ஊதியம்!


-சங்கர சுப்பிரமணியன்



நான் ஒரு நடிகன். பெரிய நடிகன் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் கை நிறைய சம்பாதித்து எல்லோருக்கும் தெரிந்தவன். எல்லோருக்கும் உதவியதால் சேர்த்து வைக்காமல் வறுமையில் வாழ்பவன். இன்றும் அங்கொன்றும்

இங்கொன்றுமாக கிடைக்கும் வாய்ப்பை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு நாள் அந்த பிரபலமான நகைச்சுவை நடிகர் என் வீடு தேடி வந்தார்.

"என்ன தம்பி எவ்வளவு பெரிய நடிகர் நீங்க, இந்த ஏழையின் வீடு தேடி வந்திருகிறீர்களே?" என்றேன்.


"ஒன்னுமில்ல அண்ணே! ஒரு சிறிய வேடம் இருக்கு. அதில் நடிக்க முடியுமா என்று கேட்டு விட்டு போகலாம் என்று வந்தேன்" என்றார்.


"இன்று நான் உள்ள நிலையில் வீடு தேடி வந்து இதைக்கேட்கணுமா, தம்பி?" என்றேன்.


"ரொம்ப மகிழ்ச்சி அண்ணே, நாளை படப்பிடிப்புக்கு வந்துடுங்க," என்று நேரத்தயும் படப்பிடிப்பு தளத்தயும் சொல்லி விட்டு சென்றார்.

 

அவர் சென்றதும் அப்படியே பிரமித்து அதே இடத்தில் இருந்தேன். என் மனைவி என்னை உலுக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தாள்.

 

"என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி பித்து பிடித்தது போல் இருக்கீங்க?"


"இல்ல, எவ்வளவு பெரிய மனிதர் நம் வீடு தேடி வந்து நடிக்க கூப்பிட்டுட்டு போறாரே என்று நினைத்துப் பார்த்தேன். அப்படியே உறைந்து போனேன்."


"எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லைங்க," என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

 

இரண்டே நாள் படப்பிடிப்புத்தான். நடித்து முடுத்து விட்டேன் ஆனால் இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை. எங்கு சென்றாலும் என் தரித்திரமும் கூடவே சேர்ந்தே வரும் போலிருக்கு. என்ன மனிதர் இவர்? என் நிலைமை தெரிந்தும் இப்படி நடித்ததற்கு உண்டான பணத்தைக்

கொடுக்காமல் இரண்டு நாட்களாயும் பேசாமல் இருக்காரே என்று எண்ணினேன். இரண்டு நாள் போய் ஒரு வாரமும் ஆனது.

 

ஒரு நாள் திடீரென்று வீட்டின் முன் கார் வந்து நின்றது. எட்டிப் பார்த்தேன் அவர் தான் வந்தார்.

 

"அண்ணே மன்னிச்சுடுங்க, இரண்டு மூன்று நாட்களாக வெளி நாட்டில் படப்பிடிப்பு. அதனால் தான் என்னால் உங்களை பார்க்க முடியல" என்று சொல்லி வருந்தினார்.


"பரவாயில்லை தம்பி"


உங்க நடிப்புக்கான ஊதியத்தைக் கொடுக்கத்தான் வந்தேன்" என்று கையில் ஒரு மடித்த தாளையும் சில ரூபா நோட்டுக்களயும் சில நாணயங்களையும் கொடுத்து விட்டு, 


“அண்ணே மறுபடியும் மன்னிச்சுடுங்க. அடுத்த படப்பிடிப்புக்கு போய்க் கொண்டிருந்தேன். அப்ப உங்க நினைவு வரவே ஓடோடி வந்தேன்.” என்று சொல்லி மறைந்தார்.


எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் கொடுத்த பணத்த எண்ணிப்பார்த்தேன். இரண்டு பத்து ரூபாய், மூன்று ஐந்து ரூபாய், இரண்டு ஒற்றை ரூபாய் நாணயங்கள். மொத்தம் முப்பத்தேழு ரூபாய் இருந்தது. ஒரு பக்கம் எனது ஏழ்மை மறுபக்கம் அவமானம். என் மனைவியை அழைத்து என் நிலைமையை பார்த்தாயா என்று சொல்லி புலம்பினேன். என்ன பெரிய நடிகன் இவனெல்லாம். என்னதான் நான் வறுமையில் இருந்தாலும் என்னை இவ்வளவு தரக்குறைவாக நினைத்து விட்டேனே என்று அந்த நடிகனைத் திட்டித் தீர்த்தேன்.

 

"என்ன இவ்வளவு தான் தந்தாரா? நன்றாகப்பாருங்க. அதென்ன மடித்த சீட்டு?" என்று சொல்லி அருகில் கிடந்த சீட்டைக்காட்டினாள்.


"அதென்ன சீட்டாய் இருக்க போவுது. இரண்டு நாள் நான் நடித்ததற்கு கூலியைக் கணக்குப் பார்த்து எழுதியதாயிருக்கும். இரண்டு நாள்

சாப்பிட்டதற்குண்டான செலவையும் கைமாற்றாக நான் வாங்கிக்கொண்டு வந்த பணத்தயும் கனக்குப்போட்டு பார்த்து மீதம் இவ்வளவுதான் என்று எழுதிய சீட்டாய்த் தானிருக்கும்" என்றேன் வெறுப்புடன்.


"அதை எடுத்துத்தான் பாருங்களேன்" என்றாள் மனைவி

அந்த மடித்த சீட்டை விரித்துப் பார்த்தேன். எனக்கு பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. அது ஒரு காசோலை. எவ்வளவு பணம் என்று எழுதாமலேயே கையொப்பமும் தேதியும் இட்ட வெற்றுக்காசோலை. நீயே பார் என்று அவளிடம் காட்டினேன்.


"எனங்க இது செக் தானே. பணத்தை எவ்வளவு என்று எழுதாமலேயே கொடுத்திருக்காரே" ஆச்ச்ரியத்துடன் கேட்டாள்.


"ஆமாம் இது செக் தான். ஆனால் நாம் இதில் எவ்வளவு பணம்வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்" என்றுசொல்லிக்கொண்டிருக்கும்போதே என் கண்கள் கலங்கின.


"பார்த்தாயா, கொஞ்ச நேரத்தில் அவரைப் பற்றி என்னவெல்லாம் எண்ண ஆரம்பித்துவிட்டோம். நீ கூடச் சொன்னாயே எல்லோருக்கும் வாரி வாரிக்கொடுத்து இப்படி வகை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே என்று. இப்போது பார்த்தாயா அந்த புண்ணியவான் எப்படி வாரிக் கொடுத்திருக்கிறார்.

இருந்தாலும் என் மனம் ஏனோ சமாதானம் அடையவில்லை. நான் நடித்தது இரண்டு நாட்கள்தான். அதற்கு இவ்வளவு பெரியகூலியா? அப்படியென்றால் இந்த முப்பத்தேழு ரூபாய் என்ன கணக்கு? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். இரண்டுநாட்கள் கழித்து அவரை நேரில் சென்று பார்த்து விடுவது என்று இருந்தேன். மிகவும் பரபரப்பான நடிகர் என்பதால் பத்து

நாட்கள் கழித்துத்தான் அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

அவர் வீட்டுக் காவலாளியிடம் சொல்லி அனுப்பியதும் சிறிது  நேரத்தில் கேட்டருகே வந்து அழைத்துச்சென்றார். அவர் மனம்போல் வீடும் விசாலமாகவே இருந்தது. விருந்துபசரிப்பிலும் என்னை திக்குமுக்காட வைத்தார். கொஞ்ச நேரம் விட்டு மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன். 

 

"என்ன தம்பி, பிளைன் செக், முப்பத்தேழு ரூபாய்..." என்று எழுத்தேன். கொஞ்ச நேரம் மௌனமகவே இருந்தார். சிறிது நேரம் என்னையும் சிறிது நேரம் தரையையும் மாறி மாறிப்பார்த்தார். பின் நிதானமாக பேச ஆரம்பித்தார்.


"அண்ணே, முதலில் நீங்க என்னை தப்பாக நினைக்கக் கூடாது" என்றார்.


“பரவாயில்லை. சொல்லுங்க தம்பி”


"அண்ணே, உங்க நடிப்புக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கணும்னு எனக்கு தெரியலை. ஆதலால் உங்களுக்கு வேண்டிய பணத்தைநீங்களே எழுதிக்கிங்க. நீங்க எவ்வளவு பணம் எழுதிக்கிட்டாலும் எனக்கு சம்மதம்தான்." என்றார்.


"அப்படியில்லை தம்பி, அது சரியாய் இருக்காது. நீங்களா பார்த்து ஒரு தொகையை எழுதுங்க"


"நீங்க எவ்வளவு பெரிய நடிகர். உங்கள் ஊதியத்தை நிர்ணயிக்கும் அளவுக்கு நான் பெரிய நடிகன் இல்லை. ஆதலால் பணத்தை நீங்க தான் எழுதிக்கொள்ள வேண்டும். அதே சமயம் இந்த தம்பியை நீங்கள் உண்மையாகவே நேசித்தால் அந்த செக்கையும் 

திருப்பிக் கொடுக்கக்கூடாது" என்று கட்டளையிட்டார்.


"என்ன தம்பி என்னை மிகவும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்துறீங்க. அது சரி அதென்ன முப்பத்தேழு ரூபாய்?" என்றேன்.


"அது தங்களுக்கு என் காணிக்கை. நான் என் ஊரில் இருந்து இங்கு வரும்போது கொண்டு வந்த பணம். இந்த பணம் தான் நான்வாழ்வில் இந்த அளவுக்கு உயர காரணம். என்னை உயர்த்திய பணம் உங்களையும் உயர்த்தட்டுமே" என்றார் நா தழுதழுக்க.


"அவர் சொன்னதைக் கேட்டதும் என்ன சொல்வதென்றே தெரியாமல் அமைதியானேன். பின் சுதாரித்துக்கொண்டு தம்பி உங்கள் அன்புக் கணிக்கையை நான் தட்டாமல் ஏற்றுக்கொள்கிறேன். கடைசியாக கேட்கிறேன். இந்த செக் எனக்குத் தானே?"


"நிச்சயமாய் உங்களுக்குத்தான், அண்ணே. அதை நான்திரும்பிபெற்றுக்கொள்ளும் எண்ணமோ அதில் இன்ன தொகைதான் எழுத வேண்டும் என்ற எண்ணமோ எனக்கு கிடையாது.”


"சரி தம்பி நான் விடை பெறுகிறேன்." என்று சொல்லி விட்டு வீடு வந்தேன். நடந்ததையெல்லாம் மனைவியிடம் சொன்னேன்.அதைக்கேட்டு அவளும் பேயறைந்தது போல் இருந்தாள். ஒருவாறாக அவள் மௌனத்தை உடைத்து பேச ஆரம்பித்தேன்.


"நாம் எவ்வளவுதான் வறுமையில் இருந்தாலும் நமகென்று ஒரு பெயரும் செல்வாக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஒன்றும் சேர்த்துவைக்கவில்லை என்று வருந்தினாயே. பணத்தை சேர்த்தாலும் இந்த பேரைச் சேர்க்க முடியுமா? சரி இந்த காசோலையை வைத்துக் கொண்டு என்ன செய்ய போறோம்" என்றேன்.


"உங்களுக்குத் தெரியாதா? நீங்க என்ன செய்தாலும் சரியாத்தான் இருக்கும்" என்றாள்.


"என்ன செய்தாலும் சம்மதம்தானே. அப்புறம் ஒன்னும் வருந்த மாட்டாயே?"


"என்ன அப்படி கேட்கிறீங்க. நீங்க நல்லதத்தான் செய்வீங்க"

 

காசோலையை எடுத்து மனம் மாறுவதற்கு முன்பே பேனாவினால் அதன் குறுக்கே ஒரு கோட்டைப் போட்டு அந்தக் காசோலையை செல்லாக் காசோலையாக ஆக்கி, "உனக்கு சம்மதம்தானே" என்றேன்.


"நீங்க செய்யுற எதுவும் எனக்கு சம்மதம்தான்" என்றாள் சிறிதும் சஞ்சலமில்லாமல்.

 

என்னை கௌரவித்த அந்த நடிகரை கௌரவிக்க என் மனம் துடித்தது. அவருக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை. இருந்தாலும் மனம் துடித்தது. அவர் கொடுத்த காசோலைக்கு அழகாகச் சட்டம் போட்டேன். முன் அறையில் நான் நடிப்பிற்காக வாங்கிய பாராட்டு மடல்கள் மற்றும் பரிசுப் பொருட்களுக்கு மத்தியில் இந்த சட்டமிட்ட காசோலையையும் வைத்து அலங்கரித்தேன். ஒவ்வொரு முறை அக்காசோலையை பார்க்கும் போதும் நான் வாங்கிய பாராட்டு மடல்களைக் காட்டிலும் நான் இதுவரை வாங்கிய ஊதியத்தைக் காட்டிலும் பெரிதாகத்தெரிந்தது. இப்படியும் மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்று உலகின்பால் நல்லெண்ணமும் விரியத் தொடங்கியது.

 

                                                                                        

No comments: