போதை என்பதைப் பொசுக்கியே நிற்போம் !

 

























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா 



பணத்தில் போதை பதவியில் போதை 
பட்டத்தில் போதை பார்ப்பதிலும் போதை
இப்போதை எல்லோர்க்கும் இருக்கின்ற போதை
இதனைவிட ஆபத்தே இளைஞரிடம் போதை

படிக்கின்ற பலரையும் பற்றியதே போதை
குடிக்கின்ற புகைக்கின்ற சுவைக்கின்ற வகையில்
மாத்திரையாய் வகைவகையாய் வண்ணமுறு வகையில்
போதைதரும் பொருட்கள் வீதி வருகிறதே

கண்டதை உடைப்பார் கைக்குண்டு வீசுவார் 
கண்ணெதிரே வருவாரைக் கத்தியால் குத்துவார் 
கடையும்  உடைப்பார் பொருளும் எடுப்பார்
அத்தனையும் போயை அரங்கேற்றி நிற்கும்

வீதியில் கிடப்பார் வீட்டினை நாடார்
போதையில் கிடந்து பொழுதினை இழப்பார்
யாரையும் அடிப்பார் காரையும் உடைப்பார்
வேரிலா மரமாய் வீழ்ந்துமே கிடப்பார் 

நாகரிக மோகம் என்றுமே சொல்லி
நாளுமே போதைக்குள் புகுந்து விடுகின்றார்
ஆர்தடுத்தும் கேளார் அறிவுரையும் ஏற்கார்
அழிவதனை அறியா அணைத்து மகிழ்கின்றார்

போதையிலே ஆழ்வார் பொழுதெல்லாம் இருளே
பாதை தடுமாறி படுகுழியில் வீழ்வார்
வந்தநல் வாழ்வை மடியும்படி செய்வார்
மனமுழுக்க மயக்கம் கொண்டுமே கிடப்பார் 

சிந்தனைகள் சிதறும் சீரழிவு பெருகும்
சந்தததும் யாவும் சஞ்சலமாய் தெரியும்
சொந்தமெலாம் தெரியா தூரவே நிற்பார் 
அந்தரத்தில் மிதந்து அதுவுலகு என்பார்

பெற்றவர்கள் அழுவார் உற்றவர்கள் அழுவார்
போதையிலே பேதலித்து நிற்பவர்கள் சிரிப்பார்
கற்றதெல்லாம் போகும் கண்ணியமும் கழரும்
நற்றவத்து வாழ்வு நஞ்ஞாகிப் போகும் 

உலகனைத்தும் இப்போ பெருகிவரும் போதை
உலகமைதி குலைக்க வந்தபெரும் வினையே 
நலமுடைய வாழ்வை நாசமாக்கும் போதை
நாநிலத்தில் ஒழிந்தால் நல்வாழ்வு மலரும் 

போதை அகற்றுவோம் புத்தி புகட்டுவோம்
பாதை காட்டுவோம் பக்குவம் உணர்த்துவோம்
போதை என்பதைப் பொசுக்கியே நிற்போம் 
பாதை ஒளிர்ந்திடும் பலதும் தெரிந்திடும் 

No comments: