமீர் இஸ்ரேலிய இராணுவத்தின் புதிய பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை ஹமாஸ் அமைப்பும் மீண்டும் மோதல்களிற்கு தயாராகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment