November 16, 2024 6:08 am
நாட்டில் முறைமை மாற்றத்தை விரும்பிய தென்னிலங்கை பெரும்பான்மையின மக்களுடன் தற்போது வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டுள்ளதை தேர்தல் பெறுபேறுகள் மூலம் அறிய முடிகின்றது
இலங்கையின் பாரம்பரிய கட்சிகளுக்கு பாரிய பின்னடைவு
வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பூசல்கள் தீவிரமடைந்துள்ளதால், புதிய தெரிவை நாடும் தமிழ் மக்கள்!
இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில், ஆளும் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) கூட்டணிக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வரலாற்று ரீதியான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இந்த ஆசனங்களில் 18 ஆசனங்கள் தேசியப்பட்டியல் மூலம் கிடைக்கப் பெற்றவையாகும்.
தேசிய மக்கள் சக்தியின் இவ்வெற்றியானது இலங்கையின் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தமாகப் பார்க்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 இடங்கள் மட்டுமே (தேசியப் பட்டியல் 1) பெற்று படுதோல்வி கண்டுள்ளது. 2020- ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 225 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 75 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்துவரும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணித்துள்ளனரென்பதை தேர்தல் முடிவுகள் புலப்படுத்துகின்றன.
பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது அது குறித்து பேட்டியளித்த ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க, ‘தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறுவது உறுதி’ என நம்பிக்கை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தேர்தல் முடிவுகள் வரலாற்று ரீதியான வெற்றியாக அமைந்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் பரம்பரை பரம்பரையாக குடும்ப ஆட்சியே ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் இந்த மாபெரும் வெற்றி சர்வதேச ரீதியில் கவனம் பெறுகிறது.
இது இவ்விதமிருக்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வசம் கடந்த முறை காணப்பட்ட யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம், இம்முறை தேசிய மக்கள் சக்தியின் வசமாகியுள்ளது. யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
முதன் முறையாக வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு அதிகம் பெருகியுள்ளதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
அதேசமயம், கண்டி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்திருந்தது. ஆனால், நான்காவது இடத்தைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி இம்முறை முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெற்றிருந்த வாக்குகள் இம்முறை அதிகரித்துள்ளன.
அத்துடன், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்திய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை எவ்வித ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளாது பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை இம்முறை பெற்றுக் கொண்டதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
திகாமடுல்ல மாவட்டத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்திருந்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது. அப்போது எட்டாவது இடத்தைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி இம்முறை முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது.
முன்னர் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன இம்முறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முதல் இடத்தை பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி, இம்முறை தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அங்கு தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றதுடன், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
மூன்றாவது இடத்தை கடந்த முறை பெற்றுக்கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அதே மூன்றாவது இடத்தில் இம்முறையும் காணப்படுகின்றது. கடந்த தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இம்முறை பாரிய பின்னடைவை திருகோணமலை மாவட்டத்தில் எதிர்நோக்கியுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்த நிலையில், இம்முறை அந்தக் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்தது. ஆனால், அப்போது மூன்றாவது இடத்தை பெற்ற தேசிய மக்கள் சக்தி இம்முறை முன்னிலை வகிக்கிறது.
நாட்டில் முறைமை மாற்றத்தை விரும்பிய தென்னிலங்கை பெரும்பான்மையின மக்களுடன் தற்போது வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டுள்ளதை தேர்தல் பெறுபேறுகள் மூலம் அறிய முடிகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கணிசமான ஆதரவு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்தாலும், இந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் நேரடியாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பூசல்கள் தீவிரமடைந்துள்ளதால், தமிழ் மக்கள் தற்போது புதிய தெரிவுக்கு வந்துள்ளனரென்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாகக் காணப்பட்ட ராஜபக்ஷ குடும்பம், இம்முறை பாராளுமன்ற அரசியல் களத்தில் இருந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது.
மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மேலும் பல ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் நேரடி அரசியல் ஈடுபட்டு வந்த நிலையில், இம்முறை தேர்தலில் சமல் ராஜபக்ஷவின் புதல்வரான ஷஷிந்திர ராஜபக்ஷ மாத்திரமே தேர்தலில் போட்டியிட்டார். அவரும் தோல்வியடைந்துள்ளார். ஷஷிந்திர ராஜபக்ஷ மொனராகலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட போதிலும், அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம்கூடக் கிடைக்கவில்லை.
நாமல் ராஜபக்ஷவின் பெயர், தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டதுடன், ஏனைய ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்ற களத்தில் இருந்து வெளியேறியிருந்தனர்.
இதன்படி, ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் எவரும் இந்தத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. தேசியப் பட்டியல் ஆசனமொன்று அக்கட்சிக்குக் கிடைத்துள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்தினர் சுமார் 87 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில், தமது சொந்த மண்ணில் தேர்தல் ஒன்றில் போட்டியிடாத முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக விளங்கிய சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இத்தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்து எதிர்க்கட்சி ஸ்தானத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
தேசியப் பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்கலாக தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும், பொதுஜன பெரமுன 3 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன. நன்றி தினகரன்
No comments:
Post a Comment