யாழ் – மதுரைக்கு புதிய விமான சேவை
நாடளாவிய ரீதியில் வைத்தியர்களின் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்
தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்
13 ஆவதை அமுல்படுத்த இணக்கம் சஜித்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஹக்கீம், ரிஷாத் பதிலளிக்க வேண்டும்
யாழ் – மதுரைக்கு புதிய விமான சேவை
இந்திய ஊடகங்களில் செய்தி
இந்தியாவின் மதுரைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே வாரத்தில் 7 நாட்களும் விமான சேவையை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை விமான சேவை நிலையத்தால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும்
இதற்காக இந்தியாவிலிலுள்ள தனியார் விமான நிறுவனங்களுடன் இலங்கை விமான சேவை கலந்துரையாடியதாகவும், அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
மதுரைக்கும் கொழும்புக்குமிடையே முதல் சர்வதேச விமான சேவை கடந்த செப்டெம்பர் 2012 இல் நடைபெற்றது. தற்போது மதுரையிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ ஏயார்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறிருக்க செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து இன்டிகோ ஏயார்லைன்ஸ் நிறுவனம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
நாடளாவிய ரீதியில் வைத்தியர்களின் கவனயீர்ப்பு போராட்டம்
வைத்தியர்களின் பாதகாப்பினை உறுதிப்படுத்துமாறும், வைத்தியர்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு, சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டி வைத்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் நேற்று (03) கவனயீர்ப்பு போராட்டத்தை மதியம் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பாக மதியம் ஒன்று கூடிய வைத்தியர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள்,
தற்போதைய அரசாங்கம் இதுவரை வைத்தியர்கள் எதிர் நோக்கும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஒன்றுமே நிறைவேற்றப்பட வில்லை. அத்துடன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முறையற்ற வைத்தியர்களின் இடமாற்றம் வழங்குவதை நிறுத்த வேண்டும். வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஊதியங்களை அதிகரிக்க வேண்டும். வைத்தியசாலையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை ஒடுக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என ஏராளமான பிரச்சனைகள் உள்ளன என குறிப்பிட்டனர்.
மேலும், எதிர்காலத்தில் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சினால் எந்தவொரு தீர்வும் கிடைக்காவிட்டால் நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் அனைத்து சேவைகளையும் நிறுத்தி பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் குதிப்போம் என தெரிவித்தனர்.
பாறுக் ஷிஹான் - நன்றி தினகரன்
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றுமுன்தினம் மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான நீர் வசதிகள், மின்சாரம், காணி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், விமானப் படை அதிகாரிகள், Airport & Aviation servies pvt( Ltd) நிறுவன உதவி முகாமையாளர், விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பின் உதவிப் பணிப்பாளர், தொழிற்துறைத் திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம், சந்தைப்படுத்தல் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நன்றி தினகரன்
சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்
- மன்னாரில் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் தேர்தல் பிரசாரம்
தாய் நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்காக மக்கள் இன, மத பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என ஜனசெத முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.
இன்று (05) காலை மன்னார் பஸ் நிலையத்தில், மக்கள் மத்தியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போதே ஜனசெத முன்னணியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான பத்தர முல்லை சீலரத்ன தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கட்சிகள் சஜித் பிரேமதாசவுக்கு தங்கள் ஆதரவை வழங்கி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இங்கு சஜித் பிரேமதாச மட்டுமல்ல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுமே கூட்டணிகள் உருவாகும் போது ஒப்பந்தங்களை தூக்கி எறிந்து விடுவார்கள்.
அனுரகுமார திஸாநாயக்க,நாமல் ராஜபக்ஷ, திலிப் ஜயவீர போன்றவர்களும் அவ்வாறானவர்களே. இவ்வாறான தலைவர்களை தேர்வு செய்தால் மேலும் பாதிப்படைவது வடக்கு, கிழக்கு மக்களே.
சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சிறப்பான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
வடமாகாணத்தில் வாழும் அப்பாவித் தமிழர்களுக்கு இதுவரை எந்த தீர்வும் எட்டவில்லை.
அப்பாவிப் பொது மக்களை வைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள். எனவே, தமிழ் மக்கள் சிந்தித்து உங்கள் வாக்குகளை டிரக்டர் சின்னத்துக்கு அளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார் .
மன்னார் குறூப்நிருபர் – எஸ்.ஆர்.லெம்பேட் - நன்றி தினகரன்
தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்
தேசிய மக்கள் சக்தி, தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி இடையில் கலந்துரையாடலொன்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர், கோப்பாய் தொகுதி அமைப்பாளர் தனீஸ், மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன், யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் ரொரிங்டன், மகளிர் அமைப்பு செயற்பாட்டாளர்களான ஜான்சி மற்றும் அபி ஆகியோர் கலந்துகொண்டனர். வடபகுதியை மையமாகக் கொண்டு செயற்படும் தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் ஆனந்தராஜா, ஊடகப் பேச்சாளர் அருளானந்தம், பொருளாளர் வசந்தகுமார் மற்றும் தேசிய ஜனநாயக மக்கள் முன்ணியின் ஆலோசகர் கமலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதித் தேர்தலலில் அநுரவுக்கு ஆதரவாக செயற்படுவது மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.
நன்றி தினகரன்
13 ஆவதை அமுல்படுத்த இணக்கம் சஜித்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஹக்கீம், ரிஷாத் பதிலளிக்க வேண்டும்
உலமா கட்சி தலைவர் வலியுறுத்து
அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளதாக சிறிதரனின் கேள்விக்கு மனோ கணேசன் பதிலளித்துள்ளார். இதற்கான தெளிவான பதிலை சஜித்துடனுள்ள ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீனும் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கவேண்டுமென உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment