திரைச்சீலையூடே தெரிந்த அம்முகம்!


….சங்கர சுப்பிரமணியன்.



நண்பனை நாடி அவன் வீடு வந்த எனக்கு
பக்கத்து வீட்டிலேதோ நகர்வது தெரிய

பார்த்தாலே தெரியும் அருகிருந்த வீடதில்
காற்றால் சாளரத்தில் ஏதோ நகர்ந்திட

கூர்ந்து பார் என என் மனமும் சொல்லிட
உண்மை அறிந்திட நானும் முயன்றேன்

சாளரத்தை விட்டு திரைச்சீலை விலகியது
உடலை மூடிய ஆடை விலகுவதுபோல்

இயல்பான அனிச்சைசெயல் தூண்டலால்
என்னை அறியாது கண்கள் நகர்ந்தன

நகர்ந்தது சாளரத்தின் திரைச்சீலைதான்
காற்றால் நகர்ந்ததை உணர்ந்தேன்

மீண்டும் அங்கே திரைச்சீலை நகர்கிறது
ஆவலால் என் கண்களும் நகர்கின்றன

கண்ட காட்சியும் என் சிந்தை கவர்ந்திட
மலரைத் தீண்டும் வண்டானது கண்கள்

மேகத்தினூடே தெரியும் வெண்மதிபோல
திரைச்சீலை ஊடே தெரிந்தது ஒருமுகம்

அழகுக்கு அழகு சேர்த்தது போலொரு
அழகிய முகமதை அங்கு கண்டேன்

வறண்டிருந்த மண்ணில் வான்மழைபோல்
மருண்ட மனதில் தேன்மழை பொழிய

ஏதே ஒரு இன்பமதை என்மனதில் தோன்ற
வைத்தகண்களை விலக்காது பார்த்தேன்

அழகுமுகத்தில் துள்ளியோடும் மான்தானோ
அங்குமிங்குமென அலைந்திடும் கண்கள்

கார்மேகம் தோற்கும் கருநிறக் கூந்தலோ
சுருள் சுருளாக அழகாய் ஆடின

மின்னிடும் பொன்போல முகமும் மிளிர்ந்திட
கன்னங்களோ பிடித்து கொஞ்சத்தூண்ட

வாயில் தோன்றிய அந்த வசீகரச் சிரிப்பம்
அள்ளியணைத்து மகிழத் தூண்டும் அழகு

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததுபோல்
சாளரத்தை திரைச்சீலை காற்றால் மூடியது

சாளரத்தில் தோன்றிய மழலையும் மறைய
சாளர திரைச்சீலை மீண்டும் ஆடியது

சாளரம் வெறுமையாய் தெரிந்திட்ட போதும்
மழலையைக் கண்ட மனம் மகிழ்ந்திருந்தது!

-சங்கர சுப்பிரமணியன்.

No comments: