திருக்குறள் வளாகம் திறப்பு விழா

  


சிவஞானச் சுடர்பல்வைத்திய கலாநிதி  பாரதி இளமுருகனார்  வாழ்நாள் சாதனையாளர்




சரித்திரப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரத்திலே சரித்திரப் பிரசித்தி பெற்றதோர் அரிய நிகழ்ச்சியாய்   திருக்குறள் வளாகம் நேற்றைய தினம்(02-02-2025 ஞாயிற்றுக் கிழமை) காலை திறக்கப்பெற்றது.  தனது வாழ்நாட் கனவான இந்தப் புனித பணியையும் திருவருள் துணையுடன் நிறைவு செய்யமையையிட்டு - விழா நாயகனான சிவத்திரு கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுக்கு வளாகம் திறப்பு விழா சிறக்கவேண்டி  அளிக்கப்பெற்ற நல் வாழ்த்து தமிழ் முரசு நேயர்களின் பார்வைக்காகப் பகிரப்படுகிறது.

     




     
   

திறப்பு விழா  மங்கல நல்வாழ்த்து   


ஈரடியால் மூன்றளந்து நான்கு தந்த  

        ஏந்தல்திரு வள்ளுவர்க்கு வளாக மொன்றைப்   

பாரறியத் திறக்கின்றாய்! அன்னார் பெருமையைப்       

        பண்பாளா! பரப்பிடவே பரந்த மனத்தோய்!    

தீரமொடு செயலாற்ற வித்துவம்  மிக்க       

        செம்மனத்தோர் பலரையன்பால் திரட்டி அணைத்து     

ஊரறிய எடுக்கும்விழா நனிசி றக்க  

        உளமகிழ்ந்து வாழ்த்துகிறேன் தமிழே வாழி!



 



தணியாத சிவப்பணியும் தமிழின் பற்றும் 

        சலிவடையாப் பொதுப்பணியும் சகத்திலுன் வாழ்வாய்த்

துணிவாக ஏற்றுநீயும் சோர்விலா உளத்தொடு

        சுந்தரனே இயற்றிவரும் பாங்கினை; அறிவோம்!

பணிவோடு உன்னடிகள் வணங்கு கின்றோம்!

        பகலிரவாய்; இயற்றியவுன் சேவை கட்கு

அணிசேர்க்க மேலுமொரு வள்ளுவர் சிலையை

        அமைத்திடட்டாய்! அந்திவண்ணன் அருள்பெற் றுவாழி!

    

 பொங்கிவரும் சிவப்பொலிவுன் முகமே சொல்லும்!     

        பூசும்வெண்  நீறிதயத் தூய்மை காட்டும்!   

தங்குதடை யின்றியுன்வாய் என்றும் பொழியும்     

        தமிழதனின் இனிமைதனைச் செப்பா நிற்கும்!  

பங்கம்வர வொருவரையும் பகையா வுள்ளம்     

        பரம்பொருளை விட்டகலா நெறியைப் பேசும்!  

சங்கரனின் அருள்பெற்றோய்  வள்ளுவர்  சிலையைத்      

        தாபிக்கும் விழாச்சிறக்க வாழ்த்து கின்றேன்!

    

தாபிக்கும் விழாச்சிறக்க வாழ்த்து கின்றேன்!     


அந்திவண்ணன் புவிக்களித்த அருட்கு மாரா!        

        ஆதரிப்போர் இன்றிவாடும் அவலமுற் றோர்க்குச்  

சொந்தமெனக் கருணையொடு வாழ்வ ளித்த      

        தூயவாவுன் தியாகந்தனைச் சொல்லப் போமோ?  

சிந்தித்து  ஆராய்ச்சி நூலகத் தோடொரு      

        தியானமியற்றிச் சிவனருளால் உய்யும் வண்ணம்  

 விந்தைமிகு மண்டபமும் தாபித்த இன்று        

        வெற்றிகண்டாய்! வித்தகனே வாழி! வாழி!!


அரும்பெருஞ்சா தனையாய்நீ  நாவற் குழியில்    

        அரணெனவே அற்புதமாய் அழகிய மனையை  

திருவாசகத் திற்கமைத்துச் சீர்மை பெற்றாய்!      

        தேசமெலாம் அனுதினமும் உனைப்போற் றிடவே  

கருங்கல்லிற் குறள்களையெலாம் பொறித்தே அழகாய்       

        காலமெலாம் நிலைத்திருக்கக் கோலஞ் செய்தாய்!  

பெருஞ்செயலாய் இயற்றியவுன்  பெற்றிதான் என்னே!   

        பேறெனவே தமிழுலகம் வாழ்த்த வாழி!

 

வீறுநடை போட்டரிய சேவைபல இயற்றி     

        ;வெள்ளிவிழாக் காணுகின்ற சிவபூமி அமைப்பு  

நூறுவீதம் தன்னலமிலாச் சேவை புரிந்து     

        நுவலரிய சரித்திரம்படைத் திட்டதி றந்தனைக்  

கூறிடவோ நினைத்திடவோ மேனிபுல் லரிக்கும்!      

        குரிசில்திரு முருகனவன் கனவெலாம் நனவாய்  

ஆறுமுகன் அருளருள மலர்ந்த தம்மா!  

        அற்புதவி ழாச்சிறக்க வாழ்த்து கின்றேன்!

 


சிவபூமி அறக்கட்டளை வெள்ளி விழாப் பரிசாக   இந்நத் திருவாசக அரண்மனை மலர்கிறது எனச் சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்கள் அறிவித்துள்ளமை மிகவும் பொருத்தமானதே!

 




திருக்குறள்வளாகம்:-

திருக்குறள்வளாகத்தை அமைப்பதற்கு  அவுஸ்திரேலியாவிலே வதியும் வைத்திய நிபுணர் சொர்ணலிங்கம் கமலாகரன் மாவிட்டபுரத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான நிலத்தை அன்பளிப்பாகக் கொடுத்து உதவினார்.

திருக்குறள் வளாகத்தின் சிறப்புகள் :-

திருக்குறள் ஆராய்ச்சி நூலகம் :-  இந்த ஆராய்ச்சி நூலகக் கட்டடத்தை அபயம் அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த  வைத்திய நிபுணர்கள் கதிரிப்பிள்ளை கேதீஸ்வரன் பவானி கேதீஸ்வரன் தம்பதியினர் அன்பளிப்புச்செய்திருந்தார்கள். இங்கு ஆராய்ச்சி செய்ய வருவோர் தங்கியிருந்து தமது ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வகையிலே நவீன வசதிகள் கொண்ட அறைகளும் கட்டப்பெற்றுள்ளன.

 

திருக்குறள் வளாகத் தியான மண்டபம் :-   

மானடனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறவிப்பெரும்பயனை அடைவதற்குரிய ஞானநிலைக்கு வழிவகுப்பது தியானம்.        எம்முடன் ஒன்றாய் - உடனாய் வேறாய் இருந்து உய்வகைகாட்டி எல்லாப்ெபாருள்களையும் அறிந்தும் அறிவித்தும் வரும் பரம்பொருளின் துணைகொண்டு   தன்னை அறியவைப்பது தியானம்.  தற்போதத்தை அறவே நீக்கச் செய்து அலையும் மனதை அமைதிப்படுத்தி பக்குவ நிலையை வரச்செய்து எல்லாம் அவன்செயலன்றி வேறொன்றுமில்லை எனத் தெளியவைத்துத் தன்னை அறிந்து சிவஞானம் கைவரப் பெற்று ஞானசொரூபமான சிவத்துடன் அத்துவிதப்பட்டுப் பிறவிப் பயனாகிய   பிறப்பிறப்பில்லாப் பேரைனந்தத்தை வழங்க வல்லது தியானம் தியானத்திலே ஈடுபடுத்துவதே

உகந்த உபாயமென உணர்ந்து ஆறுதிருமுருகன் அவர்கள் திருவள்ளுவர் வளாகத்திலே ஒரு தியான மண்டபத்தையும் ஏற்படுத்த மறக்கவில்லை. இந்த மண்டபத்தை அமைக்கப் பொருளுதவி புரிந்தவரகள்; இலண்டனில் வசிக்கும் வி. யோகநாதன் தம்பதிகள்.

 

1330 திருக்குறள்களையும் கருங்கற்களிலே பொறித்தமை-  

 

 


வையகமே வியந்து போற்றும் 1330 திருக்குறள்களையும் கனம் வாய்ந்த உயர்தரக் கருங்;கல்லிலே    அழகான எழுத்துருவிலே பிழையின்றி கையினாலே உளிகொண்டு பொறிப்பது என்பது மிகவும் கடினமான செயல்.  இந்தப் புனித பணிக்கு பொருளுதவி புரிந்த பெருமை கொழும்பைச் சேர்ந்த புஸ்பநாதன் குடும்பத்தையே சாரும்.

வளாகத்தின் நுளைவாயில் –

கண்ணைக் கவரும்வண்ணம்  ஒரு நுளைவாயிலை  அமைப்பதற்கு அமெரிக்காவில் வசிப்பவரான தலைசிறந்த வைத்திய நிபுணர் சண்சுந்தர் பேருதவி புரிந்துள்ளார்.

திருவள்ளுவர் உருவச் சிலை :-  இலண்டனில் புகழ்பூத்த கணக்காளரான சூ. பாலசிங்கம் அவர்கள் திருவள்ளுவர் உருவச் சிலையை அன்பளிப்புச் செய்திருந்தார். உயரமான இந்தச் சிலை பார்ப்போரைக் கவருந்தன்மையுடன் அமைக்கப்பெற்றுள்ளது.

வளாகத்திற்குத் தேவையான தளபாடங்கள்:-

தளபாடங்களின் செலவைத் திரு குமார் (கனடா) பொறுப்பேற்றுள்ளார். இவ்வண்ணம் பொது நலன்கருதித் தமிழ்ப்பணிக்காகப்  பெருநிதி அளித்த பெருந்தகைமையாளர் இறையருளால் எல்லா நன்மைகளும் பெற்று நலமுடன் வாழ இறையருளைவேண்டி வாழ்த்திப் போற்றுவோம்.

 

திருக்குறள் வளாகம் பற்றிய ஆறுதிருமுருகன் அவர்களின் உரையாடலைக் கேட்பதற்குரிய  இணைப்பு(Link) கீழே உள்ளது.

 யாழில் பல கோடிகளில் உருவாகும் அரண்மனை ! உலகமே பார்த்து வியக்கப்போகும் ஈழத்தின் இன்னோர் அடையாளம் !

 


                           

 

No comments: