பவளவிழா நாயகன் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் முதுசொம் ! முருகபூபதி


பெப்ரவரி மாதம்  01 ஆம் திகதி தனது 75 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் எமது இனிய நண்பர் திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்களின் சேவைகளை பாராட்டும் முகமாக கொழும்பு தமிழ்ச்சங்கம் அவருக்கு பவளவிழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. 

இவ்வேளையில் தொலை தூரத்திலிருந்து அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்:டு இந்தப்  பதிவை ஆரம்பிக்கின்றேன்.

கந்தசாமி அவர்களுடனான நட்புறவு எனக்கு 1997 ஆம் ஆண்டின் பின்னரே உருவானது.

  நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்   என்று


ஏற்கனவே எனது பத்திகளில் குறிப்பிட்டிருக்கின்றேன்.  அவ்வாறு எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்துகொண்டவர்தான் கலை, இலக்கிய ஆர்வலரும். சமூகப்பணியாளரும், கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு உரமூட்டிக்கொண்டிருப்பவருமான திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள்.

இவரது மனைவி சுபா சாமினி எங்கள் நீர்கொழும்பூரின் கல்விக்கலங்கரை விளக்கம், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் இசை ஆசிரியராக பணியாற்றத் தொடங்கிய காலத்தில், கந்தசாமி இவரது கரம் பற்றி இல்லறவாழ்வினை தொடங்கியிருந்தார்.

சுபா சாமினி எனது உடன்பிறந்த தங்கை  திருமதி பரிமளஜெயந்தி நவரட்ணத்தின் குடும்ப சிநேகிதி.  இவர்களது  திருமணத்தின் பின்னணியிலும் எனது தங்கை இருந்துள்ளார் என்பது எனக்கு பிந்திக்கிடைத்த செய்தி.

1987 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நான், சுமார் பதினொரு வருடங்களின் பின்னர் 1997 இல் தாயகம் திரும்பியிருந்தவேளையில், எனது இலக்கியப் பிரவேச வெள்ளிவிழாவை முன்னிட்டு, என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுக்கு மிகவும் விமரிசையாக ஒரு பாராட்டு விழாவை எங்கள் நீர்கொழும்பு இந்து இளைஞர் மண்டபத்தில் நடத்தினேன்.

அவ்விழாவுக்கு கொழும்பிலிருந்து பல எழுத்தாளர்கள் திரண்டு வந்திருந்தார்கள்.


அவர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவராகத்தான் கந்தசாமி அவர்களும் திகழ்ந்தார்.

அன்று வருகை தந்திருந்த டொமினிக்ஜீவா, பிரேம்ஜி ஞானசுந்தரன், தெளிவத்தை ஜோசப், மேமன்கவி, வன்னிய குலம், இளையதம்பி தயானந்தா, ராஜஶ்ரீகாந்தன், திக்குவல்லை கமால், வதிரி சி. ரவீந்திரன்,  மு. பஷீர், நீர்கொழும்பூர் முத்துலிங்கம், ந. தருமலிங்கம், துரை. விஸ்வநாதன், மாணிக்கவாசகர்,  மற்றும் ஊடகவியலாளர்கள்  ஆ. சிவநேசச்செல்வன்,  சூரியகுமாரி பஞ்சநாதன், வீரகத்தி தனபாலசிங்கம், சிவலிங்கம்,  தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் உட்பட பலருக்கு கந்தசாமி நண்பராகத்திகழ்ந்தவர்.

அதற்கு கொழும்பு தமிழ்ச்சங்கமும் பிரதான காரணம்.

அந்தவிழாவுக்கு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவராகவிருந்த அ.


மயில்வாகனன் தலைமை தாங்கினார்.

இங்கு நான் குறிப்பிடும் சிலர் தற்போது எம்மத்தியில் இல்லை. எனினும் அவர்களின் ஆன்மா இச்சந்தர்ப்பத்தில்  பவளவிழாக்காணும் நண்பர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியை வாழ்த்திக்கொண்டிருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையுடன் இதனை எழுதுகின்றேன்.

அந்த விழாவில் தமிழ் வாழ்த்துப்பாடிய மாணவிகளுக்கு பயிற்சி வழங்கியவர்தான் இசை ஆசிரியர் திருமதி சுபா சாமினி கந்தசாமி.

கந்தசாமி அவர்களுடன் குறிப்பிட்ட 1997 ஆம் ஆண்டு ஆரம்பித்த நட்புறவு இற்றை வரையில் விக்கினமெதுவுமின்றி தொடருகிறது.

இவர்களது குடும்பம் தற்போது வசிக்கும்  இல்லம் நீர்கொழும்பு கடற்கரை வீதியும் சூரியா வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

அந்த இல்லம் ஒரு காலத்தில் எங்கள் ஊர் யுவதிகளின் 


வாழ்வாதாரத்திற்கு உதவிய  நெசவு சாலையாக விளங்கியது.  அதனை கேரளாவிலிருந்து வருகை தந்திருந்த வர்த்தகர் நாராயணன் என்பவர் நடத்தினார். அவருக்கு எழுத்தாற்றலும்  இருந்தது.

குறிப்பிட்ட நெசவு சாலை பற்றியும் காலைவேளையில் அங்கு பணியாற்ற வரும் யுவதிகள் பற்றியும் நாராயணன்  அக்காலப்பகுதியில் வெளியான  அண்ணி என்ற மாத இதழில்  ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறார்.

இச்சம்பவங்கள் 1965 காலப்பகுதியில்  நடந்தவை.  தற்போது ஆறு தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த இல்லத்தில் நீண்டகாலமாக வாழும் தமிழ் கலை, இலக்கிய ஆர்வலர்  சமூகப்பணியாளர் திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் பவளவிழாவை கொண்டாடுகிறார். இதுபற்றி நான் எழுதுகின்றேன்.

கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்தும்


உறுதுணையாக நின்றவர்கள், நிற்பவர்கள் பலர். அவர்களில்  கந்தசாமியும் முக்கியமானவர்.  இவரது வகிபாகம் போற்றுதலுக்குரியது.

இவரது மற்றும் ஒரு இல்லம்தான் இந்த கொழும்பு தமிழ்ச்சங்கம் எனக் கூறத்தக்கவகையில் தனது பெரும்பாலான பொழுதுகளை அங்கேயே செலவிடுவார்.

அதிகாலையே எழுந்து,  மனைவியார் தயாரித்து தரும் மதிய உணவுப்பொதியுடன், நீர்கொழும்பிலிருந்து பஸ் ஏறி, புறக்கோட்டைக்கு வந்து, அங்கிருந்து வெள்ளவத்தையில் அமைந்துள்ள தமிழ்ச்சங்கத்திற்கு வந்துவிடுவார்.

அதன் பின்னர் இரவுதான் மீண்டும் நீர்கொழும்புக்கு புறப்பட்டு வருவார்.  அதனால் இவரை நான் ஒரு கர்மயோகி எனவும் அழைப்பதுண்டு.


தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கந்தசாமி அவர்களின் சிறந்த பங்களிப்பு இருக்கும்.  சுறுசுறுப்புடன் இயங்குவார்.

சங்கத்தின் உறுப்பினராக, ஆட்சிக்குழு அங்கத்தவராக, பொதுச்செயலாளராக சங்கத்தின் வெளியீடான ஓலை இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்தவராக பல பரிமாணங்களில் இயங்கி வருபர்தான் கந்தசாமி.

     “  ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 35 வருடங்களுக்கு மேலாக  ஏழு தடவை பொதுச் செயலாளராகவும், உறுப்பாண்மைச் செயலாளர், கல்விக்குழுச் செயலாளர், இலக்கியக் குழுச்செயலாளர் போன்ற பதவிகளிலும் இருந்து சிறப்பாக பணிசெய்து தமிழுக்கும் தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருகின்றார். இவர் நீர்கொழும்பிலிருந்து 35 கிலோ மீற்றர் தூரம் பிரயாணம் செய்து தமிழ்ச் சங்கத்திற்கு  வந்து பணிசெய்யும் ஒருவர். தமிழ்ச் சங்கத்தின் கட்டிட வளர்ச்சிக்காகவும் இயல், இசை, நாடக நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி தமிழ் வளர்ச்சிக்காகவும் செயலாற்றி வருகிறார்.   “

இவ்வாறு தினகரன் நாளிதழ் கந்தசாமி அவர்களை விதந்து பாராட்டியுள்ளது.

கந்தசாமியும்  அவரது அன்புத்துணைவியார் சுபா சாமினியும்


இணைந்து தொகுத்து வெளியிட்ட  தமிழர் செவ்வியல் இசைப்பா வடிவங்கள்  என்னும் நூலின் வெளியீட்டு அரங்குகள் கொழும்பிலும், நீர்கொழும்பிலும் சில வருடங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்றது.

கந்தசாமியின்  கனவிலும் நினைவிலும் எப்போதும் தமிழ்ச்சங்கம்தான் இருக்கும் என்பது இவருடன் நெருங்கி உறவாடும்  அனைவருக்கும் தெரியும்.

2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா தினத்தின்போது  எனக்கு சிறந்த பிரஜைக்கான விருது கிடைத்த வேளையில்,  எங்கள் ஊர் இந்து இளைஞர் மன்றத்தில் ஒரு பாராட்டு நிகழ்வு நடந்தது.  அதற்கும் பின்னணியில் இயங்கியிருக்கும் கந்தசாமி, அந்நிகழ்வுக்கு கொழும்பிலிருந்து கலை, இலக்கிய ஆரவலர்  சட்டத்தரணி திருமதி ஜெயந்தி விநோதனையும் அழைத்திருந்தார்.

2003 ஆம் ஆண்டு எனது பறவைகள் நாவலுக்கு தேசிய சாகித்திய விருது கிடைத்தது.  அவ்வேளையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சி நிதிக்கு உதவி தேவைப்பட்டது.

பறவைகள் நாவலில் சுமார் நூறு பிரதிகளை கந்தசாமியிடம் சேர்ப்பித்தேன். கந்தசாமி சிறப்பான விழாவை நடத்தி பறவைகள் நாவலின் அன்றைய விற்பனை மூலம் கணிசமான நிதியை சேகரித்து  சங்கத்திற்கு கொடுத்தார்.


பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் அப்போது அமைச்சராகவிருந்த மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். ஊடகவியலாளர்  சிதம்பரப்பிள்ளை சிவக்குமார், நூல் விமர்சனம்  செய்தார்.

இந்த விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை.

எனினும், விழாவின் முழு நிகழ்ச்சியையும் கஸட்டில் பதிவுசெய்து அனுப்பியிருந்தார் கந்தசாமி. அத்துடன் விழாவின் வரவு – செலவுக்கணக்கையும் நான் எதிர்பார்க்காமலேய  எனக்கு அனுப்பியிருந்தார். அத்தகைய ஒரு நேர்மையாளருக்கு பவள விழா நடக்கும் இத்தருணத்தில்  நான் இலங்கையில்  இல்லையே என்ற கவலை மனதை வருத்துகிறது.

நாம் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை  நான்கு நாட்கள்  நடத்தினோம். குறிப்பிட்ட மாநாட்டின் அமைப்புக்குழுவிலும் அங்கம் வகித்தவர்தான் கந்தசாமி. தினமும் காலை முதல் இரவு வரையில் மாநாடு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

இரவு நிகழ்ச்சி முடிந்ததும் நாமெல்லோரும் எமது இருப்பிடங்களுக்கு திரும்பிவிடுவோம். ஆனால், , கந்தசாமி மாத்திரம் வீடு திரும்பாமல், தமிழ்ச்சங்கத்தின் அறையிலேயே தங்கிவிடுவார்.

மறுநாள் காலை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே மண்டபங்களை ( மூன்று  மண்டபங்களில் மாநாடு நடந்தது )  சீர்செய்துவிடுவார்.

இறுதி நாள் இரவு  நிகழ்ச்சி ( 09 -01 -2011 ) வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் பேராசிரியர் கைலாசபதி  அரங்கில் கருத்துரைகள், கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது.

இந்த அரங்கிலும்  கந்தசாமி எந்தச்சோர்வுமின்றி சுறுசுறுப்புடனும் செயலூக்கமுடனும் இயங்கி மாநாட்டின் வெற்றிக்குப் பாடுபட்டார்.

கொழும்பில் கலைஞர்கள், எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், தன்னார்வத் தொண்டர்கள் பலருடனும் இணக்கமான உறவைப்பேணி வரும் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள், அந்த நல்லுறவையெல்லாம் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கே தக்கமுறையில் பயன்படுத்த முடிந்த ரஸவாதம் தெரிந்தவர்.

அதனாலும் அவருக்குப்  பவள விழா நெருங்கியதும்  கௌரவித்து பாராட்டுவதற்கு முன்வந்திருக்கும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தையும் இச்சந்தர்ப்பத்தில் பாரட்டுகின்றோம்.

எங்கள் பவள விழா நாயகன், ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் நல்லாரோக்கியத்துடன் மேலும் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.

letchumananm@gmail.com


No comments: