தமிழ்த் திரையின் முதல் பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் நூற்றாண்டு விழா ! - ச . சுந்தரதாஸ் ஆஸ்திரேலியா

 தமிழ் திரையுலகில் சாகா வரம் பெற்று விளங்குபவர்கள் பின்னணிப்


பாடகர்கள். 85 ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்த அனைத்துப் படங்களிலும் அவர்களின் பங்களிப்பு தொடர்ந்து இருந்தே வருகிறது. அந்த வகையில் முதல் ஆண் பின்னணிப் பாடகர் என்ற பெருமையை பெறுபவர் நூற்றாண்டு விழா நாயகரான கலைமாமணி திருச்சி லோகநாதன்.


நடிகர்கள் சொந்தக் குரலில் பாடத் தெரிந்தால்தான் அவர்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு என்று இருந்த எழுதப்படாத சட்டம் 1945ம் ஆண்டளவில் இருந்து தளர்வடையத் தொடங்கியது. நடிகர்கள், குறிப்பாக கதாநாயக நடிகர் அழகாக, மிடுக்காகத் தோன்றி நடித்துக் கொடுத்தால் போதும் , பாடல்களை அதில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு பாட வைத்து விடலாம் என்ற எண்ணம் ஜுபிடர் பிச்சர்ஸ் அதிபர்கள் சோமு, மொஹிதீன் இருவருக்கும் உதிக்கவே ( உபயம் ஸ்ரீவள்ளி படம் மூலம் ஏவி எம் செட்டியார் அறிமுகப்படுத்திய யுக்தி ) அதனை தாங்கள் அடுத்து தயாரிக்கும் படத்தில் நடைமுறைப் படுத்திப் பார்க்க விரும்பினார்கள். முதல் தடவையாக

கதாநாயகனாக நடிக்கும் பாடத் தெரியாத நடிகருக்கு ஒரு பின்னணிக் குரல், அப்படியே நகைச்சுவை நடிகருக்கு பாட ஒரு பின்னணிக் குரல் என்று ஒரே நேரத்தில் இரு பாடகர்களை அறிமுகப் படுத்தும் வாய்ப்பு . எஸ் எம் சுப்பையா நாயுடு இசையில் ராஜகுமாரி படத்தில் கதாநாயகன் எம் ஜி ஆருக்கு மாரியப்பா பாடினார். நகைச்சுவை நடிகர் எம் என் நம்பியாருக்கு , எம் எம் மாரியப்பாவின் சித்தப்பா பிள்ளை லோகநாதன் பாடினார். ஆக முதல் பின்னணிப் பாடகர் என்ற பெருமையை இரண்டு சகோதரர்களும் பங்கு போட்டுக் கொண்டார்கள்!

1924 ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி திருச்சியில் பிறந்த லோகநாதன் ஆரம்பக் கல்வியுடன் அதில் இருந்து விடை பெற்று விட்டார். அவர் கவனம் முழுதும் சங்கீதத்திலேயே சென்றது. நான்கு வருடம் நடராஜ பகவதரிடம் முறையாக சங்கீதம் கற்றவர் அப்படியே மேடை நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கி விட்டார். அப்படி பாடி நடித்தவருக்கு கிடைத்த புரொமோஷன் தான் ராஜகுமாரியில் பாடும் சான்ஸ்!

இதனைத் தொடர்ந்து ஜுபிடர் தயாரித்த படம் அபிமன்யு. எம் எஸ் விஸ்வநாதன் மெட்டமைத்து , சுப்பையா நாயுடு பெயரில் வெளிவந்த இனி வசந்தமாமே வாழ்விலே பாடலை கதாநாயகன் குமரேசனுக்காக லோகநாதன் பாட, கதாநாயகியாக நடித்த யு ஆர் ஜீவரத்தினம் தானே நடித்து பாடிக் கொண்டார். இந்தப் பாடல் ரசிகர்களிடம் நல்ல விதமாக போய் சேர்ந்தது.


காமெடியனுக்கு பாடியாயிற்று, ஹீரோவுக்கும் பாடியாயிற்று இனி அடுத்தது என்ன வில்லனுக்கா பாடுவது, ஆம் அதுதான் லோகநாதன் விஷயத்தில் நடந்தது. அது மட்டுமன்றி வில்லனுக்கு அவர் பாடிய பாடல்கள்தான் இன்றும் எழுபத்தைந்து ஆண்டுகள் கழித்தும் உலவும் தென்றலின் வழியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. 1950 வருடம் மாடர்ன் தியேட்டஸ் தயாரித்த படம் மந்திரிகுமாரி. ஆன்டி ஹீரோ சப்ஜெட் . இதில் வில்லனாக நடித்து ரசிகர்களை கலங்கடித்த எஸ் ஏ நடராஜனுக்கு இரண்டு டூயட்கள். ஜி ராமநாதன் இசையில் உருவான உலவும் தென்றல் காற்றினிலே, வாராய் நீ வாராய் இரண்டு பாடல்களையும் ஜிக்கியுடன் பாடி தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் போய் சேர்ந்தார் லோகநாதன். வில்லனுக்கு பாடியும் புகழ் பெறலாம் என்ற உண்மையை இவரின் குரல் உறுதி செய்தது.

இந்தப் பாடலின் வெற்றியை தொடர்ந்து அவர் பாடியது

அண்ணனுக்கு. டி எஸ் துரைராஜ் தயாரித்து நடித்த பானை பிடித்தவள் பாக்கியசாலி படத்தில் லோகநாதன் சொன்ன புருஷன் வீட்டில் வாழப் போகும் பொண்ணே பாடல் கல்யாணம் செய்யப் போகும் தங்கைகளுக்கான கீதோபதேசமாகவே மாறி விட்டது. அதே படத்தில் அண்ணனுக்கு பாடிய லோகநாதனிடம், தங்கையின் காதலனுக்காகவும் பாட சான்ஸ் தேடி வந்தும் மறுத்து விட்டார் அவர். அதற்கு அவர் சொன்ன காரணம் அண்ணனுக்கு பாடி விட்டு பின்னர் தங்கையின் காதலனுக்கு பாடுவது முறையல்ல.


சர்வாதிகாரி படத்தில் எம் ஜி ஆருக்கு இவர் பாடிய ஆணழகா எந்தன் கைகள் பாடல் இனிமையாகவே ஒலிக்கிறது. அதே போல் நாலு வெளி நிலம் படத்தில் இவர் எல் ஆர் ஈஸ்வரியுடன் பாடிய ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையே பாடல் இன்றளவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

லோகநாதனை பொறுத்த வரை தனக்கென்று சில கொள்கைகளையும், கோட்பாடுகளையும் தன்னகத்தே வைத்திருந்தார். அதற்கு இசைபட இசை பாடியே வாழ்ந்து வந்தார். 1950ம் ஆண்டுகள் தொடக்கம் பின்னணிப் பாடகர்கள் தயவில் தான் கதாநாயக நடிகர்கள் வாயசைத்து பாடி நடிக்க வேண்டும் என்ற நிலை உருவாகத் தொடங்கியதும் அதன் உடனடி பயன் ஏ எம் ராஜா, சிதம்பரம் சி எஸ் ஜெயராமன் இருவருக்குமே கிட்டியது. முதல் படத்திலேயே சிவாஜி ஹீரோவாகி விட அவருக்கு ஜெயராமன்தான் பாட வேண்டும் என்ற நிலை , நிலை பெற்றது. எம் ஜி ஆர், ஜெமினி, எஸ் எஸ் ஆருக்கு எல்லாம் ராஜா பாடினார். இவர்களுக்கிடையில் இன்னாருக்குத்தான் லோகநாதன் பாடுவார் என்ற நிர்பந்தம் இன்றி எல்லோருக்கும் அவர் பாடிக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் தான் அதிர்ஷ்ட தேவதை அட்ரஸ் மாறி வந்து

லோகநாதன் வீட்டு கதவை தட்டினாள். சிவாஜி நடிப்பில் தூக்கு தூக்கி படம் எங்கள் அருணா பிலிம்ஸ் தயாரிக்கிறது. எட்டு பாடல்கள். நீங்கள் பாட உங்கள் ரேட் என்ன என்றார் வந்த தயாரிப்பு நிர்வாகி. பாடலுக்கு ஐநூறு ருபாய் என்றார் பாடகர். எனி டிஸ்கவுண்ட் என்று கேட்ட நிர்வாகியிடம் தான் கேட்ட தொகையிலேயே உறுதியாக நின்றார் லோகநாதன். அதோடு நின்றிருக்கலாம் , அப்படியே போகிற போக்கில் மதுரையில் இருந்து புதுப் பாடகன் ஒருத்தன் வந்திருக்கான் அவனை கேளுங்க குறைந்த ரேட்டில் பாடிக் கொடுப்பான் என்று டிப்ஸும் கொடுத்தார் லோகநாதன். ஆஹா அதிர்ஷ்ட தேவதை விழித்துக் கொண்டாள் , பிழையான விலாசத்துக்கு வந்துள்ளதை உணர்ந்து கொண்டாள் , நேராக சரியான விலாசத்துக்கு சென்று டி எம் சௌந்தர்ராஜனை அரவணைத்து வாழ்வு கொடுத்தாள்!

இசை மேதை ஜி ராமநாதன், திரையிசை திலகம் கே வி மகாதேவன் இருவரும் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் லோகநாதனை பாட வைத்தார்கள். அவற்றில் பல பாடல்கள் நல்ல விதமாக பிரபலமாகின. ஆனாலும் கதாநாயகனுக்கு பாடும் வாய்ப்பு மட்டும் லோகநாதனை நெருங்கவே இல்லை. ஆனாலும் எம் எல் வசந்தகுமாரியுடன் பாடிய கூவாமல் கூவும் கோகிலம், வஞ்சம் இதோ வாஞ்சை இதோ, ஜிக்கியுடன் பாடிய இனிதாய் நாமே இணைந்திருப்போமே, பி லீலாவுடன் பாடிய வில்லேந்தும் வீரர் எல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே, சுசிலாவுடன் பாடிய அடிக்கிற கைதான் அணைக்கும், மற்றும் சின்னக்குட்டி நாத்தனா சில்லறையை மாத்தினா , போன்ற பாடல்கள் எம் ஜி ஆர், சிவாஜி பட வாய்ப்பின்றியே லோகநாதனை திரையுலகில் இயங்குவதற்கு வழியமைத்தன.

திரையுலகில் எவருடைய இடமும் நிரந்தரம் அல்ல , இது மனித வாழ்வுக்கும் பொருந்தும் என்பதை நெற்றிப் பொட்டில் அறைந்தால் போல் சொல்லும் வாழ்க்கையே அலை போலே நாம் எல்லாம் அதன் மேலே பாடல் லோகநாதன் குரலில் வந்து வாழ்வியல் பாடத்தை உணர்த்தியது. பாடகர் கண்டசாலா இசையமைத்து கதாநாயகனுக்கு எல்லாப் பாடல்களையும் பாடி விட்டார் , இப்போது கடோஜ்கஜனுக்கும் ஒரு பாடலை பாட வேண்டும் , தெலுங்கு படத்தில் அதையும் பாடியாயிற்று , தமிழில் அதை தான் பாட வேண்டாம் என்று நினைத்து , லோகநாதனிடம் ஒப்படைத்த பாடல் தான் , மாயாபஜார் படத்தில் அவர் பாடிய கல்யாண சமையல் சாதம் பாடல். தாத்தா காலம் முதல் இன்றைய பேரன் காலம் வரை நடைபெறும் கல்யாணங்களில் இப் பாடல் ஜமாய்க்கிறது!

1961ல் வெளியான கப்பலோட்டிய தமிழன் படம் லோகநாதன் திரையிசையில் மகுடம் அமைந்தாற் போல விளங்கியது. இதில் இடம் பெற்ற மகா கவி பாரதியாரின் பாடல்களை பாரதியாருக்காகவே (படத்தில் எஸ் வி சுப்பையா) பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ராமநாதன் இசையில் இடம் பெற்ற என்று தணியும் இந்த சுதந்திர தாகம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம் , வெள்ளிப் பனி மழையின் மீது ஆகிய மூன்று பாடல்களும் லோகநாதனின் குரலில் கம்பீரமாக ஒலித்தது. ஆனால் பாடுவதற்கு தேடிப் போய் வாய்ப்பு கேட்கும் பழக்கம் லோகநாதனுக்கு இருந்தது போல் தெரியாவில்லை. இதனால்தானோ என்னோவோ விசுவநாதன் , ராமமூர்த்தி இசையில் பாடும் வாய்ப்புகள் 60 ம் ஆண்டுகளில் அவருக்கு கிட்டவில்லை. கர்ணனின் மட்டும் ஆயிரம் கரங்கள் நீட்டி பாடல் கிடைத்தது, அதும் இன்னும் மூவருடன் இணைந்து பாட!

பிரபல நடிகை சி டி ராஜகாந்தம் , காளி என் ரத்னம் ஜோடியின் மகள் ராஜலஷ்மியை லோகநாதன் திருமணம் செய்தார். இவர்களுக்கு பதின்மூன்று பிள்ளைகள். இவர்களில் டி எல் மகராஜன், தீபன் சக்ரவர்த்தி இருவரும் திரை பாடல்களில் தங்களின் முத்திரைகளை பதித்தார்கள்.

1989ம் ஆண்டு நவம்பர் 17ல் மறைந்தார். அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து தான் அடைய வேண்டிய உச்சத்தை முழுமையாக அடையாத லோகநாதன் , தான் பாடிய பாடல்கள் மூலம் இரவாப் புகழுடன் நூற்றாண்டை கடந்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்!

No comments: