தங்கப் பதக்கம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவில் விபரீத முடிவுகளை கொண்ட பல படங்கள்


வந்துள்ளன. கட்டிய கணவனை மனைவி கொல்வது ( அந்த நாள் , மந்திரிகுமாரி ) மகனை தாய் கொல்வது (நான் ) அண்ணன் தம்பியை கொல்வது ( உத்தம புத்திரன் ) அக்காள் தம்பியை கொல்வது ( திரும்பிப் பார் ) கணவன் மனைவியை கொல்வது ( கவரிமான் ) என்ற வரிசையில் தந்தை மகனை கொல்வதாக அமைத்த படம்தான் தங்கப் பதக்கம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தொலைகாட்சியின் ஆதிக்கம்

தீவிரமாகாத காலகட்டத்தில் பல நாடகங்கள் மேடையேறிக் கொண்டிருந்தன. திரைப்படக் கதாசிரியராகவும், துக்ளக் பத்திரிகையின் உதவி ஆசிரியருமான மகேந்திரன் , நடிகர் செந்தாமரையின் வேண்டுகோளுக்கு இணங்கி இரண்டில் ஒன்று என்ற நாடகத்தை எழுதி அது அடிக்கடி மேடையேறிக் கொண்டிருந்தது. நாடகத்தை எஸ் ஏ கண்ணன் நெறியாள்கை செய்திருந்தார். இந்த கண்ணன் சிவாஜியின் மிக நீண்ட கால நண்பர் ஆவார். இளம் வயதில் இவர் சிவாஜியுடன் பல மேடை நாடகங்களிலும், பின்னர் படங்களிலும் நடித்திருந்தார். அதே போல் செந்தாமரையும் சிவாஜி நாடக மன்றத்தின் நிரந்தர நடிகராவார்.

அவ்வாறு மேடையேறிய நாடகத்தை ஒரு முறை பார்த்த சிவாஜி அந்த நாடகத்தால் கவரப்பட்டு , அந் நாடகத்தை இனி மேல் மேடையேற்ற வேண்டாம் என்று கூறி விட்டார். காரணம் தெரியாமல் செந்தாமரை விழிக்க அந்த நாடகத்தை இனிமேல் தானே நடித்து மேடையேற்றப் போவதாக சொல்லி விட்டார். மேடையில் செந்தாமரை நடித்த எஸ் பி சௌத்ரி என்ற போலீஸ்காரர் வேடத்தில் சிவாஜி நடிக்க நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. சில காலம் போனதும் அந்த நாடகத்தையே படமாக்க போவதாகவும் சொல்லி விட்டார் சிவாஜி. சொன்னது போலவே தனது சொந்த பட நிறுவனமான சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் படத்தை தயாரிக்க ஏற்பாடு களை செய்தும் விட்டார். இவ்வாறு சிவாஜியின் சொந்தப் படமாக தங்கப் பதக்கம் தயாரானது.


நாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்கார பிள்ளை , கங்கா போன்ற ஜனரஞ்சகமான படங்களுக்கு கதை எழுதிய மகேந்திரன் தங்கப் பதக்கம் படத்துக்கும் கதை எழுதியதோடு வசனங்களையும் எழுதினார்.அவருடைய திரை வாழ்வில் அவருக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் இந்தப் படம்தான். நாடகத்தில் சௌத்ரி தற்கொலை செய்து கொள்வதாக மகேந்திரன் முடிவமைத்திருந்தார். ஆனால் நாடகத்தை பார்த்த சிவாஜி முடிவை மாற்றி எழுதும் படி சொல்லி பின்னர் அதுவே படமானது. அதே போல் நாடகத்தில் சௌத்ரியாக நடித்த செந்தாமரையின் நடிப்பும் சிவாஜியை கவரவே அதுவும் சிவாஜிக்கு அந்த வேடத்தின் மேல் ஓர் ஈர்ப்பை ஏற்றப்படுத்தியது. ஆனாலும் படத்தில் செந்தாமரைக்கு வேடம் எதுவும் வழங்கப்படவில்லை. அது மட்டுமன்றி கண்ணனுக்கும் படத்தில் வேடம் எதுவும் கொடுக்கப்படவில்லை.
 
அதே போல் நாடகத்தில் ஜெகனாக நடித்தவர் ராஜபாண்டியன். இவர் ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்தவர். ஆனால் படத்தில் இவருக்கும் வாய்ப்பு வழங்கப் படவில்லை. சில காலம் கழித்து இந்த ராஜபாண்டியன் தற்கொலை செய்து கொண்டார்!

கடமை தவறாத கண்டிப்பு மிக்க போலீஸ் அதிகாரி, சாந்தமே

உருவான அன்பான மனைவி, இவர்களுக்கு தறுதலையாக ஒரு பிள்ளை , தந்தையை பழி வாங்குவதே அவன் இலட்சியம் இப்படி அமைந்த படத்தின் கதைக்கு மகேந்திரனின் வசனங்கள் வலு சேர்த்தன. குறிப்பாக சிவாஜி, ஸ்ரீகாந்த் தோன்றும் காட்சிகளில் எல்லாம் வசனங்கள் கூர்மையாக பாய்ந்தன.தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜி, கே ஆர் விஜயா, ஸ்ரீகாந்த் மூவரும் காட்சிக்கு காட்சி தக தகவென்று ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். சிவாஜி கம்பீரம் என்றால் விஜயா கனிவு, சிவாஜி கண்டிப்பு என்றால் விஜயா பாசம், சிவாஜி கடமை என்றால் விஜயா பாசம் இருவரும் பத்திரங்களாகவே மாறி காட்சிக்கு காட்சி மெருகூட்டிக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீகாந்தை பொறுத்த வரை இப்படம் அவரின் நடிப்புக்கு பட்டை தீட்டியது. பிரமிளா இவர்களுடன் சேர்ந்து நல்ல நடிப்பை வழங்கியிருந்தார்.
வி கே ராமசாமி, சுந்தரராஜன், ஆர் எஸ் மனோகர், செந்தாமரை, வி ஆர் திலகம், பூர்ணம் விசுவநாதன், வீரராகவன், புஷ்பமாலா பகோடா காதர், பக்கிரிசாமி ஆகியோரும் 24கரட் தங்கப்பதக்கத்தை 22கரட் நகையாக்க உதவினார்கள்.


தந்தை, மகன் மோதலுக்கு நடுவே ரிலாக்ஸுக்கு சோ இரட்டை வேடத்தில் வருகிறார். ஒருவர் நேர்மையான போலீஸ், மற்றையவர் ஊழல் அரசியல்வாதி . எம் ஜி ஆர் , கருணாநிதி இருவரையும் மாறி , மாறி அவர் கிண்டல் செய்வது கலகலப்பு. இவருடன் சுருளிராஜனும் , மனோரமாவுக்கு சேர்ந்து கொள்கிறார்கள். காமராஜரின் தொண்டரான சிவாஜி சோவின் இந்த நகைச்சுவையை ரசித்தார் என்றே சொல்ல வேண்டும்.
படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத, எம் எஸ் வி இசையமைத்தார், நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் பாடல் இனிமையாக ஒலித்தது. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி, சுமைதாங்கி சாய்ந்தாள் சுமை என்ன ஆகும் பாடல்களில் சிவாஜியின் நடிப்பு சூப்பர். கண்ணதாசனின் கவிவரிகள், எம் எஸ் வியின் இசை டி எம் எஸ்ஸின் குரல் என்பன சூப்பரோ சூப்பர்.
 
படத்தை பி .என் . சுந்தரம் ஒளிப்பதிவு செய்தார். ஆர் தேவராஜன் படத் தொகுப்பை கையாண்டார். இரண்டும் தரமாக அமைந்தன. அன்றைய கால கட்டத்தில் சிவாஜியின் நிரந்தர பட இயக்குனராக இருந்து பல படங்களை வெற்றி படங்களாக தந்த பி. மாதவன் தங்கப் பதக்கத்தை டைரக்ட் செய்து படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. 1974ம் ஆண்டு வெளி வந்த சிவாஜி படங்களிலேயே வெள்ளி விழா கண்ட ஒரே படம் தங்கப் பதக்கம் தான்!

No comments: