Published By: Rajeeban
29 Jan, 2025 | 02:22 PM
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு இறால் பண்ணை படுகொலை இடம்பெற்று ஜனவரி 28ம் திகதியுடன் 38வருடங்களாகின்றது.
இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை சம்பவங்களின் பட்டியல் மீக நீளமானது - அதில் இதுவுமொன்று.
நீதிக்கான எந்த நம்பிக்கையும் இன்றி அன்றைய நாட்களின் வலிகளுடன் வாழ்பவர்கள் பலர்.
மகிழடித்தீவு இறால் பண்ணையில் வேலை பார்த்த 85 இளைஞர்கள் உட்பட 100 க்கும் அதிகமானவர்களை இலங்கை இராணுவத்தினர் கொன்றுகுவித்தது இன்னமும் பலரின் நெஞ்சில் நீங்காத வடுவாக நீடிக்கின்றது.
அன்றைய தினம் விடியல்காலையின் அமைதியை கிழித்துக்கொண்டு ஹெலிக்கொப்டர் ஒன்று மணல்பிட்டியில் தரையிறங்கியதும்அதன் பின்னர் இடம்பெற்ற கொடுரங்களும் இன்னமும் நினைவைவிட்டகலவில்லை என தெரிவிக்கும் ஜோர்ஜ் ராஜ்மேனன் தனது தந்iயை பறிகொடுத்த நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றார்.
கணபதிப்பிள்ளை டானியல் சுவேந்திரன் (எனது அப்பாவும்(வாவா)அவருடன் வேலை செய்த உடன் ஊழியர்கள் 85 பேர் உட்பட 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இலங்கை இராணுவத்தினரால் இனப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 38வருடங்கள் (28.01.1987) காலங்கள் கடந்தாலும் இச்சம்பவம் இன்றும் எம் நெஞ்சில் நீங்கா வடுக்களாகவே நேற்று நடந்ததுபோல் உள்ளது...
அன்று எனக்கு 4 வயது
அன்றைய நாள் இன்றும் எனக்கு ஞாபகம் உள்ளது..
28ஃ01ஃ1987 அன்று விடியச்சாமத்தின் அமைதியை கிழித்துக்கொண்டு 2-3 உலங்குவானூர்தி (ஹெலிகாப்டர்) மணல்பிட்டியில் (கொக்கட்டிச்சோலை) வட்டமிட்டு இறங்கியது அப்போது காலை 6மணி இருக்கும்போது.
அப்பா என்னை தனது கையில் என்னை தூக்கி வீட்டுக்கு பின்னால் உள்ள குளக்கட்டில் வைத்து அந்தா பார் ஹெலி என்டார் . கண்ணுக்கு எட்டிய துராத்தில் ஆலா போல் வட்டமிட்டு இறங்கியது அப்போது தெரியாது அப்பாவின் உயிர் குடிக்கும் எமன் அதில் வருகிறான் என்று. வேலைக்கு போக அப்பா ஆயத்தமாகும் போது ஊராக்கள் வந்து சொன்னார்கள் ஆமிக்காரன் ஊருக்குள்ள வாரானாம் என்று. ஊரில் ஒரே பதட்டம். ஒப்பிஸ்க்கு போனா பிரச்சினை இல்ல அமெரிக்கன்ட கம்பெனி தானே பிரச்சினை இல்ல என்ற நம்பிக்கையில் வேலைக்கு போனார் .
அம்மாவும் நானும் என் சொந்தக்காரரும் அப்பா கடைசியாக சேப்பத்து கட்டால் சைக்கிளில் போனதை பார்த்தோம்.
நடுத்தர வயது வந்த அண்ணாச்சிமார் மாமாமார் எல்லோரும் கான்னா காட்டுக்குள் ஆமிக்கு பயந்துபோய் பாதுகாப்புக்கு ஓடி ஒளிந்தனர். ஊர் ஒரே பதட்டமாக இருந்தது. மதியம்மளவில் வெடிச்சத்தம் கேட்ட தொடங்கிது. பின்னேரம் வரை தொடர்தது. அது வரைக்கும் என்ன நடக்குது என்று எனக்கு தெரியாது. மயண்டை ஆகியதும் கண்ணா காட்டுக்குள்ளே உயிரை காக்க சென்ற ஆம்புள்ள பொடியன்கள் ஊருக்குள்ள திரும்பி வந்தார்கள் . அப்பாவோ அவருடன் வேலைக்கு போன மற்றவர்களோ திரும்பிவரவில்லை.
இருட்டிலே நாங்கள் எல்லோரும் அப்பாவை தேடி அப்பம்மாவின் வீட்டுக்கு மகிழடித்தீவு சந்திக்கு (வேத கோயில் மெதடிஸ்த ஆலயம் மகிழடித்தீவு) போகப் போனோம். அப்போது மகேஸ் மாமியின் கடப்படியில் அப்பா செத்த செய்தியை கேட்டோம்.
அம்மா உடனே மயங்கி விழுத்தது மட்டும் ஞாபகம் இருக்கு! இன்றோ 38 ஆண்டுகள் உருண்டு விட்டது.!! (1987-2025)
அன்று இரவு அப்பம்மாவின் வீட்டில் தங்கினோம். இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர் அச்சா சித்தப்பா மட்டுமே(அப்பாவின் தம்பி). அவர் மூலமே அப்பாவும் சக ஊழியர்களும் மகிழடித்தீவு சந்தியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டு உழவு இயத்திரத்தில் ஏற்றிச் செல்லப்பட்டத்தை அறிந்தோம். மகிழடித்தீவுச் சந்தி எம் உடன் பிறப்புகளின் குருதியால் வெள்ளமாக ஓடியது. அன்று படுவான்கரையே மயானமானது.
இது என் கதை மட்டுல்ல ஒரேயொரு நாளில் என்னை போன்று அப்பாவை இழந்த அம்மாவைப் போல் விதவையாக்கப்பட்ட அப்பப்பா அப்பம்மாவை போல் சொந்த மகனை பறி கொடுத்த பெரியப்பா சித்தப்பா மாமி போல் உடன்பிறப்பை தொலைத்த 1௦0க்கும் மேற்பட்ட குடும்பங்களின் உள்ளக்குமுறல் மட்டுமல்ல. படுவான்கரை மக்களின் குமுறல்.! 50-60 தாய்மார் விதவைகளாக்கப்பட 200-250 பிள்ளைகள் தகப்பன் அற்ற அனாதைகளாக்கப் பாட்டார்கள்
அன்று மரணித்தது எனது அப்பா மட்டுமோ அல்லது ஒருசிலரோ மட்டுமல்ல.
படுவான்கரையில் ஒரு படித்த ஒரு துடிதுடிப்பான நடுத்தர தலைமுறை வர்க்கம். தங்கள் சொந்த கிராமங்களை (மகிழடித்தீவு முனைக்காடு முதலைக்குடா கொக்கட்டிச்சோலை) முன்னேற்ற பாடுபட்டு நேசித்து வாழ்ந்த ஒரு தலைமுறை அது. இவர்களின் இழப்பின் தாக்கம் பின் நாட்களில் தான் விளங்கியது. மாலை நேர வகுப்பு சிரமதானம் கிராமங்கள் தோறும் மர நடுகை மாலை நேர விளையாட்டு போன்றவை இவர்களின் மறைவோடு கானல் நீராகிவிட்டது. மண்முனை தொடங்கி மகிழடித்தீவு நெடுகிலும் பனைமரம் உண்டு. யார் இதை நாட்டினார்கள் என்று வினவிய போதே இம்மைந்தர்களின் இழப்பின் பெறுமதி விளங்கியது. தன் சொந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நல்நெஞ்சங்கள் இன்று மௌனித்து போய்விட்டது.!
வட கிழக்கில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலைச் சம்பவம் மகிழடித்தீவு இறால் பண்ணை இனப்படுகொலை (28-01.1987). ஆயிரங்கள் தங்கள் சொந்த உறவுகளை பறி கொடுத்த நாள். படுவான்கரை மக்களின் குரல்வளை நசுக்கப்பட்ட கரி நாள் அது!! படுவான்கரையின் இன்றைய பின்தங்கிய நிலைமைக்கு அத்திவாரம் இட்டதும் இந்த சம்பவமே. !!!
1983 கருப்பு ஜூலை கொழும்பில் தொடங்கி 2009 மே முள்ளிவாய்கால் வரை நடந்தேறிய அனைத்து படுகொலைகளிலும் இது போன்ற பல சமூகங்களின் கதைகள் உறங்கி கிடக்கின்றன.
விடை தெரியா கேள்வி மட்டுமே உள்ளது
இத்தனை இழப்புக்கும் நான் செய்த தவறு என்ன ? என் குடும்பம் செய்த குற்றம் என்ன ?? தமிழனாய் பிறந்ததா ???
அப்பா திரும்பி வரவில்லை..அப்பா வருவார் என்ற எதிபார்போடு இன்றுடன் 38வருடங்கள் கடந்துவிட்டதுப்பா.!!!
படஉதவி-ஜோர்ஜ் ராஜ்மேனன் - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment