தமிழ் அரசுக் கட்சி யாருடன்?

 September 7, 2024


திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சண்முகம் குகதாசன் தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியினர் ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். ரணிலுக்காகக் கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தனர். யார் ரணிலுக்கு ஆதரவாகக் கூட்டங்களை ஏற்பாடு செய்தார்களோ – அவர்கள் அனைவரும் தற்போது குகதாசனின் மறைமுக ஆதரவுடன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர் – பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவை அறிவித்திருக்கின்றது. உண்மையில் தமிழ் அரசுக் கட்சி யாரை ஆதரிக்கின்றது? தமிழ் அரசுக் கட்சி கொள்கையளவில் இரண்டு அணிகளாக பிளவுற்றிருப்பது உண்மைதானா அல்லது அதுவும் ஓர் அரசியல் நடிப்பா என்னும் சந்தேகமே மேலோங்குகின்றது. ஏனெனில் ஓர் அணியினர் பொது வேட்பாளரை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இன்னொருபுறம் பிறிதோர் அணியினர் பொது வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதரிப்பவர்களில் பிரதானமானவர் சிவஞானம் சிறீதரன். ஆனால் அவர் இதுவரையில் தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து பொது மேடைகளில் ஏனைய கட்சியினரோடு ஒன்றுபட்டு நிற்கவில்லை. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் சிறீதரனின் நிலைப்பாடும் ஓர் அரை ஆதரவு நிலைப்பாடுதான்.

மறுபுறத்தில் எதிர்ப்பவர் மிகவும் வெளிப்படையாகத் தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். சுமந்திரனின் அணுகுமுறைகளை ஒரு தனிநபரின் செயல்பாடு என்று கூறிவிட முடியாது. ஏனெனில் தற்போது தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது. சட்டரீதியில் அது ஏற்புடைய ஒரு தீர்மானம். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவோ ஒரு சிறந்த அரசியல் நடிகன் – பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு நல்ல கொமடியனாகக் காட்சியளிக்கின்றார். ஆனால் அனைவருமாக ஒட்டுமொத்த தமிழினத்தையும் கொமடி மக்களாக்கிக் கொண்டிருக்கின்றனரா என்னும் கேள்வியே மேலோங்குகின்றது.

தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர்தான் கட்சியின் உத்தியோகபூர்வ முடிவை அறிவிப்போம் என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று, பிரேமதாஸவை ஆதரிப்பதாக அறவித்திருக்கின்றனர். இன்னொருபுறமாக ரணில் விக்கிரம சிங்கவின் ஆசீர்வாதத்தில் அதிக நிதி ஒதுக்கீடுகளை சுமந்திரன் பெற்றிருக்கின்றார். இது எதனைக் காண்பிக்கின்றது? தமிழ் அரசுக் கட்சி யாருடன் நிற்கின்றது? சஜித்துடனா அல்லது ரணிலுடனா அல்லது இருவருடனுமா? நிலைமைகளைப் பார்த்தால் தமிழ் அரசுக் கட்சியிலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருவருடன் நிற்கின்றனர். இதில் சிலர் தமிழ் பொது வேட்பாளருடன் நிற்கின்றனர். மொத்தத்தில் தமிழ் அரசுக் கட்சி ஓர் அரசியல் விபசார விடுதியாகவே காட்சியளிக்கின்றது.   நன்றி ஈழநாடு 

No comments: