Published By: Digital Desk 2
01 Feb, 2025 | 11:19 AM
-என்.கண்ணன்
இலங்கை தமிழரசுக் கட்சி சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களுக்குள் சிக்கியிருக்கும் சூழலில், அந்தக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு நிகழ்ந்திருக்கிறது
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, இரா.சம்பந்தன் மறைந்து, சரியாக ஏழு மாதங்களில், அந்தக் கட்சி தமது பாரம்பரிய தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜாவை இழந்திருக்கிறது.
82 வயதுடைய மாவை சேனாதிராஜா தமிழ் தேசிய அரசியலின் மூத்த தலைவராக விளங்கியவர்.
முக்கால் நூற்றாண்டு வரலாற்றை கொண்ட தமிழ்த் தேசிய விடுதலைக்கான அரசியல் போராட்டத்தில் பிரதான மூன்று கட்டங்களிலும் முக்கியமான பங்களித்தவர் அவர்.
தந்தை செல்வாவின் தலைமையில் இடம்பெற்ற அகிம்சைப் போராட்டத்தின் போதும், பிரபாகரன் தலைமையில் நடந்த ஆயுதப் போராட்டத்தின் போதும், போருக்குப் பின்னரான காலகட்டத்தில் நடந்த அரசியல் போராட்டத்திலும் பங்கு வகித்த கடைசி அரசியல் தலைவர் என இவரைக் கூறலாம்.
அகிம்சை போராட்டத்தில் பங்கெடுத்த சிலர் இன்றும் உள்ளனர். ஆனால், அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் எவ்வகையிலும் பங்கெடுத்தவர்கள் அல்ல. தமது வாழ்க்கையை எந்த வகையிலும் தியாகம் செய்தவர்களும் அல்ல.
ஆயுதப் போராட்டத்தில் பங்கு எடுத்தவர்கள் இருக்கிறார்கள். அதற்கு பின்னைய அரசியல் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால், அகிம்சை போராட்டத்திலும், ஆயுதப் போராட்ட காலத்திலும், தனது பங்களிப்பை வழங்கி, அரசியல் போராட்டத்திலும் முன்னின்று செயற்பட்ட ஒருவர் மாவை சேனாதிராஜா மாத்திரமே.
ஆயுதம் ஏந்திய போராளியாக இல்லாவிட்டாலும், அவர் ஆயுதப் போராட்ட காலத்தின் முன்னோடி அரசியல் போராளியாக இருந்தவர்.
அதனால் தான், அகிம்சை போராட்டம் முடிவுக்கு வரும் தறுவாயில், ஆயுதப் போராட்டம் முளைகொள்ளத் தொடங்கிய போது, அவர் 10 தடவைகளுக்கு மேல் கைது செய்யப்பட்டார். 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவையெல்லாம் இன்றுள்ள எந்த ஒரு தமிழ் அரசியல் தலைவரும் கொண்டிருக்காத தகைமையாகும்.
அவருக்கு முன்னர் இருந்த இரா.சம்பந்தன் கூட, மாவை சேனாதிரா எதிர்கொண்ட ஆபத்தான சூழலுக்கு முகம் கொடுத்தவர் அல்ல.
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் எல்லா வடிவங்களிலும், எல்லா வகைகளிலும் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்தவர். சிறை சென்றவர்.
தீவகத்தில் பிரசாரத்திற்கு சென்ற போது, ஈ.பி.டி.பி.யினர் நடத்திய தாக்குதலில் காயமும் அடைந்தவர்.
தமிழரசுக் கட்சியின் தலைவராக 10 ஆண்டுகளும், செயலாளராக 10 ஆண்டுகளும் என- சுமார் 2 தசாப்தங்கள் அந்த கட்சியின் வளர்ச்சியிலும் வழிநடத்தலிலும் அவர் பங்களித்திருந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவராக விளங்கிய மாவை சேனாதிராஜாவின் மூலம் தான், இன்றுள்ள தமிழரசுக் கட்சி 2004 ஆம் ஆண்டு மீளுயிர் கொடுக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் ஊடாக, 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தயார்படுத்துவதற்குக் காரணமாக இருந்தவர்.
இதனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவருமான அரியநேத்திரன் இரங்கல் குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.
ஆனால், அதே தமிழரசுக் கட்சி, அவரை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியது- அவமானப்படுத்தியது. அவரது இந்தநிலைக்கு காரணமும் ஆகியது என்ற குற்றச்சாட்டுகளால், தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது.
தமிழரசுக் கட்சி தலைவராக மாவை சேனாதிராஜாவினால் சிறப்பாக செயற்பட முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஆளுமை குறைபாடு உடையவராக அடையாளப்படுத்தப்பட்டு ஊடகங்களாலும் சமூக ஊடகங்களாலும் முத்திரை குத்தப்பட்டதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன.
அவரை கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு இரா.சம்பந்தன் உயிருடன் இருந்தவரை அனுமதிக்கவில்லை. அவர் கட்சியின் கடிவாளத்தை தனது கையில் வைத்திருந்தார்.
அது மாவை சேனாதிராஜாவை, சுய ஆளுமைக்கு அமைய செயற்படவிடாமல், ஒரு வட்டத்திற்குள் மேய்கின்ற ஆடு போல மாற்றி இருந்தது.
அவரது இந்த இயல்பை, பலர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள், தங்களது வளர்ச்சிக்காகவும் உபயோகித்துக் கொண்டார்கள்.
அவரால் நம்பப்பட்டவர்கள் அவரை நட்டாற்றில் விட்டு விட்டு நழுவிக் கொண்டனர். அதேவேளை அவரை நம்பியவர்களும் ஏமாந்து போகும் நிலை ஏற்பட்டது.
தமிழரசுக் கட்சியின் இன்றைய நிலைக்கு, இந்த சூழல் ஒரு காரணம்.
தலைவர் என்ற முறையில் அவர் இறுக்கமாக செயற்பட முனைந்திருந்தால், தமிழரசுக் கட்சியில் இன்று அதிகாரம் செலுத்துகின்ற, குறுக்கு வழியில் தலைமைத்துவத்தை கைப்பற்ற முனைகின்ற பலரால் முன்னே வந்திருக்க முடியாது.
அவர் தனது தவறுகளை உணர்ந்து நிலைமையை சுதாகரித்துக் கொள்வதற்கிடையில் கட்சியும் குழம்பி விட்டது . அவரை தள்ளி விட முயன்றவர்களும் வலுப்பெற்று விட்டார்கள்.
இதனால் அவர் கட்சியை விட்டு ஓரம் கட்டப்படுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதற்கான சூழல் என்பது இருபக்க விமர்சனங்களுக்கு உரியது. எல்லா சந்தர்ப்பத்திலும் மாவை சேனாதிராஜா சரியாக செயற்பட்டார் என யாரும் வாதிட முடியாது.
அதற்காக, அவரது உரிமை போராட்டத்திற்கான தியாகத்தையும் பங்களிப்பையும் எந்த வகையிலும் கொச்சைப்படுத்துவதோதரம் தாழ்த்துவதோ, அபத்தமானது.
இன்று, அரசியலிலும் சரி, ஆயுதப் போராட்டத்திலும் சரி, மிகப் பெறுமதியான காத்திரமான பங்கை வகித்தவர்கள், பங்களிப்பு செய்தவர்கள் , தங்களது உயிர்களையும் வாழ்வையும் தியாகம் செய்தவர்களை மிக சுலபமாக அவமதித்து விட்டு, அலட்சியமாக கடந்து விட்டு போகின்ற, ஒரு சூழல் உருவாகி இருக்கிறது.
அரசியல் போராட்டத்திலோ, ஆயுதப் போராட்டத்திலோ சிறு பங்களிப்பை கூட, வழங்காமல் எங்கோ ஓடி ஒளிந்திருந்து விட்டு, போர் முடிந்த பின்னர், ஓடி வந்து சேர்ந்தவர்கள் எல்லாம் போராட்ட வரலாற்றைப் பற்றி புனைக் கதைகளை எழுதுகின்ற காலம் இது.
இந்த புனைவுகளுக்கு அப்பாற்பட்டவர் மாவை சேனாதிராஜா.
அவர் அரசியல் போராட்டத்திற்கு, ஆயுதப் போராட்டத்திற்கு எந்த பங்களிப்பையும் செய்யாமல் அரசியல் செய்தவர் அல்ல.
ஆனால், இன்றுள்ள பலர் ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் வியாபாரமாக்கி, அதன் மீது கால் வைத்து தங்களின் அரசியலை நடத்திக் கொண்டிருப்பது வரலாற்று உண்மை.
அத்தகைய வரலாறு கொண்டவர்கள் எல்லா மட்டங்களிலும் இருக்கிறார்கள்.
அவர்களால் உண்மையான தியாகங்களையும் ஈகங்களையும் செய்தவர்களையும் அவமதிக்கின்ற சூழல் பரவலாக உள்ளது.
இதனைத் தாண்டியே, இன்றைய தமிழ் தேசிய அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது.
இத்தகைய ஒரு அரசியலை முன்னெடுக்க முடியாதவராக மாவை சேனாதிராஜா தனது வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு வர விரும்பினார்.
2013 ஆம் ஆண்டு அந்த வாய்ப்பு அவருக்கு இருந்தபோதும், அதனை சி.வி.விக்னேஸ்வரனுக்காக விட்டுக் கொடுத்தார்.
அதற்குப் பிறகு வடக்கு மாகாண சபைக்குப் போட்டியிடக் கூடிய வாய்ப்பு அவருக்கு வரவே இல்லை. அதற்கான தேர்தல் இன்று வரை நடக்கவும் இல்லை.
பாராளுமன்ற தேர்தல்களில் மாவை சேனாதிராஜா பின்னாளில் வெற்றி பெற முடியாமல் போனது.
அவர் ஒரு கவர்ச்சி மிக்க அரசியல் தலைவர் அல்ல. அதனால் அவரால் வெற்றி பெற்ற தேர்தல்களை விட தோல்வியடைந்த தேர்தல்கள் அதிகம்.
ஆயினும் தமிழ் தேசிய அரசியலின் மீதான விருப்பம் மற்றும் மக்களின் விடுதலை மீதான அர்ப்பணிப்பு உணர்வு, அவரை கடைசி வரை அந்த அரசியல் கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்ல விடவில்லை.
கட்சிக்குள்ளே இருந்து அவரை துரத்துவதற்கு காரியங்கள் நடந்த போதும் கூட, கடைசி வரை தமிழரசுக் கட்சியிலேயே இருப்பேன் என்ற பிடிவாதத்துடன் இருந்தவர்.
கட்சியின் தலைவராக மரணத்தை சந்தித்திருக்க வேண்டிய ஒருவர்.
மிக அண்மையில் அவரது தலைமைத்துவம் அவரது விருப்பத்திற்கு மாறாக, அவரது கட்சியின் மத்திய குழுவினாலேயே பறிக்கப்பட்டதானது, அவரை விரைவாக மரணத்துக்குள் தள்ளிச் சென்றிருக்கிறது.
இந்தக் கறை, தமிழரசுக் கட்சிக்கு அழிக்க முடியாத வரலாற்றுக் கறையாக நிலைத்திருக்கப் போகிறது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment