லெபனான், சிரிய தலைநகரங்களில் இஸ்ரேல் சரமாரி வான் தாக்குதல்
தொடர்ந்து 3ஆவது நாளாகவும் லெபனான் தலைநகரில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
நியூசிலாந்தில் சட்டமூலத்தை கிழித்து கடும் எதிர்ப்பு!
ரஷ்ய ஜனாதிபதி புடினை விமர்சித்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
டிரம்பின் குடியரசு கட்சி அரசில் முழு கட்டுப்பாடு
லெபனான், சிரிய தலைநகரங்களில் இஸ்ரேல் சரமாரி வான் தாக்குதல்
-காசாவிலும் தொடர்ந்தும் தாக்குதல்
ஹிஸ்புல்லா அமைப்பின் கோட்டையாக உள்ள பெய்ரூட்டின் தெற்கு புறநகரில் இஸ்ரேல் கடந்த ஒருசில நாட்களாக வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் புர்ஜ் அல் பராஜ்னேவில் ‘எதிரி விமானம்’ ஒன்று இரு ஏவுகணைகள் கொண்டு கடுமையாக தாக்கியது என்று லெபனானின் அரச செய்தி நிறுவனமான தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டதைத் தொடர்ந்தே நேற்றுக் காலை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் அவிசாய் அன்ட்ரே எக்ஸ் சமூகதளத்தில், ஹிஸ்புல்லாவுடனும் அதன் நலனுடனும் தொடர்புபட்ட வசதிகளுக்கு அருகில் இருப்போர் உடன் வெளியேறும்படி குறிப்பிட்டிருந்தார். ‘தெற்கு புறநகர் பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும், குறிப்பாக… கொபைரி பகுதியில் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புபட்ட வசதிகள் மற்றும் நலன்களுக்கு அருகே இருப்போருக்கானது’ என அன்ட்ரே குறிப்பிட்டுள்ளார்.
‘உங்கள் பாதுகாப்புக்காகவும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்காகவும், இந்தக் கட்டடங்களையும் அதன் அருகில் உள்ள கட்டடங்களையும் உடனடியாக காலி செய்ய வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட இந்த பதிவில் புத்தான் உயர் பாடசாலைக்கு அருகில் உள்ள கட்டடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக அங்குள்ள கணிசமான மக்கள் ஏற்கனவே வெளியேறியுள்ளனர். சிலர் பகல் தமது வீடுகள் மற்றும் வர்த்தகத்தை பார்ப்பதற்காக மாத்திரமே அந்தப் பகுதிக்கு திரும்புகின்றனர்.
கடந்த 48 மணி நேரத்தில் பெய்ரூட்டின் தெற்கு புறநகரில் சுமார் 30 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 3,386 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு, கடந்த செப்டெம்பர் தொடக்கம் இந்த மோதம் முழு அளவில் போர் ஒன்றாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சிரிய தலைநகர் டஸ்கஸின் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் மீது இஸ்ரேல் கடந்த வியாழக்கிழமை நடத்திய வான் தாக்குதல்களில் பதினைந்து பேர் கொல்லப்பட்டு மேலும் 16 பேர் காயமடைந்திருப்பதாக சிரிய அரச செய்தி நிறுவனமான சனா குறிப்பிட்டுள்ளது.
தலைநகரின் மேற்காக ஆசி மற்றும் குத்சயா புறநகரங்களில் உள்ள கட்டடங்களே தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக சிரிய இராணுவத்தை மேற்கோள்காட்டி சனா குறிப்பிட்டது.
இதில் பலஸ்தீன போராட்ட குழுவான இஸ்லாமிய ஜிஹாதின் டமஸ்கஸில் உள்ள தலைமையகங்கள் மற்றும் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ வானொலி குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் ஈரானுடன் தொடர்புபட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் பல ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றது. எனினும் கடந்த ஆண்டு ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் அவ்வாறான தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.
இதேவேளை காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்த நிலையில் மேலும் பலர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மத்திய காசாவின் டெயிர் அல் பலாவில் குடியிருப்பு தொடர்மாடி கட்டடம் ஒன்றை இஸ்ரேல் கடந்த வியாழக்கிழமை இரவு தாக்கியது. இதில் பலர் காயமடைந்திருப்பதோடு இடிபாடுகளில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டதாக காசா அவசர மீட்புக் குழுவை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
எகிப்து எல்லையை ஒட்டிய தெற்கு காசாவின் ரபா நகரின் மேற்காக அந் நாசில் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் தாய் மற்றும் மகள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை பலஸ்தீன செம்பிறை துணை மருத்துவக் குழுவினர் ஐரோப்பிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
காசா நகரின் ஷெய்க் ரத்வான் பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக, அல் ஜசீரா அரபு செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
வடக்கு காசாவின் மற்றொரு நகரான ஜபலியாவிலும் இஸ்ரேல் நேற்று உக்கிர தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
வடக்கு காசாவில் கடந்த ஆறு வாரங்களுக்கு மேலாக முற்றுகையில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலிய இராணுவம் அங்கு உதவிகள் செல்வதைத் தடுத்து கடும் படை நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. காசாவில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நன்றி தினகரன்
தொடர்ந்து 3ஆவது நாளாகவும் லெபனான் தலைநகரில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்
மனித உரிமை கண்காணிப்பாளர் இஸ்ரேல் மீது 'போர் குற்றச்சாட்டு'
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டு பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் நேற்று (14) உக்கிர தாக்குதலை நடத்தியதோடு காசாவில் உள்ள பலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இஸ்ரேல் போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக மனித உரிமை கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்களில் நேற்றுக் காலை இஸ்ரேல் கடுமையான குண்டு மழை பொழிந்ததோடு கரும்புகை வானை நோக்கி எழுந்தது. இஸ்ரேலின் தாக்குதல்கள் தெற்கு லெபனானின் பின்த் ஜபீலை அடைந்துள்ளது. அங்கு கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்திருப்பதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
பசூரி மற்றும் ஜுமைஜிமா சிறு நகரங்களில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டதாக மேற்படி செய்தி நிறுவனம் கூறியது.
காசா போருக்கு இணையாக கடந்த ஓர் ஆண்டாக இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில் கடந்த செப்டெம்பர் தொடக்கம் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.
பெய்ரூட்டின் தெற்கு புறநகரில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களின் பாதிப்பு குறித்து உடன் உறுதி செய்யப்படவில்லை. என்னும் அந்தப் பகுதிகளில் இருந்து பெரும் அளவான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் குறைந்து 3,365 பேர் கொல்லப்பட்டு மேலும் 14,344 பேர் காயமடைந்திருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மறுபுறம் ஹிஸ்புல்லா போராளிகள் தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படையுடன் தரைவழியாக சண்டையிட்டு வரும் அதேநேரம் இஸ்ரேலை நோக்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் இராணுவ தலைமையத்தின் மீது ஆளில்லா வான் தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தது.
டெல் அவிவில் உள்ள இராணுவத் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக அது குறிப்பிட்டது. இது தொடர்பில் இஸ்ரேலிய இராணுவ தரப்பு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
எனினும் லெபனானிலிலிருந்து வந்த இரண்டு ஆளில்லா விமானங்களை இடைமறித்து வீழ்த்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டது. லெபனானிலிருந்து 40 ரொக்கெட் குண்டுகள் பாய்ச்சப்பட்டதாகவும் எவரும் காயமடையவில்லை என்றும் அது கூறியது.
எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றி இஸ்ரேல் எதுவும் குறிப்பிடவில்லை. லெபனான் எல்லைப் பகுதியில் போர் நடவடிக்கையின்போது ஆறு இஸ்ரேலிய படையினர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டனர். லெபானானில் தரைவழி படை நடவடிக்கை ஆரம்பித்த பின்னர் அதிக இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்ட சம்பவங்களில் ஒன்றாக இது உள்ளது.
தெற்கு லெபனானில் போர் நடவடிக்கையின்போதும் படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணும் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதி தொடக்கம் ஹிஸ்புல்லாவுடன் சண்டையிட்டு வரும் இஸ்ரேலிய படையினரின் பலி எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான கட்டமைப்பு ஒன்று தொடர்பில் அமெரிக்க தூதுவர் அமோஸ் ஹொட்ச்டைனுடன் ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு ஒன்றை லெபனான் பேச்சுவார்த்தையாளர்கள் எட்டியதாக அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் நபிஹ் பெர்ரியின் அரசியல் உதவியாளர் அல் ஹசன் கலீல் குறிப்பிட்டுள்ளார்.
அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு நேற்று முன்தினம் பேட்டியளித்த அவர், ஹொட்ச்டைன் ஊடாக இஸ்ரேலுக்கு இந்த முன்மொழிவு அளிக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேலிடம் இருந்து லெபனானுக்கும் இன்னும் பதில் அல்லது திருத்தங்கள் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு உடன்படிக்கையும் 2006 இல் நிறைவேற்றப்பட்ட 1701 ஆம் இலக்க ஐ.நா. தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி இஸ்ரேலுடனான தெற்கு எல்லையில் லெபனான் அரச தரப்புக்கு அப்பால் ஆயுதங்கள் அல்லது ஆயுதமேந்தியவர்கள் இன்றி லெபனான் இராணுவம் நிலைகொள்ள உதவுவதாக அமையும்.
இதேவேளை காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் காசா நகரின் மேற்காக ஷெய்க் ரத்வான் பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற செல் குண்டு தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முற்றுகையில் உள்ள காசாவில் நிலவும் மோசமான மனிதாபிதமான நெருக்கடி தொடர்பில் உதவிக் குழுக்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றன.
‘வலுக்கட்டாய வெளியேற்றங்கள் பரந்த அளவில் இடம்பெற்று வருவதோடு அரச கொள்கையின் ஓர் அங்கமாக திட்டமிட்ட வகையில் இது முன்னெடுக்கப்படுவதற்கான ஆதாரங்களை மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.
அவ்வாறான செயற்பாடுகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக அமைகின்றன’ என்று மனித உரிமை கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வடக்கு காசாவில் இஸ்ரேலிய இராணுவம் அண்மைய நாட்களில் முன்னெறி வரும் நிலையில் அங்குள்ள ஆயிரக்கணக்காக மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்தத் தாக்குதல்களில் 2,000க்கும் அதிகமானோர் கடந்த ஒரு மாதத்திற்குள் வடக்கு காசாவில் கொல்லப்பட்டிருப்பதாக காசா அரச வட்டாரம் தெரிவித்துள்ளது.
காசாவில் ஓர் ஆண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் 43,700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
நியூசிலாந்தில் சட்டமூலத்தை கிழித்து கடும் எதிர்ப்பு!
நியூசிலாந்தில் மக்களுக்கு எதிரான திருத்த சட்டமூல நகலை கிழித்து இளம் எம்பி முழக்கம் எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மூலத்தின் நகலை கிழித்து இளம் எம்பி 22 வயதான ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹக்கா முழக்கத்தில் ஈடுபட்டதுடன் மற்ற உறுப்பினர்களும் அவருடன் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர். இதனால், அவைத் தலைவர் ஜெர்ரி பிரவுன்லி அமர்வை தற்காலிகமாக நிறுத்தி ஒத்திவைத்தார்.
1840 ஆம் ஆண்டு அரசுக்கும், மவோரி பழங்குடியின மக்களுக்கும் இடையே போடப்பட்ட வைடாங்கி ஒப்பந்தத்தின்படி, அவர்கள் பயன்படுத்திய நிலங்களை தாங்களே வைத்துகொள்ளலாம் என்றும், ஆங்கிலேய அரசுக்கு ஒப்படைக்காமல் தங்கள் நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பழங்குடி மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்திருத்தம் நியூசிலாந்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் மற்றும் அவரது தந்தை இருவரும் தே பதி மவோரி தொகுதியில் போட்டியிட்டனர். ஆனால், இளம் வேட்பாளர் என்ற முறையில் ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நன்றி தினகரன்
ரஷ்ய ஜனாதிபதி புடினை விமர்சித்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பாக புடினை கடுமையாக விமர்சித்த சமையல்காரரான அலெக்ஸி ஜிமின் மர்மமாக உயிரிழந்துள்ளார். முன்னதாக அவரது விமர்சனங்களால் குக்கிங் வித் அலெக்ஸி ஜிமின்’ என்ற அவரது ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக புடினை விமர்சித்த ‘பிரபல சமையல்காரரான அலெக்ஸி ஜிமின் சேர்பியாவில் உள்ள ஹோட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி புடின் கிரீமிய தலைவர்களுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அலெக்ஸி ஜிமின் விமர்சித்து ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.
பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்ட அலெக்ஸி ஜிமின் ரஷ்யாவை விட்டு வெளியேறி லண்டனில் குடிபெயர்ந்தார். அங்கிருந்தே ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று மக்களிடையே புகழ்பெற்றார்.
பின்னர் 2022ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்ய போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினை அலெக்ஸி ஜிமின் தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வந்தார். இதனையடுத்து ‘குக்கிங் வித் அலெக்ஸி ஜிமின்’ என்ற அவரது ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தான் எழுதிய புத்தகத்தை விளம்பரப்படுத்த செர்பியாவிற்கு அலெக்ஸி ஜிமின் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ஹோட்டல் அறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டார். நன்றி தினகரன்
டிரம்பின் குடியரசு கட்சி அரசில் முழு கட்டுப்பாடு
அமெரிக்க அரசாங்கத்தில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையைப் பிடித்துள்ளனர்.
ஜனாதிபதி பதவி, செனட் சபை, மக்களவை என அனைத்தும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
முன்னதாக வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியாக சேவையாற்றிய முதல் இரண்டு ஆண்டுகளில் டொனால்ட் டிரம்ப்பும் ஜோ பைடனும் அத்தகைய கட்டுப்பாட்டை அனுபவித்தனர். அதனால் ஜனாதிபதிக்கு நினைத்ததைச் செய்ய முடியும் என்பதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் தமது கொள்கைகளை விரைவாகச் செயல்படுத்த முனையலாம். ஆனால் குடியரசுக் கட்சியின் மிதவாத உறுப்பினர்கள் அவற்றை ஆதரிக்காமல் போகும் சாத்தியமும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டிரம்ப், தலைமைச் சட்ட அதிகாரியாக மேட் கேட்ஸை நியமித்திருப்பதோடு இராஜாங்கச் செயலாளராக மார்கோ ரூபியோவையும் தேசியப் புலனாய்வு பணிப்பாளராக துள்சி கப்பார்ட்டையும் நியமித்துள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment