இலங்கைச் செய்திகள்

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து மீளவில்லை

நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை நேற்று முதல் ஆரம்பம்

மிஸ் இன்டர்நேஷனல் – 2024 முதலிடம் வென்ற திலினி

இந்திய துணை தூதர அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் இடையே சந்திப்பு

“வோக்ஸ்வேகன்” தொழிற்சாலை இன்று ஜனாதிபதியால் திறப்பு


இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து மீளவில்லை

சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்ைக

September 16, 2024 6:00 am 
  • எதிர்வரும் தேர்தலில் மக்கள் அதனை தீர்மானிக்க வேண்டும் – IMF தெரிவிப்பு 

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து மீளவில்லை எனவும் சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப் பாதுகாப்பது முக்கியம் எனவும் அதனை எதிர்வரும் தேர்தலில் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசெக் (Julie Kozack) தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய ஜூலி கொசெக் (Julie Kozack), கடந்த ஜூன் 12 ஆம் திகதி, எங்களின் நிர்வாகக் குழுவினால் 2024 இலக்கம் IV உறுப்புரையின் கீழ் முன்னெடுக்கப்படும் ஆலோசனை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் (EFF) தொடர்பான வேலைத்திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. அதன் மூலம் இலங்கைக்கு சுமார் 336 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது.

வேலைத்திட்டத்தின் செயற்றின் வலுவாக உள்ளது. மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களின் பிரதிபலன்கள் காட்டப்பட்டுள்ளன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. பணவீக்கம் குறைந்து வருகிறது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் அரச வருமானம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், இன்னும் குறிப்பிடத்தக்க அளவு அபாயம் உள்ளது. எனவே, மறுசீரமைப்புகளைத் தொடர வேண்டியது அவசியமாகும் என தெரிவித்தார்.

இதனிடையே, தனியார் கடன் வழங்குநர்கள் தங்கள் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புகளை நிறைவு செய்தல் மற்றும் உத்தியோகபூ(ர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் ஒப்பந்தங்களை எட்டுவது முக்கிய மைல் கற்களாக அமையும். அத்துடன், IMF பணிக்குழாமினால் ஒன்றிணைக்கப்பட்ட கட்டமைப்பை மதிப்பாய்வு செய்து, அதன் மதிப்பீட்டை இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க, IMF பணிக்குழாமினால் இந்த மதிப்பீட்டை இலங்கை பிணைமுறி உரிமையாளர்களின் நிதி ஆலோசகர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தங்களின் பணி அதிலிருந்து முடிவடைவதாகவும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நாணய நிதியம் பங்கேற்பதில்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.

அந்த பேச்சுவார்த்தைகள் கடன் பெற்ற நாட்டுக்கும் அதன் கடன் வழங்குநர்களுக்கிடையில் நடைபெறுவதாகவும் சர்வதேச நாணய நிதியம் கடன் நிலைபேற்றுத்தன்மையின் பொதுவான மதிப்பீட்டை மாத்திரமே செய்வதாகவும் தெரிவித்த அவர், மேலதிக விபரங்களுக்கு, இலங்கை அதிகாரிகள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையைப் ஆராயுமாறு பரிந்துரைத்துள்ளார்.   நன்றி தினகரன் 

 




நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை நேற்று முதல் ஆரம்பம்

-வடமாகாண ஆளுநர் RDA யிடம் கையளிப்பு

September 20, 2024 6:15 am 

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பிலிருந்த இப் படகு 52 மில்லியன் ரூபா செலவில் திருத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பணிகளைத் தொடர்ந்து வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகை நேற்று (19)காலை உத்தியோகப்பூர்வமாக கையளித்தார்.

நெடுந்தீவு இறங்குத்துறைக்குச்சென்ற ஆளுநர், படகை பார்வையிட்டதுடன், நெடுந்தாரகை பயணிகள் படகின் திருத்தப் பணிகளுக்காக துரித நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதிக்கும், ஜனாதிபதி செயலகத்துக்கும், துறைசார் அமைச்சுக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இதன்போது, நீண்டகாலமாக காணப்பட்ட போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தமை தொடர்பாக, ஆளுநருக்கு நெடுந்தீவு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

ஆளுநரின் கடும் முயற்சியின் பயனாக, நேற்று (19)முதல் பயணிகள் சேவையை ஆரம்பித்துள்ள நெடுந்தாரகை படகு, தினமும் நெடுந்தீவிலிருந்து ஒரு தடவை குறிகட்டுவான் இறங்குத்துறைக்கு பயணிக்கவுள்ளது. அதன்படு இப் படகில் ஒரு தடவையில் சுமார் 80 பேர் பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





மிஸ் இன்டர்நேஷனல் – 2024 முதலிடம் வென்ற திலினி

September 19, 2024 11:30 am 

இந்தோனேசியாவில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் – 2024 சர்வதேச அழகிப் போட்டியில் கலந்துகொண்டு முதலிடத்தைப் பிடித்த திலினி குமாரி நேற்று முன்தினம் (17) நாட்டை வந்தடைந்தார்.

உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் பங்கேற்ற இப் போட்டி, இந்தோனேசியாவின் பாலி தீவில் கடந்த 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதில், கண்டி, பிரிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்த திலினி குமாரி முதலிடத்தை தனதாக்கி கொண்டார். இவர் நடிகையாகவும், அறிவிப்பாளராகவும் பல துறைகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 






இந்திய துணை தூதர அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் இடையே சந்திப்பு

September 19, 2024 2:42 am 

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதர அதிகாரிகள், திருகோணமலையிலுள்ள ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் திருகோணமலையிலுள்ள தனியார் சுற்றுலா ஹோட்டலொன்றில் நடைபெற்றது.

இதில் யாழ்.துணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளீஸ் மற்றும் தூதரக அதிகாரி நாகராஜன் ராம சுவாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் தற்போதைய தேர்தல் களநிலவரம் தொடர்பிலும் இலங்கை, இந்தியா உறவு தொடர்பிலும் நீண்டநேரமாக பிரதேச ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வடகிழக்கு மக்களின் தாக்கம் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப்போகின்றது? சிறுபான்மை இன கட்சிகளின் மூலமாக களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் எவ்வாறான தாக்ககங்ளை செலுத்தப்போகிறார் என்பது பற்றியும், இது சிறுபான்மை சமூகத்துக்கு சாதகமானதா? பாதகமானதா? போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. இலங்கை இந்திய தொடர்பில் அரசியல் ரீதியான உறவு சுற்றுலாத்துறை அபிவிருத்தி, ஊடகவியலாளர்களுக்கான எதிர்கால பயிற்சிகளை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் தமிழ் மக்களுடைய சமூக பொருளாதார பிரச்சினைகள் இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு இந்தியாவின் பங்களிப்பு தொடர்பிலும் மேலும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

(தம்பலகாமம் குறூப் நிருபர்) - நன்றி தினகரன் 






“வோக்ஸ்வேகன்” தொழிற்சாலை இன்று ஜனாதிபதியால் திறப்பு

September 17, 2024 6:30 am 

உதிரிப்பாகங்களைக் கொண்டு கார் தயாரிக்கும் மிகப் பெரிய தொழிற்சாலையான வோக்ஸ்வேகன் (volkswagen) தொழிற்சாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (17) திறந்து வைக்கப்படவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (16) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

திறந்து வைக்கப்படவுள்ள வோக்ஸ்வேகன் தொழிற்சாலையானது, தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையாக அமையவுள்ளது.

வெஸ்டன் ஓட்டோமொபைல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும், வோக்ஸ்வேகன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பல வாகனங்களும் நாளை காட்சிப்படுத்தப்படவுள்ளன . தற்போது இந்த தொழிற்சாலையில் தினமும் உதிரிப்பாகங்களைக் கொண்டு 25 வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. கார்கள் மட்டுமின்றி வேன்கள், டபள் கேப்கள் போன்ற பல்வேறு வாகனங்களும் இங்கு உருவாக்கப்படுகின்றமை குற்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

No comments: