அனுரவின் ஆட்சி இலங்கையின் மீட்சிக்கு வழியமைக்குமா ! ச. சுந்தரதாஸ்

 இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியை


சேர்ந்த அனுரகுமார திசாநாயக்க தெரிவாகியள்ளார். தீவிர இடதுசாரி கட்சியான ஜே வி பியின் வழித்தோன்றலான தேசிய மக்கள் கட்சி காலத்துக்கு ஏற்றாற் போல் தனது சில கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டு இந்த வரலாற்று வெற்றியினை அடைந்துள்ளது .

ஜே வி பியின் அல்லது தேசிய மக்கள் சக்தியின் இந்த வெற்றிக்கு

அவர்கள் முதலில் நன்றி சொல்ல வேண்டியது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுக்குத்தான்! சிங்கள மக்களின் அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளை பெற்று அரியாசனம் ஏறிய அவரால் உருப்படியாக ஓர் ஆணியைக் கூட புடுங்க முடியாமல் போனதால் பதவியை விட்டு மட்டுமன்றி, நாட்டை விட்டும் அவர் தப்பி ஓட வேண்டி வந்தது. அவரின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார சரிவும் மக்களுக்கு கடும் சுமையையும், கடன் சுமையையும் ஏற்றப்படுத்தியது. அதே சமயம் அவரின் ஆட்சிக்கு எதிராக ஜே வி பியின் இன்னொரு பிரிவான முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ணம் தலைமையின் கீழ் நடத்தப் பட்ட அரகலய (போராட்டம்) சற்று தாமதித்து தந்த பரிசுதான் இந்த ஜனாதிபதி ஆசனம்.


ஆனால் இதனை சொல்லும் போதே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அனுரகுமாரவுக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றி அவருக்கு வாக்களித்த பெரும்பாலான மக்களின் மன வெளிப்பாடேயாகும். அவரும் சரியில்லை, இவரும் சரியில்லை ஆகவே அனுரவுக்கு கொடுத்து பார்ப்போம் என்ற மன பாங்கிலேயே அனுரவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். சென்ற 2019 தேர்தலில் கோட்டபாயவுக்கு வாக்களித்த அதே மனவோட்டத்திலேயே இவருக்கு வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளனர்.

அனுராதபுரத்தை சேர்ந்த அனுரகுமார திசாநாயக்க ஒன்றும்

அரசியல் கற்று குட்டி அல்ல. ஏற்கனவே சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் பதின்னான்கு மாதங்கள் விவசாய , காணி அமைச்சராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. அதன் பின் இருபது ஆண்டுகள் எதிர் கட்சியில் அமர்ந்து விட்டு இப்போது மகுடம் தரிக்கின்றார் . அனுரவுக்கு கிடைத்துள்ள நாட்டின் அதிபர் பதவி உண்மையில் ஓர் முள் இருக்கையாகும். வங்குரோத்து ஆகிவிட்ட நாட்டின் பொருளாதார நிலையை மீண்டும் கட்டியெழுப்புதல், உள்ளூர் உற்பத்தியை சீர்படுத்துதல், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் போன்ற உடனடி சிக்கல்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டியு ள்ளார். அதே சமயம் இவற்றை செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவையும் அவர் பெற

வேண்டியுள்ளார். அதற்கு ஜே வி பி அல்லது இன்றைய தேசிய மக்கள் கட்சி தங்கள் கொள்கையில் சில நெகிழ்ச்சி போக்கினை மேற் கொள்ள வேண்டியிருக்கும். இதனால் ஏற்றப்படக் கூடிய கொள்கை மாற்றங்கள் அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பின்னடைவை ஏற்றப்படுத்தா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.
அனுர முகம் கொடுக்க வேண்டிய மற்றுமொரு பாரிய சவால் அவரின் வெளியுறவு கொள்கையாகும். இந்தியா, சீனா இரண்டு நாடுகளும் அவரை பொறுத்த வரை இருபுறமும் கூரான சவரக் கத்தியாகும். இரண்டில் எதனை பிழையாக கையாண்டாலும் பாரதூரமாக அறுத்து விடும். ஆகா வெளியுறவு கொள்கை, நிதிக் கொள்கை இரண்டையும் சரிவர கையாள அனுபவஸ்தர்களின் , திறமையாளர்களின் உதவியை பெற்றுக் கொள்ள அவர் தயங்கக் கூடாது.

இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் பேசும் மக்களும், மலையகத்தை சேர்ந்த தமிழர்களில் பெரும்பாலானோரும் அனுரவுக்கு வாக்களிக்கவில்லை என்பது உண்மை, அதே சமயம் நாட்டின் ஏனைய பகுதிகளை சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் மாற்றத்தை வேண்டி அவருக்கு வாக்களித்துள்ளனர். அதனை கருத்தில் கொண்டு வரும் பொதுத் தேர்தலில் அவர்களின் ஆதரவையும் பெரும் வண்ணம் அவரின் செயற்ப்பாடுகள் அமைவது நல்லது. தமிழர் பிரச்சினையில் ஜே வி பியின் கொள்கைகள் காலத்துக்கு காலம் மாறியுள்ளன. இனியும் அவர்கள் தமிழர் பிரச்சினைகளை நியாயபூர்வமான அணுகுவார்கள் என்று எதிபார்ப்போம்!

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து எழுபத்தாறு ஆண்டுகளுக்கு பிறகு முதல் தடவையாக சிங்கள மக்கள் சிவப்பு கட்சிக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்து நாட்டின் தலைமை பதவியை வழங்கியுள்ளார்கள். அனுரவின் ஆட்சி இலங்கையின் மீட்சிக்கு வழியமைக்க வேண்டும்!

No comments: