உலகச் செய்திகள்

ஹிஸ்புல்லா போராளிகளின் பேஜர்கள் வெடித்து 26 பேர் பலி; பலர் காயம்

இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானம் நிறைவேற்றம்

பேஜரை அடுத்து வோக்கி டோக்கிகள் வெடிப்பு: இஸ்ரேல்–லெபனான் போர் பதற்றம் அதிகரிப்பு

காசா போர் நிறுத்தத்திற்கு பிளிங்கன் தீவிர முயற்சி: உயிரிழப்பு 41,272 ஆக அதிகரிப்பு

14% வருடாந்த வளர்ச்சியை நோக்கி நகரும் இந்திய பாதுகாப்பு சந்தை

தாய்வானின் கடற்பரப்புக்குள் 835 சீனப் படகுகள் ஊடுருவல்

பங்களாதேஷ் இராணுவத்திற்கு நீதி அதிகாரம்: தேவையெனில் ‘சூடு’ நடத்தவும் அனுமதி

இஸ்ரேலியப் படையினரின் கொடிய செயலால் பரபரப்பு

காசாவில் எகிப்து எல்லையை நோக்கி இஸ்ரேலியப் படையினர் முன்னேற்றம்


ஹிஸ்புல்லா போராளிகளின் பேஜர்கள் வெடித்து 26 பேர் பலி; பலர் காயம்

- இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவு சதி

September 19, 2024 7:28 am 

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு 5 மாதங்களுக்கு முன் வாங்கிய 5,000 பேஜர் (Pagers) மற்றும் வால்கி டோக்கி (Walkie Talkie) சாதனங்கள் கடந்த செவ்வாயன்றும் புதன் அன்றும் வெடித்ததில் இதுவரை 2 சிறுவர்கள் உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த பேஜர்களின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் தாய்வான் தொடக்கம் புடபாஸ்ட் வரை தொடர்புபட்டுள்ளது. இவை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹிஸ்புல்லா அமைப்பின் பாதுகாப்புக் கட்டமைப்பை முறியடித்துள்ளது. நாடெங்கும் ஆயிரக்கணக்காக பேஜர்கள் வெடித்த நிலையில் சுமார் 3,000 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதில் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் லெபனானுக்கான ஈரான் தூதுவ அதிகாரிகளும் உள்ளனர்.

இந்தப் பேஜர்கள் தாய்வானைத் தளமாகக் கொண்ட கோல்ட் அப்பலோ நிறுவனத்துடையது என்று லெபனான் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டபோதும், அந்த சாதனத்தை தாம் தயாரிக்கவில்லை என்று குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹங்கேரி தலைநகரில் உள்ள பி.ஏ.சி. என்று அழைக்கப்படும் நிறுவனமே அதனை தயாரித்ததாகவும் அதற்கு வர்த்தக முத்திரை உரிமத்தை மாதிரமே தாம் வழங்கியதாகவும் கோல் அப்பலோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக பழிதீர்ப்பதாக ஈரான் ஆதரவு ஹிஸ்புல்ல அமைப்பு சூளுரைத்துள்ளது. எனினும் வெடிப்புகள் குறித்து அது விளக்கம் தர மறுத்துள்ளது.

காசா போரை ஒட்டி ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஓர் ஆண்டை நெருங்கும் காசா போர் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘காசா மற்றும் அங்குள்ள மக்களுக்கு ஆதரவாக எதிர்ப்புப் போராட்டம் மற்ற நாட்களைப் போன்று தொடரும் என்பதோடு செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற படுகொலைக்கு பதிலளிக்கும் வகையில் குற்றவாளியான எதிரி (இஸ்ரேல்) கடுமையான தண்டனைக்கு காத்திருக்க வேண்டி இருக்கும்’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோல்ட் அப்பலோ நிறுவனத்திடம் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு 5000 பேஜர்களை வாங்கி இருப்பதாகவும் அவை இந்த ஆண்டு ஆரம்பத்தில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் லெபனானின் மூத்த பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மீன்கலத்தையும் புரோசசரையும் தூண்டி வெடி பொருளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேஜர்கள் ஐரோப்பிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்று கோல்ட் அப்பலோ நிறுவனர் ஹிசு சின் குவாங் குறிப்பிட்டுள்ளார்.

‘தயாரிப்பு எங்களுடையதல்ல. அதில் எமது வர்த்தகக்குறி மாத்திரமே உள்ளது’ என்று ஹிசு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதில் பேஜரை தயாரித்ததாகக் கூறப்படும் பி.ஏ.சி. என்ற நிறுவனத்தின் முகவரி இடப்பட்ட கட்டடம் புடபாஸ் நகரில் குடியிருப்பாளர்கள் பகுதி ஒன்றில் அமைந்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும் அந்த நிறுவனம் குறித்த முகவரியில் பதிவு செய்யப்பட்டபோதும் அது அங்கு இயங்கவில்லை என்று அந்தக் கட்டடத்தில் இருக்கும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல நிறுவனங்களும் அந்த முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு தொலைபேசி அழைப்புகள் மற்றும் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியபோதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பேஜர்கள் மற்ற பேஜர்கள் போன்று கம்பியில்லா அடிப்படையில் குறுஞ்செய்திகளை வழங்குவதோடு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியாது என்று அவற்றை ஆராய்ந்துள்ள லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

கையடக்கத் தொலைபேசியை பின்தொடர முடியும் என்பதால் இஸ்ரேலிய ஊடுருவல்களை தவிர்ப்பதற்கே பின்தொடர முடியாத குறைந்த தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த பேஜர் சாதனங்களை ஹிஸ்புல்லாஹ் போராளிகள் பயன்படுத்துவதாக அதனுடன் தொடர்புபட்ட வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

எனினும் இந்த சாதனங்களின் உற்பத்தியின்போது இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் தலையிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இந்த சாதனத்திற்குள் செய்தி ஒன்று கிடைத்ததும் வெடிக்கும் வகையில் இது ஹெக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை எந்த ஒரு கருவி அல்லது ஸ்கேனராலும் கண்டுபிடிப்பது கடினமாகும்’ என்று லெபனான் பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறியீட்டுச் செய்தி அனுப்பப்பட்டதை அடுத்து 3,000க்கும் அதிகமான பேஜர்கள் சமகாலத்தில் வெடித்திருப்பதாக தெரியவருகிறது. இதில் மூன்று கிராம் அளவு வெடிபொருட்கள் பேஜர்களில் பொருத்தப்பட்டிருப்பதாக மற்றொரு பாதுகாப்பு வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

பேஜர்களில் ஒலி வந்ததால் அதனை வைத்திருப்பவர்கள் சாதனங்களைத் தொடவோ முகத்திற்கு அருகே கொண்டு போகவோ நேரிட்டது. அப்போது வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 15:45 மணியளவில் லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேஜர்கள் வெடிக்க ஆரம்பித்தன. பட்டாசுகள் போன்றும் துப்பாக்கிச்சூடு போன்றும் சிறிய வெடிப்புகள் நிகழ்வதற்கு முன்னர், சிலரின் பைகளில் இருந்து புகை வருவதைக் கண்டதாக பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஒரு சிசிடிவி காணொளியில் கடையில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபரின் காற்சட்டைப் பையில் இருந்த பேஜர் வெடித்தது. ஆரம்பத்தில் சிறியளவில் வெடித்த நிலையில் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் அது தொடர்ந்தது என்று ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் அதிகமான மக்கள் லெபனான் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் குவிந்தனர். மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி, குழப்பமான சூழல் நிலவியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த இருவர் ஹிஸ்புல்லா எம்.பிக்களின் மகன்கள் என்று அந்த அமைப்புக்கு நெருக்கமான வட்டாரம் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது. ஹிஸ்புல்லா உறுப்பினர் ஒருவரின் மகள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதேபோன்று கொல்லப்பட்டவர்களின் இரு சிறுவர்களும் இருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் லெபனானுக்கான ஈரான் தூதர் மொஜ்தபா அமானியும் அடங்குவார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக ஈரானிய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா இந்தத் தாக்குதலில் காயமடையவில்லை என்று ரோய்ட்டர்ஸ் முகமை, ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

லெபனான் பொது சுகாதார அமைச்சர் பிராஸ் அபியாட் கூறுகையில், பெரும்பாலானவர்களுக்கு கைகள் மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்த சம்பவத்தில் லெபனான் எங்கும் 3000 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் அண்டை நாடான சிரியாவில் 14 பேர் காயத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 10 வீதமானவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் உடன் எந்த பதிவும் அளிக்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதல் பிராந்தியத்தில் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா இன்று (19) உரையாற்றவுள்ளார்.   நன்றி தினகரன் 






இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஐ.நாவின் தீர்மானம் நிறைவேற்றம்

September 20, 2024 8:58 am 

பலஸ்தீன நிலங்களில் இருந்து ஓர் ஆண்டுக்குள் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் அதிக பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செயற்படுத்தும் கடப்பாடு அற்ற இந்தத் தீர்மானம் நேற்று முன்தினம் (18) வாக்கெடுப்புக்கு வந்தபோது 124 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததோடு 14 நாடுகள் எதிர்த்தன. மேலும் 43 நாடுகள் வாக்களிப்பதைத் தவிர்த்துக்கொண்டன.

‘ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப்பகுதியில் சட்டவிரோதமாக நிலைகொண்டிருப்பதை இஸ்ரேல் தாமதம் இன்றி முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதோடு இந்தச் செயல் சர்வதேச பொறுப்பை மீறுவதாகும். 12 மாதங்களுக்கு மேல் இதனைத் தொடரக்கூடாது’ என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை வலியுறுத்தியுள்ளது.

ஆக்கிரமிப்பு மூலம் செய்த சேதங்களுக்கு பலஸ்தீனர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அது கோரியுள்ளது.

பலஸ்தீன நிலங்களில் இஸ்ரேல் நிலைகொண்டிருப்பது சட்டவிரோதமானது மற்றும் அவசியம் முடிவுக்குக் கொண்டவரப்பட வேண்டும் என்ற ஐ.நா. உயர் நிதிமன்றமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கருத்தை ஆதரிப்பதாக இந்தத் தீர்மானம் உள்ளது. இதனை பலஸ்தீன அதிகாரசபையே கொண்டுவந்தது.

இதில் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, ஹங்கேரி, ஆர்ஜன்டீனா மற்றும் சிறிய பசுபிக் தீவு நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன.

1967 மத்திய கிழக்குப் போரில் மேற்குக் கரை, காசா மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் கைப்பற்றியதோடு 1980 இல் ஒட்டுமொத்த புனித நகரையும் தமது அட்புலத்திற்குள் இணைத்தது.   நன்றி தினகரன் 





பேஜரை அடுத்து வோக்கி டோக்கிகள் வெடிப்பு: இஸ்ரேல்–லெபனான் போர் பதற்றம் அதிகரிப்பு

-வெடிப்புச் சம்பவங்களில் மொத்தம் 32 பேர் பலி: ஆயிரக்கணக்கானோர் காயம்

September 20, 2024 6:02 am 

லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகள் பயன்படுத்திய பேஜர் மற்றும் வோக்கி டோக்கி கருவிகள் அடுத்தடுத்த நாட்களில் வெடித்து பலரும் கொல்லப்பட்ட சம்பவத்தால் அந்த அமைப்புக்குள் பெரும் குழப்பம் நிலவுவதோடு, இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட் இருப்பதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் பிராந்தியத்தில் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சம் அதிகரித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்த நிலையில் அந்த அதிர்ச்சி நீங்குவதற்கு முன்னர் கடந்த புதனன்று ஆயிரக்கணக்காக வோக்கி டோக்கி கருவிகள் வெடித்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் இரு சிறுவர்கள் உட்பட மொத்தம் 32 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 3,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜர்கள் மற்றும் வோக்கி டோக்கிகள் வீடுகள், வீதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என நாடு முழுவதும் சமகாலத்தில் வெடித்து அதனை வைத்திருந்தவர்கள் அருகில் இருந்தவர்களுக்கு காயத்தை ஏற்படுத்தியது.

பெய்ரூட்டில் உள்ள ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த கண் மருத்துவர், சுமார் 60 வீதமானோர் குறைந்தது ஒரு கண்ணையாவது இழந்துள்ளதாகவும் பெரும்பாலானவர்கள் இரு கையையும் இழந்துள்ளதாகக் கூறினார்.

‘ஒரு மருத்துவராக என் வாழ்வின் மிக மோசமான நாள் இது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், காயமடைந்தவர்களின் நிலையும் மிக மோசம்’ என்று மருத்துவர் எலியாஸ் வார்ராக் கூறினார்.

இது ஹிஸ்புல்லா அமைப்பின் பாதுகாப்பு கட்டமைப்பில் ஏற்பட்டிருக்கும் பெரும் ஊடுருவலாக பார்க்கப்படுவதோடு முன்னெப்போதும் நிகழாத இந்தத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

எனினும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், யோவ் கல்லன்ட், ‘மையப்புள்ளி வடக்கை நோக்கி நகர்த்தப்படுகிறது’ என்று புதன்கிழமை குறிப்பிட்டார். இதில் அவர் காசாவை மையம் கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் போர் இஸ்ரேலின் லெபனானுடனான வடக்கு எல்லைக்கு மாற்றப்படுவதையே குறிப்பிட்டு கூறியிருந்தார்.

‘போரின் புதிய கட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காசாவில் இஸ்ரேலுடன் சண்டையிட்டு வரும் ஹமாஸ் அமைப்பின் கூட்டாளியாக உள்ள ஹிஸ்புல்லா, லெபனான் எல்லையில் இஸ்ரேலுடன் கிட்டத்தட்ட தினசரி மோதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இடம்பெறும் இந்த மோதல்களில் இரு பக்கங்களினதும் எல்லைகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தப் பதற்றத்திற்கு மத்தியில் தொலைத்தொடர்பு சாதனங்களில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புச் சம்பவம் பிராந்தியத்தில் முழு அளவில் போர் வெடிக்கும் அபாயத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

அடுத்தடுத்த அதிர்ச்சி

ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜர் சாதனங்கள் கடந்த செவ்வாயன்று வெடித்த சம்பவத்தில் இரு சிறுவர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டு சுமார் மூவாயிரம் பேர் காயமடைந்த நிலையில் கடந்த புதனன்று மாலை அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் வோக்கி டோக்கிகள் வெடித்ததில் மேலும் 20 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 450க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள், பெக்கா பள்ளத்தாக்கு, தெற்கு லெபனான் போன்ற ஹிஸ்புல்லா கோட்டைகளாகக் கருதப்படும் பகுதிகளிலேயே வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. பேஜர் வெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் இறுதிக் கிரியைகளிலும் சில வோக்கி டோக்கி வெடிப்புகள் நிகழ்ந்தன.

இவ்வாறு வெடித்த வோக்கி டோக்கி கருவிகளில் ஐகொம் என்ற ஜப்பான் தொலைத்தொடர்புகள் மற்றும் தொலைபேசிய நிறுவனத்தன் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவிகளில் தமது நிறுவத்தின் முத்திரை இருப்பது தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐகொம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தமது அனைத்து வானொலி கருவிகளையும் ஜப்பானில் தயாரிப்பதாகக் ஐகொம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. என்றாலும் குறித்த கருவிகளை தயாரிப்பதை 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தியதாகவும் அவைகள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோன்று வெளிநாட்டு சந்தைகளுக்கான தமது தயாரிப்புகள் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் பிரத்தியேகமாக விற்கப்படுவதாகவும் ஜப்பானின் பாதுகாப்பு வர்த்தக கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி அதன் ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஒசாகாவைத் தளமாகக் கொண்ட அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

தமது கருவிகளைப் போன்ற போலியானவை சந்தையில் இருப்பதாகவும் குறிப்பாக தாம் உற்பத்தியை நிறுத்திய கருவிகள் சந்தையில் இருப்பது பற்றி ஐகொம் நிறுவனம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

கையில் வைத்திருக்கக் கூடிய இந்த வோக்கி டோக்கி கருவிகளை ஹிஸ்புல்லா அமைப்பு ஐந்து மாதங்களுக்கு முன்னர் பேஜர்களை வாங்கிய அதே காலப்பகுதியில் வாங்கியிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய உளவுத்துறை, ஹிஸ்புல்லாவுக்கு இந்த வோக்கி டொக்கிகள் வழங்கப்படுவதற்கு முன்னர், ஆயிரக்கணக்கான வோக்கி டோக்கிகளில் பொறிகளைப் பொருத்தியதாக, இரண்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டி, தி ஒக்சியோஸ் என்ற செய்தி இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக வெடித்த பேஜர்கள் கண்ணி வெடிகள் போன்று பயன்படுத்தப்பட்டிருப்பதாக லெபனானின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

‘சாதனங்களின் மின்கலத்துடன் வெடி பொருட்கள் வைக்கப்பட்டு வெடிக்கச் செய்வதற்கு முன்கூட்டியே நிரலாக்கம் செய்யப்பட்டிருப்பதை தரவுகள் காட்டுகிறது’ என்று புலன்விசாரணை தொடர்பில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவத்துள்ளார்.

பேஜர்களுக்குள் சிறிய அளவிலான வெடிபொருட்களை இஸ்ரேல் மறைத்து வைத்ததாக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் ரோய்ட்டர்ஸிடம் அமெரிக்க, லெபனான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவங்களை அடுத்து விமானங்களில் வோக்கி டோக்கிகள் மற்றும் பேஜர்களை எடுத்துச் செல்வதற்கு லெபனானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போர் மேகம்

‘லெபனானின் பாதுகாப்பு மற்றும் இறைமை மீதான அப்பட்டமான தாக்குதல்’ முழு அளவிலான போர் ஒன்றுக்கான அபாயகரமான சமிக்ஞையை காட்டுகிறது என்று லெபனான் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பவு ஹபிப் எச்சரித்துள்ளார்.

இந்த வெடிப்புகளில் பெய்ரூட்டில் உள்ள தமது தூதுவர் காயமடைந்திருக்கும் நிலையில் பதில் நடவடிக்கை எடுப்பதற்கு தமது நாட்டுக்கு உரிமை இருப்பதாக ஐ.நாவுக்கான ஈரான் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் அமெரிக்கா, போர் பதற்றத்தை அதிகரிப்பதற்கு எதிராக அனைத்துத் தரப்புகளையும் எச்சரித்தது.

‘மேலதிக இராணுவ நடவடிக்கை மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று நாம் ஒருபோதும் நம்பவில்லை’ என்று அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை பேச்சாளர் ஜோன் கிர்பி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பல முனைகளிலும் அபாயகரமான விரிவாக்கத்தைச் செய்து மத்திய கிழக்கை பிராந்திய போர் ஒன்றுக்குள் இழுத்துச் செல்வதாக ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் ஐமன் சபாதி, இஸ்ரேல் மீது குற்றம் சுமத்தினார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ‘இது மிகத் தீவிரமான விடயம்’ என்று எச்சரித்தார். அத்தோடு, ‘அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு’ அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

‘இந்தச் சாதனங்கள் அனைத்தையும் வெடிக்கச் செய்ய ஒரு பெரிய திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கை முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்,’ என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதேவேளை ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த புதனன்று இஸ்ரேல் மீது சுமார் 20 ரொக்கெட் குண்டுகளை வீசியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பினால் இடைமறிக்கப்பட்டு என்று இஸ்ரேல் இராணுவம் கூறியது.

எனினும் லெபனானில் இருந்து வீசப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையால் இஸ்ரேலியர் பலர் காயமடைந்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மறுபுறம் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா இலக்குகள் மீதே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இதேவேளை ஈரான் ஆதரவு படுகொலை சதி ஒன்றுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு சேவை நேற்று தெரிவித்தது. துருக்கியுடன் தொடர்புபட்ட இந்த வர்த்தகர் ஈரானில் குறைந்தது இரு கூட்டங்களில் பங்கேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் அல்லது ஷின் பெட் உளவு நிறுவனத்தின் தலைவரை படுகொலை செய்ய சதி செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





காசா போர் நிறுத்தத்திற்கு பிளிங்கன் தீவிர முயற்சி: உயிரிழப்பு 41,272 ஆக அதிகரிப்பு

September 19, 2024 6:24 am 

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் 10 ஆவது முறையாகவும் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

எகிப்துத் தலைநகர் கெய்ரோவுக்கு பயணித்த பிளிங்கன் நேற்று எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது காசா அமைதிப் பேச்சை தீவிரப்படுத்தப்போவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

சிசியுடன் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிளிங்கன், போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காண்பதற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் தீவிர முயற்சியில் ஈடுபடும் என்றார்.

காசாவில் ஓர் ஆண்டை நெருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து பிளவு நீடித்து வருகிறது. இந்நிலையில் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு தெற்கு ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் பின்னர் 10 சடலங்களை மீட்டதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதேபோன்று மத்திய காசாவில் அல் புரைஜ் முகாமில் உள்ள வீடுகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து அங்கிருந்து மூன்று சடலங்களை மீட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 54 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காணாமல்போனோர் தவிர்த்து காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 41,272 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் இடம்பெற்று வரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் 95,551 பேர் காயமடைந்துள்ளனர்.   நன்றி தினகரன் 






14% வருடாந்த வளர்ச்சியை நோக்கி நகரும் இந்திய பாதுகாப்பு சந்தை

September 17, 2024 11:24 am 

இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்கான சாத்தியமான சந்தை வாய்ப்பு 2024 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2030 நிதியாண்டில் சுமார் 14 சதவிகிதமாக(கூட்டு வருடாந்த வளர்ச்சி விகிதம்) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது ஏற்றுமதி வாய்ப்பில் அரசாங்கத்தின் உள்நாட்டுமயமாக்கல் மீதான கவனத்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட துறைசார் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் தன்னம்பிக்கையில் இந்தியாவின் அதிகரித்து வரும் கவனம் போன்ற காரணிகளை மேற்கோள் காட்டியுள்ள இந்த அறிக்கை, இந்த காரணிகள் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஒழுங்கு ஓட்டம் மற்றும் வருவாய் வளர்ச்சியைத் தூண்டுகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளது. “ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக நாட்டிற்கு நாடு உறவுகளை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புச் செலவு 2024 ஆண்டிற்கும் 2030 ற்கும் இடையில் இரட்டிப்பாகும். இது பாதுகாப்பு நிறுவனங்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அடுத்த 5-6 ஆண்டுகளில் இந்தியா 90-100 பில்லியன் டொலர் மதிப்புள்ள பாதுகாப்பு சந்தை வாய்ப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாதுகாப்புத் துறையானது நிதியாண்டு முதல்2030 வரை ஆண்டுதோறும் 13 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் பாதுகாப்புச் செலவீனம் கடந்த காலத்தில் அதிகரித்ததோடு அமெரிக்கா செலவினம் 10 சதவீதமாகவும், சீனாவின் செலவில் 27 சதவீதமாகவும் அதிகரித்தது.

உலக ஆயுத இறக்குமதியில் 9 சதவீதத்தை கொண்டுள்ள இந்தியா,பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இருந்ததைப் போலவே, பெரிய உபகரணங்களுக்கான (மூலதன பாதுகாப்பு) இந்தியாவின் பாதுகாப்புச் செலவினம் ஆண்டுக்கு 7-8 சதவிகிதம் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமெரிக்க நிதிச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 2024ற்கும் 2030 நிதியாண்டிற்குல் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி பாதுகாப்பு வாய்ப்பு 18% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2017-24 நிதியாண்டில் 14 மடங்கு அதிகரித்து 2.6 பில்லியன் டொலராக இருந்தது.

” 2030 நிதியாண்டுக்குள் இந்தத் தொகை 7 பில்லியன் டொலர்களாக உயரும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் 2029 நிதியாண்டுக்குள் 6 பில்லியன் டொலர்களை அடைவதற்கான அரசாங்க இலக்குடன் இந்தப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, இத்தாலி, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட், பூட்டான், எத்தியோப்பியா மற்றும் சவுதி அரேபியா ஆகியவை மிகவும் முக்கியத்துவமான பாதுகாப்பு இடங்களாக உள்ளன. உலக ஆயுத இறக்குமதியில் 33 சதவீதத்தை அதாவது11 பில்லியன் டொலராகக் மத்திய கிழக்கு நாடுகள் கொண்டுள்ளதோடு இது இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மத்திய கிழக்கு ஆயுத இறக்குமதியில் 52 சதவீதத்தை கத்தார் மற்றும் சவுதி கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.   நன்றி தினகரன் 





தாய்வானின் கடற்பரப்புக்குள் 835 சீனப் படகுகள் ஊடுருவல்

September 19, 2024 3:16 pm 

தாய்வானின் கடற்பிராந்தியத்திற்குள் இவ்வருடத்தின் முதல் ஆறு மாத காலத்தில் 835 சீனப் படகுகள் பிரவேசித்துள்ளதாகவும் அப்படகுகள் யாவும் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தாய்வானின் கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

எமது கடற்பிராந்திய இறையாண்மையை மீறும் செயலுக்கு இடமளிக்க முடியாதெனக் குறிப்பிட்டுள்ள தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் வில்லிங்க்டன் வூ, எமக்கு சொந்தமான கின்மென் தீவு கடற்பரப்பில் புதிய ஒழுங்குகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை தாய்வான் கட்டுப்பாட்டிலுள்ள கடற்பரப்பில் இருந்து 19.5 கடல் மைல்கள் தூரத்தில் சீனக் கடற்பரப்பில் காணப்பட்ட தாய்வானின் மீன்பிடிக் கப்பல் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் அண்மையில் பதற்றம் ஏற்பட்டது.

கின்மென் தீவானது, சீனாவில் இருந்து மூன்று மைல் தொலைவிலும் தாய்வானில் இருந்து 124 மைல்கள் தூரத்திலும் காணப்படுகிறது.   நன்றி தினகரன் 





பங்களாதேஷ் இராணுவத்திற்கு நீதி அதிகாரம்: தேவையெனில் ‘சூடு’ நடத்தவும் அனுமதி

September 20, 2024 10:02 am 

நாட்டில் நீதி ஒழுங்கை மேம்படுத்துவதற்கும் நாசகார செயல்களைத் தடுப்பதற்கும் பங்களாதேஷ் இராணுவத்திற்கு அந்நாட்டு இடைக்கால அரசு இரண்டு மாதங்களுக்கு நீதி அதிகாரத்தை வழங்கியுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு அரசின் இந்த முடிவு குறித்த அறிவிப்பை கடந்த செவ்வாயன்று வெளியிட்டதோடு இது உடன் அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இராணுவத்தின் நியமன அதிகாரிகளுக்கு இந்த அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. அடுத்த 60 நாட்களுக்கு இந்த உத்தரவு அமுலில் இருக்கும்.

குற்றவியல் நடைமுறைக் கோவையின் 17ஆம் பிரிவின் பிரகாரம், இராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பு நிறைவேற்று நீதிபதிகளின் அந்தஸ்த்து வழங்கப்படுகிறது. இந்த அதிகாரிகள் மாவட்ட நீதிபதிகள் அல்லது பிரதி ஆணையாளர்களுக்கு கீழ்ப்பட்டவர்களாக இருப்பார்கள்.

இதன்படி சட்டவிரோதமான பேரணிகளை நடத்துபவர்களை கைது செய்வது மற்றும் அவ்வாறான பேரணிகளை கலைப்பது உட்பட அதிகாரங்கள் இராணுவத்தின் நியமன அதிகாரிகளுக்கு வழங்கப்படும். தற்பாதுகாப்பு மற்றும் கடுமையான நிலைமையில் அதிகாரிகளால் சூடு நடத்தவும் அதிகாரம் வழங்கப்படுவதாக இடைக்கால அரசின் ஆலோசகர் ஒருவர் அந்நாட்டி ‘டெய்லி ஸ்டார்’ பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.

‘பல இடங்களில், குறிப்பாக நாடு முழுவதும் உள்ள தொழில்துறை பகுதிகளில், நாசகார செயல்கள் மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதை நாங்கள் காண்கிறோம்.

இந்த நிலைமையை கருத்தில்கொண்டு இராணுவத்தினருக்கு நீதி அதிகாரம் வழங்கப்படுகிறது’ என்று சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் குறிப்பிட்டுள்ளார்.

இதனை இராணுவ தரப்பினர் தவறுதலாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘பொலிஸார் இன்னும் முறையாக இயங்கவில்லை.

நாசகாரச் செயல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன’ என்று இடைக்கால அரசின் பெயர் குறிப்பிடாத மற்றொரு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் பிரதமர் ஷெய்க் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து கலைக்கப்பட்டது தொடக்கம் பல பொலிஸாரும் பாதுகாப்புப் பணிகளில் இருந்து விலகி உள்ளனர்.

ஹசீனா பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கோபத்தை வெளியிட்டதோடு அவர்களின், சொத்துகள் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. இதனையடுத்து பங்களாதேஷ் பொலிஸ் துணை ஊழியர் சங்கம் கடந்த ஓகஸ்ட் 6 ஆம் திகதி காலவரையின்றி வேலை நிறுத்தத்தை அறிவித்தது. எனினும் உள்துறை அமைச்சுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி வேலை நிறுத்தத்தை பொலிஸார் கைவிட்டபோதும் பல பொலிஸ் அதிகாரிகளும் தொடர்ந்து வேலைக்குத் திரும்புவதைத் தவிர்த்து வருகின்றனர்.   நன்றி தினகரன் 






இஸ்ரேலியப் படையினரின் கொடிய செயலால் பரபரப்பு

September 21, 2024 8:10 am 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரான கபாத்தியாவில் இஸ்ரேலியப் படை கடந்த வியாழக்கிழமை (19) நடத்திய சுற்றிவளைப்பில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேலியப் படை கூரை மேல் இருந்து தள்ளிவிடும் வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருப்பதோடு அதனை அல் ஜசீரா செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இஸ்ரேலியப் படையின் இந்த சுற்றிவளைப்பில் குறைந்தது எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இதன்போது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மொட்டை மாடியில் இருந்து கை, கால்கள் மற்றும் கண்கள் கட்டுப்பட்ட ஒருவரை இஸ்ரேலியப் படையில் காலால் தள்ளி கீழே வீசி எறிவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை ஒரு குற்றச் செயல் என்றும் இஸ்ரேலிய இராணுவத்தின் கொடூரம் என்றும் பலஸ்தீன வெளியுறவு அமைச்சு எக்ஸ் சமூகத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘இது (இஸ்ரேல் இராணுத்தின்) பெறுமானங்கள் மற்றும் (இஸ்ரேல் இராணுவ) படையினரிடம் எதிர்பார்க்கப்படுவதற்கு மாறான ஒரு தீவிர செயல்’ என்று குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 






காசாவில் எகிப்து எல்லையை நோக்கி இஸ்ரேலியப் படையினர் முன்னேற்றம்

September 21, 2024 9:00 am 

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் வடக்கு மற்றும் மத்திய காசாவில் டாங்கி மற்றும் வான் தாக்குதல்களில் நேற்று (20) குறைந்தது 14 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் டாங்கிகள் எகிப்து எல்லையை நோக்கி வட மேற்கு ரபாவில் மேலும் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் இஸ்ரேலிய டாங்கிகள் நடத்திய செல் குண்டு தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்கு நகரான ரபாவில் இஸ்ரேல் கடந்த மே மாதம் தொடக்கம் படை நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில் அங்கு வான் தாக்குதல்களின் உதவியோடு டாங்கிகள் மேலும் வடமேற்காக முன்னேறி வருவதாக குறியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நகரின் கிழக்கு பகுதியில் கடும் சூடு மற்றும் குண்டு வெடிப்புகள் இடம்பெறுவதோடு இஸ்ரேலியப் படைகள் பல வீடுகளையும் குண்டு வைத்து தகர்த்து வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.  காசாவில் கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான தாக்குதல்களில் இதுவரை 41,200க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 



No comments: