எங்கள் பொங்கல் – கவிதை நூல் பற்றிய நோக்கு



 

ராணி சீதரன்

எழுத்தாளர்,

சிரேட்ட விரிவுரையாளர் (ஓய்வுநிலை)

தேசிய கல்வி நிறுவகம்

இலங்கை

 



தமிழ்  கற்பிக்கும் ஆசிரியர் ஒரு நடிகனைப் போல்  இருக்கவேண்டும் என்ற கூற்று புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழாசிரியர்களுக்கு மிகவும் பொருந்துவதாக  உள்ளது. பல்லினக்  கலாசாரத்திற்குள் வாழும் புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ்ப்பிள்ளைகள் தமிழை இரண்டாம் மொழியாகவே கற்கின்றனர்.  பிள்ளை கற்கின்ற மொழியிலேயேதான் சிந்திக்க முடியும். எனவே அவர்களிடம் தமிழ்  மொழிசார் திறன்களையும் படைப்பாற்றலையும்  எந்த வகையில் தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்ற பெரியதொரு கேள்வி எம்முன்னே எழுகின்றது.

 

மொழியின் மூலம் மாணவர்களிடம் நான்கு திறன்கள் வளர்க்கப்படல் வேண்டும். கேட்டல், பேச்சு, ஆகிய இரு திறன்களும் வீட்டுச் சூழலிலே பிள்ளை கற்றுக்கொண்டு சொற்களஞ்சியங்களை சேகரித்து மூளையில் பதியமிட்டுக்கொண்டு  பாடசாலைக்குச் செல்கின்றது. அங்கே எழுத்து வாசிப்பு ஆகிய இரு திறன்களையும் கற்பதற்கு வீட்டில் பெற்றுக்கொண்ட மொழிசார்ந்த அனுபவங்கள் வாய்ப்பளிக்கின்றன. இத்தகைய சந்தர்ப்பம் புலம்பெயர்ந்து வாழும் பிள்ளைகளுக்கு முழுமையாகக் கிடைக்கின்றது எனக்கூறமுடியாது. ஏனெனில் பெற்றோர்களில்  அநேகமானோர் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர்.  இதனால் தமிழ்ப்  பாடசாலைகளில்  படிக்கும் பிள்ளைகள் பலரிடம் உச்சரிப்புத்திறனில், இடருறும் நிலையினை அவதானிக்கலாம். அதுமட்டுமன்றித் தொடர்ந்து பேசுதல், பொருள் விளங்குதல், சிறந்த முன்வைப்பு என்பவற்றிலும் இதேநிலையே காணப்படுகின்றது.  

 

எனவே இங்கு மொழித்திறன்களை மட்டுமன்றித் தமிழரின் பண்பாட்டுக் கூறுகள் நம்பிக்கைகள், மரபார்ந்த எண்ணங்கள் இலக்கியப் படைப்புகள்  என்பவற்றை இவர்களுக்கு ஓங்கி உரைத்து உணர்த்த வேண்டிய தேவையும், பொறுப்பும் தமிழ்  ஆசிரியரின் கடமையாக உள்ளது. இதனை உணர்ந்து செயற்படுபவர் தமிழ் ஆசிரியராக விளங்கும் திரு. பரமேசுவரன் இரங்கநாதன்  அவர்கள். மவுண்ட் றூயிட் தமிழ்ப்  பாடசாலையில் தமிழ் கற்பிக்கும் இவர் இயல்பாகவே தமிழில் விருப்பமும், ஈடுபாடும் கொண்டவர். ஆடிப்பிறப்பு விழாவில் அவர் பிள்ளைகளுக்கு வழக்காடு மன்றம் ஒன்றைப் பயிற்றுவித்துத்  தனது தலைமயில் அதனை நடத்தியதோடு மட்டுமன்றி நவாலியூர்  சோமாசுந்தரப் புலவரின் பேரனை கருத்துரை வழங்குவதற்கு  அழைத்திருந்தார். இத்தகைய தொலை  நோக்குடன் தமிழ்  கற்பிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் செயற்படல் வேண்டும். என்பதனை அவரின் முன்மாதிரியான செயற்பாடுகள் புலப்படுத்துகின்றன.

 

திரு பரமேசுவரன் இரங்கநாதன்  “எங்கள் பொங்கல்” என்ற தலைப்பில் வெளியிட்ட கவிதைத் தொகுப்பில் இருபத்தைந்து தலைப்புகளில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் இவற்றைப் பேசுபொருள் சார்ந்து ஐந்து வகைமைக்குள் உள்ளடக்கலாம்.அவை

1.    புத்தாண்டு

2.    பொங்கல்

3.    பக்தி

4.    மொழி

5.    கொரோனா என்பவையாகும்.

இவற்றில் பொங்கல், பக்தி, மொழி சார்ந்த கவிதைகள் அரங்க நிகழ்வில் சமர்ப்பித்தவையாகவும், கொரோனா பற்றிய கவிதைகள் தமிழ்  முரசு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டவையாகவும் உள்ளன. கவிதைகள் அனைத்தும் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையுடன் இலகுவான மொழிநடையில் அமைந்துள்ளன. சில கவிதைகளில் எதுகை மோனையுடனான ஓசைச் சிறப்பும் பொருந்துகின்றன.

 

“தித்திக்கும் செய்திகள் திசையாவும் ஓலித்திட

எத்திக்கும் மக்கள் எழுச்சியுடன் வாழ்ந்திட

புத்தாண்டே வருக

சித்திரைப் புத்தாண்டே வருக”

எனப் புத்தாண்டை வரவேற்றுப் பாடுகின்றார். இதில் ஐந்து பிரிவுகளாகப் பாடல்கள் உள்ளன. புத்தாண்டு என்றால் என்ன?, அதில் இடம்பெறும்  அம்சங்கள் எவை? என்பன பற்றிய பல தகவல்களைப் பாடல்கள் உள்ளடக்கியுள்ளன. நாள் கணக்கிடும் முறை, புண்ணியகாலம், ஓரைகள்  (இராசிகள்), புத்தாண்டு கொண்டாடும் முறை குறிப்பாக மருத்து நீர் தேய்த்து நீராடல், புத்தாடை அணிதல், உறவினருடன்  மகிழ்தல், கைவிசேடம் பெறுதல் போன்ற தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு  இப்பாடல்கள் பெரிதும் உதவுவனவாக உள்ளன.

 

தமிழர்கள் கொண்டாடும் மற்றுமொரு பாரம்பரிய விழாவாகத் திகழும் “பொங்கல் விழா” பற்றி ஐந்து தலைப்புகளின் கீழ் பாடல்கள் பாடியுள்ளார்.   இவற்றில் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகின்றது?, எப்படிக் கொண்டாடப்படுகின்றது? என்பதைப் பற்றிய தகவல்கள் உள்ளடங்கியுள்ளன

உணவுப் பயிர்களை விளைத்த உழவர்கள் 

உதவிய கதிரோனை உவந்து போற்ற

உத்தரா  யணத்  தொடக்க  நாளில் 

உதித்த  நிகழ்வே   பொங்கல் என்பர்”

 

பொங்கல் நன்றியறிதலை முதன்மைப்படுத்திய நிகழ்வு என்பதன் மூலம் உதவும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, இயற்கைக்கும் நன்றியறிதலைத்  தெரிவிக்கவேண்டும் என்ற கருத்தை  மாணவர்கள் மனதில் பதியவைக்கும் முயற்சியாகப் பாடல்கள் அமைந்துள்ளன.  

 

‘‘முற்றத்தைப்  பெருக்கி  மஞ்சள்நீர் தெளித்து- வீட்டு  

முற்றத்தைப்  பெருக்கி  மஞ்சள்நீர் தெளித்து

 

அலங்காரக் கோலம் அம்மா இடவே 

ஒருபக்கம்  அடுப்பும் மறுபக்கம்  நிறைகுடமும்

அழகுற அப்பா அமைத்துக் கொண்டார் – கோலத்துள்”   

 

எனப் பொங்கல் படையல் பற்றிய நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திக் கவிதையில் காட்டுகின்றார். அதுமட்டுமன்றிக் காலங்காலமாக பொங்கி வந்த பொங்கலையும் இன்றைய பொங்கலையும் ஒப்பிட்டுக் கேலிசெய்து பாடியுள்ளதன் மூலம் சிந்திக்க வைத்துள்ளார்.

 

“அன்றோ உழவனே விளைத்த பொருள்களை 

அவனே சேர்த்துப்  பொங்கி முடித்தான்

இன்றோ  தமிழர் பொங்கல் என்றால்

அனைத்தும் பணத்தால் மட்டுமே நடக்குது

 

அரிசி காசு

சருக்கரை காசு

பயறு காசு

பானை காசு

அடுப்புக் காசு

விறகு காசு

விறகில்லாட்டில் எரிவாயு காசு”

என அனைத்துப் பொருட்களும் காசுக்கு வாங்குவதன் மூலம் மனிதன் உடல் உடல் உழைப்பு, உற்பத்திப் பெருக்கம் அனைத்தையும் கைவிட்டுத் தொலைதூரம் போய்விட்டான் என்பதனையும்

“ இனிவரும் காலம் காற்றும் காசாகலாம்”

என இயற்கையில் இலவசமாகப் பெற்ற அனைத்தும் விற்பனைப் பொருளாகிய நிலையைத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

பக்தி சார்ந்த பாடல்களில் நவராத்திரி அன்னையின் அருள், சக்தியின் வடிவங்கள், செல்வத்தின் சிறப்பு, கொலுவைத்தல்  பற்றிய பேசுபொருள்களைப் பாடல்கள் பிரதிபலிக்கின்றன.

 

செல்வம்  என்ற தலைப்பில் நான் கண்ட செல்வம் இவை என்று நல்லறிவு புகட்டுகின்ற பாடல் காலத்தைக் கருத்தில் கொண்ட போதனையாக உள்ளது.  மனிதன் மனிதனாக வாழத்தேவையான அனைத்தையும் செல்வம் என்ற சொல்லில் உள்ளடக்கியுள்ளமை சிறப்புக்குரியது. ஒருவன் தன்னை ஆரோக்கியமாகவும், உள்ளத்தைத் தூய்மையாகவும் வைத்திருப்பதை விட  செல்வம் வேறில்லை என்பதைப் பாடல் இலகுவாக உணர்த்துகிறது. இந்த உயரிய தத்துவத்தை உட்பொருளாக கொண்ட பாடலை மாணவர் பொருள் விளங்கித் திரும்பத்திரும்பப் படிப்பதன் மூலம் நல்லதொரு மானப்பாங்கினைப் பெறமுடியும்.  

 

“செழுமை கொண்ட உடல் செல்வம்

செயல்காட்டும் புலன்கள் செல்வம்

தெளிவான அறிவு செல்வம்

துணிவான உள்ளம் செல்வம்”

அன்னையின்  அருளையும், பெருமையையும் பொருளாகக் கொண்ட  பல பாடல்களில் சக்தி வழிபாடும் அதன் கூறுகளும் எப்படிப் பின்பற்றி வரப்பட்டதென்ற செய்திகளைத் தருவனவாக உள்ளன. இவை மாணவர் மத்தியில் தெய்வ நம்பிக்கையையும் எமக்கு அப்பாற்பட்ட சக்தியின் இருப்பையும் அதை நம்பினால் உயர்வு கிடைக்கும் என்ற உணர்வையும் கொண்டுள்ளன.

“அன்னை மகிழ்ந்தால் அருள்வாள் வரங்கள்

அவனியில் சிறப்பாய் வாழவும் வைப்பாள்”

 

புராண இதிகாசச்  செய்திகளைப் பொருத்தமான முறையில்   இணைத்துப் பாடியுள்ளதன் மூலம் மாணவர்களிடம் சமயக்கதைகள் பற்றிய தேடலை ஊக்குவிக்கும் வாகயில் சமயக் கருத்துகளை முன்வைக்கிறார்.

 

“வாசுகிப் பாம்பு வலியில் சினந்து

வருந்திக் கக்கிய நஞ்சு துரத்திட

ஆல  கால நஞ்சினை  ஆதிசிவன்

அள்ளி விழுங்கிட”

தேவர்கள் பாற்கடல் கடைந்தமை, சிவன் ஆலகால விடமுண்டமை பற்றிய செய்திகளை இப்பாடல்கள் கொண்டுள்ளன. வளர்பிறை, அமாவாசை, பிரதமை, நவமி பற்றிய செய்திகள் பக்தியோடு இணைந்த தகவல்களாக  வந்துள்ளன. அதுமட்டுமன்றி, அன்னைமீது கொண்ட பக்தியை உருவகப்படுத்தி முன்னிறுத்தும் வகையில் பலபாடல்கள் அமைந்துள்ளன

“அன்பு நீ

அறிவு நீ

அழகு நீ

என்னை ஆள்பவளும் நீ”

அம்பாளை வேப்பமரம், குங்குமம், எலுமிச்சம்பழம் போன்றவையாக அடையாளப்படுத்தியதோடு மட்டும் நின்றுவிடாது

“அறத்தின் வடிவு நீ

ஆதியானவள் நீ

அரனின் பாதியானவள் நீ”

 

என அன்னையின் தோற்றப்பாடுகளைக்  கண்முன் நிறுத்துவனவாக அமைந்த சிலபாடல்கள் பக்திக்கு வித்திடுவனவாக உள்ளன.

உலகளாவிய ரீதியில் மனித குலத்தை உலுக்கிய கொரோனா என்ற கொடுநோய் பற்றி

“இப்போதே நீ போனால் நிம்மதி அடைவார்களாம்”

என்ற தலைப்பில் ஐந்து பிரிவாகப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்கள் கடந்த காலத்தில் அனுபவித்த  அவஸ்தைகளின் பதிவுகளாகப் பார்க்கலாம். நோய் செய்த வைரசிற்கு கடித முறையில் கவிதை எழுதப்பட்டுள்ளது. இது கருத்துப் புலப்படுத்தக் கவிதையில் கையாளும் நுட்பங்களினை மாணவர்களுக்கும் புகட்டுவதாக உள்ளது.

 

‘‘அவசரமாய்   அனுப்பும்   அவசிய    மடலொன்று------

உலகெல்லாம்  அதிர்ந்து  மக்களெல்லாம்  முடங்கி 

பொழுதெல்லாம்  நினைந்து  பேச்செல்லாம்  நீயாகி

கனவிலும்  கலங்கி   நினைவிலும்   பயந்து

வரப்போறாய்  நீயென்று  வாசல்கள்  மூடி

வருவோரைத்   தவிர்த்து  ஏக்கத்தில்  தவித்து

வெறுப்போடு  வீட்டுக்குள்  தவிப்போடு  இருந்து

எழுதுகிறேன்  ஓர்மடல்  ஏற்பாயோ  தெரியவில்லை 

 

---------- --------------------------------------------------------

மூச்சுத் திணறி நெஞ்சும்  நோகுதெனில்

வந்தது நீதானாம் வாழ்க்கையே போச்சுதாம்”

கொரோனாவை கவிஞர் முன்நிலைப்படுத்தி உரையாடும் பாங்கில் பாடல்கள் அமைந்துள்ளன. எப்படி வந்தது?, ஏன் வந்தது?, வந்தால் என்ன செய்ய வேண்டும், எத்தகைய துன்பங்களை உண்டாக்கியது என்பதை அக்கு வேறு ஆணி வேறாகப் பாடல்களில் பதியமிட்டுள்ளார். தமிழர்களுக்கு இந்த நோய் புதியதல்ல என்பதனையும், அவர்கள் அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டெழுந்தார்கள் என்ற குறிப்புகளையும், சுட்டிக்காட்டித் தமிழர் ஆரோக்கியத்தில் கொண்டிருந்த அக்கறையையும் பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார்.

 

”இயல்இசை நாடகம் இவையே  முத்தமிழ்”

“உயிரும் மெய்யும்”

 

ஆகிய இரண்டு தலைப்புகளிலும்  மொழி சார்ந்த சிந்தனைகள்  முன்வைக்கப்படுகின்றன.

“உயிரும் மெய்யும் எமக்கும் உண்டு

உயிரும் மெய்யும் தமிழுக்கும் உண்டு”

 

என உயிர் மெய் பற்றிய விளக்கத்தை கூறியுள்ளார். இயல் இசை நாடகம் எவை என்பதைக் கவிதையில் வரையறை செய்யும் கவிஞர் கவிதை எத்தகையது எவ்வாறு அமையவேண்டும் என்பதை இவ்வாறு முன் வைக்கின்றார்.

 

“வெல்லுஞ் சொற்கள் தேடித் தொடுத்து

உள்ளம் பொருந்தி உணர்வுகள் கலந்திட

சொல்லுஞ்  செய்தியை ஓசை நயத்துடன்

செப்புதல் கவியென சான்றோர் முடிவு”

 

கவித்துவமான சொற்கள் உள்ளத்தில் நிலைத்து உணர்வோடு கலக்கும் என்பதும், கவிப்பொருள் ஓசைநயத்துடன் இணைவது கவிதைக்கு அழகு என்பதனையும் சான்றோர் கருத்தாக ஏற்றிச்செல்கின்றார்.

 

எங்கள் பொங்கல் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த பண்பாடுகள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் என்பவற்றை உட்பொருளாகப்  பொதிந்து வைத்துள்ளன. கவிஞன் தான் சொல்ல விரும்புபவற்றை அழகுபடச் சொல்வதே கவிதை.  மொழியைக் கையாளத் தெரிந்த கவிஞனுக்குச் சொற்கள் தானாக வந்து விழுகின்றன.  கற்பனைச் செறிவும், மொழிவளமும்    ஓசைச்சிறப்பும்,  அணிநயமும்  கவிப் பொருளோடு ஊடுபாவாக இணையும் போது கவிதைகள் உயிரோட்டம் பெறுகின்றன. அந்தவகையில் பார்க்கும்போது இந்தக் கவிதைகளில் ஆசிரியரின் அனுபவமும் அறிவுங் கலந்துள்ளன. எதைச்  சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்பதில் கவனமுடன் செயற்பட்டுள்ளார் என்பதைப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.

 

மாணவர்களை மையப்படுத்தி பாடிய பாடல்களாக இவை அமைந்தபோதிலும், முன்னிலைப்படுத்தல், விளித்துக் கூறுதல், உரையாடல் பாங்கு போன்ற பல உத்திகளைக் கையாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல கவிதைகளில் உருவக அணியைப்  பயன்படுத்தியுள்ளார். சில நிகழ்வுகளைக்  காட்சிப் படிமங்களாக்கியுள்ளார். இவை மாணவர்களுக்குப் பல புதிய  செய்திகளைத் தருவனவாக மட்டுமன்றி, இலகுவாகப்  படித்து விளங்கிக் கொள்ளக்கூடியவனாகவும் உள்ளன. கவியரங்கக் கவிதைகள்  சிலவற்றை மெருகுபடுத்தியிருப்பின் சிறப்பாக அமைந்திருக்கும். எனினும் மாணவர்கள் பொருளை விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறான முயற்சிகளில் அவர்களும் ஈடுபடவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் காரணமாக இவற்றைப் புறந்தள்ளியிருப்பார் என எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் வித்துவமோ, கவித்துவமோ இந்தப் பிள்ளைகளிடம்  மெல்லமெல்லத்தான் சென்றடையும். பொருள் விளங்காத படைப்புகளால் எதுவித பயனும் ஏற்படப்போவதில்லை. “குயிலைப் பிடித்துக் கூட்டிலடைத்துப் பாடச் சொல்லும் உலகம்” என்ற நிலையில் கவிஞர் தனது சிந்தனைக்கு எல்லையிட்டு மாணவர் முன்னேற்றங் கருதிப் பாடிய இப்பாடல்கள் அவரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

 

ஆசிரியர் படைப்புலகிற்கு புதியவரல்லர்.  ஏலவே நாடக நூலைத் தந்தவர்.  சிறந்த தேடலும், தமிழ் ஈடுபாடும்  நிறைந்தவர் மட்டுமல்லாது விஞ்ஞானத்துடன் மொழியையும், பண்பாட்டையும்  இணைத்து நோக்கும் திறனுடையவர் என்பதால் கவித்துவம் நிறைந்த கவிதைகள் பலவற்றைப் படைப்புலகிற்குத் தரவேண்டும். அவர்  புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் உள்ள  தமிழ்ப் பிள்ளைகளின் நாவில் தமிழ் தவழவும் அவர்களின் உள்ளார்ந்த இயலுமைகள்  வெளிப்படவும் அர்ப்பணிப்பான  அவரது தொடரட்டும்.   

No comments: