இனவாத, மதவாத பிரசாரங்களுக்கு ஏமாறாது தெற்கு அரசியல் தலைவர் மீது வடக்கு மக்கள் நம்பிக்கை
யாழ். வரலாற்றில் முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தி வெற்றிவாகை
முதல் தடவையாக மலையக தமிழ்ப்பெண்கள் மூவர் தெரிவு
18 முதல் 25 ஆம் திகதிக்குள் வாக்குமூலம் வழங்க சி.ஐ.டிக்கு வர முடியும்
செனல் 4 காணொளி தொடர்பாக CID விசாரணைகள் ஆரம்பம்
இதுவரை யாழுக்கு நான் வந்த கூட்டத்தில் இதுதான் சிறந்த கூட்டம்
இனவாத, மதவாத பிரசாரங்களுக்கு ஏமாறாது தெற்கு அரசியல் தலைவர் மீது வடக்கு மக்கள் நம்பிக்கை
-வரலாற்றில் முதலாவது தேர்தல் வெற்றி - டில்வின்
தெற்கு அரசியல் தலைவர் ஒருவர் மீது வடக்கு மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்த வரலாற்றில் முதலாவது தேர்தல் இதுவென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
இனவாதம், மதவாதத்தை நிராகரித்து பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாமல் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த வடக்கு மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி விசேடமாக நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி ஈட்டியுள்ள வெற்றி, விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் கிடைத்துள்ள ஒரு வரலாற்று வெற்றியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, தமது கட்சி எதிர்பார்த்திராத வகையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி அதிகாரத்தை வழங்கியுள்ள நாட்டு மக்களின் நம்பிக்கை பாதுகாக்கப்படும் என தெரிவித்த அவர்,வெற்றியை ஏற்றுக் கொள்வது போன்றே சவால்களையும் ஏற்றுக் கொண்டு நாட்டை முன்னேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், கிடைத்துள்ள அதிகாரத்தை மக்களின் நன்மைக்காக மட்டுமே செலவிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டில்வின் சில்வா தெரிவித்தார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டியுள்ளதையடுத்து, அக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று பத்தரமுல்ல, பெலவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க, கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் இம்முறை தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியவருமான திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா,
மக்கள் எம் மீது நம்பிக்கை வைத்து பாரிய வெற்றியை எமக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி ஈட்டிய பின்னர் பலரும் பல்வேறு விமர்சனங்களையும் தவறான பிரசாரங்களையும் முன்னெடுத்தபோதும் கடந்த ஒன்றரை மாத காலத்தில் மக்கள் எமது கட்சி தொடர்பாக தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர்.
நாம் ஆட்சிக்கு வந்தால் வன்முறை வெடிக்கும் மக்களுக்கான சுதந்திரம் இல்லாமல்போகும் என்றெல்லாம் எம் மீது சேறு பூசிபோதும் மக்கள் அந்த பொய்யை நிராகரித்தனர்.
மக்களின் சிந்தனை மாற்றமே பழைய பிரபு அரசியல் யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பழைய அரசியல் யுகத்தை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். கடந்த கால அரசியல் தலைவர்கள் இனவாதம் மூலமே வெற்றி பெற்றனர். இம்முறை நாம் வடக்கு, கிழக்கு உட்பட எந்த கட்சிகளினதும் உதவியில்லாமல் பாரிய வெற்றியீட்டியுள்ளோம்.
மக்கள் இந்தளவு நம்பிக்கையை எம் மீது வைத்துள்ளனர். அவர்களது நம்பிக்கையை நாம் பாதுகாப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன்
யாழ். வரலாற்றில் முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தி வெற்றிவாகை
பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்ட வாக்குப் பதிவில் தேசிய மக்கள் சக்தி எதிர்பாராத வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இந்தத் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 9,066 வாக்குகளையும், இலங்கை தமிழ் அரசு கட்சி 2,582 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,612 வாக்குகளையும் பெற்றுள்ளன. அத்துடன் தேசிய மக்கள் சக்தி 03 ஆசனங்களை பெற்றுள்ளது. கருணைநாதன் இளங்குமரன் – 32,102 விருப்பு வாக்குகளையும் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா – 20,430 விருப்பு வாக்குகளையும் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் – 17,579 விருப்பு வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
வடக்கில் நடைபெறும் தேர்தல்களில் விசேடமாக யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள், தேர்தல்களின்போது இலங்கை தமிழ் அரசு கட்சி மீது நம்பிக்கை வைத்து அக்கட்சிக்கே வாக்களித்து வந்தனர்.
ஆனால், தற்போது அதற்கு பதிலாக மாற்றத்துக்காக வாக்களிக்க முடிவு செய்திருப்பதை இந்த வெற்றி எடுத்துக்காட்டியிருப்பதாக அரசியல் தரப்பில் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
முதல் தடவையாக மலையக தமிழ்ப்பெண்கள் மூவர் தெரிவு
மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதேவேளை, பதுளை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அத்துடன், மாத்தறை மாவட்டத்தில் சரோஜா சாவித்திரி போல்ராஜ் 148,379 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளனர். 1977 ஆம் ஆண்டு முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது என்பது முக்கிய விடயமாகும். நன்றி தினகரன்
18 முதல் 25 ஆம் திகதிக்குள் வாக்குமூலம் வழங்க சி.ஐ.டிக்கு வர முடியும்
பிள்ளையான் CID க்கு கடிதம்
பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக தனக்கு நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ள போதும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதிக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வரமுடியுமென அவர்
குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 ஊடகத்துக்கு அவரது முன்னாள் செயலாளரான ஆசாத் மௌலானா தெரிவித்துள்ள கருத்து தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காகவே நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நன்றி தினகரன்
செனல் 4 காணொளி தொடர்பாக CID விசாரணைகள் ஆரம்பம்
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரிட்டன் தொலைக்காட்சி செனல் 4 இல் ஒளிபரப்பப்பட்ட காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து அதற்கான விசாரணை நடவடிக்கைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மொஹமட் மஹீலால் மொஹமட் ஹன்சீர் அல்லது அசாத் மௌலானாவுடன் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை அந்த நேர்காணலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் இது நடைபெற்றுள்ளது.
இதற்கமைவாக இந்த காணொளியிலுள்ள உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள், குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சதி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
செனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காணெலி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நன்றி தினகரன்
இதுவரை யாழுக்கு நான் வந்த கூட்டத்தில் இதுதான் சிறந்த கூட்டம்
No comments:
Post a Comment