இலங்கைச் செய்திகள்

பாராளுமன்ற முதல்நாளிலேயே சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா எம்.பி 

ரூ. 2 கோடி காசோலை மோசடி: டக்ளஸுக்கு பிடியாணை

புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

அம்பாறை மாவட்டத்தில் தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பதற்கு மன்னிப்பு கோரிய அர்ச்சுனா



பாராளுமன்ற முதல்நாளிலேயே சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா எம்.பி

- விடாப்பிடியாக எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்வு

November 21, 2024 3:34 pm 0 comment

– இருமுறையும் வேறு ஆசனத்தில் மாறி அமர்ந்த சஜித்
– பாராளுமன்ற ஊழியரின் பணிப்பையும் மீறி செயற்பாடு

10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானதுடன் சபாநாயகர், பிரதி சபாநாயகர் ,குழுக்களின் பிரதித்தலைவர் ஆகியோர் புது முகங்களாகவே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இம்முறை பாராளுமன்றத்தில் 175 எம்.பி.க்கள் புது முகங்களாகவே உள்ளனர்.

10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானதுடன் ஆளும் தரப்பில் அமைச்சர்கள் முன்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் எதிர்க்கட்சியில் எதிர்கட்சித்தலைவர் வழமையாக அமரும் ஆசனத்தில் சபை கூடுவதற்கு முன்னரே யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு எம்.பி.யான இ. அர்ச்சுனா அமர்ந்திருந்தார்.

அது எதிர்கட்சித்தலைவருக்குரிய ஆசனம் என பாராளுமன்ற ஊழியர்களினால் அர்ச்சுனாவுக்கு எடுத்துக் கூறப்பட்டபோதும் அந்த ஆசனத்திலிருந்து எழுந்திருக்க மறுத்த அவர் இன்றைய தினம் எந்த ஆசனத்தில் எவரும் அமர முடியுமென கூறி அடம்பிடித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் சம்பிரதாயப்படி வேறு எம்.பி.க்கள் அமர்வதில்லை என அவர்கள் தெளிவுபடுத்தியபோதும் அர்ச்சுனா எம்.பி. அந்த ஆசனத்திலிருந்து எழுந்திருக்க மறுத்துவிட்டார்.

அத்துடன் அர்ச்சுனா எம்.பி. இந்த நிகழ்வுகளை தனது கையடக்கத் தொலைபேசி ஊடாக நேரலை செய்ததுடன் சத்தியப்பிரமாண ஆவணங்களையும் படம் பிடித்துக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது.

அதனால் சபைக்குள் பிரவேசித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வேறு ஆசனத்திலேயே இன்று அமர்ந்திருந்தார்.

முற்பகல் சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியபோதும் அர்ச்சுனா எம்.பி எதிர்கட்சித்தலைவரின் ஆசனத்திலேயே மீண்டும் அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் வந்த படைக்கல சேவிதர் அது எதிர்கட்சித்தலைவரின் ஆசனம் என்று கூறியபோதும் அவர்களுடன் முரண்பட்டதுடன் ஆசனத்திலிருந்து எழுந்திருக்க மறுத்துவிட்டார்.

பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு முரணாக செயற்பட்ட அர்ச்சுனா எம்.பி.யின் நடவடிக்கை ஏனைய எம்.பி.க்களுக்கும் தெரியவரவே அவர்கள் இவரின் நடவடிக்கையை கேலியாக நோக்கியவாறு சிரித்தனர். அந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் சபைக்குள் பிரவேசித்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வேறு ஆசனத்திலேயே அமர்ந்தார்.

அத்துடன் சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நாமல் ராஜபக்ச ,ரவி கருணாநாயக்க,ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் முன்வரிசையில் அருகருகே அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 





ரூ. 2 கோடி காசோலை மோசடி: டக்ளஸுக்கு பிடியாணை

- தான் செய்த முறைப்பாட்டுக்கு சாட்சியமளிக்க வரவில்லை

November 22, 2024 10:53 am 

ரூ. 20 மில்லியன் மதிப்பிழந்த காசோலை மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சரும் ஈபிடிபி தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று (21) உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் தனக்கு மதிப்பிழந்த காசோலையை கொடுத்து இருபது மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டதாக, டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்களை வழங்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (21) இது பற்றிய வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சாட்சிக்கு உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என சாட்சி சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், நீதவான் அவருக்கு பிடியாணை பிறப்பிக்க உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில், வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்பவர், வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்தும், தலா 10 மில்லியன் ரூபாவுக்கான 2 காசோலைகளை வழங்கி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கின் முதல் சாட்சியான டக்ளஸ் தேவானந்தாவுக்கு சாட்சியமளிக்க நீதிமன்றத்தினால் திகதி வழங்கப்பட்ட நிலையில், அவர் அதற்கு ஆஜராகாமல் தவிர்த்ததாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சம்பத் ஹேவா பத்திரண நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், சாட்சிக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து முறைப்பாடு மீதான விசாரணையை 2025 ஜனவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.   நன்றி தினகரன் 





புதிய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

November 24, 2024

சமூகத்தின் மிக அத்தியாவசியமான சேவை வழங்கும் நிறுவனத்தின் சேவையை எப்போதும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை நேரடியாக கேட்டறிந்த அவர் சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளத் தீர்மானித்தார்.இதே நேரத்தில் யாழ் போதனா வைத்தியசாலை அளிக்கும் சேவையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

‘மனித வாழ்வின் மதிப்பை உயர்த்தும் இவ்வைத்தியசாலையின் ஒவ்வொரு உத்தியோகத்தரும் உண்மையில் நம் சமூகத்தின் நாயகர்கள்’ என்று கூறினார்.மேலும் சுகாதார அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ அவர்களும் விரைவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.இதன்மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நன்றி ஈழநாடு 




அம்பாறை மாவட்டத்தில் தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின

November 24, 2024


சில வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அக்கரைப்பற்று சந்தைப்பகுதி உள்ளிட்ட பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த பலத்த மழை இன்று காலையும் பெய்த நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திலும் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்தநிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெள்ளநீர் வழிந்தோடும் பிரதான கழிமுகப் பிரதேசமான சின்னமுகத்துவாரத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றி வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணிகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் இன்று காலை முன்னெடுத்தார்.

ஜே.சி.பி வாகனங்களின் உதவியுடன் கழிமுகப்பிரதேசம், நீர் வழிந்தோடும் வகையில் அகழ்ந்து விடப்பட்டது.   நன்றி ஈழநாடு 





பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பதற்கு மன்னிப்பு கோரிய அர்ச்சுனா

November 24, 2024

10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக மன்னிப்புக் கோருவதாக யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

சிங்கள யூடியூப் நிகழ்ச்சியொன்றில் இன்று (23) கலந்து கொண்ட போது அர்ச்சுனா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தற்குறித்தனமாக நடந்து கொள்ளும் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து குழப்பம் விளைவித்த சமயத்தில் அர்ச்சுனா பேஸ்புக் நேரலையில் அதனை வெளியிட்டு தமிழன்டா என குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது   நன்றி ஈழநாடு 



No comments: