சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகு மீது ‘பிடியாணை’
ரஷ்யா மீது முதல் தடவையாக நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்
காசா சென்ற நெதன்யாகு ஹமாஸுக்கு எதிராக சூளுரை: பணயக்கைதிகளை விடுவிக்க சன்மானம்
லாவோஸில் விஷச் சாராயம் அருந்தி 6 சுற்றுலா பயணிகள் பலி
மேற்கத்திய நாடுகளுக்கு புட்டின் எச்சரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் கைது
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகு மீது ‘பிடியாணை’
-காசாவில் உயிரிழப்பு 44,000ஐ தாண்டியது
போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இதன்போது ஹமாஸ் ஆயுதப் பிரிவுத் தலைவர் முஹமது தெயிப் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காசாவில் ஏற்பட்டுள்ள பட்டினி நிலைமை மற்றும் பலஸ்தீனர்களுக்கு எதிரான துன்புறுத்தல் குற்றங்களுக்கு நெதன்யாகு மற்றும் கல்லன் பொறுப்பாக உள்ளனர் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக நேற்று (21) இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் போரைத் தூண்டிய 2023 ஒக்டேபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதல் தொடர்பிலேயே முஹமது தெயிப் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் ஏற்கனவே மரணித்துவிட்டதாக கூறப்படும் செய்தி குறித்து தகவல்களை சேகரித்து வருவதாக வழக்குத்தொடுநர் குறிப்பிட்டுள்ளார். தெயிப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் கூறுகின்றபோதும் ஹமாஸ் தரப்பு இதனை உறுதி செய்யவில்லை.
முன்னதாக கடந்த மே மாதம் நெதன்யாகு, கல்லன், தெயிப் மற்றும் மேலும் இரு ஹமாஸ் தலைவர்களான தற்போது இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டிருக்கும் இஸ்மைல் ஹனியே மற்றும் யஹ்யா சின்வார் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குத்தொடுநர் கரீம் கான் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹேகை தளமாகக் கொண்ட இந்த நீதிமன்றத்தின் உத்தரவை இஸ்ரேல் நிராகரித்திருப்பதோடு காசாவில் போர் குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் அது மறுத்துள்ளது.
எவ்வாறாயினும் இந்தப் பிடியாணையை செயற்படுத்துவதற்கு குற்றவியல் நீதிமன்றத்திடம் சொந்தமான பொலிஸ் படை இல்லாத நிலையில் இதனை செயற்படுத்துவதில் அது தனது உறுப்பு நாடுகளிலேயே தங்கியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடம்பெறாதபோதும் அதில் 124 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரிட்டன், ஜப்பான், பிரேசில், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் அடங்கும். இந்த பிடியாணையை செயற்படுத்துவது உறுப்பு நாடுகளிலேயே தங்கியுள்ளது.
எவ்வாறாயினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடிக்கும் இந்த இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 44,000ஐ தாண்டியுள்ளது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 71 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 176 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. இதன்மூலம் அங்கு கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 44,056 ஆக உயர்ந்ததோடு 104,268 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் வடக்கு காசாவின் கமால் அத்வான் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஒட்டுமொத்த குடியிருப்பு தொகுதி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 66 பேர் கொல்லப்பட்டு 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
இதன்போது பல வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டிருப்பதோடு மேலும் பல வீடுகள் சேதத்திற்கு உள்ளாகியிருப்பதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மறுபுறம் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகரில் நேற்றும் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேநேரம் லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலின் கலீலி மீது நேற்று இடம்பெற்ற ஏவுகணை தாக்குதலில் 30 வயது ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. நன்றி தினகரன்
ரஷ்யா மீது முதல் தடவையாக நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்
நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஆறு ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன் தாக்குதல் நடாத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு ஏற்கனவே அமெரிக்கா வழங்கியுள்ள போதிலும் அவற்றை பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடாத்த தற்போது அனுமதி வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்தே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் ப்ரையான்ஸ்க் பகுதியில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏடிஏசிஎம்எஸ் (ATACMS) ரக ஏவுகணையைப் பயன்படுத்தி உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆறு ஏவுகணைகளையும் ரஷ்ய இராணுவம் வீழ்த்தியதாகவும், வானில் வெடித்துச் சிதறிய ஏவுகணைகள் குறிப்பிடப்படாத இராணுவ முகாம்கள் அருகே விழுந்துள்ளன. இதன் ஊடாக பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ப்ரையான்ஸ்க் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்தாலும் எவ்வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இலக்கு வைக்கப்பட்ட பகுதில் சில வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
பைடனின் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அவர் உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணையைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். இதன் வெளிப்பாடாகவே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
காசா சென்ற நெதன்யாகு ஹமாஸுக்கு எதிராக சூளுரை: பணயக்கைதிகளை விடுவிக்க சன்மானம்
-இஸ்ரேலின் புதிய தாக்குதல்களில் 15 பலஸ்தீனர்கள் பலி
காசாவில் இஸ்ரேல் நேற்று (20) நடத்திய தாக்குதல்களில் மீட்புப் பணியாளர் ஒருவர் உட்பட குறைந்தது 15 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டிருப்பதோடு இஸ்ரேலிய டாங்கிகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் ஆழ ஊடுருவி வருவதோடு வீடுகளை வெடிவைத்து தகர்த்து வருவதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கு காசாவின் ஜபலியா பகுதியில் நேற்றுக் காலை வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் குறைந்தது 10 பேர் தொடர்ந்து காணாமல்போயிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அருகே செல் தாக்குதலில் மற்றுமொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காசா நகரின் புறநகர் பகுதியான சப்ராவில், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தமது மீட்புக் குழுவினரை இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் ஒரு மீட்பாளர் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்ததாகவும் பலஸ்தீன சிவில் அவசரப் பிரிவு தெரிவித்துள்ளது.
காசாவில் கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் கொல்லப்பட்ட சிவில் அவசரப் பிரிவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்திருப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் இருந்து உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
அதேபோன்று எரிபொருள் மற்றும் உபகரணங்களின் தட்டுப்பாடு, தமக்கு தேவையான விநியோகங்களை பெறுவதற்கு இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் காசாவில் தமது வாகனங்கள் இயங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருப்பதாக சிவில் அவசரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
தெற்கு காசாவின் ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடக்கே ஜபலியா, பெயித் லஹியா மற்றும் பெயித் ஹனுனில் இஸ்ரேல் இராணுவம் ஒரு மாதத்திற்கு மேல் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த மூன்று பகுதிகளிலும் இஸ்ரேலியப் படை வீடுகளை குண்டு வைத்து தகர்த்து வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் இங்குள்ள மக்களை வெளியேற்றி யுத்த சூன்ய வலயம் ஒன்றை உருவாக்க இஸ்ரேல் முயன்று வருவதாக பலஸ்தீனர்கள் இடையே அச்சம் அதிகரித்துள்ளது.
ஹமாஸ் போராளிகள் மீண்டும் ஒருங்கிணைவதை தடுப்பது மற்றும் அவர்களின் தாக்குதல்களுக்கு எதிராக மேற்படி இரு சிறு நகரங்கள் மற்றும் அகதி முகாமுக்கு படைகளை அனுப்பியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி தொடக்கம் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
எனினும் வடக்கு காசாவில் முற்றுகை செய்து இஸ்ரேல் நடத்தும் இந்த பயங்கர தாக்குதல்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா அரச நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் காலப்பிரிவில் நடத்திய டாங்கி எதிர்ப்பு மற்றும் மோட்டார் குண்டு தாக்குதல்கள் மற்றும் வெடிபொருட்களை வைத்து நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேல் படையினர் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆயுதப் பிரிவுகள் குறிப்பிட்டுள்ளன.
வடக்கு காசாவில் பலஸ்தீன தாக்குதலில் இஸ்ரேலியப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டு படைப்பிரிவு தளபதி ஒருவர் படுகாயம் அடைந்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று அறிவித்தது. இதன்மூலம் கடந்த ஆண்டு ஒக்டோபர் தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலியப் படையினர் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது.
வடக்கு காசாவில் அரிதாக இயங்கும் மூன்று மருத்துவமனைகளில் ஒன்றான கமால் அத்வான் மருத்துவமனை கடந்த செவ்வாயன்று இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்கானதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் ஹசம் அபூ சபியா குறிப்பிட்டுள்ளார்.
‘சுகாதார கட்டமைப்பு மிகக் கடுமையான சூழலில் இயங்கி வருகிறது. மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சைப் பணியாளர்கள் 45 பேர் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்கான மாற்றுக் குழு ஒன்றுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. போதிய வளங்கள் இருந்தால் உயிர் தப்ப முடியுமான நோயாளிகள் தமது காயம் காரணமாக நாளாந்தம் மரணித்து வருகின்றனர்’ என்று அபூ சபியா குறிப்பிட்டுள்ளார். ‘துரதிருஷ்டவசமாக உணவு மற்றும் நீருக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு வடக்கே ஒரு அம்புலன் வண்டிக்குக் கூட அனுமதி அளிக்கப்படுவதில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை குறுகிய நேர விஜயமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா சென்றுள்ளார். போர் முடிந்த பின்னர் பலஸ்தீன பகுதியில் ஹமாஸ் ஆட்சிபுரிய அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அதன் இராணுவம் திறனை இஸ்ரேல் அழித்துள்ளது என்றும் இதன்போது நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் எஞ்சியிருப்பதாக நம்பப்படும் 101 பணயக்கைதிகளை மீட்கும் முயற்சியை இஸ்ரேல் கைவிடவில்லை என்று கூறிய நெதன்யாகு, அவர்களில் ஒரு பணயக்கைதியின் விடுதலைக்காக 5 மில்லியன் டொலர் வீதம் சன்மானத்தையும் அறிவித்தார்.
காசா போர் நிறுத்தம் ஸ்தம்பித்திருப்பதோடு எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் போர் நிறுத்த மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்ட கட்டார் அந்தப் பணியில் இருந்து விலகியுள்ளது.
லாவோஸில் விஷச் சாராயம் அருந்தி 6 சுற்றுலா பயணிகள் பலி
லாவோஸில் விஷச் சாராயம் அருந்தி பலியான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற பயணிகள், வியங் நகரில் உள்ள மதுபான விடுதியில் அண்மையில் மது அருந்தியுள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில் அவர்கள் அருத்திய மதுவில் விஷத்தன்மையுடைய மெத்தனோல் கலந்திருந்தது தெரிய வந்தது.
உடனே அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களில் ஒருசிலர் மேலதிக சிகிச்சைக்காக அண்டை நாடான தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இதுதொடர்பாக மதுபான விடுதி உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரை இரண்டு அவுஸ்திரேலிய இளைஞர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். இந்நிகழ்வையடுத்து லாவோஸ் செல்லும் தங்கள் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு அவுஸ்திரேலிய அரசு புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. நன்றி தினகரன்
மேற்கத்திய நாடுகளுக்கு புட்டின் எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மேற்கத்திய நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனின் கிழக்கே உள்ள டினிப்ரோ நகர் மீது ரஷ்யா புதிய அதிவேக மத்திய தூர ஏவுகணையைப் பாய்ச்சியது. அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் ரஷ்யாவுக்குள் ஏவியதற்குப் பதிலடி அந்தத் தாக்குதல் என்று புட்டின் கூறினார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவும் நாடுகள் மீதும் ரஷ்யா அத்தகைய தாக்குதலை நடத்தலாம் என்றார் அவர்.
இந்த புதியவகை ஹைப்பர்சோனிக் ஏவுகணை மாக் 10 வேகத்தில் செல்லக்கூடியதால் மேற்கு நாடுகளின் வான் எதிர்ப்பு ஆயுதங்களால் இடைமறித்துச் சுட்டு வீழ்த்த முடியாதது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது ஒரு பரீட்சார்த்த தாக்குதல் என்றும் ஏற்கனவே இந்த ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த இராணுவ இலக்குகள் குறிவைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் உறுதி செய்தார். அத்துடன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற எச்சரிக்கை வழங்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் இராணுவ வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்யாவுக்கு உரிமை உண்டு. சர்வதேச பாதுகாப்பு அமைப்பை அழிப்பது ரஷ்யா அல்ல, அமெரிக்கா தான் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன்’ என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார். இந்த மத்திய தூர ஏவுகணைகள் பொதுவாக 3,000 முதல் 5,500 கி.மீ. வரை சென்று தாக்குதல் நடத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா ஏவியது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைப் போல் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கூறியிருந்தார். ஆனால், அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் கருதுகின்றனர். நன்றி தினகரன்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் கைது
ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், போராட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் இப்போதைக்கு விடுதலையாக வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் தலைவர்களுக்கு வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் பரிசு எல்லாம் அரசு கருவூலத்துக்கு சென்று விடும். அவ்வாறு வழங்கப்பட்ட விலை உயர்ந்த ஆபரணம் ஒன்றை, இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அரசு கருவூலத்துக்கு குறைந்த பணம் செலுத்தி முறைகேடான வழியில் எடுத்துக் கொண்டதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு பிணை வழங்கியது.
இந்த ஜாமீன் கிடைத்த சில மணி நேரத்தில், தீவிரவாதம் மற்றும் இதர வழக்குகளில் இம்ரான் கானை ராவல்பிண்டி பொலிஸார் கைது செய்தனர். ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் இம்ரான் கான் இருந்தபோது, கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இம்ரான் கான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத தடுப்பு சட்ட விதிமுறை மீறல், அரசு தடையை மீறி பொது இடத்தில் கூடுதல், பொலிஸாரை கடமையை செய்யவிடாமல் தடுத்தது, பொலிஸ் வாகனங்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது என பல குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் இம்ரான் கான் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இம்ரான் கைது செய்யப்படுவதற்கு முன்பே, பேட்டியளித்த பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர். கடந்த மே மாதம் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 8 வழக்குகள் இம்ரான் கான் மீது உள்ளன. இந்த வழக்குகளில் பிணை பெற்றால் மட்டுமே அவரால் வெளிவர முடியும் என கருத்து தெரிவித்திருந்தார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment