November 23, 2024 12:53 pm
சிட்னியில் கந்தையா நாகேந்திரத்தின் சிறுகதை தொகுப்பான ‘வாத்தியார்’ எனும் நூல் இன்று மாலை 05. 30 மணிக்கு பிளாக் டவுன் உயர்தர (Black town High school) பாடசாலையில் வெளியாகவுள்ளது.
இந்நூல் வெளியீட்டின் தலைமை உரையை திரு. ஆசி கந்தராசா வழங்குகின்றார். இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் பல்வேறு இலக்கிய ஆர்வலர்களும் பங்குபற்றி உரையாடவுள்ளனர்.
‘வாத்தியார்’ சிறுகதை தொகுப்பு வெளியீடும் கருத்து பகிர்தல் நிகழ்ச்சியில் சிவத்திரு குணரத்தினம் பார்த்தீபன், திருமதி துசியந்தி பார்த்தீபன் ஆகியோர் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைப்பர். தமிழ்த்தாய் வாழ்த்தை செல்வி அஸ்வி சிவச்சந்திரன் வழங்குவார். வரவேற்புரையை அனுஜன் நாகேந்திரம் மற்றும் அர்ச்சனா நாகேந்திரம் ஆகியோர் வழங்குவர். வாத்தியார் சிறுகதை நூல் அறிமுகத்தை திருமதி. சௌவுந்தரி கணேசன் ,புனைகதைகளும் ஆவணப்படுத்தலும் பற்றி முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன் ஆகியோர் உரையாற்றுவர். எழுத்தாளரின் கருத்துகள் பற்றி ஐங்கரன் விக்கினேஸ்வரா உரையாடுவர்.
கணித ஆசிரியரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீக விஞ்ஞான பட்டதாரியான கந்தையா நாகேந்திரம் தனது ஆசிரியர் பட்டப் பின் படிப்பை நியூசிலாந்தில் பெற்றுக்கொண்டார். ஆரம்ப காலங்களில் இலங்கை, சாம்பியா ஆகிய நாடுகளில் ஆசிரியராக பணிபுரிந்தவர்.
கற்பித்தலின் மீது இருந்த ஈர்ப்பினால் இருபது வருடங்களுக்கு மேலாக அவுஸ்திரேலியாவில் உயர் பாடசாலை ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார். கருத்துக்களையும் சிந்தனைகளையும் எழுத்தாக்கி, சமுதாயத்தில் விதைக்கும் ஆசிரியர், தனது பெயரில் மட்டுமல்லாமல் செயலிலும் கேந்திர மையத்தன்மை கொண்டவர். தனது சொற்பிரயோகங்களை நகைச்சுவையுடனும், அன்புடனும், தேவையாயின் ஆயுதமாகவும் கையாளுபவரின் எழுத்துகளில் இத்தகைய தன்மைகள் வெளிப்படுகின்றன.
இந்நூலின் ஆசிரியர் தனது கதைகளில் வாழ்வியல் தத்துவங்களை வலியுறுத்தி, தான் கூறவந்த கருத்துக்களை வாசகர்களின் மனதில் அழிக்க முடியாத வகையில் துல்லியமாக வடித்துள்ளார்.
மனித உறவுகள், வர்க்கம், சாதி தொடர்பான சமூக பிரச்சினைகளை முன்வைத்து, எளிய உரைநடையில் சமுதாயத்தின் பல்வேறு அடுக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாத்திரங்களின் மூலம் தனது சிறுகதைகளை படைத்துள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment