இலங்கைச் செய்திகள்

தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி மாவை சேனாதிராஜா - சி.வி.கே.சிவஞானம்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம்

தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடும் சிறைவாசங்களோடும் கடந்த சரித்திர நாயகன் - ஹிஸ்புல்லாஹ் எம்.பி.


மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாவையின் பூதவுடல்; ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகள்!

தம்பலகாமம் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஒற்றுமையின் மூலமே எம்மால் முன்னோக்கி செல்ல முடியும் ; ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு  


தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி மாவை சேனாதிராஜா - சி.வி.கே.சிவஞானம்

Published By: Vishnu

31 Jan, 2025 | 02:56 AM
image

தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி மாவை சேனாதிராஜா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.  

மாவை சேனாதிராஜாவின் பூத்தவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

மாவை சேனாதிராஜாவின் இழப்பு என்பது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்குமான இழப்பாகும். 

தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி. 

மக்களுக்காக தனது வாழ்க்கையில் பல தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் செய்த ஒருவர். கட்சியை கட்டி வளர்ப்பதில் எல்லோரையும் அந்நியோன்யமாக அரவணைத்து சென்ற ஒருவர்.  

அவருடைய இழப்பு என்பது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாரிய இழப்பு என்பதுடன் அது கட்ச்சிக்கு பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும். 

உங்களுடைய நினைவோட்டம் தமிழரசுக் கட்சி சார்ந்து எல்லாவேறுபாடுகளையும் மறந்து அவருடைய நினைவாக பிளவுகள் பிரிவுகள் இன்றி ஒற்றுமையாக முன் செல்ல வேண்டும். 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியை வளர்த்து மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர வேண்டும் அது மாவை சேனாதிராஜா அவருடைய பெயராலேயே நிறைவேறவேண்டும். 

நல்ல ஆத்மா வஞ்சகம் இல்லாத உள்ளத்தை கொண்டவர். அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன் என்றார்.   நன்றி வீரகேசரி 






கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம்

Published By: Digital Desk 2

30 Jan, 2025 | 05:37 PM
image

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று  (30) திருகோணமலை -உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

2024 போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதிலிருந்து 1000 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

இதன்போது நேர்முகப் பரீட்சையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 250 பேருக்கே ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சிங்கள மொழிமூலம் 34 பேரும் தமிழ் மொழிமூலம் 61பேரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் 94 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மொழிமூலம் 19 பேரும் தமிழ் மொழிமூலம் 42 பேருக்குமாக மொத்தம் 250 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ன சேகர, வெளிவிகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர் எம் பி எஸ் ரத்நாயக்க ,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











நன்றி வீரகேசரி 






தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடும் சிறைவாசங்களோடும் கடந்த சரித்திர நாயகன் - ஹிஸ்புல்லாஹ் எம்.பி.

30 Jan, 2025 | 04:38 PM
image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடும் சிறைவாசங்களோடும் கடந்து பெரும் பங்காற்றிய சரித்திர நாயகன் மாவை சேனாதிராசா அவர்களின் மறைவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் தலைவர் மாவை சேனாதிராசாவின் மறைவுக்காக ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மறைந்த தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் என்னோடு பாராளுமன்றத்தின் இருந்த ஒருவர். அவரை பற்றி நன்றாக அறிந்தவன் நான். 

தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் தைரியமாக குரல்கொடுத்தவர்.

மிகவும் நீதியாகவும் நியாயமாகவும் நடந்துகொண்டவர். நான் எப்போதும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்.

நீண்ட காலமாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசா ஐயாவின் மறைவு தமிழர் வரலாற்றில் நிரப்ப முடியாத வெற்றிடமாக இருக்கும்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 






மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாவையின் பூதவுடல்; ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகள்!  

30 Jan, 2025 | 12:14 PM
image

மாவை சேனாதிராசாவின் பூதவுடல் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராசா கடந்த செவ்வாய்க்கிழமை (28)மாவிட்டபுரத்தில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அதனை தொடர்ந்து, சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (29) இரவு தனது 82ஆவது வயதில் காலமானார்.

அரசியல் தலைவர்கள், பொது அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் நேரில் சென்று அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 மாவையின் பூதவுடலுக்கு தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.


 

நன்றி வீரகேசரி 


தம்பலகாமம் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்  
01 Feb, 2025 | 07:33 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை  (01) காலை  தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

தம்பலகாமம் பிரதேசத்தின் பாரதிபுரம் கிராமத்தில் 01.02.1998 அன்று இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் ஆறுமுகம் சேகர் (வயது 32), அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது 13), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது 17), பொன்னம்பலம் கனகசபை (வயது 47), முருகேசு ஜனகன் (வயது 18), நாதன் பவளநாதன் (வயது 29), சுப்பிரமணியம் திவாகரன் (வயது 23), குணரத்தினம் சிவராஜன் (வயது 23) உள்ளிட்ட 8 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 

குறித்த படுகொலைகள் தொடர்பாக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு முறையிடப்பட்டது. அந்தவகையில் 13 காவல்துறையினருக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

பின்னர் குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு 5 பேர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.  

குற்றம் இடம்பெற்று 26 ஆண்டுகளின் பின்னர் 2024 ஏப்ரல் 26 அன்று இவ்வழக்குத் தொடர்பான தீர்ப்பு அநுராதபுரம் வடமத்திய மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல் ஹொடபிட்டிய அவர்களினால் அன்றைய காலப்பகுதியில் கந்தளாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய அதிகாரி, பிரதிக் காவல்துறைப் பரிசோதகர், மேலும் 3 காவல்துறையினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

நன்றி வீரகேசரி 





ஒற்றுமையின் மூலமே எம்மால் முன்னோக்கி செல்ல முடியும் ; ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு  


01 Feb, 2025 | 07:34 PM
image

(எம்.வை.எம்.சியாம்) 

வட மாகாணத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ள வரவு ,செலவு திட்டத்தில் நிதி  ஒதுக்க உள்ளோம்.அதேபோன்று அதிக சுற்றுலா பயணிகளை வட மாகாணத்துக்கு அழைத்து வருவதற்கான திட்டத்தை நாம் தயாரிப்போம். 

மக்களுடைய காணி மக்களுக்கே வழங்கப்படும்.மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட வேண்டும். இனவாதத்தின் ஊடாக நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியாது. ஒற்றுமையின் மூலமே எம்மால் முன்னோக்கி செல்ல முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

நாம் இந்த மக்களுக்கு தொழில் வாய்புகளை ஏற்படுத்தி தருகிறோம். அரச திணைக்களங்களில் வெற்றிடங்களை நிரப்ப உள்ளோம்.  

2 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம். இதில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் பேசும் இளைஞர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கு பாரியளவில் காணிப்பிரச்சினை உள்ளது.மக்களுடைய காணி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.  

பாதுகாப்புக்கும் அபிவிருத்திக்கும் காணிகளை கையகப்படுத்தும் அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளது.எனினும் பொய்யாக காணிகளை வைத்திருக்க முடியாது.  

எனவே இந்த பிரச்சினைக்கு நிச்சயம் நாம் தீர்வை பெற்றுத் தருவோம். எமது மீனவர்கள் நீண்டகாலமாக கடலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

எனவே இந்த பிரச்சினை நிவர்த்திக்க வேண்டும். இந்திய அரசாங்கத்துடன் பல தடவைகள் பேச்சு நடத்தினோம். பாதுகாப்பை பலப்படுத்துமாறு நாம் கடற்படைக்கு கட்டளையிட்டுள்ளோம்.  

இது இந்த பகுதி மக்களின் கடற்பகுதி.மீன்பிடிப்பதற்கான உரிமை உள்ளது. அந்த உரிமை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.அந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காண்போம். 

வட மாகாணத்தில் தென்னைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ள 40 ஆயிரம் ஏக்கர் இருப்பதாக நாம் கண்டறிந்தோம். அதற்காக வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க உள்ளோம்.  

தென்னங்கன்று வழங்குவதற்கும் நிலத்தை பன்படுத்துவதற்கான பசளைக்காக நிதியையும் நாம் வழங்குவோம். இந்த பகுதி மக்கள் விவசாயத்துக்கு பாரியளவில் பங்களிப்பு செய்யக்கூடியவர்கள்.  

ஆனால் உரிய விலை இல்லை.உரிய திட்டமும் இல்லை. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் புதிய யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளேன்.  

அனைத்து மக்களுக்கும் வெறுப்பட்ட விழகாக்கள் உள்ளன. சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் என அனைவரும் கொண்டாடும் விழா ஒன்று வேண்டுமல்லவா? நா ஒரு தினத்தை திட்டமிட்டுள்ளோம்.  

அனைத்து மக்களுடைய கலாசாரம் பண்பாடு பழக்கவழக்கங்கள் உடை உணவு பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் ஒன்றிணைத்த விழாவொன்றை நடத்துவற்கு திட்டமிட்டுள்ளோம்.அது நாட்டின் தேசிய விழாவாக இது அமையும். 

வட மாகாணம் சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்குகிறது.2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் ஆண்டாக பதிவாகும்.சுற்றுலா பயணிகள் வட மாகாணத்துக்கு வருகை தர வேண்டும்.  

அதற்கான திட்டத்தை நாம் தயாரிப்போம். மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட வேண்டும். அதுவே எமது பிரதான இலக்காகும். வட மாகாணத்தில் உள்ள கிராமப்புற விதிகளை புனரமைப்பதற்கான நிதியை ஒதுக்குவோம்.புதிய திட்டங்களை அமைப்பதற்கும் நாம் தயாராக உள்ளோம். 

தற்போது மக்கள் சார்பான அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்னர் சமூகத்தில் உயர் மட்டத்தில் இருந்தவர்களும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுமே இந்த நாட்டை ஆட்சி செய்தார்கள்.  

அந்த அரசியல் முறைமை கடந்த இரண்டு பிரதான தேர்தல்களின் போது தோற்கடிக்கப்பட்டது.எமது நாட்டில் எவ்வாறு அரசியல் கலாசாரம் இருந்தது. தாய் பிரதமர்.தந்தை பிரதமர்.மகள் ஜனாதிபதி.சகோதரர் ஜனாதிபதி. அவரது தம்பி ஜனாதிபதி.மாமா ஜனாதிபதி.மருமகன் ஜனாதிபதி.கடந்த ஜனாதிபதி தேர்தலும் அவ்வாறே இருந்தது.எமக்கு எதிராக போட்டியிட்ட மூவரில் ஒருவர் மருமகன்.மற்றையவர் இருவரும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர்கள்.ஆனால் என்ன நடந்தது.ஆனால் மக்கள் அந்த அரசியல் கலாசாரத்தை முற்றாக தோல்வியடைய செய்து மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். 

இனி மக்களுக்கு இனவாதம் தேவையில்லை.எந்தவொரு இனவாதத்துக்கும் இலங்கையில் இதன் பின்னர் சந்தர்ப்பம் இல்லை. அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.  

இந்த நாட்டில் அரசியல் பொருளாதார சமூக கலாசார ரீதியாக பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். மக்களுடன் பிணைப்பைக் கொண்ட அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம்.  

மக்களின் சொத்துக்களை வீண் விரயம் செய்யாத அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்போம். இனவாதத்தின் ஊடாக நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியாது. ஒற்றுமையின் மூலமே நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியும் என்றார்.


நன்றி வீரகேசரி 


No comments: