மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
சுவையான உணவு சுகத்தை அளிக்கும்
கனிவான இசை களிப்பைக் கொடுக்கும்
பெருமளவு பணம் இன்பம் அளிக்கும்
தரமுடை நூல்களே அறிவைப் பெருக்கும்
தேடித் தேடி நூல்களைப் படி
தெரிந்து தெரிந்து நூல்களைப் படி
ஓடி நாடி நூல்களைப் படி
உயரும் அறிவு உளமும் தெளியும்
முக்கனி சர்க்கரை கற்கண்டு தேனும்
முழுச்சுவை என்று நாவே சொல்லும்
நாவின் சுவையோ நற்சுவை அன்று
நல்ல நூல்களே நல்கிடும் நற்சுவை
பழத்தின் சாற்றைப் பலரும் விரும்புவர்
பருகும் அனைத்தும் அமுதமாய் எண்ணுவர்
அமுதம் என்பது அறிவுடை நூல்களே
பற்பல நூல்கள் பாரினில் இருக்கு
பார்த்திடும் வேளை பரவசம் பெருகும்
படித்துமே பார்த்தால் பலபல தெரியும்
பலபல தெரிந்தால் பளிச்சிடும் அறிவு
வானம் போல நூல்கள் இருக்கு
வகை வகையாக வருகுது நூல்கள்
ஞானம் கொண்டு நூல்கள் வருகுது
நாளும் தேடி கற்றிடு நூல்களை
அரசியல் இருக்கு அறமும் இருக்கு
ஆன்மிகம் அறிவியல் அழகியல் இருக்கு
நாடிடும் தேடிடும் அனைத்தும் இருக்கு
நன்றாய் நூல்களைப் படித்திடு நாளெலாம்
கற்றிடும் அனைத்தையும் கசடறக் கற்றிடு
கற்றிடும் வேளை கயமைகள் அகலும்
கயமைகள் அகன்றால் கண்கள் திறக்கும்
கண்கள் திறந்தால் காட்சிகள் தெளியும்
ஆழக் கற்றால் அனைத்தும் கிடைக்கும்
அகலக் கற்றால் அளவிலாக் கிடைக்கும்
அனைத்தும் கற்றால் ஆணவம் அகலும்
அனைத்தும் கற்றிடு அறிவொளி தெரியும்
மண்ணில் மனிதனாய் பிறப்பது வரமே
பிறந்த மனிதன் படிப்பது நலமே
படிக்கா இருப்பது பிறவிக்கே இழுக்கு
படிப்போம் தெரிவோம் பக்குவம் பெறுவோம்
No comments:
Post a Comment