November 21, 2024 6:25 am
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இதுவரையிலான 76 வருட அரசியல் பாதையில் இப்போது புரட்சிகரமானதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட ஒருசில பாரம்பரிய அரசியல் கட்சிகளே இதுவரையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறி வந்திருக்கின்றன.
தனிக்கட்சியாகவோ அல்லது கூட்டமைப்பாகவோ அல்லது ஏற்கனவே ஆட்சியிலிருந்த ஒரு கட்சியை சார்ந்தவர்கள் புதிய கட்சியை அமைத்து அதனூடாக அரசியல் பிரவேசம் செய்தோ ஆட்சி நடத்தி வந்திருப்பது கடந்தகால அரசியல் நிகழ்வுகளாகும்.
இலங்கையில் காலத்துக்குக் காலம் இடம்பெற்று வருகின்ற ஆட்சி மாற்றங்களை ‘மோதகம், கொழுக்கட்டை’ ஆகியவற்றுக்கு உவமானமாகக் கூறுவதுண்டு. ஏனென்றால் மோதகம் அல்லது கொழுக்கட்டை ஆகியவற்றின் தோற்றம்தான் வித்தியாசமானது. ஆனால் உள்ளீடுகள் ஒன்றுதான்.
மேற்படி உவமானக் குறிப்பை இன்னும் விரிவாகச் சொல்வதானால், கடந்த காலத்தில் ஆட்சிபீடம் ஏறி இறங்கிய சகல அரசுகளும் அரசியல் கட்சிகளும் மோதகம், கொழுக்கட்டை என்பனவற்றுடன், சிலவேளைகளில் பிடிகொழுக்கட்டையாகவும் அமைந்திருந்தன என்று குறிப்பிடலாம்.
மோதகம், கொழுக்கட்டை என்பனவற்றுக்கு உள்ளே வைக்கப்படும் பயறு, தேய்காய்ப்பூ, சர்க்கரை போன்றவற்றை மாவுடன் சேர்த்து பிசைந்தெடுத்து கையில் வைத்து விரல்களால் பிடித்துச் செய்யப்படுவதுதான் பிடிகொழுக்கட்டை. இந்தவகையில் மோதகம், கொழுக்கட்டை, பிடிகொழுக்கட்டை என்பனவெல்லாம் ஒரே ரகம்தான்.
இலங்கையின் அரசியல் மாற்றங்களை இவ்வாறு கூறுவதுதான் வழக்கம்.
இப்போது இந்த வகையான சிற்றுண்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது அல்லது முடிவு கட்டப்பட்டு விட்டது என்று சொல்லலாம். கடந்த செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி என்ற தனிக்கட்சி பெற்றுக்கொண்ட வெற்றியானது, அதன் பின்னர் நடந்து முடிந்துள்ள பொதுத்தேர்தலில் அதேகட்சி பெற்றுக் கொண்ட பெரும் வெற்றிக்கு முன்கூட்டியே கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது.
தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கும் அறுதிப் பெரும்பான்மை வெற்றியானது இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் ஓர் அதிரடி மாற்றம் என்றுதான் குறிப்பிட வேண்டும். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தனிக்கட்சியாகப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட ஆறில் ஐந்து பெரும்பான்மை வெற்றிக்குப்பின்னர், இப்போது தேசிய மக்கள் சக்தியின் அறுதிப் பெரும்பான்மை வெற்றி அமைந்திருக்கிறது என்று சிறப்பாகக் குறிப்பிடலாம்.
ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலின் போதும், பின்னர் இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் களம் இறங்கியிருந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் பல கட்சிகளை உள்ளடக்கிய கூட்டமைப்பாகவே இருந்தன. ஆனால், தேசிய மக்கள் சக்தி மட்டும் தனிக்கட்சியாக தேர்தல் களத்தில் குதித்தது. 159 ஆசனங்களுடன் மூன்றில்இரண்டு பெரும்பான்மை வெற்றியும் பெற்றுவிட்டது. இது இலங்கை அரசியலில் சிறப்புக்குரிய ஓர் உன்னத நிலையாக அரசியல் விமர்சகர்களால் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது.
இலங்கை ஜனநாயக சோசலிஸக் குடியரசு நாடாகும். மக்கள் அரசாங்கம், மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம், மக்களால் நடத்தப்படும் அரசாங்கம் என்பதை சிலவேளைகளில் அரசியல்வாதிகள் மறந்து விடுகிறார்கள். தாங்கள் மக்களின் விருப்பத்திற்கு அமையவே மக்களால்தான் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பதை பல அரசியல்வாதிகள் நினைத்துக் கூடப் பார்க்காமல் மக்களையே மறந்து விடுவதும் உண்டு.
ஜனநாயகம் என்றால் மக்கள்தான் மன்னர்கள். நாட்டில் ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு அல்லது அதனை நீக்குவதற்கான அதிகாரம் மக்களின் கையில்தான் இருக்கிறது. நாட்டு மக்களின் சுயவிருப்பத்திற்கு அமைய – அவர்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுபவர்களே ஆட்சிபீடத்தின் தலைவராகவும், உறுப்பினர்களாகவும் அமைய வேண்டும் என்பதே வழமையான சம்பிரதாயம். நாட்டுக்கு தெரிவு ஊடான பதவி தேவையில்லை,தேர்தல் ஊடான பதவியே தேவை என கடந்த காலங்களில் பல இடங்களில் பேசப்பட்டு வந்ததையும் அனைவரும் அறிவார்கள்.
தேர்தல் ஊடாக மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 54 நாட்களின்பின் நடந்த பொதுத்தேர்தலில், அதே கட்சிக்குக் கிடைத்த பெரும்பான்மை வாக்குகளால் நல்லதொரு எதிர்காலத்தை நோக்கிய பாதையில் நாட்டை வழிநடத்தும் வகையில் – தனித்து ஓர் அரசாங்கத்தை நிறுவுவதற்கான ஆட்சிப்பலத்தையும், ஆணையையும் மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
அ.கனகசூரியர்… நன்றி தினகரன்
No comments:
Post a Comment