‘திசை’ பத்திரிகையின் வழிகாட்டியான இலக்கிய ஆளுமை மு. பொன்னம்பலம்

 November 16, 2024 12:21 pm 

‘திசை’ வாரப் பத்திரிகையின் ஆசிரியராக ஈழத்து எழுத்தாளர் மு. பொன்னம்பலம் செயற்பட்டார். அது, ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான பத்திரிகையாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

போர்க்கால சூழ்நிலையில் அன்று அவர் இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை உத்வேகப்படுத்தியதில் அலை யேசுராசாவுடன் மு. பொன்னம்பலம் அவர்களின் பங்களிப்பானது மிகவும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் மு. பொன்னம்பலம் அவர்கள் கலை விமர்சகராக நன்கு அறியப்பட்டவர். கவிதை, சிறுகதை, நாவல் போன்ற கலை வடிவங்களை அவர் பரிசோதனைக் களங்களாகக் கையாண்டுவந்தவர். அத்துடன் மறைந்த மு. தளையசிங்கம் அவர்களின் சகோதரர்.

மு. பொன்னம்பலம் யாழ் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1939இல் பிறந்த மு. பொன்னம்பலம் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களித்திருத்து வந்துள்ளார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது.

இலக்கிய ஆளுமை மு பொ என அழைக்கப்பட்ட மு. பொன்னம்பலம் அவர்கள் 06. 11 . 2024 புதன் கிழமை கொழும்பில் காலமானார். சிறுவயதிலிருந்தே தனது தமையனார் மு. தளையசிங்கத்துடன் சேர்ந்து கவிதை, கதை மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தவர்.1950 களின் பிற்பகுதிகளில் சுதந்திரன் மற்றும் தினகரன் பத்திரிகைகளின் சிறுவர் பகுதிக்கு கட்டுரைகள், கதைகள் எழுத ஆரம்பித்த இவரது கைகள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருந்தன.

தமிழிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் படைப்புகளை தந்திருப்பது அவரின் மற்றுமொரு தனிச்சிறப்பாகும்.

அவர் எழுதிய ‘திறனாய்வின் புதிய திசைகள்’ என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டொலர் வழங்கியது. அத்துடன் ‘தமிழ் நிதி’ விருதை கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கிக் கௌரவித்தது.

இதுவரை இவர் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை/ விமர்சனம், மொழிபெயர்ப்பு மற்றும் சிறுவர் ஆக்கங்கள் என பல வடிவங்களிலும் தனது 30 இற்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ஆங்கில கவிதையும் உள்ளடங்கும்.

இவரது பல நூல்கள் இதுவரை பல விருதுகளை பெற்றுள்ளன. கடலும் கரையும் (சிறுகதை), வடகிழக்கு மாகாண விருது 1998, சுதந்திர இலக்கிய விருது 1998, கொழுப்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் விருது – 1998இல் பெற்றுள்ளார்.

அதேவேளை நோயில் இருத்தல் (நாவல்) – அரச சாகித்திய விருது – 2000, முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை (சிறுகதை) – வடகிழக்கு மாகாணசபை விருது 2010, திறனாய்வின் புதிய திசைகள் (விமர்சனம்) , வடகிழக்கு மாகாண சபையின் சிறந்த நூலுக்கான விருது 2011, தான்ஸ்ரீ விருது – மலேசியா அனைத்துலகப் புத்தகப் போட்டியில் முதற் பரிசு 2012இலும் பெற்றுள்ளார்.

கவிதையில் துடிக்கும் காலம் (கவிதை)

அரச சாகித்திய விருது – 2012, சிறந்த நூலிற்கான தமிழியல் விருது – 2012,

ஒயாத கிளர்ச்சி அலைகள் (மொழிபெயர்ப்பு) – அரச சாகித்திய விருது – 2015இல் பெற்றுள்ளார்.

இது தவிர இவரது இலக்கியசேவையை பாராட்டி பல கெளரவ விருதுகளும் பாராட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

American Library of Congress (New Delhi office) மூலம் கிடைத்த தெற்காசிய இலக்கிய பதிவாக்கம் செயற்திட்டத்தில் (South Asian Literary Recording Project) 2001இல் பங்குபற்றிய ஒரே ஒரு இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஆவார்.

இதைத் தவிர அரச விருதான ‘சாகித்தியரத்னா’ விருதிற்காக தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்வளவு விருதுகளையும் கெளரவிப்புகளையும் பெற்றாலும் எவ்வித தற்பெருமையும் கொள்ளாமல் எப்போதும் எளிமையாக வாழ்ந்து வந்தவர் மு. பொ.

ஐங்கரன் விக்கினேஸ்வரா - நன்றி தினகரன் 

No comments: