மாநடிகர் என்றால் கதாநாயகனாக நடித்து வசூலில் சாதனை படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மக்கள் மனதில் படியுமளவுக்கு இயல்பாக நடிப்பவர்கள் கூட மாநடிகர்களே. திருநெல்வேலியில் கீழப்பாவூரில் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல்தேதியில் பிறந்த இவர் தனது என்பதாவது வயதில் நவம்பர் ஒன்பதாம் நாள் 2024ல் சென்னையில்
காலமானார்.
இவர் பழகுவதற்கு இயல்பானவர். மெல்லினம் என்ற தமிழ் மாதஇதழ் மெல்பனில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வந்து கொண்டிருந்தது. அதில் நானும் எனது கவிதை கதை கட்டுரைகளை எழுதி வந்தேன். அப்போது ஆசியர் குழுவில் இருந்த ஒருவர் முகநூல் மூலம் ஏற்பட்ட அறிமுகத்தை வைத்து நடிகர் டெல்லி கணேஷிடம் தொடர்பு கொண்டிருக்கிறார்.
தொடர்பு கொண்டவர் மெல்பனில் ஒரு மாத இதழ் நடத்துகிறோம் தாங்கள் அதில் எழுத முடியுமா என்று கேட்டிருக்கிறார். உடனே அவர் மறுப்பேதும் சொல்லாமல் அவரது வாழ்க்கை வரலாற்றை கட்டுரையாக எழுத அது மெல்லினம் இதழில் வந்தது.
நான் ஒருசமயம் இந்தியா சென்றபோது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றிருந்தேன். திருநெல்வேலியில் உள்ள RR Hotel என்ற விடுதியில் தங்கி இருந்தேன். அப்போது அதே விடுதியில் தங்கியிருந்த நடிகர் டெல்லி கணேஷ் அவர்களை சந்திக்க நேர்ந்தது. நாடறிந்த அவரிடம் சென்று நானும் இந்த ஊர்க்காரன் நீங்கள் பிறந்த அதே கீழப்பாவூரில்தான் நானும் பிறந்தேன் என்றேன்.
அப்படியா என்றவரிடம் நான் இப்போது மெல்பனில் இருக்கிறேன் மெல்லினம் இதழில் எழுதி வருகிறீர்கள் அல்லவா அந்த இதழில் சங்கர சுப்பிரமணியன் என்ற பெயரில் எழுதிவருகிறேன் என்று கூறி அறிமுகப் படுத்திக் கொண்டேன். மறந்தே
போய்விட்டேன் அடுத்த இதழுக்கு இன்று எழுதவேண்டும் என்று சொன்னவர்
அந்த சிறிது நேர சந்திப்பில் அவருடன் ஒரு படம் எடுத்துக்கொள்ள விரும்புவதைச் சொன்னேன். இன்முகத்துடன் சம்மதிக்க படமும் எடுத்துக் கொண்டேன். என்றோ சந்தித்து சிறிது நேரம் உரையாடி படமும் எடுத்துக் கொண்ட ஒரு நடிகர் இன்று இல்லை என்பதை எண்ணும்போது வருத்தமாயுள்ளது.
டெல்லி தட்சின பாரத நாடக சபா என்ற நாடக குழுவில் உறுப்பினராக இருந்தார். இந்திய விமானப்படையில் 1964 முதல் 1974 வரை பணிபுரிந்த இவர் திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வத்தால் பணியைவிட்டு விலகினார். காத்தாடி ராமமூர்த்தி நாடக குழுவில் இணைந்து பணிபுரியும்போதுதான் இவருக்கு டௌரி கல்யாணம் என்ற படத்தில் குசேலராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்படத்தில் இவரது நடிப்பு டைரக்டர் பாலசந்தரை கவர்ந்தது. அதனால் பாலசந்தரின் பட்டண பிரவேசம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தன் அபாரத் திறமையைக் காட்டினார். அதன் பின் 400 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடித்த படம் இந்தியன் 2.
நன்றி மறவாதவர் என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இவருக்கு கிடைத்த பாராட்டுக்கும் புகழுக்கும் காரணம் அடிக்கடி நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்ததுதான் என்பதை அழுத்திச் சொன்னார்.
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதின்
சிறப்பு விருதை பசி என்ற படத்தில் சிறப்பாக நடந்ததற்காக 1979ல் வழங்கப் பட்டது. தமிழக அரசின் கலைமாமணி போன்ற பல விருதுகளை 1994ல் அன்றைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து பெற்றார்.
இந்தி, தெலுங்கு மற்றும் மலயாளப் படங்களிலும் நடித்துள்ள இவர் பல திரைப்படங்களில் நடிகர்களுக்காக பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இது தவிர பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இப்படி பன்முகம் கொண்ட நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பது கவலையளிக்கிறது.
No comments:
Post a Comment