நான் அவனில்லை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் திரையில் காதல் மன்னன் என்ற பட்டத்துடன் முப்பது


ஆண்டுகளுக்கு மேலாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். நிஜ வாழ்விலும் காதல் மன்னனாகத் திகழ்ந்த ஜெமினி பண விஷயத்தில் மிக கட்டுப்பாட்டுடனேயே செயல்பட்டார். ஏனைய நடிகர்களை போலன்றி தான் சம்பாதிக்கும் பணத்தை நல்ல விதத்தில் முதலீடு செய்யும் சாமர்த்தியமும் அவரிடம் இருந்தது. இப்படி இருந்த அவருக்கு எனோ போதாத வேளை சொந்தமாகப் படம் தயாரிக்கும் ஆசை தோன்றியது. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள , தனக்கு தொடர்ந்து சான்ஸ் தந்து கொண்டிருந்த கே. பாலசந்தர் இயக்கத்தில் அவர் தயாரித்த படம்தான் நான் அவனில்லை. 


நிஜ வாழ்விலும் ரொமான்டிக் ஹீரோவான ஜெமினிக்கு இந்தப்

படத்திலும் பல காதலிகள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெண்ணை காதலித்து மணந்து பின்னர் ஏமாற்றி கை விட்டு அவளின் சொத்துகளை சூறையாடுவதுதான் அவரின் பாத்திரம். நெகட்டிவ்வான இந்த வேடத்தில் துணிந்து அவர் நடிக்க முன் வந்ததை பாராட்டித் தான் ஆக வேண்டும். அது மட்டுமன்றி பல வேடங்களில் தோன்றி ஏமாற்றி நடமாடும் பாத்திரத்தை மிகை இன்றி, குறை இன்றி செய்திருந்தார் ஜெமினி.
 
படத்தில் அவருக்கு ஆறு ஜோடிகள். லஷ்மி,ஜெயசுதா, ஜெயபாரதி , ராஜசுலோச்சனா, காந்திமதி, பி ஆர் வரலஷ்மி, என்று எல்லோர் வாழ்விலும் வலம் வருகிறார் ஜெமினி. டேவிட் ஆப்ரஹாம் என்ற பேர்வழி , நாஞ்சில் நம்பி, காஞ்சிபுரம் ஆச்சாரி, அக்பர் அலி, லஷ்மணன் ஷர்மா, சஹாதேவ சாஸ்த்ரி,ஹரிஹரதாஸ் ஸ்வாமிகள், ஜாக் ஸோலோமன், சத்ருக்கன் மேனன் என்று பல பெயர்களில் நடமாடி பெண்களையும் , பணத்தையும் மோசடி செய்து தன்னுடைய சாமர்த்தியத்தால் சட்டத்தையும் ஏமாற்றப் பார்க்கிறான். இறுதியில் அவனுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பதே கிளைமாக்ஸ்.


படத்தில் லஷ்மியின் பாத்திரம் மிருதுவானது. ஜெயசுதா அப்பாவி பெண்ணாக தோன்றி பின்னர் கபேரே டான்சராக மாறி கிளப்பில் ஆடுகிறார். ராஜசுலோச்சனா மத்திய வயதில் அன்புக்காக ஏங்குபவராக வந்து நெகிழ்வை ஏற்படுத்துகிறார். நீதிபதி பாத்திரத்துடன் பொருந்துகிறார் பூர்ணம் விசுவநாதன். கமல்ஹாசன் சில காட்சிகளில் வருகிறார். தேங்காய் சீனிவாசனின் ஜோனிவாக்கர் பாத்திரம் ரசிக்கும்படி இருந்தது. இவர்களுடன் அசோகன், செந்தாமரை , எம் என் ராஜம், லீலாவதி, டிபிஸ்ட் கோபு, ஓருவிரல் கிருஷ்ணராவ் ஆகியோரும் நடித்திருந்தனர் . பாலசந்தர் படங்களில் எப்போதும் வரும் ஜெயந்தி, ராஜஸ்ரீ இருவரும் இதில் ஏனோ மிஸ்ஸிங்!

படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத, எம் எஸ் விஸ்வநாதன்

இசையமைத்தார். ராதா காதல் வராதா, மந்தார மலரே மந்தார மலரே , ஆகிய பாடல்கள் பிரபலமாகின. பி எஸ் லோகநாத் படத்தை ஒளிப்பதிவு செய்திருந்தார். 

படம் முழுவதும் நீதிமன்ற காட்சிகளும், பிளாஷ் பாக் காட்சிகளாலும் படமாக்கப்பட்டிருந்தன . ஆனாலும் காட்சிகளை தொய்வில்லாமல், குழப்பமில்லாமல் படமாக்கியிருந்தார் இயக்குனர். படத்தின் முடிவையும் வித்தியாசமாக வழங்கியிருந்தார் அவர்.
 
இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு , அதற்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கியிருந்தார் பாலசந்தர். வசனம் , இயக்கம் எல்லாவற்றிலும் அவரின் திறமை நிரூபணமானது. கதாநாயகனை கெட்டவனாக காட்டி படம் எடுக்கும் அவரின் துணிவு பாராட்டப்பட்ட போதும், அதை தயாரித்து நடித்த ஜெமினியின் நடிப்பு சிலாகிக்கப் பட்ட போதும் , ரசிகர்களின் வரவேற்பை படம் பெறவில்லை. இதன் காரணமாக ஜெமினி மீண்டும் படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கவே இல்லை.
 

அரங்கேற்றம்,சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை என்று வெற்றி படங்களை தந்து கொண்டிருந்த பாலசந்தர் இப் படத்தை பொறுத்த வரை நான் அவனில்லை என்று சொல்லும் படி செய்து விட்டது நான் அவனில்லை படம்! ஆனாலும் 2007ம் ஆண்டு இதே படம் இதே பெயரில் ஜீவன், சினேகா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுக் கொண்டது. நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து ஜெமினியின் 104 வது பிறந்த நாள் நவம்பர் 17ம் திகதியாகும்.

No comments: