மேற்குக் கரையில் ஒரு வாரத்தை தாண்டி இஸ்ரேலின் முற்றுகை நீடிப்பு: பலரும் பலி
தாக்குதலுக்கு இடையே காசாவில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்
வெள்ளத்தில் 1,000 பேர் உயிரிழந்ததால் 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை
பெங்களுரில் ஒரு பில்லியன் செலவில் உலகளாவிய திறன் நிலையம்
பெரும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் நெதன்யாகுவின் நிலைப்பாட்டில் உறுதி
பெரும் அழிவுக்குப் பின் ஜெனினில் இருந்து இஸ்ரேலியப் படை வாபஸ்
மேற்குக் கரையில் ஒரு வாரத்தை தாண்டி இஸ்ரேலின் முற்றுகை நீடிப்பு: பலரும் பலி
காசாவில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் அதேநேரம் போர் நீடிப்பு
காசாவில் இரண்டாவது கட்டமாக போலியோ தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் தெற்கில் உள்ள மருத்துவ மையங்களில் நேற்று (05) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஏனைய பகுதிகளில் தொடர்ந்து போர் நீடிப்பதோடு இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய காசாவில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்ற போலியோ தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் நேற்று தெற்கு காசாவில் ஆரம்பிக்கப்பட்டது. இதனையொட்டி மருத்துவ மையங்களில் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்றுதிரண்டனர்.
இந்தத் திட்டதின் கீழ் இதுவரை 10 வயதுக்கு உட்பட்ட 187,000இற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தடுப்பு மருந்து வழங்குவதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இணங்கின.
எனினும் காசாவில் ஏனைய பகுதிகளில் தொடர்ந்து இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் உள்ள அல் அக்சா வைத்தியசாலையில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனை வளாகத்திற்குள் அடைக்கலம் பெற்று கூடாரம் அமைத்திருந்தவர்களே கொல்லப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் தெற்கு காசாவின் ரபா நகருக்கு அருகில் இருக்கும் மொஸ்பாஹ் சுற்றுப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. ஆளில்லா விமானத்தின் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்கள் 11ஆவது மாதத்தை தொடவிருக்கும் நிலையில் இதுவரை அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 41,000ஐ நெருங்கியுள்ளது.
போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் அதற்கான புதிய முன்மொழிவு ஒன்றை முன்வைக்க அமெரிக்கா முயன்று வருகிறது. எதிர்வரும் நாட்களில் இந்த முன்மொழிவு முன்வைக்கப்படும் என்று இரு அமெரிக்க அதிகாரிகள், இரு எகிப்து பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பல மாதங்களாக நீடிக்கும் இழுபறிக்குக் காரணமான விடயங்களை தளர்த்தும் நோக்கிலேயே இந்த முன்மொழிவு கொண்டுவரப்படவுள்ளது.
ஹமாஸ் ஒழிக்கப்பட்டாலேயே போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறிவருகிறார். மறுபுறம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்த ஒரு உடன்படிக்கையிலும் காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை முழுமையாக வாபஸ் பெறுவது உள்ளடக்கப்படுதல் வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஹமாஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பேச்சுவார்த்தையில் இருந்து நெதன்யாகும் வேண்டுமென்றே வெளியேறுவதாகவும் அதன்மூலம் எமது மக்களுக்கு எதிராக இஸ்ரேலால் ஆக்கரமிப்பை தொடர முடியும் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
காசா மற்றும் எகிப்து எல்லைப் பகுதியான பிலடெல்பியா தாழ்வாரத்தின் கட்டுப்பாட்டை நெதன்யாகு கேட்பது இதன் ஒரு தந்திரம் என்றும் ஹமாஸ் குறிப்பிட்டது.
பிலடெல்பியா தாழ்வாரத்தில் இஸ்ரேலிய படை தொடர்ந்து நிலைகொள்வதில் நெதன்யாகு உறுதியாக இருப்பது தற்போதைய போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படையின் சுற்றிவளைப்புகள் மற்றும் முற்றுகைகள் ஒரு வாரத்தைத் தாண்டி நேற்றுடன் (05) எட்டாவது நாளாகவும் தொடர்ந்தது.
டுபாஸின் தெற்கே உள்ள பாரா அகதி முகாமில் 16 வயது சிறுவனை இஸ்ரேலியப் படை கடந்த புதனன்று (04) சுட்டுக்கொன்றது. இதன்போது அபூ சீனா என்ற சிறுவன் மீது பல தடவைகள் சூடு நடத்தி இருக்கும் இஸ்ரேலியப் படை அம்புலன்ஸ் வண்டி அவனை அடைவதையும் தடுத்தருப்பதோடு இராணுவ புல்டோசரை பயன்படுத்தி சிறுவனின் உடலை அகற்றியதாக வபா செய்தி நிறுவனம் கூறியது.
டுபாஸ் நகரில் வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் மேலும் ஐந்து இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் வாகனத்தில் இருந்த ஐந்து சடலங்களையும் மீட்டதாகவும் காயமடைந்த ஆறாமவருக்கு மருத்துவ சிகிச்சைகளை அளித்ததாகவும் செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
ஜெனின் நகரில் இஸ்ரேலின் முற்றுகை எட்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்ததோடு அங்கு சுற்றுவளைப்புகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேலியப் படை பலஸ்தீன போராளிகளுடன் சண்டையிட்டு வருகிறது. இதனால் பலர் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்திருப்பதோடு பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எட்டு நாட்களாக வீட்டுக்குள்ளேய அடங்கிக் கிடப்பதாக அங்குள்ள அதனன் நக்னகியா என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு சிறைச்சாலை போல் உள்ளது என்று ஐந்து குழந்தைகளின் தந்தையான 56 வயதான அதனன் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
1967 ஆம் ஆண்டு தொடக்கம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கும் மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படை அடிக்கடி ஊடுருவல்களை மேற்கொண்டபோதும் தற்போதைய படை நடவடிக்கை கடுமையாக இருப்பதாக குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜெனின் நகரின் வீதிகள், உட்கட்டமைப்புகள் மற்றும் உடைமைகளை இஸ்ரேலியப் படை புல்டோசர் கொண்டு தகர்த்து வருகிறது.
மேற்குக் கரையின் வடக்கு பகுதியில் தற்போது இடம்பெற்று வரும் இஸ்ரேலின் படை நடவடிக்கையில் இதுவரை 36 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட சிலர் பலஸ்தீன போராளிகள் என்று அந்த போராட்டக் குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர். நன்றி தினகரன்
தாக்குதலுக்கு இடையே காசாவில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்
மேற்குக் கரையின் ஜெனினில் ஐந்தாவது நாளாகவும் முற்றுகை
காசாவில் 640,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை நேற்று (01) ஆரம்பமானபோதும் அங்கு தொடர்ந்தும் இஸ்ரேலின் தாக்குதல்கள் உக்கிரமடைந்திருந்ததோடு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் இஸ்ரேலின் முற்றுகை ஐந்தாவது நாளாக நேற்றும் (01) நீடித்தது.
பலஸ்தீன சுகாதார நிறுவனத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையே காசாவில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதனையொட்டி தடுப்பு மருந்து வழங்கும் பகுதிகளில் தற்காலிக மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இணங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மத்திய காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி தடுப்பு மருந்து வழங்கும் மையங்களில் பெரும் எண்ணிக்கையான மக்கள் திரண்டிருப்பதாக மருத்துவ பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூன்று நாட்கள் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த போலியோ தடுப்பு மருந்துத் திட்டம் இன்று மற்றும் நாளை காசாவின் மற்றப் பகுதிகளில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் நான்காவது நாளுக்கு இந்தப் போர் நிறுத்தம் நீடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் 25 ஆண்டுகளில் முதல் முறையாக டைப் 2 வகை போலியோ தொற்று சம்பவம் ஒன்று கடந்த மாதம் கண்டுபிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குழந்தை பகுதி அளவு பக்கவாதத்திற்கு முகம்கொடுத்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டது. இதனையடுத்தே போலியோ தடுப்பு மருந்து வழங்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றி அளிப்பதற்கு நான்கு வார காலத்திற்குள் 90 வீதமான குழந்தைகளுக்கு இரு முறை தடுப்பு மருந்து வழங்கப்பட வேண்டி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. காசாவில் தொடரும் போர் மற்றும் அங்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவுகளுக்கு மத்தியில் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பது பெரும் சிரமத்துக்குரியது என்று அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோன்று மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு உட்படாத மத்திய காசாவின் புரைஜின் கிழக்குப் பகுதியில் இருந்து தொடர்ந்து வெடிப்புச் சத்தங்கள் கேட்ட வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு புரைஜ் மற்றும் காசா நகரங்களில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் ஒரு சிறுமி உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 61 பேர் கொல்லப்பட்ட நிலையில் போலியோ தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை வெற்றி அளிப்பதற்கு உண்மையான போர் நிறுத்தம் ஒன்று தேவையாக உள்ளது என்று பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் 11 மாதங்களை நெருங்கும் போரில் இதுவரை 40,700க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு காயமடைந்தோர் எண்ணிக்கை 94,000ஐ தாண்டி இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஜெனின் முற்றுகை
காசா போருக்கு மத்தியில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பாரிய படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருக்கும் இஸ்ரேலிய படை அங்கு ஜெனின் நகரில் ஐந்தாவது நாளாக நேற்றும் முற்றுகையை தொடர்ந்தது.
ஜெனின் நகருக்கான உணவு, நீர், மருத்துவ வசதிகளை முடக்கி நீர் மற்றும் மின்சார விநியோகத்தையும் துண்டித்திருக்கும் இஸ்ரேலிய இராணுவம் நகரின் வீதிகள், கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை புல்டோசர் கொண்டு அழித்து வீடு, வீடாக சோதனையிட்டு வருகிறது.
இங்கு பலஸ்தீன போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைக்கு இடையே மோதலும் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையொட்டி ஜெனின் நகரில் இருந்து சில குடும்பங்கள் வெளியேற ஆரம்பித்துள்ளன.
தனது இரண்டு மாத குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி ஒருபா ஷலபி என்ற தாய் அங்கிருக்க பயமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
‘அவர்கள் எம்மீது சூடு நடத்துகிறார்கள் வீடுகள் மீது கையெறி குண்டுகளை எறிகின்றனர். எமது வீட்டின் பாதி அளவு வெடித்துச் சிதறியது.
நாம் சமையலறையில் ஒளிந்துகொண்டு எம்முடன் குழந்தைகள் இருப்பதாக சத்தம்போட்டு கூறினோம்’ என்று அவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஒருபா தனது தாய், சித்தி, சகோதரி மற்றும் மைத்துனருடன் கால் நடையாக நகரை விட்டு வெளியேறி வந்துள்ளார்.
‘அங்கே மின்சாரம் அல்லது நீர் இல்லை. யாரேனும் ஜன்னல் அருகுக்கு நெருங்கினாலும் சுடப்படுகிறார்கள்.
எமது அண்டை வீட்டார்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். நாம் அனைவரும் ஒரே அறையில் மூடப்பட்டோம்.
இளைஞர்களை பிடித்த அவர்கள் தரையில் கட்டி வைத்தார்கள்’ என்றும் அவர் கூறினார்.
ஜெனினில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் படை நடவடிக்கையில் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலியப் படை நகரில் 20 வீதமான வீதிகள் மற்றும் 20 கிலோமீற்றர் அளவான நீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்பை புல்டோசர் கொண்டு தகர்த்திருப்பதாக ஜெனின் மாநகர சபை குறிப்பிட்டுள்ளது. இதனால் அகதி முகாமின் 80 வீதமானோருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேற்குக் கரையின் வட பகுதியில் இஸ்ரேல் கடந்த 20 ஆண்டுகள் காணாத அளவில் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை கடந்த புதன்கிழமை ஆரம்பித்தது. முன்னதாக துல்கர்ம் மற்றும் டுமாஸ் பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட படை நடவடிக்கை பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரோன் நகருக்கு அருகில் நேற்று வாகனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று இஸ்ரேலிய பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்னா டர்குமியா சந்தியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்திருக்கும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்தாரியை தேடிவருவதாக தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலை ஹமாஸ் அமைப்பு வரவேற்றபோதும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.
‘காசாவில் இடம்பெறும் படுகொலை மற்றும் இனப்படுகொலைகளுக்கான இயற்கையான பதிலடியாக இது உள்ளது’ என்று அது கூறியது.
‘ஆயுதங்களை சுமந்திருக்கும் அனைவரும் காசாவில் எமது மக்கள் மீது தொடர்ந்து படுகொலைகளைச் செய்து வரும் ஆக்கிமிப்பாளர்களின் நெஞ்சில் துப்பாக்கி குண்டுகளை செலுத்தும்படி நாம் அழைப்பு விடுக்கிறோம்’ என்று ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
வெள்ளத்தில் 1,000 பேர் உயிரிழந்ததால் 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை
- வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டு
வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி 30 அதிகாரிகளுக்கு வட கொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட கொரியாவில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில் 1,000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் 30 பேருக்கு அதிபர் கிம் ஜாங் உன் மரணதண்டனை விதித்ததாகவும், கடந்த மாதம் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தென் கொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு கடும் தண்டணை வழங்க வேண்டும் என்றுஅதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டதாக அந்நாட்டு ஊடகம் கடந்த மாதம்செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், 30 அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரியாவில் பத்திரிகைச் சுதந்திரம் முடக்கப்பட்டிருப்பதால் அந்நாட்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்துசெய்திகள் வெளிவருவதில்லை. இந்தச்சூழலில், அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்த செய்தியை வட கொரியாவின் அண்டை நாடான தென் கொரியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வெள்ள பாதிப்பு தொடர்பாக தென்கொரிய நிறுவனம் வெளியிட்ட செய்தியை மறுத்த வட கொரியா,“கனமழையால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக வெளிவரும் செய்திகள் தவறானவை. எங்கள் நாட்டின் மீது அவப்பெயர் ஏற்படுத்த தென் கொரியா இத்தகைய வதந்திகளைப் பரப்புகிறது”என்று தெரிவித்தது.
வடகொரியாவில் கரோனாவுக்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக 10 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. நன்றி தினகரன்
பெங்களுரில் ஒரு பில்லியன் செலவில் உலகளாவிய திறன் நிலையம்
உலகளாவிய திறன் மத்திய நிலையத்தை பெங்களூரில் அமைப்பதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செவ்ரோன் எரிசக்தி நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.
அமெரிக்காவுக்கு வெளியே மிகப் பெரிய புத்தாக்க மத்திய நிலையமாக பெங்களூர் நிலையத்தை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக செவ்ரோன் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அக்ஷே சஹ்னி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்நிலையத்தை அமைக்கவென ஒதுக்கப்பட்டுள்ள நிதி அடுத்துவரும் ஐந்தாறு வருடங்களுக்குள் முழுமையாக முதலீடு செய்யப்படும். இங்கு புதியவர்களை பணிகளில் அமர்த்துவதோடு மத்திய நிலையத்தை அமைப்பதற்கும் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கும் இந்திய வர்த்தகர்களுடன் இணைந்தும் செயற்பட உள்ளோம்.
Chevron Engineering and Innovation Excellence Center என்ற பெயர் கொண்ட இந்நிலையம் பெங்களூரில் பெல்லந்தூர் அருகில் அமைக்கப்படும். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 600 நிபுணர்கள் இங்கு பணிக்கு அமர்த்தப்படுவர். அதன் பின்னர் தேவைகளுக்கு ஏற்ப ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
எமது நிறுவனம் அமெரிக்காவின் டெக்சாஸிலுள்ள ஹுஸ்டனிலும் கலிபோர்னியாவிலுள்ள ரிச்மண்டிலும் ஸ்கொட்லாந்தின் அபர்டீனிலும் மூன்று தொழில்நுட்ப மையங்களைக் கொண்டுள்ளது. திறமையானவர்கள் நிறைந்த பெங்களூரில் இந்நிலையத்தை அமைப்பதன் ஊடாக பல வேலைகளைத் தரப்படுத்தவும் மையப்படுத்தவும் நெறிப்படுத்தவும் எதிர்பார்க்கிறோம்.
எங்களிடம் நான்கு கால் ரோபோ நாய் பயன்பாடு உள்ளது. இது உண்மையில் ஒரு மனித இயக்குனரைப் போலவே தகவல்களைச் சேகரிக்கும். அதன் ஊடாக பெரிய உற்பத்தி வசதிகளுக்குள் பிரவேசிக்க முடியும். இம்மத்திய நிலையம் ரோபோட்டிக்ஸ் திறன்கள் மேம்படுத்தப்படுவதையும் கவனிக்கும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். நன்றி தினகரன்
பெரும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் நெதன்யாகுவின் நிலைப்பாட்டில் உறுதி
காசாவில் உள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அழுத்தங்கள் அதிகரித்தபோதும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக உள்ளார்.
நெதன்யாகு அரசுக்கு எதிராக இஸ்ரேலில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு நெருங்கிய கூட்டாளியான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். காசாவில் இருந்து ஆறு பணயக்கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து நெதன்யாகு மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
எனினும் கடந்த திங்கட்கிழமை (02) பேசிய அவர் சமரசம் செய்துகொள்வதற்கான எந்த சமிக்ஞையையும் வெளியிடவில்லை.
எகிப்துடனான காசா எல்லையான பிளடெல்பியா தாழ்வாரத்தை இஸ்ரேல் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்றும் அது எந்த ஒரு போர் நிறுத்த உடன்படிக்கையிலும் அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு இஸ்ரேல் நிலைகொள்வதை எகிப்து மற்றும் ஹமாஸ் தொடர்ந்து நிராகரிப்பதோடு தற்போதைய போர் நிறுத்த பேச்சுவார்த்தையிலும் இந்த விடயம் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
காசாவை கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பு சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி மீண்டும் ஆயுதங்களை பெறுவதை தடுப்பதற்கு இந்தத் தாழ்வாரம் முக்கியமானது என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
‘இது ஹமாஸுக்கு பிராணவாயுவாக உள்ளது. பணயக்கைதிகளை விடுவிப்பதில் என்னை விடவும் யாரும் பொறுப்பானவர்கள் அல்ல. இந்த விடயத்தில் யாரும் எனக்கு பாடம் நடத்த வேண்டாம்’ என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பைடன், உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் நெதன்யாகு போதுமாக செயற்படவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கான இறுதி முன்மொழிவு ஒன்றை இந்த வாரத்தில் வழங்கவிருப்பதாக அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பைடனின் நெதன்யாகு மீதான விமர்சனம் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் அவர் முட்டுக்கட்டையாக இருப்பதை அமெரிக்கா ஒப்புக்கொள்வதாக உள்ளது என்று ஹமாஸ் மூத்த அதிகாரியான சமி அபூ சுஹ்ரி தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் ஒன்றை உறுதி செய்து பலஸ்தீன நிலப்பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வாபஸ் பெறும் முன்மொழிவு ஒன்றுக்கு ஹமாஸ் சாதகமாக பதிலளிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு நெதன்யாகு அரசுக்கு அழுத்தம் கொடுத்து இஸ்ரேலில் இரண்டாவது நாளாக கடந்த திங்கட்கிழமையும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு அங்கு பொது வேலைநிறுத்தம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்தில் பல மாதங்களாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றபோதும் இதுவரை உடன்பாடு ஒன்றை எட்டத் தவறியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போது சுமார் 250 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இவர்களில் தொடர்ந்தும் 100க்கும் அதிகமானவர்கள் உயிருடனும் மரணித்த நிலையும் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
இந்தப் பணயக்கைதிகள் இருக்கும் இடத்தை இஸ்ரேலியப் படை அணுகினால் கையாள வேண்டிய புதிய வழிக்காட்டலை பணயக்கைதிகளின் காவலர்கள் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் கடைப்பிடித்து வருவதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு திங்கட்கிழமை குறிப்பிட்டது.
ரபா நகர சுரங்கப்பாதை ஒன்றில் ஆறு பணயக்கைதிகளின் சடலங்களை இஸ்ரேலியப் படை கடந்த சனிக்கிழமை மீட்டது. அந்தப் பணயக்கைதிகளை படையினர் நெருங்கியபோது அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்தே ஹமாஸ் அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வழிகாட்டல் பற்றி ஹமாஸ் ஆயுதப் பிரிவு பேச்சாளர் அபூ உபைதா விரிவாக எதுவும் கூறவில்லை. ஆனால் இந்தப் பணயக்கைதிகளின் மரணத்திற்கு இஸ்ரேலே பொறுப்பேற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியது.
கடந்த ஜுன் மாதத்தில் பலஸ்தீனர்கள் பலரும் கொல்லப்பட்ட படை நடவடிக்கை ஒன்றின் மூலம் இஸ்ரேலியப் படை நான்கு பணயக்கைதிகளை உயிருடன் மீட்டது. இதற்குப் பின்னரே இந்த புதிய வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.
‘உடன்படிக்கைக்கு பதிலாக இராணுவ அழுத்தத்தின் மூலம் பணயக்கைதிகளை விடுவிக்க நெதன்யாகு உறுதியாக இருக்கும் நிலையில், பணயக்கைதிகள் அவர்களின் குடும்பங்களுக்கு பிணப்பையில் தான் திருப்பி அனுப்பப்படும். அவர்கள் மரணித்த நிலையிலா அல்லது உயிருடனா தேவை என்பதை குடும்பத்தினர் தேர்வு செய்ய வேண்டும்’ என்று அபூ உபைதா குறிப்பிட்டார். நன்றி தினகரன்
பெரும் அழிவுக்குப் பின் ஜெனினில் இருந்து இஸ்ரேலியப் படை வாபஸ்
காசா போர் 11ஆவது மாதத்தைத் தொட்டது
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய பின்னர் இஸ்ரேலியப் படை நேற்று அங்கிருந்து வெளியேறியுள்ளது. கடந்த பத்து நாட்களாக நீடித்த ஜெனின் நகர படை நடவடிக்கையில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் மோதல் நீடிப்பதோடு இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்கள் காரணமாக மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ‘காசாவில் மனிதாபிமான நிலைமை பேரழிவுக்கு அப்பாற்பட்டுள்ளது’ என்று ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் ஸ்டபனே டுஜரிக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஓகஸ்டில் காசாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு எந்த ஓர் உணவுப் பொருளும் கிடைக்கப்பெறவில்லை என்று நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பில் டுஜரிக் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒக்டோபர் 07 ஆம் திகதி காசா போர் வெடித்தது தொடக்கம் அந்தப் பகுதிக்கான எல்லைகளை மூடிய இஸ்ரேல் உணவு, மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்கள் செல்வதை கட்டுப்படுத்தி வருகிறது.
மறுபுறம் காசாவின் தெற்கு நகரான ரபாவில் நேற்றுக் காலை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்து ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. அங்கிருந்து ஆறு சடலங்கள் மீட்கப்பட்டதை உள்ளூர் நிர்வாகம் உறுதி செய்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கில் காசா நகரின் செய்தூன் பகுதியில் நேற்று இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்தது. இங்கு இஸ்ரேலியப் படை கடந்த வியாழக்கிழமை இரவு தொடக்கம் தாக்குதல்களை நடத்தி வருவதோடு முந்தைய தாக்குதல்களில் அறுவர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் வெடித்து இன்றுடன் 11 மாதங்களை தொடுவதோடு இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 41,000ஐ நெருங்கியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.
காசாவில் போருக்கு மத்தியில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை தொடர்வதோடு தற்போது அது தெற்கு காசாவில் இடம்பெற்று வருகிறது. தெற்கு காசாவில் தடுப்பு மருந்து வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட நேற்று முன்தினம் முதல் நாளில் 160,000க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் தெற்கு காசாவின் சில பகுதிகளில் போலியோ தடுப்பு மருந்து திட்டத்துடன் தொடர்புபட்ட மருத்துவக் குழுக்கள் செல்வதற்கு இஸ்ரேலிய இராணுவம் ஒத்துழைப்பு வழங்க மறுத்ததாக காசா சுகாதார அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.
இந்தத் தடுப்பு மருந்து வழங்கும் முதல்கட்ட திட்டம் மத்திய காசாவில் முன்னெடுக்கப்பட்டதோடு அப்போது 10 வயதுக்கு உட்பட்ட 187,000க்கும் அதிகமான சிறுவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டத்தில் தெற்கு காசாவில் 340,000 சிறுவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
காசாவில் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்க மத்தியஸ்தர்கள் தொடர்ந்து முயன்றுவரும் நிலையில் உடன்படிக்கைக்கான 90 வீதமான விடயங்களில் இணக்கம் எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இதில் எகிப்துடனான காசாவின் தெற்கு எல்லையின் எதிர்கால பாதுகாப்பு நிலை குறித்த பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருப்பாகவும் எஞ்சிய விடயங்களை தீர்ப்பதற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணங்கி இருப்பதாகவும் பிளிங்கன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிலடெல்பியா தாழ்வாரம் என்று அழைக்கப்படும் இஸ்ரேல் மற்றும் எகிப்து எல்லையில் தொடர்ந்து நிலைகொள்வதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக இருக்கும் நிலையில் அதற்கு ஹமாஸ் மற்றும் எகிப்து எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
சின்னாபின்னமான ஜெனின்
காசா போர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அங்குள்ள ஜெனின் நகரில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் நேற்று வாபஸ் பெற்ற பின் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சேதத்தால் குவிந்திருக்கு இடிபாடுகளை அகற்றும் பணியில் பலஸ்தீனர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் படை நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டதோடு ஹெலிகொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் அதேபோன்று புல்டோசர்களும் பயன்படுத்தப்பட்டன. இதன்போது ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பத்தா உட்பட பலஸ்தீன போராட்ட குழுக்களுக்கும் இஸ்ரேலியப் படைக்கும் இடையே மோதல்களும் இடம்பெற்றன.
‘அவர்கள் நுழைந்தபோது, புல்டோசர்களை பயன்படுத்தி அனைத்தையும் அழிக்க ஆரம்பித்தனர். எதனையும் விட்டுவைக்கவில்லை’ என்று ஜெனின் குடியிருப்பாளரான சமஹர் அபூ நஸ்ஸா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
நீர் மற்றும் மின்சார சேவைகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டிருப்பதோடு இஸ்ரேலிய புல்டோசர்களால் சுமார் 20 கிலோமீற்றர் வீதிகள் தோண்டப்பட்டுள்ளன. வீதியோர குண்டு தாக்குதல்களை தடுப்பதற்கு இந்த மூலோபாயத்தை பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது. எனினும் இதனால் நகரின் மத்திய பகுதிகள் சின்னபின்னமாக்கப்பட்டுள்ளது.
இந்த மூலோபாயத்தை பயன்படுத்தி காசாவைப் போன்று மேற்குக் கரையையும் தரைமட்டமாக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது என்று பலஸ்தீன வெளியுறவு அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டதோடு இறுதிக் கிரியையில் துப்பாக்கி ஏந்தியவர்கள் வானில் சுட்டு மரியாதை செலுத்தினர்.
ஜெனினில் இஸ்ரேலின் படை நடவடிக்கையின்போது 21 பேர் கொல்லப்பட்டனர். பெரும்பாலானவர்கள் போராட்டக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றபோதும் இதில் ஜன்னல் வழியே வெளியே பார்த்தபோது இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட 16 வயது சிறுமி உட்பட பொது மக்களும் உள்ளனர்.
மேற்குக் கரையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் நடத்திய இஸ்ரேலியப் படை நடவடிக்கையில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டு மேலும் 150 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
இதன்படி காசாவில் போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7 தொடக்கம் மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படை மற்றும் இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 691 ஆக அதிகரித்துள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment