November 22, 2024
புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நேற்றைய தினம் காலை ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தனது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தினார்.
பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர்களை ஜனாதிபதிகள் ஆரம்பித்து வைக்கும் போது அந்த நிகழ்வுகளை ‘சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தல்’ என்றே அழைப்பதுண்டு. ஆனால் ஜனாதிபதி திஸநாயக்க எந்தவிதமான பழைய சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் – படை அணிவகுப்புகளோ அல்லது வீண் செலவில் ஆரவாரங்களோ எதுவுமின்றி எளிமையான முறையில் வந்து கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தியதை காணக்கூடியதாக இருந்தது.
அவரது இந்த செயல் முன்னுதாரணமானதும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும். அவரது அரசாங்கத்தின் வருங்கால நடவடிக்கைகளில் இவ்வாறாக பல்வேறு முன்னுதாரணங்களை எதிர்பார்க்கலாம். ஜனாதிபதி தனது உரையில் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை விளக்கிக்கூறியிருக்கிறார். அடுத்த மாதம் இடைக்கால பட்ஜெட் அல்லது கணக்கு வாக்கெடுப்பும் அடுத்த வருடம் முழுமையான வரவு – செலவு திட்டமும் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
இனவாத அரசியலும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்ற பிரகடனத்தையும் அவர் சபைக்கும் அதன் ஊடாக நாட்டுக்கும் அறிவித்தார். அதுவும் வரவேற்கப்பட வேண்டியதே. இனவாத அரசியலும் மதவாதமும் நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுகளை நன்குணர்ந்தவராக அவர் அந்த உறுதிமொழியை வழங்கியிருக்கிறார். இதுகாலவரையில் ஓர் இனத்தை இன்னோர் இனத்துக்கு எதிராக தூண்டிவிட்டு பெரும்பான்மையினவாத அணிதிரட்டலைச் செய்து நாட்டு மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்திய அரசியல்வாதிகளில் எவரும் தாங்கள் செய்வது இனவாத அரசியல் என்று சொன்னதில்லை.
தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே தங்கள் இலட்சியம் என்றுதான் அவர்கள் கூறினார்கள். இன, மத வேறுபாடுகள் கடந்து இலங்கையர் என்ற அடையாளம் பற்றியும் அவர்கள் பேசினார்கள். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் எல்லாமே சிறுபான்மைச் சமூகங்களை தேசிய அரசியல் நீரோட்டத்தில் இருந்து அந்நியப்படுத்தியதன் விளைவாக அந்த சமூகங்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்குமே பேரழிவை ஏற்படுத்தின. அதுவே சுதந்திரத்தின் பின்னரான இலங்கை அரசியல் வரலாறு.
ஆனால், இனவாத அரசியலையும் மதத்தீவிரவாத்தையும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று பிரகடனம் செய்திருக்கும் ஜனாதிபதி, இனவாத அரசியலின் விளைவாக நாட்டில் தோன்றிய பிரச்னைகளுக்கு பயனுறுதியுடைய தீர்வுகளைக் காணவேண்டும் என்ற புரிதலுடன் தான் அவ்வாறு செய்திருக்கிறார் என்று நம்புகிறோம். இலங்கையின் முன்னைய எந்தவொரு பிரதமருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ கிடைத்திராத ஆணையை அதாவது முழுநாடும் தழுவிய ஆணையை பெற்றிருக்கும் ஜனாதிபதி திஸநாயக்க கடந்த காலத்தில் ஆட்சியாளர்களினால் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளினாலும் அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளினாலும் நாட்டுக்கே நேர்ந்த அவலத்தை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு புரிய வைத்து அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய ஒரு தகுநிலையில் இருக்கிறார்.
வடக்கு, கிழக்கில் சிறுபான்மைச் சமூகங்கள் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும்போது தங்களது நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை எல்லாம் அலட்சியம் செய்துவிட்டு அவ்வாறு செய்யவில்லை. புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கப்போவதாக உறுதியளித்திருக்கும் ஒரு ஜனாதிபதியிடமிருந்தாவது தங்களது நீண்டகாலப் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கக்கூடும் என்று அவர்கள் நம்பித்தான் தங்களை பிரதிநிதித்துவப்படுத்திய பழைய தலைவர்களையும் அரசியல் கட்சிகளையும் நிராகரித்திருக்கிறார்கள்.
இனவாத அரசியலும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்காமல் இருக்கவேண்டும் என்றால் அதே இனவாதமும் மதவாதமும் தோற்றுவித்த பிரச்னைகளுக்கு நிலைபேறான தீர்வுகளை – சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வுகளைக் காணவேண்டும் என்பதை நாம் சொல்லித்தான் ஜனாதிபதி தெரிந்துகொள்ள வேண்டும் என்று இல்லையே! நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment