பிரமாண்டமான பெரும்பான்மையின் உட்கிடையான ஆபத்து

 November 16, 2024


பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பிரமாண்டமான வெற்றியைப் பெற்று வரலாறு படைத்திருக்கிறது. 1977 ஜூலை பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி அன்றைய பாராளுமன்றத்தின் 169 தொகுதிகளில் 144 தொகுதிகளை கைப்பற்றி ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தை பெற்ற பிறகு மீண்டும் அத்தகைய ஒரு பிரமாண்டமான வெற்றியை முதல் தடவையாக இலங்கை கண்டிருக்கிறது.

தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையிலேயே அன்று ஐக்கிய தேசியக் கட்சி சாதனையைப் படைத்தது. ஆனால், விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக எந்தவொரு கட்சியுமே இதுவரை பெற்றிராத நிலையில் இந்தத் தடவை பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சாதித்துக் காட்டியிருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகளின் அனுபவக்குறைவு, பாராளுமன்ற விவகாரங்களை கையாள்வதற்கான அறிவின்மை பற்றியெல்லாம் எதிரணியினர் முன்வைத்த கருத்துகளை பொருட்படுத்தாமல் நாட்டு மக்கள் ஜனாதிபதி திஸநாயக்க தனது வாக்குறுதிகளை நிறைவற்றுவதற்கு வசதியாக பலம்பொருந்திய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான தெளிவான ஆணையை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின் தொடக்கத்தில் ஜனாதிபதியும் அமைச்சர் விஜித ஹேரத்தும் பாராளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களால் நிரப்புமாறும் எதிர்க்கட்சியே தேவையில்லை என்றும் மக்களிடம் கூறினார்கள். ஆனால், அதற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து அவர்கள் இருவரும் அந்தக் கருத்துகளை பிறகு தவிர்த்து வந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக, ஜே. வி.பியின் தலைவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த அரசாங்கங்கள் எதேச்சாதிகாரத்தனமாக நடந்து அதிகார துஸ்பிரயோகங்களை செய்ததை சுட்டிக்காட்டி தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டாம், ஒழுங்காக அரசாங்கத்தை நடத்துவதற்கு உறுதியான ஒரு பாராளுமன்ற பெரும்பான்மையை தருமாறு மக்களை கேட்டுக்கொண்டார்கள்.

அவர்கள் அவ்வாறு கேட்டுக்கொண்டதையும் பொருட்படுத்தாமல் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக 19 ஆசனங்களுடனான ஆணையை கொடுத்திருக்கிறார்கள். உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் தங்களுக்கு ஒரு பாராளுமன்ற பெரும்பான்மையைத் தருவார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் எதிர்பார்த்திருந்தாலும் இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரமாண்டமான ஒரு பெரும்பான்மையை தருவார்கள் என்று நிச்சயமாக நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

அத்தகைய பெரும்பான்மை பலம் தங்களுக்கு கிடைத்திருப்பது குறித்து ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் பெருமைப்பட்டாலும் அதில் உட்கிடையாக இருக்கும் ஆபத்தையும் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறோம். பெரிய எதிர்பார்ப்புடன் தங்களை ஆட்சியதிகாரத்துக்குக் கொண்டு வந்திருக்கும் மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதில் தங்களுக்கு இருக்கும் தலையாய பொறுப்பை உணர்ந்தவர்களாக ஜனாதிபதியும் அமையவிருக்கும் புதிய அரசாங்கமும் நடந்து கொள்ளவேண்டும் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.    நன்றி ஈழநாடு 

No comments: